Published:Updated:

டியர் லேடீஸ்... பயணம் கற்றுக்கொடுக்கும் 10 பாடங்கள்!

செ.கார்த்திகேயன்

ஆணோ, பெண்ணோ தனியாகப் பயணப்படுகிறார்கள் என்றால் புதிய அனுபவங்களையும் நோக்கிச் செல்கிறார்கள் என்று பொருள். நம் நாட்டில் பெண்கள் தனியாகப் பயணம் செய்வது மிகவும் கடினம்தான் என்றாலும் கூட, தகுந்த...

சோலோ டிராவல்
சோலோ டிராவல்

ஒருவர் தனது வாழ்நாளுக்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை என்கிறது சீனப் பழமொழி. பயணம், வாசிப்பு இரண்டும் தரும் அனுபவங்களை, படிப்பினையை வேறு எதனாலும் தர இயலாது. பல வரலாறுகள் உருவாகப் பயணங்களே காரணமாக அமைந்திருக்கின்றன.

ஒருவர் தனது வாழ்நாளுக்குள் பத்தாயிரம் மைல் நடக்க வேண்டும், பத்தாயிரம் புத்தகங்களை வாசித்து முடிக்க வேண்டும், அதுவே முழுமையான வாழ்க்கை
சீனப் பழமொழி

நம் தின வாழ்க்கையே பயணம்தான் என்றாலும்கூட புது இடம், புது மனிதர்களைத் தேடிச் செல்வது அலாதியானது. ஒவ்வொரு பயணமும் நம் நினைவில் நீங்கா இடம் பிடித்துவிடுகின்றன. அதிலும் தனியாகப் பயணம் மேற்கொள்வது சுவாரஸ்யமானது, ஆணோ, பெண்ணோ தனியாகப் பயணப்படுகிறார்கள் என்றால் புதிய அனுபவங்களை நோக்கிச் செல்கிறார்கள் என்று பொருள். நம் நாட்டில் பெண்கள் தனியாகப் பயணம் செய்வது மிகவும் கடினம்தான் என்றாலும்கூட, தகுந்த முன்னெச்சரிக்கைகள், முன்னேற்பாடுகளுடன் முயற்சி செய்யலாம்.

1. வேலைப் பளுவில் இருந்து தப்பிக்க…

கனவுகள் பற்றிய புரிதல் இல்லாமல் அன்பை மட்டுமே செலுத்தும் கணவன் மற்றும் உறவுகளுக்கு மத்தியிலும், அலுவலகப் பணிகளுக்கு நடுவே ஒரு பிரேக் தேவை என்றால் தயக்கமின்றி தனியாகப் பயணம் புறப்படலாம். அந்தத் தனிமை பயணம் நிச்சயமாகக் குடும்ப மற்றும் அலுவலக அழுத்தத்திலிருந்து நிம்மதியைத் தரும்.

சோலோ டிராவல்
சோலோ டிராவல்

2. பிரச்னைகளைத் தனியாகச் சமாளிக்க...

உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உதவிக்கு வர எவரேனும் தயாராய் இருப்பார்கள். ஆனால், புதிய இடத்துக்குச் செல்லும் போது எவரைச் சார்ந்தும் பிரச்னைகளைச் சரிசெய்ய இயலாது. நீங்களாகவே சூழல் அறிந்து சிக்கலான தருணங்களைச் சரி செய்து கடந்து வரும் வல்லமை கிடைக்கும்.

3. உங்களை நீங்கள் அறிந்துகொள்ள...

பிறர் உங்களைப் பற்றி உருவாக்கும் பிம்பமே நீங்கள் என நினைத்துக்கொண்டிருப்பீர்கள். தனிமைப் பயணம் உங்களது நிறை குறைகளைத் தெரிந்துகொள்ள உதவும். உங்களது பலவீனமாக இருந்த விஷயம் பலமாக மாறலாம். இப்படியாக உங்களையே மாற்றி அமைக்க வழி செய்யும்.

சோலோ டிராவல்
சோலோ டிராவல்

4. உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்துகொள்ள…

பெரும்பாலானவர்கள் தங்களை டிராவலர் என்று சொல்லிக் கொள்வது உண்டு. ஆனால், பயணத்தின்போது உள்ள தேவைகளை கையாளச் சிலரால் மட்டுமே முடியும். கூட்டமாகப் பயணப்படுகிறீர்கள் என்றால் அதில் ஒருவர் மட்டுமே பயணச் செலவு, தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ஆகியவற்றை கவனித்துக்கொள்வார். ஆனால், தனியாகப் பயணிக்கும்போது உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யக்கூடிய அனுபவம் ஏற்படும். இது நிர்வாகத் திறமையை மேம்படுத்தும்.

5. நீங்கா நினைவுகள்

நீங்களும் உங்கள் கேமராவும் ஆயிரம் கதைகளுடன் பயணத்தை முடித்துவிட்டு வருவீர்கள். பிடித்தமான இடத்தை, பிடித்த மனிதர்களைச் சுமந்து வரும் நீங்கள், அவற்றுடன் தனித்துவமான பிணைப்பையும் கொண்டு இருப்பீர்கள் என்பதே நிதர்சனம்.

சோலோ டிராவல்
சோலோ டிராவல்

6. புதிய மனிதர்களின் பழக்கம்

நிறைய பேர் தமக்குத் தெரிந்த வெகு சிலருடன் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர். பெரும்பாலும் அது அவர்களது ரத்த சொந்தமாகவே இருக்கும். இதனால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவோ, சுவாரஸ்யம் பெறவோ முடியாது. புதிய பண்பாடு, புதிய வாழ்க்கைமுறை, புதிய உணவு, புதிய உடைகள், புதிய கதைகளை, புதிய மனிதர்களை நீங்கள் சந்திக்கும்போது அறியலாம்.

7. சமரசமின்றி பிடித்ததைச் செய்யுங்கள்

தனியே பயணிக்கும்போது உங்களின் எல்லா செயலுக்கும் நீங்களே பொறுப்பு. பாதுகாப்பைக் கவனத்தில்கொண்டு, புது இடத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, சமரசமின்றி அனைத்தும் செய்து பார்க்கலாம். யாரும் உங்களைத் தடுப்பதற்கில்லை. தண்ணீரில் விளையாடலாம், கிடைக்கும் உணவுகளைச் சுவைக்கலாம், நினைத்தபடி சுதந்திரமாக இருக்கலாம்.

8. வாழ்வதற்கான புது இடம்

தனியே பயணம் புறப்பட்ட பிறகு, செல்லும் இடத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வரலாம். அங்குள்ள மக்களுடன் தங்கி நேரத்தைச் செலவிடலாம். அந்த இடத்தின் மீது காதல் கொள்ளும் வரை காத்திருக்கலாம். ஏனென்றால், வாழ்வதற்கான புது இடத்தைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பும் உள்ளது.

9. குடும்பத்தினரின் நம்பிக்கை அதிகமாகும்

ஒவ்வொரு முறை தனியாகப் பயணம் சென்று திரும்பி வரும் போதும், உங்கள் மீது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும். பெருமையாக உணர்வார்கள். உங்கள் பாதுகாப்பின் மீதான பயம் குடும்பத்தினருக்கு விலகும்.

சோலோ டிராவல்
சோலோ டிராவல்

10. தன்னம்பிக்கை வளரும்

இந்தியா போன்ற நாட்டில் பெண்கள் சுதந்திரமாக எது செய்தாலும் விமர்சிக்கப்படும். உடை அணிவது, செய்யும் வேலை, எப்படி நடக்கிறோம் என்பதில்கூட குணம் தீர்மானிக்கப்பட்டுவிடும். ஆனால், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தன்னம்பிக்கை அவசியம். அதை தனிமைப் பயணங்கள் உங்களுக்கு அள்ளித் தரும்.