Published:Updated:

கடலுக்கடியில் வாக்கிங், மீன்களோடு நீச்சல்! - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம் பார்ட் 3

கடலுக்கடியில் வாக்கிங், மீன்களோடு நீச்சல்! - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம் பார்ட் 3
கடலுக்கடியில் வாக்கிங், மீன்களோடு நீச்சல்! - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம் பார்ட் 3

சுற்றிலும் சத்தம் போடும் கடலும் குதிக்கும் அலைகளும் இருக்கும் இடத்தில் விளையாட்டுகளுக்கு மட்டும் பஞ்சமா என்ன? ஸ்பீட் போட் போன்ற சாதாரண விளையாட்டுகள் தொடங்கி ஸ்கூபா டைவிங், ஸீ வாக்கிங் போன்ற பக்பக் சாகசங்கள் வரை சகலமும் கோலாகலமாக நடைபெறுகின்றன அந்தமான் போர்ட் ப்ளேரைச் சுற்றியுள்ள தீவுகளில். அதிலும் போர்ட் ப்ளேரில் இருந்து அரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் நார்த் பே தீவு, முழுக்க முழுக்க நீர் விளையாட்டுகளுக்காகவே திறந்திருக்கும் தீவு. 

நார்த் பேயின் முக்கிய நீர் விளையாட்டுகள் ஸ்னார்க்கலிங், ஸ்கூபா டைவிங், ஸீ வாக்கிங் ஆகிய மூன்றும்தான். ஸ்னார்க்கலிங்தான் இதில் முதல்நிலை சாகசம். நமக்கு மிதவை ஜாக்கெட்டை அணிவித்துவிட்டு மூச்சு விடுவதற்கு வசதியாக ஒரு குழாயையும் பொருத்திவிடுவார்கள். நீரின் மட்டத்தில் மிதந்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக கடல் பரப்புக்குள் இழுத்துச் செல்லப்படுவோம். உடன் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் வருவார் என்பதால் பயப்பட வேண்டியதில்லை. நீர் மட்டத்தில் இருந்தபடி அடியில் நீந்திச் செல்லும் மீன்களையும் மின்னி மறையும் பாசிகளையும் கண்டு குதூகலிக்கலாம்.

ஸீ வாக்கிங் - 'எனக்கு தண்ணின்னா கொஞ்சம்....' என தயங்குபவர்களுக்கான விளையாட்டு இது. பெரிய படகு ஒன்றிலிருந்து ஏணி ஒன்று நீருக்குள் இறங்கும். அதைப் பிடித்தபடி நீருக்குள் இறங்கவேண்டும். அதிகமெல்லாம் இல்லை. இருபதடி, முப்பதடி ஆழம்தான். மூச்சுவிட வசதியாய் பெரிய பலூன் போன்ற மாஸ்க் ஒன்றைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மறுமுனை மேலே கப்பலில் இருக்கும் ஆக்ஸிஜன் குழாயோடு இணைக்கப்பட்டிருக்கும். கடல் மண்ணில் கால் பதிந்ததும் அப்படியே நடந்து போக வேண்டியதுதான். இறங்கும்போது ஓவர்டைம் பார்த்துத் துடிக்கும் இதயம் பாதம் வருடும் மணலையும் நம்மை உரசி நெளியும் மீன்களையும் பார்த்து மெல்ல மெல்ல சகஜமாகிறது. அப்படியே காலார நடை போட்டுவிட்டு மேலே ஏறினால் நீங்கள் நடந்ததும், விளையாடியதும் படங்களாகவும் வீடியோவாகவும் பதிவாகி இருக்கும். வருங்கால சந்ததியினருக்குக் காட்டி பெருமைபட்டுக்கொள்ளலாம்.

ஸ்கூபா டைவிங் -  சாகச விரும்பிகளுக்கான விளையாட்டு இது. இந்தியாவிலேயே அந்தமான்தான் ஸ்கூபா டைவிங் செய்ய சிறந்த இடம் எனச் சொல்லப்படுகிறது. நீச்சலுடை, ஆக்சிஜன் மாஸ்க் போன்றவற்றோடு இடுப்பை இருக்கும் கயிறு ஒன்றையும் கட்டிவிடுவார்கள். அதில், கடலுக்கடியில் நம்மை அழுத்தி வைத்திருக்க உதவும் கனமான கற்கள் சங்கிலி போல கட்டப்பட்டிருக்கும். பின் கால் மணி நேரத்துக்கு அனுபவம் வாய்ந்த ஸ்கூபா டைவர்கள் பயிற்சி தருவார்கள். நீருக்கடியில் உண்டாகும் அழுத்தத்தை சமாளிக்கும் டிப்ஸ், பயிற்சியாளரோடு பேசிக்கொள்ள சின்னச் சின்ன சைகைகள் போன்றவற்றை சொல்லித் தருவார்கள். 

அதன்பின், நீங்கள் சில வினாடிகள் கண்களை மூடி மல்லாக்க மிதந்தவாறு சூரிய வெப்பத்தை ரசிக்கலாம். விழித்துப் பார்க்கும்போது கடல் ஆழத்தில் பயணப்பட்டுக்கொண்டிருப்பீர்கள். உங்களைப் பின்னால் இருந்து பிடித்தபடி பயிற்சியாளரும் நீந்தி வந்துகொண்டிருப்பார். சர்சர்ரென கூட்டம் கூட்டமாக கடந்து செல்லும் மீன்கள் கூட்டத்தோடு நீங்களும் ஆனந்தமாய் செல்லலாம். அடியாழத்து மண்ணைக் கிளறி விளையாடலாம். தொட்டாச்சிணுங்கி போல சுருங்கி விரியும் பவளப் பாறைகளை பட்டும்படாமல் தொட்டுப் பார்க்கலாம். முப்பது நிமிட ஆழ்கடல் விளையாட்டுக்குப் பிறகு நீங்கள் கரையேறுவீர்கள். வெளிநாடுகளில் பெரும்பாலும், நீச்சல் தெரியாதவர்கள் ஸ்கூபா டைவ் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அந்தமானில் எல்லாருமே ஸ்கூபா டைவ் செய்யலாம். வயது பாரபட்சம் கூட இல்லை. சாகசம் முடிந்த பின்னர் பங்கேற்றதற்கு சாட்சியாக சான்றிதழ் வழங்குவார்கள்.

இதுதவிர, டால்ஃபின் ரைட், ஜெட் ஸ்கீயிங் என எக்கச்சக்க ஆப்ஷன்கள் இருக்கின்றன. உங்கள் பர்ஸின் கனத்தைப் பொறுத்து, நீங்கள் நீரில் முங்கி எழலாம். ஸ்கூபா டைவிங், ஸீ வாக்கிங் இதில் ஏதாவது ஒன்றைச் செய்ய ஒரு ஆளுக்கு 3500 ரூபாய் செலவாகும். மற்றதெல்லாம் கொஞ்சம் கம்மிதான்.

ஹேவ்லாக் தீவு:

போர்ட் ப்ளேரின் நகர நெரிசலில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள் தஞ்சமடைவது ஹேவ்லாக் தீவுகளில்தான். கண்களை நிறைக்கும் அதி அற்புதமான கடற்கரைகளைக் கொண்டது இந்தத் தீவு. போர்ட் ப்ளேரில் இருந்து இரண்டரை மணிநேரம் கப்பலில் பயணம் செய்தால் ஹேவ்லாக்கை அடையலாம். தனியார் கப்பல்கள், அரசுக் கப்பல்கள் என எக்கச்சக்கமான கடலூர்திகள் ஹேவ்லாக்கை முற்றுகையிடுகின்றன. இந்தக் கப்பல்களில் பணிபுரிபவர்களில் 80 சதவிகிதம் தமிழர்களே!

கப்பல் பயணம் நெடுக, நம்மோடு கொஞ்ச தூரம் பயணித்துவிட்டு விடைகொடுக்கின்றன குட்டிக் குட்டித் தீவுகள். அடர்ந்த காடுகள், அதில் படியும் பனி, பனியைக் கலைக்க கீழேயிருந்து எகிறிக் குதிக்கும் அலைகள் என அனைத்தும் படு ரம்மியம். இதில் லயித்திருக்கும் கண்களை கப்பலின் ஹாரன் சத்தம் திடுக்கென எழுப்புகிறது. ஹேவ்லாக் வந்துவிட்டதற்கான அறிவிப்பு அது. பாக்கும் தென்னை மரங்களும் நிறைந்த தீவு ஹேவ்லாக். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள், பத்தடி அகலமே உள்ள சாலை, சாலைகளில் வழிந்து ஓடும் ஓடை நீர் என கேரளாவின் குட்டிக் கிராமத்தை அப்படியே கண் முன்நிறுத்துகிறது ஹேவ்லாக். 

ஹேவ்லாக்கின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்கள் எலிபென்ட் பீச்சும், ராதாநகர் பீச்சும்தான். எலிபென்ட் பீச் - அலைகள் அதிகம் வராத அமைதியான கடற்பரப்பு. அதனால் இங்கும் நீர் விளையாட்டுகள் அதிகம் விளையாடப்படுகின்றன. ஆனால், வானிலை மோசமானால் பீச்சுக்குச் செல்லும் சாலைகள் சிதிலமடைந்துவிடுகின்றன. மறுசெப்பனிடும்வரை பீச்சுக்குச் செல்ல முடியாது. எலிபென்ட் பீச்சைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றால் பளபளவென வரவேற்கிறது ராதாநகர் கடற்கரை. டைம்ஸ் இதழால் 'ஆசியாவின் மிக அழகான கடற்கரைகளுள் ஒன்று' என புகழப்பட்ட உப்பு வாடைப் பிரதேசம்.

உண்மைதான். ஏதோ பாரீன் லொக்கேஷனுக்குள் வந்துவிட்ட உணர்வைத் தருகிறது இந்தக் கடற்கரை. வான் நீல நிறத்தில் தண்ணீர், அதன் கீழிருந்து நம் பாதங்களை மோகத்தோடு இழுக்கும் பளிங்கு மணல் என பரவசத்தை டன்கணக்கில் வழங்குகிறது ராதாநகர். ஒருபக்கம் அடர்ந்த காடு. அதன் பச்சைப் போர்வை முடியும் இடத்தில் பளிங்கு மணல், அதில் ஊறும் உப்புநீர் - கவிஞர்களுக்கான சொர்க்கபூமி அது. காடுகளுக்கே உரிய பிரத்யேக 'ர்ர்ர்ர்ர்ர்ர்' என்ற ரீங்காரமும் கடலுக்கே உரிய சலசலப்பும் இணைந்து கொடுக்கும் மன அமைதியை வார்த்தைகளால் உணர்த்த முடியாது. ஆழத்தில் இருக்கும் கொசகொசப்புகள் எல்லாம் வெளியேறி நீரைபோலவே லேசாகிறது மனது. அதை உணர, போய் வாருங்கள் ஹேவ்லாக்கின் ராதாநகர் கடற்கரைக்கு.