Published:Updated:

அணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்!

கட்டுரை, படங்கள்: ஜி.எஸ்.எஸ்.

அணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்!

கட்டுரை, படங்கள்: ஜி.எஸ்.எஸ்.

Published:Updated:

கட்டுரை, படங்கள்: ஜி.எஸ்.எஸ்.

 ம் உடலில் எவ்வளவு அணுக்கள் உண்டு? லட்சம்..? கோடி..? ம்ஹூம்... எண்ணிலடங்காது!

இப்படியிருக்க, ஓர் அணுவுக்குள்ளேயே நாம் செல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? பெல்ஜியத்துக்குச் சென்றிருந்தபோது எனக்கு அந்த அனுபவம் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெல்ஜியம் நாட்டின் தலைநகரம் புருஸெல்ஸ். ஐரோப்பிய யூனியனின் தலைநகர் என்றுகூட இந்த நகரைச் சொல்லலாம். அந்த நகரில்தான் அந்த அதிசய அனுபவம்!  

அணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்!

சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்தே அந்தக் கட்டடம் தென்பட்டது. காரணம், அதன் அருகில் எந்தக் கட்டடமும் இல்லை. திறந்தவெளியில் நட்டநடுவாகக் காட்சியளித்தது அது. 'அடோமியம்’ என்னும் அந்தக் கட்டடத்தின் வடிவமே எனக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது அப்போது எனக்குத் தெரியாது, இது 'ஐரோப்பாவின் மிக வித்தியாசமான கட்டடம்’ என்று சிறப்பித்து அழைக்கப்படுவது.

ஓர் அணுவின் பூதாகர வடிவம் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அந்தக் கட்டடம். தோராயமாக இப்படி விவரிக்கலாம். ஒரு கன சதுரத்துக்கு எத்தனை முனைகள்? எட்டு அல்லவா? நடுவில் உள்ள மையப் புள்ளி யையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த ஒன்பது புள்ளிகளிலும் பிரமாண்டமான ஒன்பது கோளங்கள் இருந்து, அவை நேர்க்கோடுகளால் இணைக்கப்ப​ட்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் காட்சியளித்தது அந்தக் கட்டடம்.

கார்களும், பேருந்துகளும் வெகு ​தூரத்திலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. ''இதோ வந்துவிட்டது, நெருங்கிவிட்டது...'' என்றெல்லாம் தோன்றினாலும், வெகு நேர நடைக்குப் பிறகுதான், ​அடோமியத்தின் வாசலை அடைந்தோம்.

கட்டடத்தைவிட அதிக வியப்பை அளித்த ஒரு விஷயம், எங்களுக்கு நுழைவாயிலுக்குள் காத்திருந்தது.

நுழையும் இடம் சிறிதாகவும், சாதா ரணமாகவும்தான் இருந்தது. அங்கு ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டிருந்தது. உலகின் பல மொழிகளில் அதில் நம்மை வரவேற்கிறார்கள். 'வருக’ என்ற தமிழ் வார்த்தையை​யும் அதில் பார்த்தபோது எனக்கு உண்டான சிலிர்ப்பு... நெகிழ்ச்சி... அது ஒரு தனிப் பெருமைதான்!

எதற்காக இப்படி ஒரு கட்டடத்தை எழுப்பினார்கள்? காரணம் உண்டு.

உலகப் பொருளாதாரக் கண்காட்சி, 1958-ல் புருஸெல்ஸ் நகரில் நடைபெற்றது. எக்ஸ்போ-58 என்று அழைக்கப்பட்ட இந்தக் கண் காட்சிக்காகவே எழுப்பப்பட்டது இந்த அடோமியம் (சென்னை, அண்ணா நகரில் இதே போன்ற காரணத்துக்காக எழுப்பப்பட்ட அண்ணா நகர் டவர் நினைவுக்கு வருகிறதா?). உலகை​யே '​அட’ என்று திரும்பிப் பார்க்க வைத்த அந்தக் கட்டடத்தின் நுழைவாயிலில்தான் நாங்கள் நின்றுகொண்டிருந்தோம்.

அணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்!

உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அதை வெளியில் இருந்து பார்த்து ரசிக்கத்தான் முடியும், உள்ளே அப்படியொன்றும் பிரமா தமாக இருக்காது; அப்படியே இருந்தாலும், உள்ளே செல்லவெல்லாம் அனுமதி கிடைக்காது என்றுதான் நினைத்தோம். ஆனால், அதற்குள் பல விஷயங்கள் உண்டு என்பதும், எஸ்கலேட்டர்கள்கூட அவற்றுக்குள் உண்டு என்பதும் எதிர்பாராதவை.

அன்ட்ரே வாட்டர் கெய்ன் - உச்சரிக்கக் கொஞ்சம் கரடுமுரடாக இருந்தாலும், இந்தப் பெயரை அப்போது நினைவுகொள்வதுதான் நியாயம். காரணம், அவர்தான் இதை வடிவமைத்த இன்ஜினீயர்.

அடோமியம், 335 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. முழுக்க முழுக்க ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் ஆன வெளிப்புறம், பளபளவென மின்னுகிறது.

''எந்த வகை அணு இது?'' என்று கேட்டதும், அங்கிருந்த வரவேற்பாளர்களில் நீல நிற உடை அணிந்த பெண்மணி, ''இரும்புப் படிகத்தின் ஒரே ஒரு அணுதான் இங்கு பெரிதுபடுத்தப் பட்டிருக்கிறது'' என்றார். எவ்வளவு பெரிது படுத்தப்பட்டிருக்கிறது என்று ஒரு கேள்வியைக் கேட்டிருக்கவும் வேண்டாம்; தற்காலிகமாக தலைச்சுற்றலை அனுபவித்திருக்கவும் வேண் டாம். 165 பில்லியன் முறை பெரிதுபடுத் தப்பட்டுள்ளதாம். (ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன்; ஒரு மில்லியன் என்றால், பத்து லட்சம்).

ஒன்றை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். உள்ளே பளிச்சென்ற வெளிச்ச மெல்லாம் கிடையாது. அத்தனையும் கோளங்கள், குழாய்கள். ஒரு ஜன்னல், கதவு, எதுவுமே வெளியில் இருந்து புலப்படவில்லை.  

''எல்லாப் பகுதிகளுக்கும் போய்விட்டுவர சுமார் எவ்வளவு நேரம் ஆகு​ம்?'' என்று நாம் கேட்க, அங்கிருந்த நான்கு பேரில் நீல உடை அணிந்திருந்த அதே ஊழியர்தான் பதிலளித்தார். வேறு வழியில்லை; அவர்களில் அவருக்கு மட்டும்தான் ஆங்கிலம் தெரிந்திருந்தது.

''எல்லாப் பகுதிகளுக்கும் நீங்கள் போக முடியாது. மேலாக உள்ள நான்கு கோளங்களில் ஒன்றுக்குள்தான் நீங்கள் போக முடியும்'' என்றார். பாதுகாப்புதான் காரணமாம். இதைச் சொன்னதோடு அவர் விட்டிருக்கக் கூடாதா..? கூடவே, ''அதாவது, உங்கள் பாதுகாப்பைச் சொல்கிறோம்'' என்று சொல்லிப் புன்ன கைத்தார். அதோடு விட்டாரா? ''பெல்ஜியத்தில் காற்று வெகு வேகமாக வீசுவது வழக்கம். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேக​த்தில்கூட காற்று வீசியதாகப் பதிவாகியிருக்கிறது'' என்று மெனக்கிட்டு கிலி விவரம் தந்தார். நாங்கள் ​அடோமியத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பிறகு, இந்தத் தகவல்களை அந்த நீல உடை ஊழியர் கூறியிருக்கலாம். நாட்டுப்பற்று பொங்க நாங்கள் உள்ளே நுழையும்போது அவர் இப்படிக் கூறியது, வயிற்றுக்குள் கடமுடா என்று உருட்டியது.

டிஸ்னிலாண்ட் ​அமெரிக்காவில் தொடங் கியது என்றாலும், பாரிஸ் போன்ற பிற பகுதிகளிலும் உள்ளன. ஆனால், அடோமியம் கட்டடத்துக்கான காப்புரிமையை வைத்துள்ள 'ஸபம்’ எனும் பெல்ஜிய அமைப்பு, இதுபோன்ற கட்டடம் வேறெங்கும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாம்.

கண்காட்சிக்கு ஓர் அடையாளச் சின்னமாக இது இருக்கும் எனும் கோணத்தில்தான் அடோமியம் எழுப்பப்பட்டது. ஆனால், இதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பும், பெல்ஜியத்தின் ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலமாக இது ஆகிவிட்டதும், அடோமியத்தை இங்கே தொடர்ந்து இருக்க வைத்ததுடன், அவ்வப்போது அதைப் புதுப்பிக்கவேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.    

அணுவுக்குள் ஓர் அதிசயப் பயணம்!

தொடக்கத்தில் அலுமினியத்தில்தான் இது காட்சியளித்தது. பிறகுதான், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்.

இந்தக் கோளங்கள் மற்றும் குழாய்களுக்குள் நடந்து செல்வதே ஒரு வித்தியாசமான அனுபவம். உள்ளே நிரந்தரக் கண்காட்சிகள் காணப்படுகின்றன. ''இரவில் பார்த்தால் இன்னும் பிரமாதமாக இருக்கும். ஆனால், மாலை 6.00 மணிக்கு மேல் அடோமியத்துக்குள் அனுமதி இல்லை'' என்றனர். இதற்கு அந்த முதல் வாக்கியத்தைச் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.

ஒரு கோளத்துக்கு ஃப்ரான்காயின் எங்லெர்ட் என்பவரின் பெயரையும், இன்னொரு கோளத்துக்கு இல்யா ப்ரிகோஜின் என்ற பெயரையும் வைத்திருக்கிறார்கள். இருவருமே பெல்ஜிய நாட்டு விஞ்ஞானிகள்; நோபல் பரிசு பெற்றவர்கள். நல்லவேளையாக, பெயரில்லாமல்தானே இருக்கிறது என்று மீதிக் கோளங்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்களின் பெயர்களை வைத்துவிடவில்லை.

உள்ளிருக்கும் காட்சியெல்லாம் பெரிதாக வசீகரிக்கவில்லை. கொஞ்சம் ஏமாற்றமும்கூட! இதற்குப் போய் ஒருவருக்கு 11 யூரோ நுழைவுக் கட்டணமா என்னும் எரிச்சல்கூட உண்டானது. உள்ளே எதையும் விவரிக்க, வழிகாட்டி என்று யாரும் கிடையாது. ஆனால், இந்த எதிர்மறை உணர்வுகளை ஈடுகட்டுகிறது, பல்வேறு கோளங்களில் இருந்து நம் கண்களில் விரியும் புருஸெல்ஸ் நகரின் பல்வேறு கோணங்கள் (360 டிகிரி). வெளியே வந்து அந்தக் கட்டடத்தை மீண்டும் பார்க்கும்போது, ஏமாற்றம் மறைந்து வியப்பு ஆக்கிரமித்துக் கொள்கிறது. அது சிற்பமா அல்லது கட்டடமா என்ற சந்தேகத்துக்கு விடை கிடைத்தபாடில்லை.

அணுகுண்டுச் சோதனைகள் அமைதிக்கு மட்டுமே உதவ வேண்டும் என்பதற்கான வெளிப்பாடுதான் இந்த அடோமியம் என்கிறார்கள். ஒரு ​நூற்றாண்டுக்குப் பிறகும் இந்த நோக்கத்தின் தேவை தொடர்கிறது, அடோமியத்தைப் போலவே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism