Published:Updated:

யானையை தத்தெடுக்க நைரோபி வாங்க !

பிரேமா நாராயணன் படங்கள்: பொன்.காசிராஜன்

யானையை தத்தெடுக்க நைரோபி வாங்க !

பிரேமா நாராயணன் படங்கள்: பொன்.காசிராஜன்

Published:Updated:

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர் கைவிட்ட குழந்தைகளுக்காக அமைக்கப்படும் அனாதை இல்லங்கள், காப்பகங்கள்தான் நமக்குத் தெரிந்தவை. ஆனால், ஆப்பிரிக்காவிலோ தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளுக்காக ஓர் அனாதை இல்லம் இயங்கிவருகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகளை வெகுவாக ஈர்க்கும் இந்த யானைகள் அனாதை இல்லம், கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் பரந்து விரிந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அண்மையில் அங்கே சென்று வந்துள்ள புகைப்படக் கலைஞர் பொன்.காசிராஜன், சில சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

யானையை தத்தெடுக்க நைரோபி வாங்க !

''பிரபலமான 'நைரோபி தேசியப் பூங்கா’ வோட ஒரு பகுதியிலதான், யானைகள் அனாதை இல்லத்துக்காக இடம் ஒதுக்கி இருக்காங்க. இந்த அனாதை இல்லத்தைத் தொடங்கிய ஷெல்டிரிக் என்கிற வனவிலங்குப் பாதுகாப்பாளரின் பெயரி லேயேதான் இந்த அனாதை இல்லமும் அழைக் கப்படுகிறது. அனாதைகளாகிவிட்ட யானைக் குட்டிகளை இங்கே பராமரிக்கிறாங்க. பஞ்சத் தால் சாகும் யானைகள், தந்தத்துக்காக வேட்டை யாடப்படுகிற யானைகள், சிங்கம், சிறுத்தை மாதிரியான விலங்குகளால அடிச்சுக் கொல்லப் படுற யானைகள்... இப்படிச் செத்துப்போற யானைகளோட குட்டிகள் மற்றும் தாய் யானை யால் தவறவிடப்பட்ட குட்டிகள்னு எல்லாமே இங்கே இருக்கு. கென்யாவின் பல பகுதிகள்ல இருந்து மட்டுமில்லாம, பிற நாடுகள்ல இருந்தும் யானைக்குட்டிகள் இங்கே வருது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் காலை 11 மணியில இருந்து 12 மணி வரை, பார்வையாளர்களுக்கு அனுமதி.

அனாதை இல்லம்னா, நாம நினைக்கிற மாதிரி ஒரே இடத்தில் யானைகளை வெச்சுப் பராமரிக்கிறது இல்ல. இந்தக் குட்டிகள் சுதந்தி ரமா, அதுங்களுக்குன்னு இருக்கிற எல்லைக்குள்ள போய் உலாவிட்டு, மேய்ஞ்சிட்டு, சுத்திட்டு வருதுங்க. கரெக்ட்டா பால் குடிக்கிற நேரத்துக்கு எல்லா குட்டிகளும் காப்பகத்துக்கு வந்துடுது. அதுக்குன்னு இருக்கிற காப்பாளர்கள், பெரிய சைஸ் பாட்டில்கள்ல யானைக்குட்டிகளுக்குன்னு தயாரிக்கப்படும் பிரத்யேகமான பாலை ஊட்டு றாங்க. அதிலேயே அதுங்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்தையும் சேர்த்துடறாங்க. எல்லா குட்டியும் கூட்டம் கூட்டமா வந்து பால் குடிச்சிட்டுப் போறது கொள்ளை அழகு!

யானையை தத்தெடுக்க நைரோபி வாங்க !

குழந்தை மாதிரியே நம்மகிட்ட வந்து கொஞ்சுறது, உரசுறது, தும்பிக்கையால தடவுறதுன்னு பயங்கர 'அட்டாச்’டாக இருக்கும். பாதுகாப்பா ளர்கள்கூட ஒருத்தரே ஒரு யானையைத் தொடர்ந்து கவனிக்கிறது இல்லை. ஏன்னா, தொடர்ந்து ஒரே ஆள்கிட்ட, ஒரு குட்டி ரொம்பப் பாசமா பழகிடுச்சுன்னா, அதுக்கப்புறம் யாராவது அவரை விளையாட்டுக்கு லேசா தட்டினாகூடப் போச்சு... கோபத்துல அவங்களை முட்டித் தள்ளி, உண்டு இல்லைன்னு ஆக்கிடு மாம். அவ்வளவு 'சென்டிமென்டல் அட்டாச் மென்ட்’! இதைத் தவிர்க்கிறதுக்காகவே, ஒவ் வொரு நாளும் ஒவ்வொருத்தங்க யானைக்குட்டி களைக் கவனிச்சுக்கிறாங்க.

பாலைக் குடிச்சிட்டு, அதுங்களை மண்ணில் விளையாட விடறாங்க. மண்ணுலயும் சேத்துல யும் விழுந்து புரண்டு உருள்றதும், ஒண்ணு மேல ஒண்ணு மண்ணையும் சேத்தையும் தும்பிக்கை யால உறிஞ்சி அடிச்சு விளையாடறதும் கொள்ளை அழகு! குழந்தைகள் எப்படி விளையாடுவாங்களோ, அதேபோல பந்தை உருட்டி, உதைச்சு விளையாடறதும் உண்டு. இதுல, ஒண்ணோட ஒண்ணு அடிச்சுக்க வேற செய்யுதுங்க. அப்புறம் சமாதானம் ஆகிடுதுங்க. அதுங்க டூ விடறதும் பழம் விடறதும் அவ்வளவு ரசனை யான காட்சி! ஒரு மணி நேரம் முழுக்க நின்னு ரசிச்சாலும், அங்கே வர்ற டூரிஸ்ட்களுக்குப் போகவே மனசிருக்காது. அத்தனை ரம்மியமா இருக்கும். பள்ளிக் குழந்தைகளை எல்லாம் அழைச்சுக் கிட்டு வர்றாங்க. அந்தக் குழந்தை களைப் பார்த்து, யானைக் குட்டிங்க குஷியாகறதும், யானைக் குட்டிகளைப் பார்த்ததும் குழந் தைங்க கைதட்டிக் குதிக்கிறதும்... ஒரே லூட்டிதான்!

யானையை தத்தெடுக்க நைரோபி வாங்க !

அங்கே யானையைத் தத்து எடுக்கிறதுக்கும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க. நமக்குப் பிடிச்ச யானைக்குட்டியைத் தேர்ந்தெடுத்து தத்து எடுத்துக்கலாம். ஒரு வருஷத் துக்கான தொகை ரொம்ப கம்மி தான்... 50 யு.எஸ் டாலர்! அதைக் கட்டிட்டோம்னா, நமக்குப் பிரியமான யானைக்குட்டியை, பிடிச்ச பேர் வெச்சு, ஒரு வருஷத்துக்கு நாமே பராமரிக்கலாம். அதாவது, அந்தக் குட்டி காப்பகத்திலேதான் இருக்கும். நாம எப்ப வேணாம்னாலும் போய்ப் பார்க்கலாம். விளையாடலாம். நாமே பாட்டில்ல பால் கொடுக்கலாம். நாம அங்கே போக முடியலன்னாகூட, நமக்கு 'வெப்’ மூலமாக அந்தக் குட்டியோட நடவடிக்கைகளைப் பார்க்கிறதுக்கும் வசதி செய்றாங்க. ஒரு வருஷத்துக்கு அதோட 'ஃபாலோ-அப்’ எல்லாத்தையும் நமக்கு அப்டேட் பண்ணிடறாங்க. தத்து எடுக்கப்படும் குட்டி, அதன் 'தத்துப் பெற்றோரை’ப் பார்த்ததும் அடையும் சந்தோஷத்தைப் பார்க்கணுமே... குழந்தைகள் எல்லாம் தோத்துப் போகும்! ரொம்பப் பாசமா பழகி, விளையாடும்.

பிறந்து சில நாட்களே ஆன குட்டிங்ககூட இங்கே இருக்கு. அதுங்களுக்கு ராத்திரியும் பகலும் கூடவே பாதுகாப்பாளர் இருக்காங்க. குளிருக்குக் கம்பளி போட்டு, மூணு மணி நேரத் துக்கு ஒரு முறை பால் கொடுத்துப் பார்த்துக்கிறாங்க. கொஞ்சம் பெரிசானதும் வெளியே அனுப்புறாங்க. அம்மாவை இழந்த அந்தக் குட்டிகளெல்லாம், பசியோட வந்து பாட்டில் பாலைக் குடிக்கிறப்போ பாவமா இருக்கும். வயிறு முட்டப் பாலைக் குடிச்சு முடிச்சதும், அதுக்கப்புறம் விளையாட்டுதான்... ஜாலிதான்!

இந்தக் காப்பகத்திலே இருக்கிற யானைகளைக் கவனிக்கறதுக்குன்னே குட்டி விமானம் இருக்கு. அதன்மூலமா எத்தனை யானைக்குட்டிகள் இருக்கு, எத்தனை காட்டுக்குள்ள போயிருக்கு, எத்தனை வந்திருக்கு, சாப்பிடறது எத்தனைன்னு 'சர்வே’ எடுக்கிறாங்க. ஏதாவது குட்டி மிஸ் ஆயிடுச்சுன்னாகூட, இந்தக் கணக்கெடுப்புமூலமா கண்டுபிடிச்சிடறாங்க.

யானையை தத்தெடுக்க நைரோபி வாங்க !

அங்கேயே கால்நடை மருத்துவர் இருக்காங்க. குட்டிகளுக்கு என்ன பிரச்னைன்னாலும் உடனே கவனிக்கிறாங்க. இந்தக் குட்டிகள் வளர்ந்ததும், காட்டுக்குள் போயிடுதுங்க. இதில் என்ன ஓர் அதிசயம்னா, இந்தக் குட்டிகளுக்கு எந்த ஓர் தடுப்புச் சுவரோ, அரணோ இல்லை. வெறும் கயிறு மட்டும்தான் சும்மா ஓர் எல்லைக்காகக் கட்டி வெச்சிருக்காங்க. நம்மோட அவ்வளவு நெருக்கமாக இருக்கிற அந்தக் குட்டிங்க, ஒருத்தரைக்கூடத் தாக்க முயற்சிக்கிறது இல்லை. அதனால, சின்ன குழந்தைகள்கூட பயமில்லாம யானைக்குட்டிகளோட விளையாடுறாங்க.

தன் அம்மாவை மனிதர்கள் கொல்றதை நேர்ல பார்த்த குட்டிகள் பொதுவா கொஞ்சம் ஆவேசமா இருக்கும். ஆனா, இந்தக் காப்பகத்தில் இருந்து பாதுகாப்பாளர்களோடு அன்பா பழகுறதால, அதுங்களுக்குத் திரும்பவும் மனிதர்கள் மேல நம்பிக்கை வருது. அந்தக் குட்டிகள் வளர்ந்து பெரிய யானைகளானதும், ஒரு குடும்பமா, கூட்டமா காட்டுக்குப் போகுதுங்க!

யானையை தத்தெடுக்க நைரோபி வாங்க !

வளர்ந்த யானைகளாக அந்தக் குட்டிகளெல்லாம் போறப்போ, அவற்றை வளர்த்த பாதுகாப்பாளர்கள், பிள்ளைங்களை அனுப்புற மாதிரி கண்கலங்குற உணர்ச்சிகரமான சம்பவங்களும் நடக்கும். சில மணி நேரம் மட்டுமே பார்த்துட்டு அங்கேருந்து கிளம்பி வர்றப்போ, நமக்கே ஒரு மாதிரி மனசைப் பிசையும் உணர்வு வருதுங்கிறப்போ, அதுங்களோடயே வருஷக்கணக்கா பழகி, பிரியறதுங்கிறது அந்தப் பாதுகாப்பாளர் களுக்குக் கஷ்டமாதானே இருக்கும்?!

கென்யா நாட்டுக்குப் போறவங்க, தவறாம கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம், இந்த யானைகள் இல்லம்!'

கென்யாவின் மிகப் பிரமாண்டமான 'சாவோ ஈஸ்ட் நேஷனல் பார்க்' என்ற வனவிலங்குப் பூங்காவில் 30 ஆண்டுகள் வார்ட னாகப் பணியாற்றியவர் டேவிட் ஷெல்டிரிக். அனாதையாக விடப் படும் யானைகளுக்காகக் காப்பகத்தைத் தொடங்கியவரும் இவரே. அதனால், இவர் பெயரிலேயே காப்பகம் அழைக்கப் படுகிறது. 1977-ல் நிறுவப்பட்ட இவருடைய 'டேவிட் ஷெல்டிரிக் வைல்டுலைஃப் ட்ரஸ்ட்’ என்னும் அறக்கட்டளை, வனவிலங்கு களைப் பாதுகாக்கும் முயற்சியில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அதிலும் முக்கியமாக, யானைகளையும், எண்ணிக்கையில் குறைந்து வரும் நீர்யானைகளையும் பாதுகாக்கப் பல திட்டங் களை வடிவமைத்துள்ளார் இவர். டேவிட் மறைவுக்குப் பின்னர் அவரின் மனைவியும், அவருக்குப் பின்பு அவரின் வாரிசுகளும் இந்த அறக்கட்டளையை நிர்வகித்து வருகின்றனர்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism