Published:Updated:

இமயமலைக்கு அம்பாசிடரில் விசிட் அடித்த ஈரோடு வின்டேஜ் கார் ப்ரியர்!

இமயமலைக்கு அம்பாசிடரில் விசிட் அடித்த ஈரோடு வின்டேஜ் கார் ப்ரியர்!
இமயமலைக்கு அம்பாசிடரில் விசிட் அடித்த ஈரோடு வின்டேஜ் கார் ப்ரியர்!

`அம்பாசிடர்' என்பது வெறும் பெயரல்ல; அது ஒரு சகாப்தம். இந்தியாவில் சாலை போட ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை ஓடிக்கொண்டிருக்கும் அம்பாசிடர் காரில், நண்பர்களுடன் ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிகரம் காா்டுங்லாவைத் தொட்டுத் திரும்பியுள்ளார் ஈரோட்டைச் சேர்ந்த வின்டேஜ் கார் ப்ரியர் பிரபு.

அவரைச் சந்தித்தோம். வீட்டின் முகப்பில் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது அந்தச் சிகரத்தைத் தொட்ட அம்பாசிடர். ``வாங்க பாஸ், ரைடிங் ஸ்டோரிக்குள்ளே போகலாம்''னு தேநீருடன் தனது 8,516 கி.மீ பயணத்தின் கதையைத் தொடங்கினார் பிரபு.

``சின்ன வயசிலிருந்தே கார்தான் என் காதலி. எங்கேயாவது லாங் டிராவல் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. சரி, கார்டுங்லா வரைக்கும் போயிட்டு வருவோம்னு திட்டம்போட்டோம். நம்ம ஏதாவது வித்தியாசமா பண்ணுவோமேனு அம்பாசிடர் கார்ல போக முடிவெடுத்தோம். `இமயமலைக்குக் கொண்டுபோய் காரை எடைக்குப்  போடப் போறியா?'னு பசங்க கிண்டல் பண்ணாங்க. அம்பாசிடர் பற்றித் தெரிஞ்சவங்க மட்டும் `டிரை பண்ணு, வொர்க்கவுட் ஆகும்'னு வாழ்த்தினாங்க.”

பிரபு அவரின் சகோதரர் சிபி மற்றும் நண்பர்களான செந்தில், ராகுல், பிரவீன், ரகு, விஜய்சங்கர் என மொத்தம் 7 பேர் பட்டாளம் ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கியுள்ளார்கள். அம்பாசிடரில் இடம் போதவில்லை என்பதால், துணைக்கு  மஹிந்திரா தார் கொண்டுசென்றார்களாம்.

``400 கிலோமீட்டருக்கு ஒருமுறை ரெஸ்ட். எங்களுக்கு இல்லை, காருக்கு. நாங்க முதல்ல தங்கிய இடம் ராஜஸ்தானில் இருக்கும் பாலி என்ற ஊர். அடுத்த நாள் அமிர்தசரஸ் போறதுதான் டார்கெட்.

நாங்க வேகமா கடந்து போன சாலைனு பார்த்தா, அது 230 கிலோமீட்டர் நீளமான வதோத்தரா-அகமதாபாத் நெடுஞ்சாலைதான். அமிர்தசரஸ் ரெஸ்ட் முடிச்சு பதன்கோட் வழியா ஸ்ரீநகருக்குக் கிளம்பினோம்.

அதுக்கு முன்னாடி `பனிஹல்'னு ஒரு இடத்துல 6 மணிக்குமேல வாகனங்களுக்கு அனுமதி இல்லையாம். ப்ளான் எதுவும் பண்ணலை. அங்கேயே தங்கிட்டு அடுத்த நாள் கார்கில் போக ஆரம்பிச்சோம். அன்னிக்கு ராத்திரி காா்கில் ராணுவ முகாம்ல தங்கிட்டோம். அடுத்த நாள் லே.”

கார்கில்-லே பாதை கொஞ்சம் சவாலானது. காா்துங் லா-வை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி, பல சவால்களுக்குப் பிறகு கார்டுங்லாவை அடைந்துள்ளார்கள். கடல் மட்டத்திலிருந்து 17,982 அடி உயரமான சாலை கார்டுங்லா. இந்தியாவும் சீனாவும் தங்களது மூக்கை முட்டிக்கொள்ளும் பேங்காங் ஏரி அங்குதான் உள்ளது. `3 இடியட்ஸ்' திரைப்படத்தில் அமீர்கானும் கரீனாகபூரும் மூக்கை முட்டிக்கொள்ளும் காட்சியும் அங்குதான் படமாக்கப்பட்டதாம்.

``13 நாள் பயணம். மொத்தம்  8,516 கி.மீ தூரம் போயிருக்கோம். பெட்ரோல்-டீசலுக்கு மட்டும் 59,000 ரூபாய் செலவு. பயணத்துல பல இடங்கள்ல சாப்பிடவேண்டிய சூழ்நிலை. அதனால வெறும் சைவம் மட்டும்தான். செலவுக்குக் காசு கொண்டுபோனோம். அதுல 12,000 ரூபாய் மீதம். வரும்போதே கிருஷ்ணகிரியில இருக்கும் முதியோர் இல்லத்துக்கு அதைக் கொடுத்துட்டோம்.

``காருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்கூட நடக்கலை. எங்கேயும் ரூல்ஸ் மீறலை. அம்பாசிடர்ல உலகத்தோடு உயரமான சாலையில போனது கொஞ்சம் சிலிர்ப்பாதான் இருந்தது” என்று சொன்னதுமட்டுமல்லாமல், ``எங்களோட அடுத்த இலக்கு நேபாள்'' என்று அடுத்த ப்ளானையும் சொன்னார்.

நிஜ வாழ்க்கையின் `மிஸ்டர் சந்திரமெளலி'யான மிஸ்டர் பிரபு, மொத்தம் நான்கு வின்டேஜ் கார்களை வைத்திருக்கிறாா். முத்து என்கிற மெக்கானிக்தான் பிரபுவின் கார்களுக்குக் காவலர்.

அம்பாசிடரை மறந்துவரும் இந்தக் காலத்தில் இமையமலைக்குச் சென்று `அம்பாசிடர் இஸ் எவர்கிரீன்' என்று காட்டும் இந்த அம்பாசிடர் லவ்வருக்கு ஹேட்ஸ்  ஆஃப்!