Published:Updated:

பெருந்தேனருவி | எத்தனை பீச்,எத்தனை அருவி, இங்கே போனால் நனையாமல் வர முடியாது! ஊர் சுத்தலாம் வாங்க |9

பெருந்தேனருவிக்கு தேனி, குமுளி வழியாகப் போவதுதான் சரியான ரூட். ஆனால், நான் நாகர்கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

இப்போதெல்லாம் அருவி என்றாலே ‘அருவி’ ஹீரோயின்தான் நினைவில் வந்து கும்மியடிக்கிறார். இனிமேல் எனக்கு அருவி என்றால், கேரளாவின் பெருந்தேனருவியோ, (Perunthenaruvi) தமிழ்நாட்டின் திற்பரப்பு (Tirparappu) அருவியோ நினைவுக்கு வரலாம். கடவுளின் தேசமான கேரளாவில் எத்தனையோ அருவிகள் உண்டு. வளச்சல், அதிரப்பள்ளி பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், இதற்கெல்லாம் முன்னோடி என்று ஒன்று நிச்சயம் இருக்கும். அது, கேரளாவின் பம்பை தாண்டி உள்ள பெருந்தேனருவி. அதற்காக அதிரப்பள்ளிக்கு வரும் தண்ணீர் பெருந்தேனருவியில் இருந்து வருகிறதா என்றால், இல்லை. ஆனால், பம்பை ஆற்றுக்கு மூலம் இந்தப் பெருந்தேனருவி.

பெருந்தேனருவிக்கு தேனி, குமுளி வழியாகப் போவதுதான் சரியான ரூட். ஆனால், நான் நாகர்கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன். காரணம், திற்பரப்பு. ‘இந்த முறை ஈரப்பதம் அதிகமா இருக்கணும். நனைஞ்சபடி அலுவலகம் வந்தாலும் பரவாயில்லை’ என்று ஆசிரியர் சொல்லியிருந்ததால், கடற்கரைகளாகவும், அருவிகளாகவும் பார்த்துத் தலை சிலுப்பி வரலாம் என்பதால்தான் இந்தத் திட்டம்.

இந்தப் புத்தாண்டு முதல் மாதத்தில் நடந்த அரசுப் பேருந்துகளின் விலையேற்றத்துக்கு ஒரு வகையில் நானும் காரணமாக இருக்கலாம். ‘450 ரூபாய்தானே... நாகர்கோவில் வரைக்கும் பஸ்ல போயிட்டு, அங்கிருந்து காரை எடுத்துக்கலாம்’ என்று நான் திட்டம் போட்டது தமிழகப் போக்குவரத்துத் துறைக்குக் கேட்டிருக்கலாம். இப்போது சென்னை to நாகர்கோவிலுக்கு 875 ரூபாய் பஸ் கட்டணம். மன்னிச்சூ! நண்பர் ஒருவர், இரண்டு மாதங்களுக்கு முன்பே திருவனந்தபுரத்துக்கு 1000 ரூபாய்க்கு விமான டிக்கெட் முன் பதிவு செய்து காட்டியதை டைமிங்காகச் சொல்லி வெறுப்பேற்றினார்.

‘குளத்துடன் கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போனால் நஷ்டம் குளத்துக்கு இல்லை’ என்பதைப் புரிந்து கொண்டு, வேறு வழியில்லாமல் நாகர்கோவிலுக்கு முன்பே பேருந்தில் இறங்கினேன். சில பல பீச்களில் போட்டோ ஷூட் பண்ணிவிட்டு, அப்படியே திற்பரப்புக்குப் பயணம் போவதுதான் திட்டம். செம குளிர் அடித்தது.

ஹூண்டாய் கார் ஒன்றைக் கிளப்பி, புகைப்பட நிபுணரை ஏற்றிக்கொண்டு காலையில் கிளம்பினேன். சென்னைக்கு குயின்ஸ்லேண்ட், விஜிபி, கிஷ்கிந்தா.. ஊட்டிக்கு பிளாக் தண்டர், மதுரைக்கு அதிசயம் மாதிரி... கன்னியாகுமரி தாண்டி நாகர்கோவில் செல்லும் வழியில் ஒரு தீம் பார்க் இருக்கிறது. தீம் பார்க்கின் பெயரே ஆளை இழுக்கிறது. ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் நடித்த சீரியல் தொடரான ‘பே வாட்ச்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சிறுவர்களுக்கு 200 ரூபாயும் பெரியவர்களுக்கு 350 ரூபாயும் கட்டணம். ஜாலி பார்ட்டிகளுக்காக இதைச் சொல்கிறேன்.

கடற்ரை வழியாகவே நேரே போனேன். மணக்குடி எனும் கிராமம் வந்தது. எந்நேரமும் மீன் வாசமும், அலையடிக்கும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. சர்ச்சைகளுக்குப் பிறகு ஹிட் ஆகும் சுமாரான படங்கள்போல் சாதாரண கிராமமாக இருந்த மணக்குடி, சுனாமிக்குப் பிறகு ஓவர்நைட்டில் பிரபலமானது. 2004-ல் ஏற்பட்ட சுனாமியில், இங்குள்ள பாலம் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடப்பது இப்போது சுற்றுலாத் தலமாக மாறி வரலாறாகிவிட்டது. ‘‘சுனாமியில பாதி மணக்குடி காலி... இந்தப் பாலம் மட்டும்தான் மிச்சம். அப்படியே இருக்கட்டுனு விட்டுப்புட்டானுவ...’’ என்றார் மணக்குடிவாசி ஒருவர். ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ என்பதுபோல், உடைந்த பாலத்தின் கொஞ்சூண்டு பகுதியை அப்படியே விட்டு விட்டார்கள். 

அதற்குப் பதிலாக புதுப் பாலம் இப்போது ஜொலிக்கிறது. ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் போன்ற இயக்குநர்களின் படங்களில் வரும் செட் போல பயமாக இருந்தது உடைந்த மணக்குடி பாலம். கவிழ்ந்து கிடந்த பாலமே சுனாமியின் வீரியத்தைச் சொல்லியது. மணக்குடி பாலத்துக்காக வருந்தினேன்.

நாகர்கோவில் என்றால், முட்டம் கடற்கரைதான் ரொம்ப ஃபேமஸ். ‘கடலோரக் கவிதைகள்’, ‘நீர்ப் பறவை’, ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘சிங்கம்’ என்று ஏகப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் அலையடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட் முட்டம் கடற்கரை. தள்ளுமுள்ளுகள் இல்லாமல் அமைதியாக இருக்கிறது கடற்கரை. கொஞ்சூண்டு கூட்டம் இருந்தது. விசாரித்ததில் ‘‘நண்டு பிடிக்க வந்தோம்ணா’’ என்றார்கள்  சில இளவட்டப் பசங்கள். சில நேரங்களில் கரையிலிருந்தே ஆழம் ஆரம்பிப்பதால், குளிப்பதற்குத் தடை. ஒரு சாயங்கால வேளையோ, காலை வேளையோ - டென்ஷன் பார்ட்டிகளுக்கு முட்டம் அருமையான ரிலாக்ஸிங் பாயின்ட்டாக இருக்கும். சூரிய உதயம், அஸ்தமனம் - இரண்டுமே முட்டத்தில் பிரமாதமாக இருக்கும் என்றார்கள்.

கடற்கரை வழியாக கார் ஓட்டுவது செமயாக இருந்தது. ‘பீச் டிரைவ் இன்’ என்று போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ்கூட வைக்கலாம். முட்டம் போலவே குளச்சல் என்றொரு இடம் வந்தது. சின்னக் கடற்கரை நகரமாக இருந்தது குளச்சல். ஆனால் குளச்சலுக்குப் பெரிய வரலாறு இருந்ததைச் சொன்னார்கள். வாஸ்கோடகாமா இதை ‘குளச்சி’ என்று செல்லமாக அழைப்பாராம். 1741 ஆகஸ்ட் மாதம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்ததாம் குளச்சல். திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்டவர்மனுக்கும், டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கும் கடுமையாகப் போர் நடந்த இடம் - குளச்சல் கடற்கரைதானாம்.

வரலாற்றில் ஒரு இந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த அரசு, ஐரோப்பியக் கடற்படையை முதன்முறையாக வெற்றிகொண்ட இடம் என்ற பெருமை குளச்சலுக்கு உண்டு. டச்சு - கிழக்கிந்தியக் கம்பெனியினரின் தோல்விக்குப் பிறகு, பிரிட்டீஷ் கடற்படை அட்மிரல் டெலன்னாய், இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திருவிதாங்கூர் கடற்படையில் முதன்மை அட்மிரலாகப் பணிபுரிந்தது இந்திய வரலாற்றிலும், பிரிட்டிஷ் வரலாற்றிலும் மறக்க முடியாத ஒன்று. குளச்சலில் இருந்து சில கி.மீ தொலைவில் இருக்கும் உதயகிரி கோட்டை, அட்மிரல் டெலன்னாய்யின் நினைவாக எழுப்பப்பட்டதாம்.

பீச் முடியமாட்டேன் என்று அடம்பிடித்தது. சங்குதுறை என்றொரு இடம் வந்தது. ஆள் அரவமே இல்லை. இங்கு ஒரு கலங்கரை விளக்கம் இருக்கிறது. இதில் ஏறி நின்றால் - விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் சூப்பராகப் பார்க்கலாம் என்றார்கள். பார்த்தேன்; ரசித்தேன். இங்குள்ள மிகப் பெரிய சங்கு ஒன்றில் நுழைந்து செல்ஃபி எடுத்துக் குவிக்கலாம். சங்குதுறை - மாலை நேரத்துக்கு சூப்பரான ஸ்பாட். மாலை முடியும் நேரம் சங்குதுறை, மஞ்சள் சிவப்பு ஆரஞ்ச் என்று வெரைட்டியாக சில்ஹவுட்டில் எடுத்த புகைப்படம் போல் இருந்தது. திரும்பி வரும்போது சூரிய அஸ்தமனம் - அட்ராசிட்டி பண்ணியது.

நாகர்கோவில் டூரில் தயவுசெய்து மறக்காமல் மாத்தூர் தொட்டிப் பாலத்தை டிக் அடித்துவிடுங்கள். நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தாண்டினால், பரளியாற்றின் மேல் பிரம்மாண்டமாக வரவேற்கிறது தொட்டிப் பாலம். ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலமான மாத்தூர் தொட்டிப் பாலம், 1966-ல் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டது . காமராஜரிடம் அவரின் சாதனைகளைப் பற்றிப் பேசிய ஒரு சினிமா அதிபர், ''ஐயா, 5 லட்ச ரூபாய் இருந்தால், உங்கள் சாதனைகளைப் பற்றி ஒரு திரைப்படம் பண்ணலாம்!'' என்றதற்கு, ''5 லட்ச ரூபாயில் நான் ரெண்டு பள்ளிக்கூடமோ, தொட்டிப் பாலம் மாதிரி ஒரு பாதியோ கட்டி முடிச்சுப்புடுவேன் சாரே!'' என்றாராம்.

கிட்டத்தட்ட வெறும் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், 7.5 அடி அகலத்தில், 28 தூண்களைக் கொண்டு, 115 அடி உயரத்தில், ஒரு கி.மீ. நீளத்துக்கு, தென்குமரியின் விவசாயப் பாசனத்திற்காகக் கட்டப்பட்ட இந்தத் தொட்டிப் பாலம், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் இருந்து, பரளியாற்றின் தண்ணீரை, இன்னொரு புறத்திற்கு அதன் புவியீர்ப்பு விசையிலேயே கொண்டுவரும் அழகு, அற்புதம்! 'கணினியைத் தட்டி ஆயிரம் மென்பொருள் தயாரிக்கலாம்; ஆனால், ஒரு நெல்மணியைத் தயாரிக்க முடியாது!’ என்பதுபோல, ஆயிரம் ஆயிரம் வசதிகள் வந்தாலும், இன்னும் விவசாயம்தான் நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது என்பதற்குச் சாட்சியாக தொட்டிப்பாலம், தென்குமரியின் விவசாயத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறது.

பாலத்தில் இருந்து மொத்த அழகையும் பார்த்தேன். குழந்தைகள் மேக்-அப் போடத் தெரியாமல் முகம் முழுதும் பவுடரை அப்பிவிட்டு வந்து நிற்பதுபோல் அத்தனை அழகாகச் சிரித்தது. பச்சைப் புல்வெளியும் நீல வானமும் சலசலவென தண்ணீரும் கலந்து பெரிய பனோரமா மோடில்கூட சிக்க வைக்க முடியாத அளவு ரம்மியமாய் இருந்தது. நீளமாக இருந்த பாலத்தில், சிக்னல் போட்டதும் சீறிக் கிளம்பும் வாகனங்கள்போல் பரபரவெனப் பறந்து நிற்காமல் பயணித்துக் கொண்டிருந்தது தண்ணீர். ‘‘இந்தத் தண்ணிக்குள்ள சுழல் சக்தி அதிகம். தண்ணிக்குள்ள விழுந்தா அவ்வளவுதான். சுழட்டியடிச்சிடும்.’’ என்று தெரிந்த ஒருவர் எச்சரிந்திருந்ததால், பாலத்தில் கவனமாக நடந்து, நானும் சிலரை எச்சரித்து நல்ல பெயர் வாங்கினேன். ஆனால், ‘தொப் தொப்’ என சில வாண்டுகள் பாத்ரூம் தொட்டிக்குள் குதிப்பதுபோல் தொட்டிப்பாலத் தண்ணீரில் குதித்து, தண்ணீரின் போக்கில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ‘‘நாங்க அந்தப் பக்கம் போகணும். தண்ணில இறங்கினா அதுவா ஸ்பீடா கொண்டுபோய் விட்டுடும் கேட்டீயளா?’’ என்று நக்கலாகச் சிரித்தார்கள் வாண்டுகள். தொட்டிப் பாலம் செம பல்பு கொடுத்தது. நண்பரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

கீழே பரளியாற்றில் தண்ணீர் வரத்து அம்சமாக இருந்தது. ஆற்றில் நீரின் வேகம் சில நேரங்களில் அதிகம் இருப்பதால், 'நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே இறங்க வேண்டும்’ என்ற எச்சரிக்கைப் பலகையைப் படித்துவிட்டு, தண்ணீரில் டைவ் அடிப்பது நலம். அங்கங்கே இயற்கையாக குளியல் குளங்கள் இருக்கின்றன. எல்லாமே பரளியாற்றுத் தண்ணீர்தான். கும்பலாக வந்து குளித்துவிட்டுப் போகும் சில குடும்பங்களின் அட்ராசிட்டிகளை கேமராவுக்குள் திணித்துக் கொண்டிருந்தார் புகைப்பட நிபுணர். ஸ்நாக்ஸ் டைமில் மாங்காய், இலந்தைப் பழ ஜெல், ஆவக்காய் என்று பள்ளிக்கால நாஸ்டால்ஜியாவைக் கிளறி விட்டது தொட்டிப் பாலக் கடைகள்.

அடுத்து திற்பரப்புக்கு வண்டியை மிதித்தேன். 24 கி.மீ தாண்டினால் திற்பரப்பு வந்துவிடுகிறது. கன்னியாகுமரியில் இருந்து கிளம்புபவர்கள் குலசேகரம் வந்து அங்கிருந்து 5 கி.மீ கடந்தும் திற்பரப்பு வரலாம். காரை நிறுத்தும்போதே அருவிச் சத்தம் எக்கோ அடித்தது. ‘குமரிக் குற்றாலம்’ என்றொரு செல்லப் பெயர் திற்பரப்புக்கு இருக்கிறது. கோதையாறு எனும் நதியிலிருந்து கிளம்பும் திற்பரப்பு அருவி, 50 அடி உயரத்தில் இருந்து விழுந்து அழகாக அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருந்தது. அருவி நீரை நேரடியாகத் தலைக்கு வாங்கிக் கொள்ள பில்டிங்கும் பேஸ்மென்ட்டும் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டியது அவசியம். பேஸ்மென்ட் வீக்காக இருப்பவர்களுக்கு, கீழே நீச்சல் குளம்கூட உண்டு. குறைந்த அளவில் 10 ரூபாய், 5 ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கிறார்கள். சீஸன் டைம் இல்லாத நேரங்களில்கூட பெருசுகளும் சிறுசுகளுமாக பரபரப்பாக இருக்குமாம் திற்பரப்பு.

குளிப்பதற்கு முன்பு போட்டிங்குக்கு அழைக்கிறார்கள். திற்பரப்பு அணையில் போட்டிங் வசதி உண்டு. நான்கு பேர் கொண்ட பெடல் போட்டுக்கு 100 ரூபாயும், துடுப்பு போட்டுக்கு 150 ரூபாயும் வசூலிக்கிறார்கள். குளித்து வரும் வரை பொறுக்கமாட்டார்கள் போல் இருந்தது. டாஸ் போட்டுப் பார்த்தேன்; போட்டிங் வந்தது. படகுச் சவாரியை முடித்து விட்டுக் குளியலுக்குக் கிளம்பினோம். கன்னாபின்னா இரைச்சலுடன் அருவி நீர் அழகாக கிராமம் முழுவதும் வழிந்தோடுவது, கேரளாவுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று நினைக்க வைக்கிறது. திற்பரப்பு அருவிக் குளியலின் பலம் என்னவென்றால்... வயிறு முட்ட வாழைக்காய்/நேந்திர பஜ்ஜிகளை அமுக்கிவிட்டு திற்பரப்பில் ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தால், மொத்தமும் செமித்து மீண்டும் பஜ்ஜிகளுக்கு ஏங்குகிறது வயிறு.

நான்வெஜ் பார்ட்டிகளுக்கு ஒரு டிப்ஸ்: திற்பரப்பு ஏரியாவில் ‘கௌலா’ எனும் அணை மீன் வறுவலை மிஸ் பண்ணி விடாதீர்கள். ஆற்றின் இன்னொரு பக்கம் சிவன் கோவில் இருக்கிறது. மகாதேவரைத் தரிசிப்பதற்கென்றே சிவனடியார்கள் இந்தக் கோவிலுக்குக் குவிகிறார்கள்.

அருவிக்கு மேலே வாக்கிங்கும் போகலாம். அருவி விழும் இடத்திலிருந்து அபாயகர செல்ஃபிக்களெல்லாம் எடுத்துக் கொண்டிருந்தனர் நரம்பு முறுக்கேறிய இளசுகள். அருவிக்கு மேலேயும் ஸ்விம்மிங் நடந்து கொண்டிருந்தது. தெளிந்த நீரோடைகளில் தெளிந்த நீரோடை போல் குழந்தைகள் குளித்து முடித்து வந்து கொண்டிருந்தனர். அருவிக்கு அந்தப் பக்கம் ரப்பர் மரங்களிலிருந்து ரப்பர் எடுத்துக் கொண்டிருந்தார்கள் கிராமத்துவாசிகள். ரப்பர் மரக் காட்டுக்குள் ஒரு ட்ரெக்கிங் போய்விட்டு வந்து மீண்டும் காரில் ஏறிக் கிளம்பினோம்.

திற்பரப்பில் ரூம்கள் வாடகைக்கு ரூம்கள் அவ்வளவாக இல்லை. ஆனால், சாப்பிடுபவர்களைத் திணறடிக்காமல் தரப்படும் லிமிட்டெட் மீல்ஸ் மாதிரி போதுமான அளவு ரூம்கள் கிடைக்கின்றன. 1,000 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. பிக்கல் பிடுங்கல் இல்லாத ஒரு ரூமில் தங்கிவிட்டு மறுநாள் பெருந்தேனருவிக்குத் திட்டம் போட்டு விட்டோம்.

மறுநாள் காலையில் இருந்து கேரளா வாசம்தான். திற்பரப்பில் இருந்து பெருந்தேனருவிக்கு இரண்டு பாதைகள். நெடுமங்காடு, கிளிமன்னூர், கோட்டரக்கரா வழியாக பத்தினம்திட்டா போவது ஒரு வழி. அட்டிங்கல், வெள்ளியம் வழியாகவும் பத்தினம் திட்டா போகலாம். பத்தினம்திட்டாதான் பெரும்பாலான டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு ஏற்ற தங்கும் இடம். லாட்டரி விற்கும் சேட்டன்கள், வளர வளரப் பணிந்து நிற்கும் நெற்பயிர்கள் கொண்ட வயல்வெளி, கறுப்பு கட்டஞ்சாயா போடும் வெள்ளைச் சேட்டன்கள், குலுக்கி சர்பத், புளிப்பு மாங்காய், யானைகள் என்று வழி நெடுக கேரள மணத்தோடேயே பயணித்தேன். பெண்களும் பெண் குழந்தைகளும் வீடுகளை அழகாக்குவதுபோல், சேச்சிகள் கேரளாவை மேலும் அழகாக்குகிறார்கள்.

பத்தினம்திட்டா செல்லும் வரை மார்கழிக் குளிரும், மிதமான வெயிலும் மழையும் ஒரு சேரக் குளிர்வித்தது. இதன் பெயர்க் காரணமே ஜிவ்வென்றிருந்தது. ‘நதியோரத்தில் கொத்தாக அமர்ந்திருக்கும் பத்து வீடுகள்’ என்று இதற்குப் பொருளாம். கேரளாவின் வணிக மையமாகி விட்டது பத்தினம்திட்டா. பம்பை போன்ற இடங்களுக்கு வருபவர்கள் பத்தினம்திட்டாவில்தான் தங்குகிறார்கள். பட்ஜெட் ரூம்களில் இருந்து பிசினஸ் க்ளாஸ் மக்கள் வரை எல்லோரையும் அரவணைக்கிறது பத்தினம்திட்டா. ராணி, கோணி - இவை இரண்டும் பத்தினம்திட்டாவுக்கு அருகில் இருக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகள். ராணி எனும் ஊரைத் தாண்டியதும், பம்பை ஆறு பெரிதாக வரவேற்றது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்காகவே கடவுளால் படைக்கப்பட்ட ஆறு என்று இதைச் சொல்கிறார்கள். ‘இருப்பதை இயல்பாகப் பார்க்க வேண்டும்’ என்பதுதான் அழகு. ஆனால், பம்பையை இயல்பாகப் பார்க்க முடியவில்லை. டாப் ஆங்கிளில் பார்த்தேன். வேற லெவலில் இருந்தது.

திடீரென காடுபோல் பரந்து விரிந்த ஏரியாவுக்குள் இடதுபுறம் திரும்பச் சொல்லிக் கூக்குரலிட்டது கூகுள் மேப். திடீர்த் திருப்பங்கள், ஒற்றையடிப் பாதை, திடும் திடும் என முளைத்த மேடுகள், சரளைக் கற்கள், நடுவே குறுக்கிட்ட ஓடைகள், மண் தரை, காய்ந்த சருகுகள் என்று ரியல் காட்டுப் பயணமாகவே இருந்தது. மரங்களின் கிளைகளினூடே சூரியன் ஒளிபரப்பியது, கவிதைக்கான கருப்பொருள். ‘அடர்ந்த காடு மாதிரி இருக்கே; விலங்குகள் ஏதும் உண்டோ’ என்று விசாரித்தோம். மனிதர்கள் தொந்தரவு விலங்குகளுக்கு இல்லை என்றார்கள். அதாவது, விலங்குகள் இந்தக் காட்டில் இல்லை. பம்பை, சபரிமலை பக்கம் யு-டர்ன் அடித்து கேரளக் காடுகளுக்குப் போய்விடுவதாகச் சொன்னார்கள்.

35 கி.மீ வந்திருப்போம். ஓர் இடத்தில் காரை நிறுத்தச் சொல்லிப் பறைந்தார் சேட்டன் ஒருவர். எலெக்ட்ரிக் ஹைட்ரோ பவர் புரொஜெக்ட் இப்போதுதான் நடந்து முடிந்ததாகச் சொன்னார்கள். பெருந்தேனருவியின் வேலையாகத்தான் இருக்கும். ‘‘டேம் கட்டிக்கொண்டிருக்கின்னு. கட்டன்னுதன்னே வல்லிய டூரிஸ்ட் ஸ்பாட் ஆகான் போகுன்னு!’’ என்றார் அதிகாரி ஒருவர். காரில் இருந்து இறங்கி கூழாங்கற்களாகத் தாவித் தாவிச் சென்றால், ஏதோ ஒரு ஃபேன்டஸி உலகத்துக்கு வந்ததுபோல் இருந்தது. சுற்றிலும் குட்டிக் குட்டி மலைகளாக கூழாங்கல் பாறைகள், சலசல தண்ணீர்ச் சத்தம்... ட்ரெக்கிங் போவது போலவே இருந்தது.

அருவி என்றதும் அதிரப்பள்ளி, திற்பரப்பு போன்ற அருவிகளைக் கற்பனை செய்து கொண்டுபோனால், கம்பெனி பொறுப்பல்ல. ஆனால், ‘இப்படி ஒரு இடத்தைத்தான்யா எதிர்பார்த்தேன்’ என்று உள்மனசு நிச்சயம் கூவும். அருவி என்றால், ஓர் இடத்தில் மட்டும் விழவில்லை. நம்மூரில் ஸ்பீடு பிரேக்கர்கள் போல, பாறைகளுக்கு நடுவே அங்கங்கே அடிக்கு ஓர் அருவி விழுந்து ஆசையாய் அழைக்கிறது. தட்டு நிறைய முந்திரி இருக்கும்போது, ஒரு முந்திரியை மட்டும் தின்றுவிட்டுப் பேசாமல் இருப்பது முதிர்ச்சியின் அடையாளம். அதேபோல், கண்ணுக்கெட்டிய தூரம் வரை குட்டிக் குட்டி அருவிகள்... அவ்வளவு முதிர்ச்சி அடையவில்லை நான். பேசாமல் இருக்க முடியவில்லை.

குழந்தையாய்க் குதூகலிக்கத் தோன்றுகிறது. எதையும் விடவில்லை. மழை நேரங்களில் இங்கே நிற்கவே முடியாத அளவு, பாறை இடுக்குகளிலெல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுமாம். பெருந்தேனருவியில் இருந்து விழும் தண்ணீர், பம்பை நதியில் கலப்பதாகச் சொன்னார்கள்.

ஒரு தடவை அ.தி.மு.க. கொ.ப.செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத்தை மோட்டார் விகடன் டூர் பகுதிக்காக அழைத்து வந்து குளியல் போட வைத்தது இதே இடத்தில்தான். ஜில்லென்று விழுந்த ஓர் குட்டி அருவியைத் தேர்ந்தெடுத்து குழந்தைபோல் குதூகலித்துக் குளித்துவிட்டு, ‘இது கேரளாவே இல்லை; தமிழ்நாடு’ என்று தனது பாணியில் பொடேரென்று ஒரு போடாகப் போட்டது நினைவில் இருக்கிறது. ‘‘இந்த அருவியைப் பார்த்ததும், நினைவுக்கு வந்த பாடல் ஒன்றைச் சொல்கிறேன். நமது சங்க கால இலக்கியமான குறுந்தொகையில் இருந்து ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே’ என்றொரு பாடல் வருகிறது. அதாவது, ‘பெருந்தேன் போன்ற அருவி வீழ்கின்ற நாட்டினுடைய தலைவனோடு நான் நட்பு வைத்திருக்கிறேன்’ என்று தலைவி பாடுகிறாள். அப்படியென்றால், சங்க காலத்தில் இது நிச்சயமாக நமது தமிழ்நாடாகத்தான் இருந்திருக்க வேண்டும். அடுத்த கட்சி மீட்டிங்கில் பெருந்தேனருவியைத் தமிழ்நாட்டோடு இணைக்கக் கோரி வலியுறுத்தினால் என்ன என்று யோசிக்கிறேன்! இது நமது நாடு; இந்த அருவி இன்னும் பெருக்கெடுத்து நாட்டைக் குளிர்விக்க வேண்டும்!’’ என்று ஈர உடம்போடு தவமிருந்தபடி சொன்னார் நாஞ்சில் சம்பத்.

ஒருவேளை - இது தமிழ்நாடாகவும் இருந்திருக்கலாம். டூரிஸத்தைப் பொறுத்தவரை நாம் ஏங்கிக் கொண்டிருக்க, பெருந்தேனருவி போன்ற ஸ்தலங்களை வைத்து கேரளா இயங்கிக் கொண்டிருக்கிறது. நாஞ்சில் சம்பத் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், 'உடலோடு சேர்த்து, இறுக்கமான இதயத்துக்குள்ளும் படர்ந்து ஈரமாக்குகிறது பெருந்தேனருவி என்று சொல்லிக் கொண்டு...'

மற்ற பாகங்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு