Published:Updated:

`இந்தியாவின் டைட்டானிக்’கில் 'பட்ஜெட் தேனிலவு' கொண்டாட வாய்ப்பு..! எப்படி?

`இந்தியாவின் டைட்டானிக்’கில்  'பட்ஜெட் தேனிலவு' கொண்டாட வாய்ப்பு..! எப்படி?
`இந்தியாவின் டைட்டானிக்’கில் 'பட்ஜெட் தேனிலவு' கொண்டாட வாய்ப்பு..! எப்படி?

ந்தியாவின் முதன் ஆடம்பரக் கப்பல் சேவை வரும் 24- ந் தேதி முதல் மும்பையில் இருந்து கோவாவுக்கு தொடங்குகிறது. 

உலகம் முழுவதும் பல்வேறு ஆடம்பரக் கப்பல்கள் இயங்கி வருகின்றன. பல நாள்கள் கடலிலேயே சுற்றுலா செல்லலாம். இதற்கெல்லாம் லட்சக்கணக்கில் பணம் செலவாகும். நடுத்தரவர்க்கத்தினருக்கு கப்பலில் பயணம் செய்ய ஆசை இருந்தாலும், பொருளதாரச்  சூழல் காரணமாக கடற்பயண ஆசை நிறைவேறும் வாய்ப்பு குறைவு. நடுத்தர வர்க்கத்தினரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது, இந்தியாவில் முதன்முறையாக ஆடம்பரக் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அழகான பிரமாண்டக் கப்பலை மத்திய அரசு வாங்கியுள்ளது. இந்த கப்பலின் பெயர் `ஆங்ரே’. மராத்திய மன்னர் வீரசிவாஜியின் கடற்படைத் தளபதி கனோஜி `ஆங்ரே’வின் பெயரே கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. 'டைட்டானிக்' கப்பலை நினைவுபடுத்தும் வகையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போல கப்பலில் நவீன வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உள் அலங்கார வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும்!

வாரத்துக்கு 4 நாள்கள் கோவா - மும்பை சேவை வழங்கப்படுகிறது. மும்பையில் இருந்து மலை 4.30 மணிக்குக் பயணத்தை தொடங்கும் கப்பல், அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு கோவா சென்றடையும். முக்கியமாக தேன்நிலவு கொண்டாடும் தம்பதியினருக்காக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் சேவையை மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்ட்ர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அக்டோபர் 24-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வ சேவையை `ஆங்ரே’ கப்பல் தொடங்குகிறது. மும்பையில் இருந்து புறப்படும் இந்த கப்பல் 14  மணி நேரத்தில் 240 நாட்டிகல் மைல் பயணித்து கோவா சென்றடையும். 

கப்பலில் 8 பிரிவுகளில் ஆடம்பர மற்றும் சாதாரண வகுப்புகளில் அறைகள் உள்ளன. தேனிலவு தம்பதிகள் விரும்பும் வகையில் கடல் தண்ணீருக்கு அடியில் ஆடம்பர அறைகள் அமையும்படி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் பயணிக்கும் வகையில் டார்மென்ட்ரி அறைகளும் உள்ளன. கப்பலில் இரு ரெஸ்டாரன்ட்களில் விதவிதமான உணவுகள் கிடைக்கும். நீச்சல்குளம் மற்றும் 6 மதுபானக் கூடங்கள் உள்ளன. 399 பயணிகள் இதில் பயணிக்க முடியும்.

கப்பலை இயக்கும் பணியாளர்கள் உள்பட 67 ஊழியர்கள் உள்ளனர். டிக்கெட்டுகள் விலையும் குறைவுதான். நாம் தேர்வு செய்யும் அறைக்கு ஏற்ற வகையில் 6,000 முதல்10,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காலை உணவு டின்னர் மற்றும் நொறுக்குத்தீனிகளும் டிக்கெட்  செலவில் அடங்கும். 6 மாத கர்ப்பிணிகள் மற்றும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கப்பலில் பயணம் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்பயணத்தின் அனுபவத்தை முழுமையாகப் பெற வேண்டுமென்பதற்காக கப்பலில் வைஃபை  வசதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதனால், கரை இறங்கிய பிறகுதான் நாம் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைத் தளங்களில் பதிவிட முடியும். `ஆங்ரே’வில் ஒருநாள் பயணம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை நிச்சயமாகக் கொடுக்கும் என்று கப்பல் ஊழியர்கள் சொல்கிறார்கள். 

`ஆங்ரே’ போலவே கேரள சுற்றுலாத்துறையும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் 16 கோடி ரூபாய் செலவில் அழகிய ஆடம்பரக் கப்பலை வாங்கியுள்ளது. எகிப்திய ராணி நெஃபர்டிடியின் பெயர் இதற்குச்  சூட்டப்பட்டுள்ளது. கப்பலின் உள்பகுதியில் எகிப்திய கட்டக்கலையே அலங்கரிக்கிறது. 3 மாடிகள் கொண்ட இந்தக் கப்பல் சுற்றுலாப்பயணிகளை கடலுக்குள் 16 கி.மீ தொலைவு அழைத்து செல்கிறது. அலுவலகக் கூட்டங்கள், திருமணங்கள், பார்ட்டிகள் நடத்த இந்த கப்பல் ஏற்றது. நீச்சல்குளம், மதுக் கூடங்கள், சிறுவர்கள் விளையாட்டுக் கூடம் போன்ற வசதிகள் இந்த கப்பலில் உள்ளன.