Published:Updated:

இதுக்கு மேல மனுஷங்களால போக முடியாது!  நெல்லியம்பதி சொல்லும் சேதி : ஊர் சுற்றலாம் வாங்க.. பாகம்-12

இதுக்கு மேல மனுஷங்களால போக முடியாது!  நெல்லியம்பதி சொல்லும் சேதி : ஊர் சுற்றலாம் வாங்க.. பாகம்-12
இதுக்கு மேல மனுஷங்களால போக முடியாது!  நெல்லியம்பதி சொல்லும் சேதி : ஊர் சுற்றலாம் வாங்க.. பாகம்-12

மத்தவங்க கண்டிக்கிறதுக்கும், பெத்தவங்க கண்டிக்கிறதுக்கும் வித்தியாசம் உண்டுதானே! அம்மா எவ்வளவு திட்டினாலும் வெறுப்பு வராதுதானே... அதுபோல்தான் கேரளாவில் ஒரு சில இடங்கள் உண்டு. என்னதான் கெயில் போல் காட்டுத்தனமாக அடித்தாலும், சில மலைவாச ஸ்தலங்களில் வெயில் உறைக்கவே உறைக்காது. கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள நெல்லியம்பதி, (Nelliampathi) அப்படிப்பட்ட ஓர் இடம்தான். ‘வெயில் அடிக்குதா; குளிர் அடிக்குதா’ என்று குழப்பியடித்த ஒரு கிளைமேட்டில் நெல்லியம்பதியில் இறங்கியபோது, என் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு போனில் டெம்பரேச்சரை செக் செய்தேன். 31 டிகிரி என்று காட்டியது. ஒருவேளை - என் போன்தான் தப்பான தகவல் தருகிறதோ என்று திருதிருவென முழித்தபோது, ‘‘இவ்விட இதான் அதிகபட்ச கிளைமேட்டானு...’’ என்று ஒரு மலையாள சேட்டன் காலநிலையை அப்டேட் செய்ததும்தான் நெல்லியம்பதியின் அருமை புரிந்தது. இதற்குக் காரணம், மனிதக் காலடித் தடங்கள் அதிகம் படாத, இயற்கைக்கு மிகவும் அன்னியோன்யமான, மனசை அள்ளும் இந்த மலைவாச ஸ்தலத்தைச் சுற்றி அமைந்துள்ள மூலிகை மரங்கள் கொண்ட காடுகளும், பச்சைப் பசேல் புற்குன்றுகளும்தாம்!

இதனால்தான் ட்ரெக்கிங் பிரியர்கள், நெல்லியம்பதியை 'டிக்' அடிக்கிறார்கள். கொஞ்ச காலம் முன்பு வரை ‘நெல்லியம்பதியா, அப்படின்னா’ என்று... 'எலிமினேட்னா என்னாங்கய்யா' எனும் ‘பிக் பாஸ்’ கஞ்சா கறுப்புபோல் வெள்ளந்தியாகத்தான் நானும் இருந்தேன். ‘வைகோ’ ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், இப்போது நெல்லியம்பதியின் கடைக்கோடி மலைவரை என் காலடித் தடத்தைப் பதிவு செய்து வரலாற்றில் இடம் பிடித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமையடைகிறேன் என்று சொல்வதை நினைக்கும்போது....

இப்போது நெல்லியம்பதி கொஞ்சம் ஃபேமஸ் ஆகியிருக்கலாம். கோவையிலிருந்து சின்னக் குழந்தை கேட்டால்கூட நெல்லியம்பதிக்கு வழி சொல்லும். ஆம்! கோவைதான் நெல்லியம்பதி செல்வதற்குச் சரியான ரூட். நெல்லியம்பதியில் பல கோவைக்காரர்களைச் சந்தித்தேன். ‘‘ஊட்டி, கொடைக்கானல்னு போய் போர் அடிச்சுப்புடுச்சுங்.. அதான் வண்டியை இந்தப் பக்கம் திருப்பிட்டோமுங்!’’ என்றார் நெல்லியம்பதியின் நடுக்காட்டில் நான் சந்தித்த கோவைவாசி ஒருவர்.

கோவையிலிருந்து வெறும் 100 கி.மீதான். பாலக்காடுதான் இதற்கு இருக்கும் ஒரே வழி. ஒரு நல்ல செடான் காரில், 100 கி.மீ வேகத்தில் பறந்தேன். மெயின் ரோட்டிலிருந்து வலதுபுறம் திரும்பி பாலக்காடு சாலையை நெருங்கியபோது, டிராஃபிக் போலீஸிடம் சிக்கிய லைசென்ஸ் இல்லாத பேர்வழிகள் போல் திக்குமுக்காடியது கார். பாகம்-2 எழுதும்போது, சைலன்ட் வேலிக்குப் போக இந்தப் பக்கம் வந்ததாக ஞாபகம். ஒரு குண்டு குழிகூட மாறவில்லை; அதே ஆழ - அகலத்துடன் கச்சிதமாக இருந்தது. தமிழக சாலை கான்ட்ராக்டர்களின் பேச்சு மாறாத சொல்லும் செயலும் வியக்க வைத்தது. ‘‘வேலை நடந்துக்கிட்டிருக்கு சார்!’’ 

சஸ்பென்ஷன் செம அடி வாங்கியது. ‘இங்க அடிச்சா அங்க வலிக்கும்’ என்பதுபோல், காரின் கீழே விழும் ஒவ்வோர் அடியும், உரிமையாளர்களுக்கு வலிக்கும். கொஞ்ச தூரம் தாண்டியதும் வயல்வெளிகள் தெரிந்தன. அதாவது, கேரளா வந்துவிட்டது. பயணம் செம க்ளீஷேவாக இருந்தது. சாலை லேசாக வலதுபுறம் திரும்பியது. இதுதான் வடக்கஞ்சேரி - பொள்ளாச்சி நெடுஞ்சாலை. பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு வருபவர்களுக்கான சாலை இது. 

அடுத்து, நெல்லிக்குளம் எனும் பகுதியைத் தாண்டி நெம்மாரா சாலைக்குள் புக வேண்டும். நெம்மாராவில் நல்ல சாயாக்கடை தேடினேன். இங்கே கோக், பெப்சி, மிராண்டா போன்ற பானங்களெல்லாம் விற்கமாட்டார்களாம். அதற்குப் பதிலாக காளிமார்க், கோல்டுஸ்பாட், பவன்டோ போன்ற குளிர்பானங்கள் இருந்தன. தமிழக வியாபாரிகளே... நோட் பண்ணுங்கப்பா! 

நெம்மாராவில் நெல்லிக்குளங்கரா எனும் பகவதி அம்மன் கோயில் இருக்கிறது. அம்மன் பக்தர்களுக்கான உற்சாக ஸ்பாட் இது. திருச்சூருக்கு இணையாக யானைகளை வைத்தெல்லாம் இங்கே திருவிழாவெல்லாம் நடத்துவார்களாம். இங்கே ஒரு விதமான மூலிகைகள் கலந்த பாயசம், பிரசாதமாகத் தரப்படுகிறது. நெம்மாரா தாண்டி பாலக்காடு, தமிழ்நாடு பார்டரில் இருந்தெல்லாம் அம்மனை வழிபடவோ, பாயசம் வாங்கவோ கூட்டம் அள்ளுமாம். கொடக்காரா நாயர் என்பவர், நெல்லியம்பதியிலிருந்து இந்த அம்மனை - மழை, வெயில் பார்க்காமல் ஒரு குடையின் கீழ் பத்திரமாகக் கொண்டு வந்து இந்த இடத்தில் சேர்த்து, இந்த பகவதி அம்மன் கோயிலை உருவாக்கினாராம். 

அங்கிருந்து 30 கி.மீ தாண்டினால், பொத்துண்டி எனும் அணை. சுற்றுலாவாசிகள் மத்தியில் ரொம்பப் பிரபலம் இல்லை. ஆனால், சொல்லிக் கொள்ளும்படி கூட்டமாகவும் இருந்தது. காரணம், நெல்லியம்பதிக்கு இந்த ரூட்டைத்தான் அதிகம் தேர்ந்தெடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதால், பொத்துண்டி அணை - நெல்லியம்பதி செல்பவர்களின் ரிலாக்ஸ் பாயின்ட்டாக மாறியிருக்கிறது. ஆள் அரவமற்ற சில புதர்களில், தங்கள் காதலிகளுடன் சில பிரதர்களையும் பார்க்க முடிந்தது. முன் பக்கம் பார்க் ஒன்று கட்டியிருக்கிறார்கள். குழந்தைகள் கவிதையாய் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இது எதையும் கண்டுகொள்ளாமல், ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தது அணை. 

பொத்துண்டி அணையின் ஒரு ஸ்பெஷல் - இது சிமென்ட்-செங்கல் கலவையால் கட்டப்பட்டது இல்லை. ஜேக்கரி எனும் பனைவெல்லத்தாலும், ஒருவித சுண்ணாம்புக் கிளிஞ்சல்களாலும் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே இப்படிக் கட்டப்பட்ட இரண்டாவது அணை இதுதான். ‘இறைக்க இறைக்க கிணறு சுரக்கும்’ என்பதுபோல், இங்கே எடுக்க எடுக்க... தண்ணீரின் அளவு குறையவே குறையாதாம். சித்தூர் வட்டத்தின் மொத்த விவசாயத்துக்கும் பொத்துண்டிதான் ஆதாரம். லாங் ஷாட்டில் பொத்துண்டி அணையைப் பார்த்தால், கவிஞர்களுக்குக் கவிதை பொத்துக்கொண்டு வரலாம்.

பொத்துண்டி அணையில் கொஞ்சதூரம் பயணித்ததுமே - மலைச்சாலை ஆரம்பிக்கிறது. வழக்கம்போல செக்போஸ்ட்டில் சம்பிரதாய செக்கிங். மலையேறினேன். ஆனால் மலைப் பயணமா... வயல் பயணமா என்று குழம்பி விட்டேன். பொத்துண்டி அணை நீர்தான் காரணமாக இருக்கும். விவசாயிகள் செழிப்பாக இருந்தால்தான், ஊர் செழிப்பாக இருக்கும் என்பதற்கு இந்த இடம் சாட்சியாக இருந்தது. 

இது தவிர, சேர்ந்தே இருப்பது மலையும் அருவியும் என்பதுபோல், செல்லும் வழியெங்கும் குட்டிக் குட்டியாய் அருவிகள் சிம்பொனி மீட்டிக் கொண்டிருந்தன. பயணமே செம ரம்மியமாய் இருந்தது. வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப்போல், அருவிகளைக் கணக்கு வைத்துக் கொள்ளவே முடியவில்லை. ரொம்ப நேரம் பயணித்த பிறகு தென்படும் முதல் உணவகத்தில் அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கிளம்பினால்... அடுத்து அதைவிடப் பிரமாதமான உணவகங்கள் வருமே! அதுபோல்தான்... முதல் அருவியிலேயே ரொம்ப நேரம் கடத்திவிட்டேன். ஆனால், மேலே போகப் போக... அதைவிட பிரமாதமாக எத்தனை அருவிகள்! 

குழந்தைகள் வாயிலிருந்து ஒழுகும் ஜொள்ளுபோல்... மலை முழுவதும் அழகாக ஒழுகிக் கொண்டிருந்தன அருவிகள். வானத்திலிருந்து நேரடி கனெக்ஷன்போல... எல்லா அருவி நீரும் மழை நீர்போல படுசுத்தமாக இருந்தது. புகைப்பட நிபுணர் கார் ஓட்ட, நான் விலங்குகளைத் தேடியபடியே வந்தேன். மாலை அல்லது அதிகாலை நேரம் என்றால் யானைகள், காட்டெருமைகளைப் பார்க்கலாம் என்றார்கள். நான் சென்ற நேரம், மதியத்துக்குப் பக்கம். காட்டுப் பன்றிகள், குண்டு குண்டாக காட்டு அணில்கள், சிங்கவால் குரங்குகள் பார்த்தோம். அருவி நீரைப் பருக வந்த சில மான்களும், பறவைகளும் டீசல் சத்தம் கேட்டு மிரண்டோடிய பாவம், பாவமாகவும் ரசனையாகவும் இருந்தது. செக்போஸ்ட்டிலேயே, ‘இது காட்டு விலங்குகள் உலவும் இடம்; மிருகங்களுக்கு வழிவிட்டு, வாகனத்தை விரட்டாமல் செல்லுங்கள்’ என்று அறிவுறுத்தியிருந்தார்கள். 

கிட்டத்தட்ட 10 ஹேர்பின் பெண்டுகளைத் தாண்டியிருந்தோம். நெல்லியம்பதிக்குச் செல்பவர்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்: ‘சீக்கிரம் ரூமுக்குப் போகணும்’ என்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இங்கே பயணித்தால், அருவிகள், மூலிகைகள், பறவைகள் முதல் விலங்குகள் வரை பல அற்புத விஷயங்களை இழக்க நேரிடும். இதற்காகவே வழியில் ஏகப்பட்ட வியூ பாயின்ட்கள் ஹாய் சொல்கின்றன. ‘பலாகபாண்டி’ எனும் எஸ்டேட்டில் உள்ள வியூ பாயின்ட்டில் காரை நிறுத்தினோம். இந்த எஸ்டேட்டில்தான் பிரிட்டிஷ் ஆட்சியில் கட்டப்பட்ட புதுமையான பங்களா ஒன்று உள்ளது. இப்போது இது தனியார்வசமாகி இருந்தது. டீ, ஏலக்காய், காபி என்று கலந்துகட்டி மணந்தது ஏரியா. வியூ பாயின்ட்டில் செல்ஃபிகள் குவித்துக் கொண்டோம்.

அதைத் தாண்டி சீதக்குண்டு மலைச் சாரல் வியூ பாயின்ட், அத்தனை அழகு. 100 மீட்டர் உயரத்திலிருந்து விழும் அருவி, காடு, மலைகள், அந்த மலைகளுக்கு நடுவே தோட்டங்கள் வேறு பயிரிட்டிருந்தார்கள். சீதக்குண்டு வியூ பாயின்ட்டிலிருந்து எட்டிப் பார்த்தேன். குழந்தைகள் டிராயிங் நோட்டில் பச்சை, வெள்ளை, மஞ்சள் என கன்னாபின்னாவென கலர் அடித்ததுபோல இருந்தது பள்ளத்தாக்கு. 

நெல்லியம்பதியின் டாப் மோஸ்ட் அட்ராக்ஷன் பாயின்ட் ஒன்று இருக்கிறது. மாம்பாறை. கடல் மட்டத்திலிருந்து 5,250 அடி உயரத்தில் எத்தனை வெயில் அடித்தாலும் ஜில்லென்று இருக்கிறது. பச்சைக் கம்பளத்தை நேர்த்தியாக விரிக்காமல் சுருக்கம் சுருக்கமாய் விரித்ததுபோல், பச்சைப் பசேலென செல்ஃபி எடுக்கத் தோன்றுகிறது. ‘மஜா’ எனும் படத்தில் விக்ரம், சிந்து துலானி ‘IR 8’ பாட்டுக்குக் குத்தாட்டம் போட்டது இங்கேதான். ஜீப் மட்டும்தான் மாம்பாறைக்கு ஈஸியாகச் செல்ல முடியும் என்பதைக் கவனத்தில் கொள்க.

நெல்லியம்பதி வந்துவிட்டு தங்காமல் போனால் எப்படி. ‘ஆஸ்திக்கு ஒண்ணு; ஆசைக்கு ஒண்ணு’ என்பதுபோல் நெல்லியம்பதியில் இருப்பது ஒரே ஒரு காட்டேஜ்தான். ITL ரெஸார்ட். ஆன்லைனிலேயே புக் செய்துவிடுவது நல்லது. சீஸன் டைம் மற்றும் வீக் எண்ட் என்றால், நெல்லியம்பதியில் கடவுளே வந்தாலும் அறைகளுக்குத் திணற வேண்டும். நான் கடவுளைவிடப் புத்திசாலி. சாதாரண நாளிலேயே புக் செய்து விட்டேன். ITL தான் ஆப்ஷன் என்றில்லை; செல்லும் வழியில் ஏகப்பட்ட தனியார் விடுதிகள் உள்ளன. அது உங்கள் சாய்ஸ்.

ITL ரெஸார்ட்டில் பிரேக்ஃபாஸ்ட் தருகிறார்கள். நடுக்காட்டுக்குள் இருப்பதால், இரவுக் குளிருக்குக் கதகதவென கேம்ப் ஃபயர் ஆப்ஷன் தருகிறார்கள். (எக்ஸ்ட்ரா 500 ரூபாய்) அலுவலக பார்ட்டிகள் மீட்டிங் என்ற பெயரில் கும்மாளமடிக்க மேஜைகள் அமைத்த கான்ஃபெரன்ஸ் அறை தருகிறார்கள். பிக்கல் பிடுங்கல் இல்லாமல், ஆன்லைனில் புக் செய்த அதே ரேட்தான். ‘‘சீக்கிரம் கௌம்புங்க... ஜீப் சவாரி 4 மணியோட முடிஞ்சுடும்!’’ என்று மலையாளத் தமிழில் காலை அலாரம் கொடுத்து எழுப்புகிறார்கள். புட்டு, கடலைக் கறி சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.

அணைகள், அருவிகள், கோட்டைகள், கோயில்கள், வனவிலங்குச் சரணாலயங்கள், ஆர்கானிக் பூங்காக்கள், டீ எஸ்டேட்டுகள் இவை எல்லாமே நெல்லியம்பதியில் அட்ராக்ஷன்தான். எல்லாவற்றையும் ஒரு ரவுண்டு வந்துவிட்டு புளகாங்கிதமடைந்து போய் 2 தேநீர் பாக்கெட்டுகளை பார்சல் பண்ணிவிட்டு சும்மா ரிட்டர்ன் அடித்து விடாதீர்கள். நெல்லியம்பதியில் முக்கியமான விஷயமே - ஜீப் ட்ரெக்கிங்தான். இங்கே முக்கியமான தொழிலும் இதுதான். காலை 8 மணிக்கு ஜீப் ட்ரெக்கிங் ஆரம்பித்து விடுகிறது. ‘‘ஜீப் ட்ரெக்கிங் எவ்விடண்டு’’ என்று விசாரித்து மெயின் சாலையோரம் கொஞ்ச தூரம் நடந்து போனோம். ஸ்கூட்டர் மானியம் வாங்க வந்த பெண்கள்போல், வரிசையாக ஜீப்கள் அணிவகுத்து நின்றிருந்தன. ‘‘சிக்ஸ் ப்ளஸ் சிக்ஸ் பன்னண்டு கிலோ மீட்டருக்கானு 1,800 ரூவ.. அதோட என்ட்ரீ ஃபீஸு 300 ரூவ.. ஈ ரைடு பிரமாதமாயிட்டுண்டாவூம்... பூவோமா?’’ என்று சுற்றி வளைத்தார்கள் ஜீப் டிரைவர்கள். ‘அவதார்’ படத்தில் பறக்கும் டிராகனை செலெக்ட் செய்வதுபோல், எனக்கான ஜீப்பையும் டிரைவரையும் தேர்ந்தெடுத்தேன். 4 வீல் டிரைவ் மஹிந்திரா MM550 ஜீப், பார்க்கவே டெரராக இருந்தது. 

எங்கே சாலை முடிகிறதோ, அங்கேதான் ஜீப்பின் பயணம் தொடங்கும். ஆம்! அது வரை சும்மா ‘தேமே’ என உட்கார்ந்து வந்த புகைப்பட நிபுணர், காட்டுப்பாதை ஆரம்பித்ததும் ‘ஜிகர்தண்டா தூத்’ குடித்த வடிவேலு போல் தன்னிலை மறந்து புகைப்படங்களைக் குவிக்க ஆரம்பித்து விட்டார். காட்டுப் பாதைக்குள் நுழைவதற்கான என்ட்ரி பாஸ் போட்டு விட்டு, சாலையே இல்லாத சாலையில் த்ரில்லிங்கான பயணம் ஆரம்பித்தது. ‘உடல் இளைக்க வேண்டுமென்றால், காரில் வந்தாலும் கால் வலிக்க நடந்துதான் தீர வேண்டும்’ என்பதுபோல், என்னதான் காஸ்ட்லி கார்கள் வைத்திருந்தாலும்... ஜீப்கள்தான் இங்கே ஹீரோக்கள். கார்களையெல்லாம் இந்தச் சாலையில் நினைத்துப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. 

திடும்மென ஒரு பாறை மேடு... சுற்றிலும் அடர்த்தியான பெயர் தெரியா செடி கொடிகள்... நிச்சயமாக ஏதாவது நோய் தீர்க்கும் மூலிகைகளாகத்தான் இருக்க வேண்டும்... 90 டிகிரி இல்லை; ஆனால் அதற்கு நெருக்கமான இலக்கத்தில் சாய்ந்தமேனிக்கு ஒரு இறக்கம்... எவ்வளவு பெரிய இறக்கத்திலும் இரக்கமில்லாமல் இறங்கி அடித்தது ஜீப். ரோலர்கோஸ்டர் பயணம் போவதுபோலவே இருந்தது. ‘‘சத்தமில்லாயிட்டு வரின்னு... மிருகங்கள் உண்டானு’’ என்று அலர்ட் செய்தார் ஜீப்போட்டி. திடீரென ‘பாபநாசம்’ பட க்ளைமாக்ஸ் காட்சிபோல் எல்லோரும் மூக்கைப் பொத்தினோம். வேட்டையாடப்பட்ட ஓர் அழுகிய மானின் உடம்பு... பார்க்கவே த்ரில்லிங்காக இருந்தது. ‘‘ஈ மான்னே புலிதான் அடிச்சிடுக்குமானு...’’ என்று அடித்துச் சத்தியம் செய்தார் டிரைவர். சோற்றை இறக்கியவுடன் சூடாக உள்ளே தள்ளும் மனிதர்களைப்போல் இல்லை புலிகள். பெரும்பாலும், இரைகளை வேட்டையாடிவிட்டு உடனே லபக்கி விடாதாம். அழுகி, புழுக்கள் வைத்த பிறகு டேஸ்ட் செய்து உண்பதில்தான் பிரடேட்டர்களுக்கு இன்பமாக இருக்குமாம். தினமும் இரவு இந்த இடத்துக்கு வந்து புலி இதைச் சாப்பிட்டு விட்டுப் போகும் என்று சொன்னார் டிரைவர்.

முரட்டுத்தனமான ஒரு முகட்டில் ஜீப் நின்றது. இந்த இடத்தின் பெயர் மின்னாம்பாறா. இந்தக் காட்டுக்கான முதல் வியூ பாயின்ட் இதுதான். இங்கே குழந்தைகளை அழைத்துப் போனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பார்த்தாலே தலை சுற்றும் பள்ளங்கள். லேசாகச் சறுக்கினால்... அவ்வளவுதான். பறவைப் பிரியர்களுக்கு மின்னாம்பாறா செமையான ஸ்பாட். அரிய வகைப் பறவை இனமான வேழாம்பல் பறவைகள் இங்கேதான் திரியுமாம்.

நான் தூரத்தில் காற்றில் மிதந்த சில வேழாம்பல் பறவைகளைப் பார்த்தேன். தரையிலிருந்து கிட்டத்தட்ட 2,000 அடி உயரம் இருக்கலாம். அக்டோபர், நவம்பர் மாதங்கள்தான் வேழாம்பலுக்கு சீஸன் டைம். இதை இருவாச்சிப் பறவைகள் என்றும் சொல்கிறார்கள்.

அடுத்து ஒரு வியூ பாயின்ட்டில் ஜீப் நின்றது. இதன் பெயர் காராசூரி. மின்னாம்பாறா மாதிரியே முரட்டுத்தனமாகவே இருந்தது. ஆனால், அழகாக இருந்தது. இதுதான் டெட் பாயின்ட் என்றார் டிரைவர். மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் இதற்கு மேல் வழியில்லை. வேழாம்பலாக இருந்தால் மட்டும் பறக்கலாம். மலை முகட்டில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தால் ஏதோ ஒரு பரவச நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது.

உச்சியிலிருந்து பார்த்தால், பரம்பிக்குளக் காடு பரந்து விரிந்து தெரிகிறது. இந்த இடம், மாலை நேரத்துக்குப் பிறகு ‘விலங்குகள் ஜாக்கிரதை’ ஏரியா. பரம்பிக்குளத்திலிருந்து ஹாயாக டூர் அடிக்கும் காட்டு விலங்குகள், காராசூரியில்தான் ரிலாக்ஸ் செய்யுமாம். அதனால்தான் இங்கே 5 மணிக்கு அனுமதியில்லை. அதேபோல், மாலை நேரத்தில் குழந்தைகளுக்கும் இந்த ஜீப் சவாரியில் அனுமதி கிடையாதாம். ஒரு பயணத்தின்போது, யானை ஒன்றைப் பார்த்த குழந்தை வீறிட்டுக் கத்த, ஜீப்பை விடாமல் துரத்தி வந்த யானையிடமிருந்து அரும்பாடுபட்டுத் தப்பித்த கதையைச் சொன்னார் டிரைவர்.

கேட்கவே த்ரில்லிங்காக இருந்தது. 2,100 ரூபாய் காலியாகியிருந்தது. ஆனால், 2 லட்ச ரூபாய்க்கு வொர்த்தான பயணம் அது. திரும்பவும் ஜீப்பிலிருந்து இறங்கி காருக்கு வந்து, கோவையை நோக்கிக் கீழிறங்கினோம். மறுபடியும் குட்டிக் குட்டி அருவிகள், ஹேர்பின் பெண்டுகள், விலங்குகள்! மலை இறங்கும் வரை போர் அடிக்கவில்லை. திடீர் திடீரென தானாக உதடசைக்க வைக்கும் இளையராஜா பாட்டுப்போல, இப்போதெல்லாம் தானாகவே அடிக்கடி என் மெமரியைத் தின்று கொண்டிருக்கிறது நெல்லியம்பதி பயணம். 
 

மற்ற பாகங்கள்