Published:Updated:

ராலி இவர்களுக்கு ஜாலி !

கா.பாலமுருகன் படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ராலி இவர்களுக்கு ஜாலி !

கா.பாலமுருகன் படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:

ரேஸ் டிராக்கில் சீறும் கார், பைக்குகள் பார்வையாளர்களுக்குப் பரவசம் அளிப்பவை. ஆனால், அதைவிட த்ரில்லானது ராலி. ஆனால், இந்தப் போட்டியில் பார்வையாளர்களுக்கு எந்த ஆர்வமும் இருக்காது. அதேசமயம், ராலி போட்டியில் பங்குகொள்பவர்களுக்கு படு த்ரில்லாக இருக்கும். உலக அளவில் ராலி போட்டிகள் பிரபலமானவை. அதில் டக்கார் ராலியை அதிபயங்கரமான போட்டி என்று சொல்லலாம்.

நம் நாட்டில் இந்தப் போட்டிகள் பிரபலமானதற்குக் காரணம் கோவையும், ஈரோடும்! ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் ஒன்றுகூடி ஜாலியாக நடத்திய இந்தப் போட்டிகள் நாளடைவில் பிரபலமாகி, இன்றைக்கு இந்தியாவில் உள்ள மஹிந்திரா, மாருதி, டாடா போன்ற முக்கிய நிறுவனங்கள் நடத்தும் அளவுக்கு வளர்ந்துவிட்டன.

கோவை அளவுக்கு ஈரோட்டிலும் ஏராளமான ராலி ரேஸர்கள் இருக்கிறார்கள். நம் நாட்டில் ஹிமாலயா, ராஜஸ்தான், கேரளா, கர்நாடகா, கோவா என எங்கு ராலி நடந்தாலும், அதில் குறைந்தது 10 பேராவது ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்வார்கள். அப்படி என்னதான் இந்தப் போட்டியில் இருக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராலி இவர்களுக்கு ஜாலி !

ராலி போட்டிக்கு சாலை இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. கிராமச் சாலை, மலைச் சாலை, மண் சாலை, காடு, பாலைவனம் என எதில் வேண்டுமானாலும் ராலி போட்டிகள் நடக்கும். ராலி என்பது சாலையில் நடக்கும் ரேஸ் போட்டி அல்ல. இது முற்றிலும் மாறுபட்டது.

ராலி போட்டியில் எண்ட்யூரன்ஸ், எக்ஸ்ட்ரீம் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் எண்ட்யூரன்ஸ் போட்டி, மிகச் சாதுவானது. ஆனால், சவால் மிகுந்தது. இதில் பயன்படுவது அன்றாடம் புழக்கத்தில் உள்ள கார்கள்தான். இதில் எந்த மாறுதலும் செய்யக் கூடாது. காரில் டிரைவருடன் மேலும் ஒருவர் இருக்க வேண்டும். அவரை நேவிகேட்டர் என்பார்கள். அவர்தான் இந்தப் போட்டியின் சூத்திரதாரி. டைமிங் கால்குலேட்டர், ரூட் மேப் சகிதம் அமர்ந்திருப்பார். வேகம், இடம், தூரம் ஆகியவற்றைக் கவனமாகக் கணக்கிட்டு டிரைவருக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார். இவரின் வழிகாட்டுதல்படி காரை ஓட்டுவார் டிரைவர். சில நேரம், காரில் உள்ள ஸ்பீடோ, ஓடோ மீட்டர்களில் பிழை இருந்தால், மொத்தக் கணக்கும் தவறாகிவிடும். அதனால், இந்த மீட்டர்களை மட்டும் எக்ஸ்ட்ராவாக காரில் பொருத்திக்கொள்ள அனுமதி உண்டு.

பொதுச்சாலையில் நடத்தப்படும் எண்ட்யூரன்ஸ் பிரிவுக்கு, அதிகபட்ச வேகம் நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வந்தால், பெனால்ட்டி வழங்கி பாயின்ட்டில் கை வைத்துவிடுவார்கள். எனவே, பொதுச் சாலையில் எண்ட்யூரன்ஸ் பிரிவுக்கு அதிகபட்ச வேகமே மணிக்கு 45 கிலோ மீட்டருக்குள்தான் இருக்கும். இந்தப் பிரிவை ஜிஷிஞி என்று அழைக்கிறார்கள். அதாவது 'டைம், ஸ்பீடு, டிஸ்ட்டன்ஸ்’ - இந்த மூன்றையும் சரியாகக் கடைப்பிடித்தால்தான் இதில் வெற்றிபெற முடியும். ராலி செல்லும் சாலையில் 100 மீட்டர்களுக்கு ஒரு செக் பாயின்ட் இருக்கும். அங்கே நீங்கள் வரும் நேரம் கணக்கிடப்படும். குறிப்பிட்ட நேரத்துக்கு 1 விநாடி முன்னதாக வந்தால், 2 பாயின்ட் பெனால்ட்டி. 1 விநாடி தாமதமாக வந்தால், 1 பாயின்ட் பெனால்ட்டி. இப்படி ஸ்கோர்கள் கணக்கிடப்பட்டு, யார் சரியான நேரத்துக்கு வந்து முன்னிலை வகிக்கிறார்களோ, மொத்தமாக யார் ஸ்கோர் செய்கிறார்களோ, அவர்கள்தான் வின்னர். இந்தப் பிரிவில் அனைத்து வகை கார்களும் கலந்துகொள்ளலாம்.

ராலி இவர்களுக்கு ஜாலி !

அடுத்து, எக்ஸ்ட்ரீம் பிரிவு படு டெரரானது. முற்றிலும் வேறுபட்டது. இந்தப் பிரிவில் பொதுச்சாலையில் போட்டி நடக்காது. இந்த வகைப் போட்டி நடைபெறும் இடத்தில் 100 சதவிகிதம் மற்ற போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிட்ட தூரத்தை யார் மிக விரைவாகக் கடக்கிறார்களோ, அவர்கள்தான் வின்னர். அந்த தூரம் 10 கி.மீ முதல் 30 கி.மீ தூரம் வரைகூட இருக்கும். ஆனால், அந்தச் சாலை எப்படிப்பட்ட சாலையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதாவது, வெறும் மண் பாதையாகக்கூட இருக்கும். இந்த எக்ஸ்ட்ரீம் ராலியில் கலந்துகொள்ளும் வாகனங்களை பல பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். மாறுதல் செய்யப்பட்ட வாகனம், மாறுதல் செய்யாத வாகனம், இன்ஜின் கொள்ளளவு, எஸ்யுவி என வகைப்படுத்துகிறார்கள்.

எக்ஸ்ட்ரீம் பிரிவில் கலந்துகொள்ளும் வாகனங்களில் 'ரோல்கேஜ்’ எனும் பாதுகாப்புக் குழாய்கள் காரில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இதனால், கார் உருண்டாலும் காரில் இருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது. டிரைவரும் நேவிகேட்டரும் பாதுகாப்பு உடையணிந்து, ஹெல்மெட் அணிந்திருப்பார்கள். போட்டி நடத்தும் மார்ஷல்கள், பாதுகாவலர்கள், மீட்புப் பணியாளர்கள், மெக்கானிக்குகள், மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், எரிபொருள் வாகனம், மீட்பு வாகனம், வயர்லெஸ் மைக் சகிதம் பெரும்படையே ராலி போட்டிக்காக ஆயத்தமாகி, திருவிழாபோல களைகட்டும்.

ராலி இவர்களுக்கு ஜாலி !

ஈரோட்டைச் சேர்ந்த ராலி நேவிகேட்டர் சேகரிடம் பேசினோம். இவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சுமார் 150 ராலிகளில் கலந்துகொண்டவர். வாங்கிய கோப்பைகளை வீட்டில் வைக்க இடம் இல்லை என அலுத்துக்கொள்பவரிடம், 'என்னதான் இந்த ராலி போட்டியில் கிடைக்கிறது?’ என்று கேட்டோம்.

''ராலி போட்டிகள் பணத்தை மையமாக வைத்து நடப்பவை அல்ல. சாம்பியன் யார் என்பதை மையமாக வைத்துதான் நடக்கும். போட்டி நடத்தும் அமைப்புகள் பெரும்பாலும் பணத்தை பரிசாக வைப்பது இல்லை. அப்படிக் கொடுத்தாலும் அந்தப் பணம் அந்தப் போட்டிக்குச் செலவான தொகையில் 25 சதவிகிதம்கூட இருக்காது. எனவே, இங்கு பணம் முக்கியம் இல்லை. சாம்பியன் யார் என்பதுதான் முக்கியம்.

ஆட்டோமொபைல் ஆர்வம் இருப்பவர்களுக்குத்தான் இதன் ருசி புரியும். ராலி என்றால், ஈரோட்டில் தயாராவதற்குப் பெரும்படையே உண்டு. மினி பைக் முதல் பெரிய எஸ்யுவி வரை இங்கே பலர் ரசிகர்களாக, ஆர்வலர்களாக இருக்கிறார்கள்'' என்றார் சேகர்.

ராலி இவர்களுக்கு ஜாலி !

சமீபத்தில் மாருதி நிறுவனம் நடத்திய 'மாருதி தக்ஷின் டேர்- 2014’ ராலியில் எண்ட்யூரன்ஸ் பிரிவில் சாம்பியன் கோப்பையை வென்றது, ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக் மாருதி - சங்கர் ஆனந்த் ஜோடி. கடந்த ஆண்டின் சாம்பியன்களும் இந்த ஜோடிதான். கார்த்திக் மாருதியிடம் பேசினோம். 'பெயரிலேயே கார் கம்பெனியின் பெயர் ஒட்டிக்கொண்டு இருக்கிறதே?’ என்று கேட்டதும், ''என் ஒரிஜினல் பெயர் கார்த்திக்தான். 2000-ம் ஆண்டிலிருந்து ராலியில் பங்கெடுக்கிறேன். அப்போது முதல் மாருதி காரைத்தான் பயன்படுத்துகிறேன். அதனால், என் பெயரில் மாருதியைச் சேர்த்துவிட்டார்கள்'' என்று சிரிக்கிறார். பல போட்டிகளில் சாம்பியனாகவும் ரன்னராகவும் கோப்பைகளைத் தட்டியுள்ளது இந்த ஜோடி.

''ரேஸ் டிராக்கை ஒப்பிடும்போது, ராலி போட்டியில் ஆபத்து அதிகம் இல்லை'' என்கிறார் கார்த்திக். ''காரில் புதிதாக என்ன செய்யலாம், காரில் என்ன மாற்றங்கள் செய்தால், இன்னும் சிறப்பாக இருக்கும். நாம் எங்கே, ஏன் சொதப்பினோம், மீண்டும் அதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சதா யோசிப்பதும் செயல்படுவதும் எங்களுக்கு அனிச்சை செயலாக ஆகிவிட்டன. அந்தச் செயல்தான் எங்களை இப்படி ஊர் ஊராகச் சுற்றிவர வைக்கிறது!'' என்கிறார் கார்த்திக் உறுதியான குரலில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism