Published:Updated:

'கம்போடியாவில் சிலை செஞ்சான் பல்லவ ராஜா !

டாக்டர் ராஜிராவ்

'கம்போடியாவில் சிலை செஞ்சான் பல்லவ ராஜா !

டாக்டர் ராஜிராவ்

Published:Updated:

சுற்றுலாவுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாடுகள், தென்கிழக்கு ஆசியாவிலேயே உள்ளன. இவை இந்தியாவுக்கு கிழக்கேயும், சீனாவுக்கு தெற்கேயும் அமைந்துள்ளன. தாய்லாந்து (பாங்காக்), கம்போடியா, வியட்நாம், லாவோஸ், இந்தோனேசியா (பாலி), திமோர்லிஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு நான் பயணம் செய்தபோது, அந்த நாட்டு மக்களின் மொழி, பழக்கவழக்கங்கள், வாழ்க்கைத் தரம் போன்றவற்றில் நம் இந்தியப் பண்பாடும் கலாசாரமும் ஆங்காங்கே ஊடுருவி இருப்பதைக் காண முடிந்தது.  

 கம்போடியா என்று தற்கால பெயருள்ள கம்பூசியாவில் பல இடங்களில் நாகவடிவ சிற்பங்களையும், 'அப்ஸ்ரா’ என்ற தேவலோக கன்னிகைகளின் சிற்பங்களையும் காணலாம். கம்போடியாவின் மொழி கெமர். இதில், பல சமஸ்கிருத, தமிழ் சொற்கள் அடங்கியுள்ளன. முக்கிய நதியான மெக்காங்கின் பெயர் 'கங்கை’ என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். வாரத்தின் நாட்களை சமஸ்கிருதத்தின் அடிப்படையில் அதித் (ஞாயிற்றுக்கிழமை), சாந்த், அங்கிர், புத், ப்ரஹோல், சுக்ர், ஸாவ் என்று கூறுகிறார்கள். மல்லிகைப்பூவை மல்லி என்றும், கப்பலை கப்பல் என்றும் தமிழ்ச் சொற்களால் அழைப்பது ஆச்சர்யம்!  

'கம்போடியாவில் சிலை செஞ்சான்  பல்லவ ராஜா !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்போடியாவில் பல்லவ மன்னர்கள் ஆட்சிபுரிந்து பல கோயில்களைக் கட்டியுள்ளனர். முக்கியமாக ஜெயவர்மன், சூர்யவர்மன், பீமவர்மன், மஹேந்திரவர்மன் என்று பல பல்லவ அரசர்கள் வாழ்ந்தனர். இவர்கள் இந்திய பல்லவ அரசர்களுடன் வியாபாரத் தொடர்புகொண்டிருந்தனர். 6-ம் நூற்றாண்டில் இருந்து 12-ம் நூற்றாண்டு வரை இந்து மதம் இருந்தது. பிறகு, புத்த மதம் வந்தது. நாம்குலேன் என்ற மலைப்பிரதேசத்தில் ஓர் ஆற்றின் படுகையில் 11-ம் நூற்றாண்டின் அற்புதமான சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. அனந்தசயனத்தில் மகாவிஷ்ணு மற்றும் ராமர், ஹனுமன் சிற்பங்கள் இங்கு அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. உலகப் பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோயில், ஸியம்ரியப் என்ற இடத்தில், 12-வது நூற்றாண்டில் 2-வது சூரியவர்மனால் கட்டப்பட்டது. பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருப்பது, தர்மம் அதர்மத்தை எவ்வாறு வென்றது என மஹாபாரதத்தையொட்டி இங்கு பல சிற்பங்களைக் கலையழகுடன் செதுக்கியுள்ளனர். கிருஷ்ணனின் பால்ய பருவத்து லீலைகள், வெண்ணையைத் திருடுவது, கோவர்த்தன மலையைத் தூக்குவது போன்ற பல காட்சிகளை மிக அழகாகச் சித்திரித்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் பாரதத்துக்குள் வியாபாரிகளாக நுழைந்து அடிமைப்படுத்திய பாணியிலேதான், வியட்நாமில் பிரெஞ்சுக்காரர்கள் 1800-வது வருடங்களில் நுழைந்தனர். நம் தேசத்தந்தையாக மகாத்மா காந்தியைக் கொண்டாடுவதைப் போன்று வியட்நாமியர்கள் ஹோசிமினை விடுதலைக்குப் பாடுபட்ட மகத்தான தலைவராகப் போற்றுகிறார்கள்.

வியட்நாமில் போர் மற்றும் உள்நாட்டுக் கலவரங்கள் அதிகமாக நடந்த காலத்தில், வீரர்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட நகரம் ஹோசிமின். 'பாதாள நகரம்’ என்று சொல்லும் அளவுக்கு பூமிக்கு அடியிலேயே எல்லா சௌகர்யங்களும் இங்கே உள்ளன. ஹோச்சிமினில் உள்ள மாரியம்மன் கோயில் ரொம்பவும் பிரசித்தம். வியட்நாமிய மக்கள் மாரியம்மனை வழிபடுகின்றனர். வியட்நாமுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிக அளவுக்கு இழுக்கும் பெருமை 'மிதக்கும் மார்க்கெட்’டுக்கு உண்டு.

'கம்போடியாவில் சிலை செஞ்சான்  பல்லவ ராஜா !

 பாங்காக் விமான நிலையத்தில் தேவ அசுரர்கள் பாம்பை வைத்து பாற்கடலைக் கடையும் காட்சியைக் காணலாம். அனுமன், ராவணன் போன்ற உருவங்களையும் காணலாம். தாய்லாந்தில் புத்த மதம்தான் பரவியுள்ளது. ஆனாலும், இந்து மதக் கடவுள்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.

 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரப்பளவில் மிகச் சிறியதாகவும் பன்னாட்டு வர்த்தகப் பரிமாற்றத்துக்குப் பெரிதும் முக்கியமானதாகவும் உள்ள சிங்கப்பூர், 'வாடிக்கையாளர்களின் சொர்க்கம்’ என்று அழைக்கப்படுகிறது. சீனர்கள், மலேசியர்கள், இந்தியர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் இங்கே ஒற்றுமையாக வசிக்கின்றனர். சிங்கப்பூரில் பல இந்து கோயில்கள் உள்ளன. 1857-ல் மாரியம்மன் கோயிலை இந்தியர்கள் கட்டினர். பல மாற்றங்களுக்குப் பிறகு 1996-ல் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயிலில் இந்தியர்கள் தீ மிதிப்பது போன்ற பல வேண்டுதல்கள் செய்துவருகின்றனர்.  

 மலேசியா, பத்துமலை குகையில், முருகன் தங்க விக்ரகமாகக் குடிகொண்டுள்ளார். தைப் பூசத்தின்போது கோயில்களில் முருகனுக்கு வேல் குத்திக்கொள்வது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது போன்றவை நடக்கின்றன.

'கம்போடியாவில் சிலை செஞ்சான்  பல்லவ ராஜா !

இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தாவில் புத்த மதம் பரவியிருந்தபோதிலும், மற்ற மதங்களையும் மதிக்கும் குணம் இங்குள்ள மக்களுக்கு உண்டு. இங்குள்ள பாலி நகரத்தில் நமது கலாசாரமும் அந்த மக்களின் கலாசாரமும் இணைந்துபோனாலும், அந்தக் கோயில்களின் அமைப்பு நம் ஊர் கோயில்களில் இருந்து மாறுபட்டு இருக்கிறது. முக்கியமான வேறுபாடு, இங்கு சிலை ரூபம் இல்லாமல் இருப்பதுதான்.  

பாலி மக்களுக்கு ஆவி, மந்திர தந்திரங் களில் மிகவும் ஈடுபாடும் நம்பிக்கையும் இருப்பதால், இங்கே ஆவிக்கோயில்கள் நிறைய உள்ளன. வீட்டு வாசல்களிலும் ஆவிகளுக்கு என ஒரு கோயிலைக் கட்டிவைத்து தினமும் பூஜை செய்கிறார்கள்.

பாலி மக்கள் கலைத்திறன் மிக்கவர்கள். மரத்தைச் செதுக்கி ராமாயண, மஹாபாரத சிற்பங்களைப் படைக் கின்றனர். நடனக் கலைகள் மூலம் ராமாயண, மஹாபாரதக் கதைகளை வெளிக்கொண்டுவருகிறார்கள். பாலி மொழியில் சமஸ்கிருதம் வெகுவாகக் கலந்துள்ளது. இங்குள்ள முஸ்லிம் மக்களுக்குக்கூட சமஸ்கிருதம் தெரிந்திருக்கிறது.  

21-ம் நூற்றாண்டில் இந்தோனேசியாவிடம் இருந்து பிரிந்து புதிதாக உருவான ஒரு சுதந்திர நாடுதான் திமோர்லிஸ் அல்லது கிழக்கு திமோர். இதன் தலைநகரம் திலி. இங்கே ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து அகதிகளாக வந்து குடியேறியுள்ளனர். இந்தியர்களில் பலர் இங்கு ராணுவத்திலும், சிலர் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

திரைகடலோடி திரவியம் தேடிய தமிழர்கள் எங்குச் சென்றாலும் கலாசாரம், கலை, பண்பாடு மற்றும் பக்தி ஆகியவற்றுக்கு சிறிதும் குறைவில்லாமல் வாழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism