Published:Updated:

உங்கள் பயணச் செலவைப் பாதியாகக் குறைக்கும் 5 இடங்கள்!

டூர்/டிராவல் செல்கிறோம் என்றால் நாம் அதிகம் செலவிடுவது உணவுக்கும் தங்கும் இடத்துக்கும்தான். இந்த இடங்கள் உங்கள் பயணச் செலவை நிச்சயம் பாதியாகக் குறைத்துவிடும்.

உங்கள் பயணச் செலவைப் பாதியாகக் குறைக்கும் 5 இடங்கள்!
உங்கள் பயணச் செலவைப் பாதியாகக் குறைக்கும் 5 இடங்கள்!

குளுகுளு மலையில் வெந்நீர் குளியல் போடவும் சரி, கடல் காற்றோடு வெயில் குளியல் போட வேண்டும் என்றாலும் சரி... தங்கும் இடம் தேடுவது என்பது, சவாலான விஷயமே! பொதுவாக நாம் டூர்/டிராவல் செல்லும்போது நமக்கு அதிகச் செலவுகளைக் கொடுப்பது தங்கும் விடுதிகள்தாம். ஒன்றுமே இல்லாத டுபாக்கூர் ரூமுக்கு 2,000 ரூபாய் கொடுத்து ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள்; நல்ல ரூம்களில் 200 ரூபாய்க்குத் தங்கியவர்களும் இருக்கிறார்கள். கைடு பரிந்துரைப்பது, இன்டர்நெட்டில் பார்ப்பது, நண்பர்கள் பரிந்துரைப்பது எனப் பல இடங்கள் நம்மைக் குழப்பும். இதோ இந்தப் பட்டியலில் இருக்கும் சில இடங்கள், உங்கள் பயணச் செலவைக் குறைக்கும். 

ஹோட்டல் தமிழ்நாடு

ஹோட்டல் தமிழ்நாடு என்பது, தமிழ்நாடு சுற்றுலாத் துறை கண்காணிப்பில் நடத்தப்படும் ஹோட்டல். தமிழ்நாட்டில் மொத்தம் 22 இடங்களில் இந்த ஹோட்டல் உள்ளது. எல்லாமே முக்கியமான சுற்றுலாத் தளங்கள். தனியார் ரிசார்ட்டில் இருக்கும் எல்லா வசதிகளுமே இங்கு இருக்கும்.  24 மணி நேர ரூம் சர்வீஸ், ஷவர், பார், வைஃபை, டிரை க்ளீன் என எல்லா வசதிகளும்கொண்ட இந்த ஹோட்டலில் ஓர் இரவு தங்க, 500 ரூபாய் போதும். 1,500 ரூபாய் இருந்தால் 4 நபர்கள் தங்கக்கூடிய ஓர் அறையும், இலவச காலை உணவும் கிடைக்கும். சூட் ரூம் புக் செய்தால்கூட ஓர் இரவுக்கு 3,000 ரூபாய்தான்! இதே வசதிகளுடன் இருக்கும் மற்ற ஹோட்டலுக்குப் போகவேண்டும் என்றால், 5,000 ரூபாய் தேவை. தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளில் இந்த ஹோட்டல் இருக்கிறது. குடும்பத்தோடு வந்து தங்குவதற்கு சரியான இடம்.

Youth Hostel

டிராவலர்களுக்கு மிகவும் பிடித்த இடம் இந்த யூத் ஹாஸ்டல். இந்தியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் யூத் ஹாஸ்டல் பற்றித் தெரிந்திருக்கும். இந்தியாவில் மட்டும் மொத்தம் 51 இடங்களிலும், உலகம் முழுவதும் 4,500-க்கும் அதிகமான இடங்களிலும் இவர்களின் சேவை பரந்துவிரிந்திருக்கிறது. ஏதாவது ஓர் இடத்துக்குப் போவதாக இருந்தால், அங்கு யூத் ஹாஸ்டல் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், இங்கு மட்டும்தான் ஏசி ரூமில் ஒரு படுக்கைக்கு 320 ரூபாய். 4 பேர் தங்கக்கூடிய அறை என்றால், வெறும் 975 ரூபாய்தான் கட்டணம்.

டார்ஜிலிங்கில் ஒரு சூட் ரூமுக்கு 1,600 ரூபாய் என்பது ஆச்சர்யம்தான்! தரத்தில் யூத் ஹாஸ்டலை அடித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், இவர்களின் குறிக்கோளே டிராவல் செய்பவர்களுக்குத் தரமான, சுத்தமான இடத்தை உருவாக்கிக் கொடுப்பதுதான். படுக்கையையோ அல்லது அறையையோ முன்பதிவு செய்தால் மட்டுமே இங்கு தங்க முடியும். சோலோ டிராவலர்கள் மட்டுமல்லாமல் குடும்பத்தோடு பயணம் செய்பவர்களும் தங்குவதற்கு சரியான இடமாகவே யூத் ஹாஸ்டல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.

Vedanta Wake-up

கேரளாவுக்கு டூர் செல்பவர்கள், வேதாந்தா வேக் அப் ஹாஸ்டலில் ரூம் இருக்கிறதா என்று கேட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால், குடும்பத்தோடு செல்பவர்களுக்கு 1,500 ரூபாயில் ரூம்களும், சோலோ டிராவலர்களுக்கு 300 ரூபாய்க்கும் படுக்கை கிடைக்கும். ஹோம் ஸ்டே விரும்பிகளுக்கு வேதாந்தா வேக்அப் மிகவும் பிடித்தமான இடம். எந்த ஊரில் தங்குகிறோமோ அந்த ஊர் உணவை இங்கு பரிமாறுவார்கள். சில வேதாந்தா இல்லங்களில் அறை முன்பதிவு செய்பவர்களுக்கு காலை உணவும் இலவசமாகத் தருவார்கள்.

வர்க்காலா, எர்ணாகுளம், தேக்கடி, ஆலப்பே, திருவனந்தபுரம், கொச்சின், மூணாறு, ஊட்டி, பாண்டிச்சேரி போன்ற முக்கிய இடங்களில் வேதாந்தா வேக் அப்-ன் ஹோட்டல்கள் இருக்கின்றன. மற்ற கமர்ஷியல் ஹோட்டல்கள்போல் இல்லாமல் இவர்களின் ஹோட்டல்கள் அந்த ஊரைப் பிரதிபலிப்பதாக இருக்கும் என்பதால் இங்கு டிராவலர்கள் அதிகம் தங்குவார்கள். புத்தகங்கள், வைஃபை வசதி, விளையாட்டுச் சாதனங்கள், கேம்ப் ஃபையர் என எல்லாமே இருக்கும். இந்த ஹோட்டல்கள் பெரும்பாலும் டிராவலர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதற்கு விலைக்கு அடுத்தபடியான காரணம், இவர்களின் வரவேற்பு. நண்பரின் வீட்டுக்குச் செல்வதுபோல இருக்கும் இவர்களின் வரவேற்பு. இங்கும் கேம்ப் ஃபையர், மியூசிக் நைட் என அசத்தலான நிகழ்ச்சிகள் இருக்கும். குறைந்தபட்சம் மூன்று மாதத்துக்கு முன்பே பதிவுசெய்தால்தான் இங்கு ரூம்கள் கிடைக்கும். அவ்வளவு கிராக்கி.

Zostel

யூத் ஹாஸ்டல் ஆரம்பம் என்றால் zostel அதன் தொடர்ச்சி. யூத் ஹாஸ்டல்கள் உலகம் முழுவதும் இருப்பதுபோல ஜோஸ்டல் தங்கும் விடுதிகள் டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை, கோவா, ஊட்டி என இந்தியாவில் 29 இடங்களில் உள்ளன. நண்பர்கள் சேர்ந்து குழுவாக டிராவல் ப்ளான்போடுவதாக இருந்தால், இந்த இடத்தை மறந்துவிட வேண்டாம். கோவாவில் 600 ரூபாய்க்குத் தனியாக சமையலறை, wifi, விளையாட்டு அறை, லாக்கர், 24 மணி நேர ஹவுஸ்கீப்பிங், இலவசமாக டீ/காபி உடன் சொகுசான படுக்கை கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். நாம் வீட்டில் தங்கினால் கிடைக்கும் எல்லா வசதிகளுமே இங்கு கிடைக்கும். இதே வசதிகளுடன் க்ளப் மஹிந்திரா ரிசார்ட்டில் ஓர் அறையை வாங்கினால் ஓர் இரவுக்கு 4,000 ரூபாய் செலவிட வேண்டும்.

ஜோஸ்டலில் இருக்கும் இன்னொரு சிறப்பு உங்களால் திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியவில்லை என்றால், 24 மணி நேரத்துக்கு முன்பு உங்கள் முன்பதிவை ரத்துசெய்துகொள்ளலாம். இங்கு வந்து தங்குபவர்கள் எல்லோருமே ஒரு சமூகமாக இருக்கவேண்டும் என்பதால், எட்டுக்கு அதிகமான நபர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இங்கு தங்க முடியாது. 4 பேர் அல்லது அதற்கு அதிகமான நபர்கள் குழுவாக வந்தால் எல்லோருக்கும் ஒரே அறை கொடுக்கமாட்டார்கள். 18 வயது குறைவானவர்களுக்கு அனுமதியில்லை.

Backpacker panda

Zostel-ல் 600 ரூபாய்க்குக் குறைவாக படுக்கை கிடைக்காது. ஆனால், பேக்பேக்கர் பாண்டாவில் 300 ரூபாய்க்குப் படுக்கையும், 800 ரூபாய்க்கு தனியறையும் கிடைக்கும். ஒவ்வோர் இடத்துக்கும் ஒவ்வொரு விதமான விலை என்றாலும்கூட ஏசி அறையின் வாடகை 2,000 ரூபாயைத் தாண்டாது. பேக்பேக்கர் பாண்டாவின் விடுதிகள் இந்தியாவில் மொத்தம் 31 இடங்களில் இருக்கின்றன. எத்தனை பேர்கொண்ட குழுவாக இருந்தாலும் இங்கு தங்கலாம். ஆனால், 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. உணவு இவர்களிடமே கிடைக்கும்.  தேவையென்றால் நாம் சமைத்துக்கொள்ள சமையலறையும் உண்டு. ஏசி, வாஷிங்மெஷின், wifi, ஷவர் குளியல் என சொகுசு ஹோட்டலுக்கான எல்லா வசதியும் இங்கு உண்டு. இணையதளத்திலேயே இவர்களிடம் முன்பதிவு செய்துகொள்ளலாம். 24 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவை ரத்துசெய்துகொள்ளவும் முடியும். 

குறிப்பிட்டுள்ள எல்லா இடங்களிலுமே பார்க்கிங் வசதிகள் உண்டு. கார் அல்லது பைக் எதுவாக இருந்தாலும் தங்கும் விடுதியைப் பார்த்து அறையை முன்பதிவுசெய்யும் முன் அங்கு பார்க்கிங், காலை உணவு, இரவு உணவு, நேரக் கட்டுப்பாடு, wifi போன்ற வசதிகள் இருக்கின்றனவா எனப் பார்த்துக்கொள்வது அவசியம்.

இந்தியா முழுவதையும் குறைந்த கட்டணத்தில் சுற்றிப்பார்க்க, இந்த இடங்களே போதுமானவை. இதைத் தவிர்த்து பெங்களூரின் Social rehab centre, ஜெய்ப்பூரில் Roadhouse hostel, கோவாவிலும் கேரளாவிலும் Hostel crowd, அம்ரிஸ்டரில் Jugaadus Eco Hostel, கோவாவின் Red door hostel போன்று, டிராவலர்களுக்கு வசதியாக நிறைய இடங்கள் உள்ளன. இதைத் தவிர்த்து couch surfing, Airbnb போன்ற ஆப்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில் இடவசதியைத் தேடிக்கொள்ளலாம். செலவே வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால், ஒரு டென்ட் வாங்கிக்கொள்ளுங்கள். காடுகளிலும் கடற்கரையிலும் அனுமதியே தேவையில்லை டென்ட் அடித்துப் படுத்துக்கொள்ளலாம். அடுத்த முறை சரியான ப்ளானிங் மூலம் உங்கள் டிராவல் செலவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.