Published:Updated:

செல்லுலார் சிறைக்கு ‘காலா பானி’ என்ற பெயர் ஏன்? - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம்! - மினி தொடர் - பார்ட்1

செல்லுலார் சிறைக்கு ‘காலா பானி’ என்ற பெயர் ஏன்? - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம்! - மினி தொடர் - பார்ட்1
செல்லுலார் சிறைக்கு ‘காலா பானி’ என்ற பெயர் ஏன்? - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம்! - மினி தொடர் - பார்ட்1

அந்தமான் - வங்கக் கடலில் சிதறிக் கிடக்கும் க்ரீன் ஃபாரஸ்ட் கேக் துண்டங்கள். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஃபாரீன் லொகேஷன் போல பிரமை தரும். அருகே சென்று பார்த்தால் தமிழ், இந்தி வாடை வீசி, 'நானும் உங்க ஊர்தாம்ல' எனத் தோளில் கை போடும். அந்த வகையில், அந்தமான் பாரீனும் இல்லாமல், நம்மூர்தான் என நம்பவும் முடியாமல் நம்மை ஆனந்தத் தடுமாற்றத்திற்குள்ளாக்கும் திரிசங்கு சொர்க்கம். 

சென்னையிலிருந்து 1,300 கி.மீ தொலைவில் ஜம்மென அமர்ந்திருக்கிறது அந்தமானின் தலைநகரான போர்ட் ப்ளேர். கப்பலில் சென்றால் கிட்டத்தட்ட மூன்று நாள்கள் பயணம். விமானத்தில் இரண்டு மணிநேரம். நாம் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழியை. போர்ட் ப்ளேரை விமானம் நெருங்கிவிட்டதை புசுபுசு மேகங்களுக்கிடையே தோன்றி மறையும் சின்னச் சின்னத் தீவுக்கூட்டங்கள் உறுதி செய்கின்றன. சின்னதும் பெரிதுமாக இப்படி மொத்தம் 572 தீவுகள் அந்தமான் மற்றும் நிக்கோபாரில் இருக்கின்றன. விமான நிலையத்தின் ரன்வேயை தூரத்துப் பாலத்திலிருந்து பார்த்தால் அவ்வளவு ரம்மியமாய் இருக்கிறது.

அந்தமானை வடக்கு, தெற்கு, மையம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். போர்ட் ப்ளேர் உள்ளிட்ட முக்கியச் சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் தெற்கு அந்தமானில்தான் இருக்கின்றன. இதனால், அந்தப் பகுதி மக்கள், சுற்றுலா வருவாயைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். வடக்கு அந்தமானின் முக்கியத் தொழில் விவசாயம். அரிசி, ஆரஞ்சு, காய்கறிகள் என சகலமும் இங்கிருந்துதான் தெற்கு அந்தமானுக்கு அனுப்பப்படுகின்றன.

ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தால் குளுகுளுவென தென்னை, பாக்கு மரங்களோடு நம்மை வரவேற்கிறது போர்ட் ப்ளேர். இங்கு இந்தி, தமிழ், பெங்காலி ஆகியவை பிரதானமாகப் பேசப்படும் மொழிகள். சட்சட்டென ஏறி இறங்கும் நிலப்பரப்புகள், சீதோஷ்ண நிலை, பச்சை வெளிகள், தூரத்தில் தெள்ளிய கடல் எனக் கேரளாவின் ஏதோவொரு நடுத்தர நகரத்தில் இருப்பதைப் போலவே இருக்கிறது நமக்கு. அந்தமானில் திடீர் திடீரென சாரல் அடிக்கிறது. அடுத்த சில நிமிடங்களிலேயே வெயில் சுள்ளென அறைகிறது. ஆகஸ்ட் இறுதி தொடங்கி பிப்ரவரி வரையான சீசன் நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். 

போர்ட் ப்ளேரின் முக்கியச் சுற்றுலாத்தலம் செல்லுலார் சிறை. அதன் இன்னொரு பெயர் காலா பானி. இந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு குரூர வரலாறு இருக்கிறது. சிப்பாய் கலகத்திற்குப் பின்னால் இந்திய விடுதலை அரசியல் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது. அவர்களுள் முக்கியமான ஆட்களைத் தொலைதூரத்தில் அடைத்து வைத்துவிட்டால் போராட்டங்கள் நீர்த்துப் போகும் என்ற கணிப்பில் அவர்களுள் சிலரை அந்தமானுக்குக் கடத்தியது ஆங்கிலேய அரசு. அப்படிக் கடத்தப்பட்ட கைதிகளைக் கொண்டே 1896-ல் பிரம்மாண்ட சிறை ஒன்றையும் கட்டத் தொடங்கியது. 1906-ல் கட்டி முடிக்கப்பட்ட அந்தச் சிறைதான் அதன்பின் அந்தத் தொலைதூர தீவில் நடந்த ரத்தவெறியாட்டங்களுக்கான மௌன சாட்சியம்.

நடுவே மைய கோபுரம், அதிலிருந்து பிரியும் ஏழு நீண்ட வராண்டாக்கள் (தற்போது மூன்று) என நட்சத்திர வடிவில் இருக்கிறது செல்லுலார் ஜெயில். உள்ளே நுழைந்தவுடனேயே வலது புறத்தில் அமைதியாய் அமர்ந்திருக்கிறது தூக்கு மேடை. வரிசையாய்த் தொங்கும் மூன்று தடித்த கயிறுகள்தான் இந்தச் சிறையின் எண்ணற்ற கைதிகளைக் கடைசியாய் அணைத்த கொடூரக் காதலிகள். மூன்றடி அகல வாசல், அதை மறித்து நிற்கும் இரும்புக் கம்பிகள் - இவற்றைக் கடந்து உள்ளே நுழைந்தால் எட்டுக்கு ஐந்து பரப்பளவில் வரவேற்கின்றன அறைகள். முன்னால் இருக்கும் சின்ன வாசலும், பின்சுவரில் எட்டடி உயரத்தில் இருக்கும் ஜன்னலும்தான் கைதிகளுக்கும் வெளியுலகிற்குமான தொடர்பு சாதனங்கள். இப்படியாக மொத்தம் 696 அறைகள்.

ஒவ்வொரு வராண்டாவிற்கும் தரைத்தளம் உள்பட மூன்று தளங்கள். அதில் மூன்றாவது தளத்தின் மூலை அறையில்தான் அடைபட்டு இருந்திருக்கிறார் இந்தச் சிறையில் பல போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய சாவர்க்கர். மகாவீர் சிங், யோகேந்திர சுக்லா, மெளல்வி லியாகத் அலி போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைந்து கிடந்ததும் இந்தச் சிறைச்சாலைகளில்தான். வராண்டாக்களைத் தாண்டி மைய கோபுரத்தின் உச்சி ஏறினால்தான் மொத்தச் சிறையின் பிரம்மாண்டமும் உறைக்கிறது.

சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள், அதைத் தாண்டிச் சென்றாலும் கைதிகளை வரவேற்கப் போவது நான்கு புறங்களிலும் சூழ்ந்து நிற்கும் பிரம்மாண்டக் கடல்தான். இந்தச் சிறையை நிர்வகித்தவர்களிலேயே படுபயங்கரமான ஜெயிலர் எனக் கருதப்படும் டேவிட் பேரி கைதிகளை மிரட்டுவதற்காக அடிக்கடி சொல்லும் சொற்றொடர் இது. 'ஏ அற்ப சிறைவாசிகளே, இந்தச் சிறைதான் உங்களின் இறுதித் தங்குமிடம். இங்கிருந்து தப்பிக்கவே முடியாது. காரணம், சுற்றி பல மைல்களுக்குக் கடல்... கடல்... கடல்... மட்டும்தான். இந்த மொத்த சாம்ராஜ்யத்திற்கும் நான்தான் கடவுள். என்னை வணங்குங்கள்'. ஆம், சுற்றுச்சுவர்களில் ஆர்ப்பரித்தபடி வந்து மோதும் கடல் தப்பிக்க நினைக்கும் யாரையும் அசைத்துப் பார்த்துவிடும். இதனால்தான் இந்த இடத்திற்கு 'காலா பானி' (கறுத்த நீர் பிரதேசம்) என்ற பெயரும் வந்தது.

சிறை வளாகத்தில் ஒவ்வொரு மாலையும் நடக்கும் லைட் அண்ட் சவுண்ட் ஷோ மிகவும் பிரபலம். முதலில் இந்தியிலும் பின் ஆங்கிலத்திலும் நடக்கிறது இந்த ஷோ. ஸ்பீக்கர் வழியே கசியும் உருக்கமான குரல், வளாகம் முழுவதிலும் பொருத்தப்பட்டிருக்கும் கலர் கலர் விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டே சிறையின் தோற்றம், கறுப்புப் பக்கங்கள், சிறைவாசிகளின் போராட்டங்கள், அவர்களுக்குக் கிடைத்த குரூர தண்டனைகள், இரண்டாம் உலகப் போரில் இந்தச் சிறையை ஜப்பானியர்கள் கைப்பற்றியது போன்றவற்றைப் பற்றி தெளிவாக விளக்குகிறார்கள். சிறை கட்டப்படுவதற்கு முந்தைய காலம் தொட்டு இங்கு வேர் விட்டு கிளை பரப்பி நிற்கும் அரச மரம் ஒன்றுதான் இந்த ஷோவின் கதை சொல்லி. அந்தமான் செல்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாத இடம் இந்த செல்லுலார் சிறை.

ராஸ் தீவின் திகில் கிளப்பும் சிதிலங்கள், நார்த் பே தீவின் பக்பக் ஸ்கூபா டைவிங் போன்றவை அடுத்த பகுதியில்...

அடுத்த கட்டுரைக்கு