Published:Updated:

தில்... திகில்... த்ரில்..!

கட்டுரை: சண்.சரவணக்குமார்

தில்... திகில்... த்ரில்..!

கட்டுரை: சண்.சரவணக்குமார்

Published:Updated:

கட்டுரை: சண்.சரவணக்குமார்

படங்கள்: சு.குமரேசன்

ந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான புலிகள் வனச்சரணாலயங்களில் தமிழக - கேரள எல்லைப் பகுதியான தேக்கடியில் அமைந்துள்ள பெரியாறு புலிகள் வனச்சரணாலயமும் ஒன்று. தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி வழியாக குமுளிக்குச் சென்றால், அங்கிருந்து 4 கி.மீ தூரத்தில் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தேக்கடியை அடையலாம். அக்டோபர் முதல் மே வரை நல்ல சீசன் காலம். காட்டினுள் எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களான தீப்பெட்டி, ஆல்கஹால், பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் என எதையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பெரியாறு புலிகள் வனச்சரணாலயம் மட்டும்தான், இந்தியாவிலே சுற்றுலா பயணிகள் செல்லக்கூடிய பகுதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தில்... திகில்... த்ரில்..!

நேச்சுரல் கேம்ப்:

தேக்கடியில் அமைந்துள்ள பெரியாறு புலிகள் வனச்சரணாலயம் 925 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. முழுக்க முழுக்கத் தேக்கு, தோதகத்தி, சந்தனம் போன்ற விலை உயர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதி. இந்த அடர்ந்த வனப்பகுதியில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 42 புலிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் புலிகள் காப்பகம் இந்தியாவிலேயே சிறந்த புலிகள் காப்பகமாக ஐ.நா சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

காட்டில் இப்போதைய நிலவரப்படி யானை, புலி, காட்டு மாடு, சிறுத்தை, செந்நாய், கருஞ்சிறுத்தை, கரடி, காட்டு எருது, கடமான், சிங்கவால் குரங்கு, அனுமான் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு, முதலை, மலைப்பாம்பு, ராஜநாகம், புள்ளிமான், மிளா, அரையடி மட்டுமே வளரக்கூடிய சருகுமான் உட்பட 23 பாலூட்டி வகைகள் இருக்கின்றன. நீர்க்காகம், மலைமுங்கான், மரங்கொத்தி என 323 பறவையினங்கள் இருக்கின்றன. 38 வகை மீன் வகைகள், 44 வகை சிறு உயிரினங்கள், 168 வகை பட்டுப்பூச்சிகள் வசிக்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக ரசிக்க, அதற்கேற்றபடி காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

இந்தப் புலிகள் சரணாலயத்தைத் தாண்டி 12 கிலோமீட்டர் சென்றால், முல்லை பெரியாறு அணைக்கட்டுப் பகுதியில் உள்ள வல்லக்கடவு என்ற இடத்தில், சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளைப் பார்வையிடுவதற்காக பாதுகாப்பான கண்ணாடி கூண்டுகளாலான வாகனங்கள் உள்ளன.

இந்த வனப் பகுதியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாகத் தங்குவதற்காக நேச்சுரல் கேம்ப், டென்ட் வசதி உள்ளது. அப்படி தங்குபவர்களுக்கு பாரம்பர்யமான கம்பு, சோளம், கைக்குத்தல் அரிசிச் கஞ்சி உள்ளிட்ட இயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. ''இங்கு வரும் பயணிகள் வனத்தை நேசிக்க வேண்டும். அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து, வனத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறோம்'' என்றார் புலிகள் வனச் சரணாலய இயக்குநர் சஞ்சயன் குமார்.

தில்... திகில்... த்ரில்..!

வேட்டைத்தடுப்பு முகாம்:

புலிகள் வனச் சரணாலயத்தில் நடக்கும் வேட்டைகளைத் தடுப்பதற்கு வனத்தைச் சுற்றி கேம்ப்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிவகிரி மலையில் தொடங்கி இறுதி எல்லைகள் வரை வேகமும் விவேகமும் உடைய பல இளைஞர்களை கேரள அரசு வேலைக்கு எடுத்து காட்டைப் பாதுகாத்து வருகிறது. இதற்கு வேட்டைத் தடுப்பு முகாம் என்று பெயர். பெரும்பாலும் சுற்றுலா பயணிகளை இங்கு அனுமதிப்பது இல்லை. இயற்கை ஆர்வலர்கள், வன ஆர்வலர்களை மட்டும்தான் இந்தப் பகுதிகளுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.

மூங்கில் துடுப்புப் பயணம்:

பெரிய பெரிய மூங்கில்களை ஒன்றாகக் கட்டி, படகுபோல் செய்து ஆற்றில் துடுப்பு போட்டு பயணம் செய்ய விடுகிறார்கள். மலைப் பயணம், வனத்தைச் சுற்றுதல், படகில் பயணம் செய்தல் என செம ஜாலியான பயணம் அது. காட்டுக்குள்ளே டென்ட் போட்டு, குடில் அமைத்து ஓர் இரவை அங்கே கழிக்க வைக்கிறார்கள். இதை வல்லக்கடவு என்ற இடத்தில் நடத்துகிறார்கள். படுப்பதற்கு படுக்கை, தலையணை, கம்பளி தரப்படுகிறது. இரவானால் காட்டு விலங்குகள் தாக்காமல் இருக்க, கேம்ப்பைச் சுற்றி மின்சார வேலி போடப்பட்டு இருக்கிறது. சாப்பிட கஞ்சி, துவையல், பயிறு என்று இயற்கையான உணவு வகைகளைத் தருகிறார்கள். நேச்சர் கேம்ப்புக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவியருக்கு தனிச் சலுகைகள் உண்டு.

தில்... திகில்... த்ரில்..!

படகுப் பயணம்:

தேக்கடி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது படகுச் சவாரி பயணம்தான். 26 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட பெரியாறு ஏரிப் பகுதியில் படகுச் சவாரி செய்வது சுகானுபவம். காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை படகுப் பயணம் உண்டு. படகுப் பயணத்தின்போதும் மான்கள், யானைகள், காட்டு எருமைகள் போன்ற மிருகங்கள் தண்ணீர் அருந்த வருவதைப் பார்க்கலாம். பழைமையான தேக்கு மரங்கள் தண்ணீர் நடுவே மொட்டையாக நிற்கும் அழகும், அதன் மேல் பறவைகள் உட்கார்ந்து இருக்கும் அழகும் கண்ணுக்கு ரம்மியமான காட்சிகள்!

இரவு மலையேற்றம்:

காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை கொள்ளையர்களிடம் இருந்து காப்பற்ற, நைட் டிரெக்கிங் என்ற பெயரில், விருப்பம் உள்ள சுற்றுலாப் பயணிகளையும் உடன் அழைத்துச் செல்கிறார்கள் வனத் துறையினர்.

இரவு 11 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4 மணி வரை இந்த திகிலான பயணம் தொடர்கிறது. அப்போது யானைகள், மான்கள், புலிகள் என ஏகப்பட்ட வன விலங்குகளை அருகிலேயே பார்க்கலாம். ஆபத்து ஏற்படாமல் இருக்க பாதுகாப்புக்கு ஆங்காங்கே செட் போட்டிருக்கிறார்கள். அங்கு தங்கிக்கொண்டு இரவு நேரங்களில் காட்டைச் சுற்றி வரலாம்.

தில்... திகில்... த்ரில்..!
தில்... திகில்... த்ரில்..!

விலங்குகள் காப்பகம்:

தேக்கடி பெரியாறு புலிகள் வனச்சரணாலயத்தின் முக்கிய சிறப்பம்சமே புலிகள்தான். மனிதர்களுக்கு கைரேகை இருப்பதுபோல, ஒவ்வொரு புலியின் உடம்பிலும் தனித்தனிக் கோடுகள் இருக்கும்.முள்ளம்பன்றிதான் புலிகளின் விருப்ப உணவு என்று சொல்கிறார்கள். சில சமயம் முள்ளம்பன்றியின் முட்கள் புலியின் மேல் காயத்தை ஏற்படுத்திவிடும். சீழ் வைத்து அவதிப்படும் புலிகளை வீடியோ கேமரா வில் கண்காணிக்கிறார்கள். அவற்றைக் குணப்படுத்த மிருக மருத்துவசாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

ஆதிவாசிகளின் கலாசார கலைக்குழு:

சுற்றுலாப் பயணிகளின் பயணத்துக்கு மேலும் சுவாரஸ்யம் கூட்ட, நடுக்காட்டில் டென்ட் அடித்து தங்கவைத்து, காடுகளின் தேவை குறித்து நாடோடிக் கதைகள், பழங்குடியினர் வாழ்க்கை என்று கதைசொல்லிகள் கதை சொல்வது உண்டு. பகல் பொழுதுகள் எல்லாம் காடுகளில், இரவில் அன்றைய அனுபவம் பற்றிய பகிர்வுகள் என இரண்டு நாள் முகாம்களை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணத்தில் சலுகையும் தரப்படுகிறது. வல்லக்கடவு மற்றும் தேக்கடியில் இது நடத்தப்படுகிறது. பாரம்பர்யம்  சார்ந்த கம்பு, கேழ்வரகு, உளுந்தம்களி, தினைக் கஞ்சி, இஞ்சித் துவையல், மிளகு சூப் என ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே இரண்டு நாட்களும் கொடுக்கப்படுகின்றன. இப்படி இரண்டு நாட்களும் இயற்கை யோடு இயைந்து வாழ்வது மனதுக்கும் உடம்புக்கும் புத்துணர்வைத் தரும்.

தில்... திகில்... த்ரில்..!

தண்ணீர் நடுவே அரண்மணை!

தேக்கடி படகுத் துறை தாண்டி 20 நிமிடங்கள் படகுப் பயணம் சென்றால், ஏரியின் உள்ளே பேலஸ் ஒன்று உள்ளது. தண்ணீரின் நடுவில் அமைந்துள்ள இந்த குட்டி அரண்மனையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. படகுச் சவாரிக்கும் மலையேற்றத்துக்கும் சேர்த்து இந்தக் கட்டணம். நடுக் காடு, சுற்றிலும் தண்ணீர், தண்ணீர் நடுவே குட்டி அரண்மனை. இதனைக் கட்டியது திருவிதாங்கூர் மஹாராஜா. அவர் வேட்டைக்கு வரும்போது தங்குவதற்காக இந்த அரண்மனையைக் கட்டினாராம். அவர் பயன்படுத்திய கண்ணாடி, மான் கொம்பு, யானைத்தந்தம் போன்றவற்றை இங்கு பார்க்கலாம்.

தில்... திகில்... த்ரில்..!

யானைச்சவாரி:

தேக்கடி புலிகள் வனச் சரணாலயத்தில் இருந்து 2 கி.மீ பொடி நடையாக நடந்து சென்றால் காபி, தேயிலை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட அழகு நிறைந்த வனப் பயிர் வளர்ப்புப் பகுதிகள் இருக்கின்றன. இன்னும் கொஞ்ச தூரம் போனால் யானைச் சவாரி, யானையைக் குளிப்பாட்டுவது, யானையுடன் போஸ் கொடுப்பது போன்ற பொழுதுபோக்குகளும் உள்ளன. இது குடும் பத்தோடு வருபவர்களுக்காக!

உடல் சோர்வைப் போக்குவதற்காக ஆயுர் வேதிக் மசாஜ் சென்டர்ஸ், ஸ்பா உள்ளிட்டவை நிறைந்து காணப்படுவதால் புலிகள் காப்பகத் துக்கு வருபவர்களுக்கு ஆயுர்வேதிக் மெடிக்கல் டூரிஸமாகவும் அமைகிறது. இதனால் ஹிந்தி, சினி ஸ்டார்ஸ் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் விளங்குகிறது பெரியாறு புலிகள் வனச் சரணாலயம்.

இவர்களோடு வன தேவதைகள்:

இந்தியாவிலேயே, 150-க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது இங்கு மட்டும்தான். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்களும் அடக்கம், இவர்கள் பணி, காட்டைப் பாதுகாப்பதும், சுற்றுலாப் பயணிகளோடு காட்டுக்குள் டிரெக்கிங் செல்வதும்.

இயற்கையை விரும்புவோர், இயற்கையை நேசிப்போர் காட்டினுள் காலடித் தடயங்களை விட்டுவிட்டு, பசுமையான நினைவுகளை மட்டும் எடுத்து வருவதற்கு ஏற்ற சுற்றுலா இது.

தில்... திகில்... த்ரில்..!

ராமக்கல் மெட்டு

ஆசியா கண்டதிலே அதிக காற்று வீசும் இடம் ராமக்கல் மெட்டு. வருடம் முழுவதும் நிமிடத்துக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று அடிக்கும் மலைப் பகுதி. அதனால், இங்கு பல்வேறு காற்றாலை இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேக்கடியை பார்த்துவிட்டு வரும் வழியில் பார்க்கலாம்.

வாகை மண்

தேக்கடியைத் தாண்டினால் அடுத்து வருவது வாகை மண். தேக்கடியில் இருந்து 60  கி.மீ தூரத்தில் உள்ள அருமையான இடம். ஏப்ரல், மே மாதங்களில் 500 அடிகள் கொண்ட உயரமான மலையில் இருந்து பாராசூட் வழியாகக் குதிக்கும் பயிற்சி வகுப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன. இயற்கையான சுற்றுப்புறமே இதன் முகவரி.

மேகமலை வனச்சரணாலயம்

கம்பத்தில் இருந்து வரும் வழியில் சின்னமனூர். அங்கிருந்து 30 கி.மீ தூரம் போனால் வருவது மேகமலை வனச்சரணாலயம். சிறுத்தைப்புலி, மான், எறும்புத்தின்னி, கரடி, யானை எனப் பல்வேறு வனவிலங்குகள், 60-க்கும் மேற்பட்ட பறவைகள் என்று பல்வேறு உயிர்கள் வாழும் அடர்ந்த வனப்பகுதி. இங்கு தங்குவதற்கு மேகமலை பேரூராட்சி சார்பில் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism