Published:Updated:

4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க!

4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க!
4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க!

வாரம் ஒரு நாள் லீவு வந்தாலே கொண்டாட்டம்தான். அதிலும் `ஆயுதபூஜை' என்ற பெயரில் தொடர்ந்து இரண்டு நாள் லீவு வந்தால்... அந்த லீவுடன் சேர்ந்ததுபோல சனி, ஞாயிறு விடுமுறையும் வந்தால் குதூகலம்தான். இப்படி லீவு வருகிறது என்றால், ஒரு வாரம் முன்பே பிளான் போட்டு கிளம்பிவிடுவார்கள் டிராவல் பிரியர்கள். `அட போங்கஜி... என் கம்பெனியில ரெண்டு நாள்தான் லீவு' எனக் குமுறும் அந்த மனங்களுக்குத்தான் இந்த லிஸ்ட். குருப்பெயர்ச்சியில் க்ளூகோஸ் ஏற்றும் அளவுக்கு அடிவாங்கிய அன்பர்களே... இந்த இடங்களைச் சுற்றிவிட்டு வந்தால் திங்கள்கிழமை ஆபீஸ் போகும்போது எப்போதும் இருக்கும் அந்தச் சோர்வு இருக்காது. 

1) வால்பாறை 

கூகுளில் `seventh heaven in tamilnadu' எனத் தேடிப்பாருங்கள். வால்பாறைதான் முதலில் வந்து நிற்கும். 17 டிகிரியில் போர்வை வெப்பமும், இரவில் 12 டிகிரியில் அடர்குளிரும் அதோடு கலந்த பச்சைச்செடிகள் வாசமும் மண்வாசமும் கொடுக்கும் வால்பாறை உண்மையிலேயே சொர்க்கம்தான். அதிலும், பொள்ளாச்சி வழியாக ஆழியார் அணை தாண்டி மெல்லிய இசையோடு வால்பாறைக்கு மலைப்பயணம் போவதை `வாழ்க்கையின் ஒரு பயணம்’ என வாட்ஸ்அப்பில் ஸ்டோரி போட்டு ரயில் விடலாம்... அலாதி இன்பம். லேசான காலைப் பனியோடோ அல்லது கொஞ்சம் மாலை வெயிலோடோ வால்பாறைக்குப் பயணம் போனால் எதிரில் குண்டு குண்டான மலபார் அணில்கள், சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றிகள், யானைகள், பட்டாம்பூச்சிகள்... எழுதும்போதே `மூங்கில் காடுகளே... வண்டு முனகும் பாடல்களே...' என வாய் தானாகவே முணுமுணுக்கிறது. அடுத்தென்ன அருவிகள்தான். வழியில் தென்படும் குட்டிக்குட்டி அருவிகளின் அழகில் மயங்கி நின்றிருக்கும்போது அட்டைப்பூச்கிகளிடம் கொஞ்சம் பீ கேர்ஃபுல். 

சென்னையிலிருந்து கிளம்பினால் 11 மணி நேரத்தில் வால்பாறைக்குச் செல்லலாம். 605 கி.மீ தொலைவு. பொள்ளாச்சியைத் தாண்டியதும் 40 கொண்டை ஊசியைக் கடந்தால் வால்பாறை வந்துவிடும். தங்குவதற்கும் தூங்குவதற்கும் எந்தக் கவலையும் வேண்டாம். தடுக்கி விழும்போதெல்லாம் ஒரு ஹோட்டல் தெரியும். பசுமையை ரசிக்க ஆசையா, உடனே வால்பாறைக்கு வண்டி விடுங்க. 

2) குடகுமலை 

``வால்பாறைக்கு நான் ஹனிமூனே போயிட்டேன்" என்று சொல்லும் அங்கிள்களே, குடகுமலை போயிருக்கிறீர்களா? எப்போதும் காபி வாசம் காற்றில் மிதந்துகொண்டே இருக்கும் கர்நாடகாவின் `கூர்க்'தான் குடகுமைலை. டீ விளைவதுபோல காபி எல்லா இடத்திலும் விளையாது. கடல் மட்டத்திலிருந்து 1,200 மீட்டருக்கு மேல் 1,750 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் மலைப் பகுதிகளில்தான் காபியைப் பதனிட முடியும். அடர்ந்த குளிரெல்லாம் இங்கு இல்லை. எப்போதுமே 20 டிகிரிதான். மிதமான மழைச்சாரலும் இருக்கும். அடர்ந்த காடுதான். விலங்குகளைப் பற்றிய கவலை வேண்டாம். அதிகாலை நேரத்தில் விதவிதமான பறவைகளை ரகசியமாகப் பார்க்கலாம். சாகசம், த்ரில்லிங் எதுவுமற்ற குடகுமலைப் பயணம், அமைதியை விரும்புபவர்களுக்கு அழகான சாய்ஸ். சென்னையிலிருந்து கிளம்பினால் 11 மணி நேரம். 576 கி.மீ பயணம். கோவையிலிருந்து கிளம்பினால் 300 கி.மீ பயணம். 7 மணி நேரம்தான். 

3) சிக்மகளூர் 

`இளைய மகளின் ஊர்' என்பதுதான் சிக்மகளூர் எனும் பெயருக்கு விளக்கம். குடகுமலை அக்கா என்றால், சிக்மகளூர் தங்கை. கர்நாடகாவின் இரண்டு செல்லப்பிள்ளைகள் இவை. காபிக்கு கூர்க் ஃபேமஸ் என்றால், இந்தியாவில் முதன்முதலில் காபி பயிரிடப்பட்டதே சிக்மகளூரில்தான். இதன் இன்னொரு சிறப்பு இங்கு டிரெக்கிங், வைல்டு லைஃப் வாட்சிங், வாட்டர் ராஃப்டிங் என அட்வெஞ்சரும் பண்ணலாம்... கோயில்கள், பசுமையான தோட்டங்கள் என இளைப்பாறவும் செய்யலாம். இந்தியாவில் பன்முகத்தன்மைகொண்ட சுற்றுலாப் பகுதியில் இதுவும் ஒன்று. கர்நாடகாவின் உயரமான சிகரம் முல்லையனகிரியும், புகழ்பெற்ற பத்ரா புலிகள் சரணாலயமும் சிக்மகளூரின் அருகில்தான் உள்ளன. சிக்மகளூரில் பட்ஜட் முதல் நட்சத்திர விடுதி வரை தங்கும் இடங்கள் உள்ளன. சென்னையிலிருந்து சென்றால் 600 கி.மீ பயணம். கோவையிலிருந்து 380 கி.மீ பயணம். 

4) ஹார்ஸ்லி ஹில்ஸ் 

ஆந்திரா என்றால் வறண்டு கிடக்கும், மிளகாய் விதைப்பார்கள், சோளக்காடுகள் இருக்கும், தஞ்சாவூர்போல வயல்கள் சில இடங்களில் இருக்கும் என்றுதான் நம் சினிமா படங்கள் சொல்கின்றன. ஆனால், ஆந்திராவிலும் ஊட்டிபோல ஒரு மலை உள்ளது. அதுதான், ஹார்ஸ்லி ஹில்ஸ். சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் ஒரு நாளில் போய் வரக்கூடிய இடம் இந்த ஹார்ஸ்லி ஹில்ஸ்.

சம்மரில் போனால், 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை இருக்கும். இப்போது போனால், 20 டிகிரி மிதமான தென்றலோடு சாரலும் அடிக்கும். ஹார்ஸ்லி ஹில்ஸில் அதிக நாள் தங்கி சுற்றிப் பார்ப்பதற்கு ஏதும் இல்லை என்றாலும், ஒரு குயிக் டிரிப் அடிக்கச் சிறந்த இடம். திட்டமிட்டுச் செல்ல தேவையேயில்லை. பூக்களும், சந்தனமரங்களும், யூகலிப்டஸ் வாசமும், மிதக்கும் மேகங்களும் உங்கள் மனதில் இருக்கும் அத்தனை சோர்வையும் நீக்கிவிடும். ஸோர்பிங் எனும் விளையாட்டும் இங்கு உள்ளது. பிளாஸ்டிக் பந்தின் உள்ளே உட்கார்ந்து மலைச்சரிவில் உருண்டு விளையாடுவதுதான். `திம்மம்மா' எனும் உலகின் மிகப்பெரிய ஆலமரமும் இங்கு உள்ளது. கூடவே கௌண்டிண்ய வனவிலங்குச் சரணாலயமும் உள்ளது. சென்னையிலிருந்து 270 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஹார்ஸ்லி ஹில்ஸ். 

5) மசினகுடி 

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா 3 மாநிலமும் ஒன்றுசேரும் முக்கோணம்தான் முதுமலை. தமிழகத்தின் பெர்முடா டிரையாங்கிள் இது. உள்ளே சென்றால் வெளியே வர மனசே இருக்காது. யானை, புலி, கரடி போன்ற வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் இடம் முதுமலை. முதுமலையில் இருக்கும் ஒரு சுற்றுலா இடம்தான் மசினகுடி. ஊட்டியின் குளிருக்கும் சென்னையில் வெயிலுக்கும் இடையில் இருக்கும் ஒரு தட்பவெட்ப நிலைதான் மசினகுடியில் இருக்கும்.

முதுமலையில் ஃபேமஸான விஷயமே வனத்துறையின் சஃபாரிதான். காட்டுக்குள் ஜீப்பில் கூட்டிப்போவர்கள். மான்கள், யானைகள், காட்டுமாடுகள், சிறுத்தை போன்றவற்றையெல்லாம் பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் புலியைப் பார்க்கலாம். மசினகுடியில் தங்குவதற்கு பல ரிசார்ட்டுகள் உண்டு. காட்டுக்குள் இருக்கும் ரிசார்ட்டில் தங்குவது கொஞ்சம் காஸ்ட்லி. தெப்பக்காடு யானைகள் காப்பகம், பந்திபூர் வனவிலங்கு சரணாலயம், வயநாடு விலங்குகள் சரணாலயம் போன்ற பல இடங்கள் அருகிலேயே உள்ளன. மசினகுடிக்கு கார் ட்ரிப் போகவேண்டும் என்பது பலரின் கனவு. இங்கு எக்ஸ்பீரியன்ஸ் டிரைவர்கள் மட்டுமே ஓட்ட முடியும். போதும் போதும் என்பது வரை கொண்டை ஊசி வளைவுகள் வந்துகொண்டே இருக்கும். 

6) ஶ்ரீசைலம் 

குதூகலமாக இருக்க வேண்டுமா கோவாகூடப் போகலாம். ஆனால், வீட்டில் பெரியவர்களுக்கும் கொஞ்சம் ரெஃப்ரெஷ்மென்ட் வேணும் எங்கேயாவது கோயிலுக்குப் போனா எப்படி இருக்கும் என யோசிப்பவர்கள், ஆந்திராவின் கர்நூல் மாவட்டத்தில் இருக்கும் ஶ்ரீசைலம் பக்கம் சென்று வரலாம். ஶ்ரீசைலம், பழைமையான சிவன் கோயில் உள்ள இடம். கீழே கிருஷ்ணா நதி, மேலே மலை உச்சியில் கோயில் என அசத்தலான அழகுடன் இருக்கும் இந்த இடம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றால்கூட, இதன் கட்டுமானத்தைப் பார்க்க ஒரு விசிட் அடிக்கலாம்.

சுமார் 1000 ஆண்டு பழைமையான கோயில் என்று சொல்லப்படுகிறது. திருப்பதி மலைபோல இல்லை ஶ்ரீசைலம். மலை உச்சிக்குச் செல்ல வெறும் 50 கி.மீ தூரம்தான் என்றாலும்கூட வளைந்து நெளிந்து போவதற்கு, தோராயமாக 3 மணி நேரம் ஆகும். அடர்ந்த மலைப்பகுதி என்பதால், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தனியார் வாகனங்கள் அனுமதி கிடையாது. இங்கு பார்க்கவேண்டிய இன்னொரு விஷயம் ஶ்ரீசைலம் அணை. ஆந்திராவின் மிகப்பெரிய அணை இது. உயரமான மலைகளுக்கு நடுவே கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும். இந்த அணையை மலை உச்சியிலிருந்து பார்த்தால் கேமராவிலோ கண்களிலோ படம் பிடிக்காமல் நகரவே முடியாது. இந்த அணையில் நீர்மின் நிலையங்களும் அமைந்திருப்பதால் டிசைன் டிசைனாக மின்சாரக் கோபுரங்களைப் பார்க்கலாம். சென்னையிலிருந்து 460 கி.மீ தொலைவிலும், திருப்பதியிலிருந்து 370 கி.மீ தொலைவிலும் இருக்கிறது இந்த இடம். 

நெய்யாறு அணை, மேகமலை, சைலன்ட் வேலி, வாகமன், டாப் ஸ்லிப், ஹம்பி, ஆலப்புழா, ஜாக் ஃபால்ஸ், பிச்சாவரம், முத்துப்பேட்டை, பரம்பிக்குளம், புளியஞ்சோலை, பெருந்தேனருவி எனத் தமிழகத்தைச் சுற்றி இன்னும் பல இடங்கள் நாம் சுற்றிப்பார்ப்பதற்கு இருக்கின்றன... இந்த லீவுக்கு ஒரு இடத்தையாவது சுற்றிப் பார்ப்போம்.

ஒருநாள் மட்டும் லீவு இருப்பவர்கள் என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா? நமக்கு எதுக்கு அந்த லீவு, அதையும் கேன்சல் செய்துவிட்டு ஆபீஸ்லயே அமர்ந்துவிடுங்கள்.