Published:Updated:

கண்டேன் சீனாவை !

ஜோஸ் அப்பச்சன்சுற்றுலா: எஸ்.ரஜத்

கண்டேன் சீனாவை !

ஜோஸ் அப்பச்சன்சுற்றுலா: எஸ்.ரஜத்

Published:Updated:

ந்தியாவின் முதல் தீம் பார்க், சென்னையில் உள்ள 'கிஷ்கிந்தா’. இதன் மேனேஜிங் டைரக்டர் ஜோஸ் அப்பச்சன். இவர் இந்திய கேளிக்கைப் பூங்காக்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இந்தியாவின் முதல் 3டி சினிமா வான 'மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தைத் தயாரித்த அப்பச்சனின் மகன் இவர். தொழில் நிமித்தமாக சீனாவுக்கு இவர் பல முறை சென்று வந்துள்ளார். அங்கே தான் பார்த்த சுவையான விஷயங்களைப் பற்றி இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஜோஸ். 

''என் தந்தை அப்பச்சனும், சத்யராஜ் என்ற எங்கள் இன்ஜினீயரும், நானும் 2003-ம் ஆண்டு சீன

கண்டேன் சீனாவை !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசாங்கத்தால் அழைக்கப்பட்டு, அரசு விருந்தினர்களாக பீஜிங் சென்றோம். நாங்கள் தயாரித்திருந்த 'மை டியர் குட்டிச் சாத்தான்’, 'மேஜிக் மேஜிக்’ போன்ற 3டி படங் களை பெரிய அளவில் சீனாவில் விநியோகம் செய்யவும், ஐந்து ஆண்டுகள் கழித்து, அதாவது 2008-ல் பீஜிங் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின்போது 3டி டெக்னாலஜியைப் பயன்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

நாங்கள் சென்றிருந்தபோது 'ஸ்பை கிட்ஸ் 3டி’ என்னும் அமெரிக்க 3டி படத்தை சீனா முழுவதும் ரிலீஸ் செய்திருந்தார்கள். மிகப் பெரிய அளவில் செலவு செய்து, நிறைய தியேட்டர்களை 3டி படங்கள் திரையிடுவதற் கேற்ப மாற்றி அமைத்து, பெரிய பொருட்செல வில் விளம்பரமும் செய்திருந்தார்கள். ஆனால், அந்தப் படம் சீனாவில் மிகப் பெரிய தோல்வி யைத் தழுவியது. அதனால், 3டி பட விநியோக திட்டத்தையே கைவிட்டுவிட்டது சீனா. நாங் களும் சென்னைக்குத் திரும்பிவிட்டோம்.

கண்டேன் சீனாவை !

30, 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சீனாவில் அநேகம் பேர் சைக்கிள்களில்தான் பயணம் செய்வார்கள். ஒரு சில கார்கள்தான் தெருக்களில் செல்லும். இப்போது எல்லாமே தலைகீழ்! சீனத் தெருக்களில் சைக்கிள்களைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. எங்கு பார்த்தா லும் கார்கள், கார்கள், கார்கள்தான்! பேட்டரி கள் மூலம் இயங்கும் ஸ்கூட்டர்கள், மொபெட்டுகளையும், எரிவாயுவில் ஓடும் டாக்ஸிகளையும் அதிகம் காண முடிகிறது. சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடாமல் தடுக்கவே இந்த ஏற்பாடுகள்.

சர்வதேச கேளிக்கைப் பூங்காக்கள் சங்கத்தின் ஆசிய பிரிவின் கூட்டம், இந்த ஆண்டு ஜூன் மாதம், பீஜிங் நகரில் நடை பெற்றது. இந்தியச் சங்கத்தின் துணைத்தலைவர் என்ற முறையில் நானும் அதில் கலந்துகொண்டேன். ஆசியாவின் பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் சீன கேளிக்கைப் பூங்காக்கள் சங்கத்தின் தலைவர் பேசியதில், இரண்டு விஷயங்கள் என்னை பிரமிக்க வைத்தன.

ஒன்று, சீனாவில் 300 கேளிக்கைப் பூங்காக்கள் இப்போது புதிதாக உருவாகிக்கொண்டிருக்கின்றன. இரண்டாவது, அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனம் கடந்த ஐந்து ஆண்டுகளாக, உலகின் மிகப்பெரிய கேளிக்கை பூங்காவை சீனாவில் உருவாக்கி வருகிறது. 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அது செயல்படத் தொடங்கும். ஷாங்காய் நகரத்தில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் அமையவிருக்கிறது அந்தப் பூங்கா. டிஸ்னிலேண்டுக்கும் ஷாங்காய் நகருக்கும் இடையே அதிவேக நவீன ரயில் விடுவதற்கான பணிகளை சீன அரசு முழு வீச்சில் செய்து வருகிறது. ஷாங்காய் நகரில் இருந்து விமான நிலையத்துக்கு அதிவேக புல்லட் ரயில் விட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பெட்டியிலும் ஸ்பீடாமீட்டர் இருக்கிறது. 300 கி.மீ. வேகத்தில் புல்லட் ரயில்கள் பறப்பதை ஸ்பீடாமீட்டரில் காணலாம்.  

கண்டேன் சீனாவை !
கண்டேன் சீனாவை !

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நிறையத் தொழிற்சாலைகளை இப்போது மூடி வருகிறார்கள். இன்றைய நிலவரப்படி, உலகின் தொழிற்சாலை களில் 70 சதவிகிதம் சீனாவில்தான் செயல்படுகின்றன. துணி தயாரிப்பில் சீனாவுக்குதான் உலகில் முதல் இடம். உலகின் புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவற்றின் பிராண்ட் பெயரைப் போட்டு சீனாவில் நிறையப் பொருள்கள் தயாரிக்கிறார்கள். சீனாவின் கிழக்கு, தெற்குப் பகுதிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளன. தொழிற்சாலை வளாகத்திலேயே அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குவார்ட்டர்ஸ் உண்டு. இதனால் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து தொழிற்சாலைக்குச் சென்று வரும் நேரம் மிச்சமாகிறது. வீண் அலைச்சலோ, டென்ஷனோ இல்லை. தொழிலாளர்களும் செய்யும் தொழிலே தெய்வமெனக் கருதுகிறார்கள். வெட்டி அரட்டையில் பொழுது போக்குவது இல்லை. இத்தனைக்கும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் தரப்படுவதைவிட இவர்களுக்கு சம்பளம் மிகக் குறைவுதான்!

அரசு ஊழியர்களும் கடினமாக உழைக்கிறார்கள். டிசம்பர் மாதம் காலை 6 மணிக்கு நடுக்கும் குளிரிலும் (2, 3 டிகிரி செல்ஷியஸ்) தெருக்களை சின்ஸியராக சுத்தம் செய்யும் தொழிலாளர்களைப் பார்த்து வியந்துபோனேன். பெரிய சாலைகளின் நடுவில் உள்ள எவர்சில்வர் சென்டர்மீடியனைக்கூட அந்த விடியற்காலை குளிரில் துடைத்துப் பளபளப்பாக்குவதைக் கண்டேன். அதேபோல், போக்குவரத்து விதிகளை அனைவரும் மதித்து நடக்கிறார்கள்.

அரசின் ஆளுகைக்கு உட்பட்டே அங்கே ஊடகங்கள் இயங்குகின்றன. உலகமெங்கும் இயங்கும் கூகுள், சீனாவில் கிடையாது. உங்களுக்குத் தேவை யான எல்லா தகவல்களும் தீணீவீபீu.நீஷீனீ என்ற இணையதளத்தில் கிடைக்கும்.

கண்டேன் சீனாவை !

சீனா போகும்போதெல்லாம் இரண்டு பொருள்களை மறக்காமல் எடுத்துச் செல்வேன். ஒன்று, டிராவல் கைடு. முக்கியமான பல வாக்கியங்களுக்கும் சொற்களுக்கும் சீன மொழியில் என்ன வார்த்தை, எப்படி அதை உச்சரிப் பது என்று அதில் கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து, சீன மொழியில் யாரிடமும் பேசிச் சமாளித்துவிடலாம்.

இரண்டாவது, ஃபோர்க் மற்றும் ஸ்பூன். இரு குச்சிகளை வைத்துக்கொண்டு சாப்பிடுவது அவர்களால் மட்டுமே சாத்தியம்! அப்படித்தான் ஒருமுறை, கேளிக்கைப் பூங்கா ஒன்றில் இருந்த ரெஸ்டாரன்ட்டில் சாப்பிட்டேன். சாப்பிட உட்கார்ந்ததும்தான், ஃபோர்க் மற்றும் ஸ்பூன் எடுத்துக்கொண்டு மறந்துவிட்டேன் என்பது தெரிந்தது. அவற்றை ஹோட்டல் அறையிலேயே விட்டுவிட்டேன். நான் ஆர்டர் செய்த உணவு வகைகள் வந்தன. அவற்றை உண்ண இரு குச்சிகளும் வைக்கப்பட்டன. ஆனால், எத்தனை முயன்றும் என்னால் அந்த இரு குச்சிகளால் எடுத்துச் சாப்பிட முடியவில்லை. பசியோ வயிற்றைக் கிள்ளியது. கடைசியில், வேறு வழியின்றி கைகளாலேயே எடுத்துச் சாப்பிடத் தொடங்கினேன். பசியின் உக்கிரத்தில் சுற்றி என்ன நடக்கிறது என்றே எனக்குத் தெரியவில்லை. அவ்வளவு மும்முரமாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். சில நிமிடங்கள் கழித்து நிமிர்ந்து பார்த்தபோது, திடுக்கிட்டுப் போனேன். என்னைச் சுற்றிலும் ஏராளமானோர் நின்று, சிக்கனையும் சாதத்தையும் நான் கையால் எடுத்து உண்பதை, ஏதோ ஏலியனைப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பலர் நான் சாப்பிடுவதை புகைப்படம், வீடியோ எடுத்தார்கள். தர்மசங்கடமாக இருந்தாலும், ஒருவாறு சிரித்துச் சமாளித்தேன்.

ரெஸ்டாரன்ட்களில் கண்ணாடித் தொட்டிகளில் பாம்பு, நண்டு, மீன் போன்றவற்றை உயிரோடு வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்ததும், அவர்களின் கண் எதிரேயே அதை எடுத்துக்கொண்டு போய் சமைத்து வந்து, பரிமாறுகிறார்கள். பெரிய நண்டு, தேள், வெட்டுக்கிளி ஆகியவற்றை நம்ம ஊர் சிப்ஸ் போல வறுத்தும் வைத்திருக்கிறார்கள். இவை தவிர, பல நாடுகளின் பிரத்யேக உணவுகளை வழங்கும் ரெஸ்டாரன்ட்களும் இங்கே உண்டு. சீனாவில் தயாரிக்கப்படும் எல்லா பொருள்களையும், கைக்குட்டை, குண்டூசியில் இருந்து கனரக மோட்டார் வரை சந்தைப்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக 'ஈவு சிட்டி’ என்றொரு வாணிக நகரை உருவாக்கியுள்ளார்கள். இங்கே ஒரு லட்சத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. உலகிலேயே 'சீப்பஸ்ட் மார்க்கெட்’ என்று இதைச் சொல்கிறார்கள். இங்கே, ஷெங் பெய் தெருவில் மட்டும் பதினைந்துக்கும் மேலான இந்தியன் ரெஸ்டாரன்ட்கள் இயங்குகின்றன. இட்லி, தோசை, சப்பாத்தி என நம்ம ஊர் உணவு வகைகள் எல்லாமே இங்கு கிடைக்கும்.

பீஜிங் நகரில், மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உள்ள ஒரு பூங்காவில் பலர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தார்கள். ஒரு பகுதியில், ஆண்களும் பெண்களுமாக சில முதியவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் கையில் சில பேப்பர்கள், ரெக்கார்டுகள் காணப்பட்டன. 70, 80 வயதான இவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியை இழந்தவர்கள். மீண்டும் திருமணம் செய்து கொள்ளத் துணையைத் தேடியே அங்கே உட்கார்ந்திருந்தார்கள். அரசு அதிகாரி ஒருவர், மைக்கில் இவர்களுக்காகச் சில அறிவிப்புகள் செய்துகொண்டிருந்தார்.

பீஜிங் நகரின் மத்தியில் உள்ள பெரிய அரண்மனையில்தான் 'தி லாஸ்ட் எம்பரர்’ படமாக்கப்பட்டது. சீனாவின் ஷிங் என்ற அரச பரம்பரையின் கடைசி அரசரைப் பற்றிய கதை அது. ஃபெர்னார்டோ பெர்ட்டோ லூஸி என்ற பிரபல இத்தாலிய இயக்குநரின் இயக்கத்தில், 1987-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பல ஆஸ்கர் விருதுகளை வென்றது. அரசர் காலத்தில் யாரும் உள்ளே போக முடியாமல் இருந்த இந்த அரண்மனை, இப்போது பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷன்!

ஷயோலின் என்றொரு பெரிய காம்ப்ளெக்ஸ். அங்கே கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொடுக்கிறார்கள். தாடியும் சுருட்டை முடியுமாக, சற்றுக் கருமையான நிறமுள்ள ஒருவரின் சிலை அங்கே இருக்கிறது. யாரென விசாரித்தேன். அவர்தான் போதி தர்மனாம்!  

ஹாங்காங்கில் இருந்து மோட்டார் படகில் 45 நிமிடம் பயணித்தால், 'மகாவ்’ என்ற இடத்தை அடையலாம். 'சூதாட்டத்தின் சொர்க்கம்’ என்று இது அழைக்கப்படுகிறது. தனிநாடு மாதிரி இது எந்நேரமும் ஜெகஜோதியாக இயங்குகிறது. இங்கே எல்லாமே கேளிக்கைதான்... கொண்டாட்டம்தான்... கும்மாளம்தான்!'' என்று முடித்தார் ஜோஸ் புன்னகையுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism