Published:Updated:

பார்டர் கடை, பதிமூன்று கண் மதகுப் பாலம் - கடவுளின் தேசத்தில் தென்மலை என்னும் சொர்க்கம்!

பார்டர் கடை, பதிமூன்று கண் மதகுப் பாலம் - கடவுளின் தேசத்தில் தென்மலை என்னும் சொர்க்கம்!
பார்டர் கடை, பதிமூன்று கண் மதகுப் பாலம் - கடவுளின் தேசத்தில் தென்மலை என்னும் சொர்க்கம்!

பார்டர் கடை, பதிமூன்று கண் மதகுப் பாலம் - கடவுளின் தேசத்தில் தென்மலை என்னும் சொர்க்கம்!

தென்மலை, இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் எக்கோ டூரிசம் ஸ்பாட்; தமிழகத்துக்கு மிக அருகில் கேரளத்தில் உள்ள மயங்கவைக்கும் சுற்றுலா மையம். செங்கோட்டை - புனலூர் பாதையில் உள்ள தென்மலைக்கு, அரை மணி நேரத்தில் போய்விடலாம். செங்கோட்டை - கொல்லம் ரயில் பாதையில் உள்ள 13 கண் மதகுப் பாலத்தை,  பல படங்களில் நாம் பார்த்திருப்போம். இந்தப் பாலம் 108 ஆண்டுகள் பழைமையானது. `தளபதி' படத்தில் வரும் ரயில் காட்சிகள் இங்குதான் படமாக்கப்பட்டன. ட்ரெக்கிங், த்ரில்லிங், சாகசம், குழந்தைகள் விரும்பும் dancing நீருற்று... என, பரவசம் தரும் சுற்றுலாத்தளம் தென்மலை. செங்கோட்டை, குற்றாலம், தென்மலை சேர்ந்தமாதிரி போய் வருவது நல்லது. செங்கோட்டையிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் தென்மலை உள்ளது.  

இந்தியாவில் சூழல் காக்கும் சுற்றுலாத் திட்டம் உருவாக்கப்பட்டபோது, தென்மலை சுற்றுலாத்தளம்தான் முதலில் உருவாக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள், குடும்பம் சகிதமாக எந்த பயமும் இல்லாமல் அடர்ந்த காடுகள், மலையருவிகளை ரசிக்கும் வகையில் தென்மலை சுற்றுலாத்தளம் மாற்றப்பட்டது. கொல்லம் மாவட்டத்தில் இருந்தாலும் தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புடையது இந்த மலை. தேன்கூடு நிறைந்த மரங்கள் இந்த மலையில் அதிகம். `தென்' என்றால் தமிழில் `தேன்' என அர்த்தம். தேனை அள்ளித் தருவதால் `தென்மலை' என்று இதற்குப் பெயர். சென்னையிலிருந்து செல்பவர்கள், பொதிகை எக்ஸ்பிரஸில் தென்காசி சென்று, அங்கிருந்து செங்கோட்டை வழியாக தென்மலை செல்லலாம். காரில் செல்பவர்கள், செங்கோட்டையிலிருந்து கொல்லம் பாதையில் பயணிக்க வேண்டும். இவர்கள், பார்டர் பரோட்டாக் கடையை மறந்துவிட வேண்டாம். அது என்ன பார்டர் பரோட்டாக் கடை? செங்கோட்டை அருகே கேரள எல்லை பிரானூர் என்ற இடத்தில் உள்ள இரு பரோட்டாக் கடைகள் தமிழகம் முழுவதும் ரொம்பவே பாப்புலர். ஒருமுறை இங்கு உள்ள கடைகளில் பரோட்டா சாப்பிட்டால், வாழ்க்கைக்கும் மறக்க மாட்டீர்கள்!

விருதுநகரிலிருந்து தென்னிந்தியாவில் எங்கு பரோட்டா சாப்பிட்டாலும் பார்டர் பரோட்டாக் கடையின் சுவைக்கு இணையாகாது.  என்ன மாயமோ, என்ன மந்திரமோ தெரியாது. கடையை நெருங்கும்போதே நெடுந்தொலைவுக்கு சால்னா வாசம் மூக்கைத் துளைக்கும். நாட்டுக்கோழி கலந்து சால்னா தயாரிக்கப்படுவது இங்கு  சிறப்பம்சம். ``மசாலா தயாரிக்கப்படுவதில்தான் சால்னா சுவையின் ரகசியம் அடங்கியிருக்கிறது'' என்கிறார்கள். தமிழகத்தின் உச்சநட்சத்திரங்கள்கூட தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தால், ஆள் அனுப்பி பார்டர் பரோட்டாக் கடையிலிருந்து பார்சல் வாங்கிவரச் சொல்வார்கள். அதனால், தென்மலைக்கு காரில் சென்றால் பார்டர் பரோட்டாக் கடையில் நிறுத்தி, நீங்களும் ஒரு பிடி பிடித்துப்பாருங்கள். கூட்டம் அலைமோதும், சீட் கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம்.

தென்மலையில் குழந்தைகளை உற்சாகப்படுத்தும்வகையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்தியப் பண்பாட்டை நினைவுகூரும் வகையில் ராசிகளுக்கு ஏற்ற மரங்கள் அடங்கிய வனம் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. என்ன ராசிக்காரர்கள் எந்தவகையிலான மரம் வளர்க்க வேண்டும் என்றும் இங்கு சொல்லப்படுகிறது. அந்த மரக்கன்றை வீட்டில் வாங்கி நாம் வளர்த்தால் நல்லது என்பது நம்பிக்கை.  வண்ணத்துப்பூச்சிப் பூங்கா, குழந்தைகளை மிகவும் கவரும். இங்கு 166 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. எனினும்,  அதிர்ஷ்டம் இருந்தால்தான் நம்மால் அவற்றைக் காண முடியும். இந்தப் பூங்காவில் வனவிலங்குகளும் ஏராளமாக உள்ளன.

அடுத்துள்ளது அட்வெஞ்சர் பார்க். ஆற்றில் கயிறு கட்டிக் கடப்பது முதல் கமாண்டோ நெட் வரை 25 சாகச விளையாட்டுகள் விளையாடி மகிழலாம். மான் பண்ணையும் கடவுள்கள் உருவத்தில் செதுக்கப்பட்ட மரங்கள் நிறைந்த காடும்கூட கண்களுக்கு விருந்தளிக்கும். தென்மலை அணையில் படகுப் பயணம் போன்றவை குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யும். அணைக்குள் எட்டு கிலோமீட்டர் படகில் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, வனவிலங்குகளை நாம் காண முடியும். மாலையில் இங்கு உள்ள dancing fountain, பாடலுக்கு ஏற்ப நடனமாடி குழந்தைகளை உற்சாகம்கொள்ளவைக்கும். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கில இசைக்கு dancing fountain நடனமாடுகிறது. திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் பராமரிப்புப் பணிகளுக்காக இந்த நீரூற்றுக்கு விடுமுறை. 

தென்மலையில் சுற்றுலா செல்ல, நாள் ஒன்றுக்கு பெரியவர்களுக்கு 680 ரூபாயும், சிறியவர்களுக்கு 655 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. thenmalaecotourism.com என்ற தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இரவில் தங்குவதற்கு, `கேம்ப்பிங் நெஸ்ட்' என்ற ஹோட்டல் கல்லாடா ஆற்றின் அருகே உள்ளது. `ஈகோ ஃபோர்ட்' என்ற ஹோட்டலில், 24 மணி நேரமும் வேண்டிய உணவு வகைகள் கிடைக்கின்றன. திருவனந்தபுரத்திலிருந்து வருபவர்கள் நெடுமங்காடு வழியாக வரலாம். தமிழகத்திலிருந்து செல்பவர்களுக்கு செங்கோட்டை பாதைதான் வசதியானது.

அடுத்த கட்டுரைக்கு