Published:Updated:

அன்பின் வழியது உயிர்நிலை!

அன்பின் வழியது உயிர்நிலை!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பின் வழியது உயிர்நிலை!

அன்பின் வழியது உயிர்நிலை!

னநலம்  குன்றியதால் குடும்பத்தாரே கைவிடும் மனிதர்கள் இங்கே ஏராளம். கார்த்திக் கண்களில் அந்த மனிதர்கள் தென்பட்டால் அவர்கள் வாழ்க்கை நிச்சயம் மாறிவிடும். கார்த்திக் அவரை மாற்றிவிடுவார். சிருஷ்டி கிராமம் அதைத்தான் செய்கிறது. மனநலம் குன்றியவர்கள் மறுவாழ்வுக்கென ஒரு கிராமத்தையே உருவாக்கியிருக்கிறார் கார்த்திக்! 

அன்பின் வழியது உயிர்நிலை!

“கார்த்திக் யார்?’’

“புதுச்சேரியில் இருக்கிற ஒரு இல்லத்தில்தான் நான் வளர்ந்தேன். அதனுடைய நிறுவனர் 2002ஆம் ஆண்டு இறந்ததும் அந்த இல்லத்தை நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பள்ளியில் பயின்ற சாதாரணப் பிள்ளைகள் படித்து வேறு வேறு இடங்களுக்குச் சென்றனர். ஆனால் சிறப்புக் குழந்தைகள் படிப்பு முடிந்தும் இல்லத்தை நம்பி மட்டுமே இருந்தார்கள். அவர்களுக்கு 18 வயதில் இருந்து 20 வயது வரை நல்ல பயிற்சி கிடைக்கிறது. பயிற்சி முடித்ததும் அவர்களுக்கு வேலை கிடைப்பது கேள்விக் குறியாகவே இருந்தது. படிப்பு முடிந்ததும் இல்லத்தில் இருந்து சில குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறார்கள்.  பொதுவாக உடலுக்குத் தேவையான சக்தி கிடைத்ததும் அதை வேறு ஒரு வழியில் நாம் செலவழித்தாக வேண்டும். ஆனால் இந்தக் குழந்தைகளுக்கு அந்தச் சக்தி உடலில் தேங்க ஆரம்பிக்கிறது. தேங்கி இருக்கிற சக்தி ஒரு கட்டத்தில் கோபமாகவோ, வெறுப்பாகவோ  வெடிக்க ஆரம்பிக்கிறது. அப்படியான நேரங்களில் சில பெற்றோர் பிள்ளைகளைச் சமாளிக்க முடியாமல்  இல்லங்களில் சேர்த்து விடுகிறார்கள். இல்லையென்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கிறார்கள். சிகிச்சையில் பெரும்பாலும் மயக்க நிலையில் இருக்கக்கூடிய மருந்துகளே இந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. பெற்றோரும் பிள்ளை அமைதியாக இருந்தாலே போதும் என்பதால் மருந்துகளை நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். பெற்றோருக்கு இருக்கிற முக்கியக் கவலையே நமக்குப் பிறகு நம்முடைய பிள்ளைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்பதுதான். அதற்கான  மாற்று வழியைக்  கண்டறிய வேண்டுமென என்னுடைய தேடலைத் தொடங்கினேன்.  சில குழந்தைகளை உணவகங்களிலும் அலுவலகங்களிலும்  வேலையில் அமர்த்திப் பார்த்தோம். ஆனால் இந்தச் சமூகம் எதிர் பார்க்கும் அளவிற்கு வேகம் சிறப்புப் பிள்ளைகளிடம் இல்லை என்பதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்தச் சமூகத்தை மாற்றமுடியாது. வேறென்ன செய்ய... சிருஷ்டி தோன்றியது.”

“சிறப்புக் குழந்தைகளை வைத்து விவசாயம்...  எப்படி சாத்தியமானது? “


“பிள்ளைகளை வைத்து வேறு எந்த மாதிரியான முயற்சிகளை எடுக்கலாம் என யோசித்தபோது விவசாயம் செய்துபார்க்கலாம் எனத் தோன்றியது. இதற்கு முன் இல்லாத சவால் எனக்கு இருந்தது. பிள்ளைகளுக்கு எப்படி விவசாயத்தைச் சொல்லிக் கொடுப்பது? பள்ளியில் இருக்கும்   20 வயதுப்  பையனிடம் கீரை விதையைக் காண்பித்தேன். விதையைப் பார்த்துவிட்டு இது என்னவென்று கேட்டான். பக்கத்திலிருந்த மாமரத்தைக்  காண்பித்து இந்த விதைதான் மரமாக வளர்ந்திருக்கிறது எனக் கூறினேன். விதையையும் என்னையும் மாறி மாறிப் பார்த்து சிரித்தான். அந்த விதையை அவனிடமே கொடுத்து `இதை மண்ணில் போட்டுப் புதை, அது என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்’ எனச் சொன்னதும், அவனின் விதையை மண்ணில் போட்டுப் புதைத்துவிட்டு தினமும் அதைக் கவனித்து வந்திருக்கிறான். ஒரு நாள் காலை வேளையில் அவசரமாக என்னை அழைத்தான். அவனுடைய முகத்தில் ஒரு பரவசம் தெரிந்தது. விதை விதைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். விதை முளைத்து இரண்டு இலைகள் துளிர்த்திருந்தன. இரண்டு நிமிடங்களுக்கு மேல் என்னையும், விதையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ நிகழ்கிறது என்பதை அவன் உணர்ந்துகொண்டான். அதைப் பராமரிக்கிற எல்லா வேலைகளையும் அவனே செய்ய ஆரம்பித்தான். ஒரு நாள் நல்ல மழை. அவனைக் காணோம் என்று தேடியபோது, மழையில்  நனைந்துகொண்டே அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். மழை பெய்கிறது, எதற்குத் தண்ணீர் ஊற்றுகிறாய் எனக் கேட்டேன். “இது என்னுடைய வேலை” என்றான். அப்போதே எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.  அந்த ஒரு விதைதான் சிருஷ்டியாக வளர்ந்திருக்கிறது.’’

அன்பின் வழியது உயிர்நிலை!

“சிருஷ்டி கிராமம் எப்படி உருவானது?”

“2012ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பல உலக நாடுகளுக்குப்  பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிடைத்த தொடர்புகள்  மூலமாக கேரளாவில் நடைபெற்ற சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன். உலகம் முழுவதிலுமிருந்து 15 பேர் கலந்துகொண்டோம். அதன் இறுதியாக என்னுடைய திட்டத்திற்கு அவர்கள் பண உதவி செய்தார்கள். அதைக் கொண்டு விவசாயத்திற்கு நிலம் தேடித் தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்தேன். கடைசியாக இங்கு குறைந்த விலையில் இடம் கிடைத்தது. புதுச்சேரியிலிருந்து குழந்தைகளை இங்கு அழைத்து வந்தேன். இங்கிருக்கிற ஒவ்வொரு குழந்தையும் விவசாயம் குறித்த ஒரு பணியை மேற்கொள்கிறார்கள். ஒரு பயிர் வளர்வதை ரசிக்கிறார்கள், அதோடு பேசுகிறார்கள். அவர்கள் விளைவித்த காய்கறிகளை சமையல் செய்கிறவரிடம் கொடுத்து “இதற்கு மேல் நாங்கள் கொடுக்கிற  காய்கறிகளைத்தான் நீங்கள் சமைக்க வேண்டும், இது நாங்கள் உருவாக்கியது” என்று சொல்கிற அளவிற்கு அவர்களின் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது. இப்போது அவர்கள் யாரையும் நம்பி இல்லை. தான் ஒரு விவசாயி, தன்னால் ஒன்றை உற்பத்தி செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை அவர்களே உருவாக்கினார்கள்.”

“இப்போது எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்?“

“பதினெட்டு வயதிற்கு மேலானவர்கள் 12 பேர் இருக்கிறார்கள்.  அவர்கள் இங்கேயே வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்கிறார்கள். விவசாயம், மாடு வளர்ப்பது, கோழி வளர்ப்பது என, பசி என்கிற விஷயத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் அவர்களே செய்து கொள்கிறார்கள். அதற்கான பணத்தைக் கொடுத்து நாங்கள்  பொருளை வாங்கிக் கொள்கிறோம். அவர்களின் வாழ்வியலே முற்றிலும் மாறியிருக்கிறது. அவர்களின் உடை மாறியிருக்கிறது, பேச்சு மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் அவர்களது பேச்சு விவசாயம் குறித்து மட்டுமே இருக்கிறது. “எப்போது மழை வரும்? இன்றைக்கு மழை வருமா, வராதா?  சூரியன் இன்றைக்கு  உதிக்குமா? என்பதாக  மட்டுமே இருக்கிறது. இவர்களில் ராஜு பற்றி நான் சொல்ல வேண்டும்.

புதுச்சேரியைச்  சேர்ந்தவர்  ராஜு. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). புதுச்சேரியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பள்ளியில் தங்கியிருந்து தொழிற்கல்வி பயின்றதும் மீண்டும் தன்னுடைய 23வது வயதில் வீட்டிற்குச் செல்கிறார். அவருக்கு இரண்டு அண்ணன்கள். இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் என ராஜுவின் வீட்டில் வசிக்கிறார்கள். அண்ணன்களின் வாழ்க்கையைப் பார்க்கிற ராஜு அம்மாவிடம் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் எனக்  கேட்கிறார். அதற்கு அவருடைய அம்மா “நீ வேலைக்குப் போய் சம்பாதிச்சா உனக்குக் கல்யாணம் நடக்கும், உன்னப் பார்த்துக்கொள்ளவே ஒரு ஆள் வேணும்,  உனக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறது” எனச் சொல்லிவிடுகிறார். நாம் வேலைக்குச் சென்றால் நமக்கும் திருமணம் நடக்கும் என எதிர்பார்த்து அன்றிலிருந்து பாண்டிச்சேரி முழுவதும் அலைந்து வேலை தேட ஆரம்பிக்கிறார். மாற்றுத் திறனாளி என்பதை அவருடைய நடை உடை காட்டிக்கொடுக்கின்றன. யாரும் அவருக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை. வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே அவருடைய குறிக்கோளாய் இருந்தது. பல நாள்களாக வேலை தேடி அழைக்கிறார். ஒரு கட்டத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் அம்மாவிடம் சண்டையில் ஈடுபடுகிறார். 

அன்பின் வழியது உயிர்நிலை!

ராஜுவின் செய்கையில் மாற்றம் ஏற்படுவதைப் பார்க்கிற அவருடைய அம்மா இதற்கு மேல் அவரை வீட்டில் வைத்துச்  சமாளிக்க முடியாது என நினைத்து 23 வயதான ராஜுவை 60 வயதிற்கு மேற்பட்டோர் இருக்கிற முதியோர் விடுதியில் சேர்த்துவிடுகிறார். தான் ஒரு வட்டத்திற்குள் இருப்பதை உணர்கிற ராஜு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். அவரைப் பிடித்து மீண்டும் இல்லத்தில் சேர்க்கிறார்கள். இரண்டு மூன்று முறைக்கு  மேல் தப்பித்துச் சென்ற ராஜுவை மீண்டும் மீண்டும் பிடித்து வந்து அடைத்து வைக்கிறார்கள். அதன்பிறகு அம்மாவால்கூட ராஜுவை முதியோர் இல்லத்தில் சந்திக்க முடியவில்லை.

நான்கு வருடங்கள் கழித்து, எங்களைப் பற்றிக் கேள்விப்படுகிற ராஜுவின் அம்மா எங்களைச் சந்தித்தார். தன்னுடைய மகன் ஒரு இல்லத்தில் இருப்பதாகவும் அவனை அழைத்து வந்து உங்களது பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றும், அவனைப் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிறது எனவும் சொன்னார். ராஜுவை நாங்கள் சந்தித்தோம்.. நான்கு சுவருக்குள் ராஜுவை அடைத்து வைத்திருந்தார்கள். சவரம்கூடச் செய்யாமல் தலை, முகம் முழுவதும் முடியால் மூடியிருந்ததைப் பார்த்து ராஜுவின் அம்மா அழுதார். ராஜுவைச் சுற்றிப் பத்திற்கும் மேற்பட்ட தட்டுகள் கிடந்தன. ராஜுவின் தொண்டைப் பகுதி பாதிக்கப்பட்டிருந்தது. ராஜுவை மீட்டுக் கொண்டு வந்தோம். பள்ளியில் யாரிடமும் பேசாமல் தனிமையாகவே இருந்தார். தொண்டையில் பாதிப்பு இருந்ததால் ராஜுவைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் அடைபட்டுக் கிடந்த காலத்தில் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றார்கள்.

சிறப்பு கவனமெடுத்து ராஜுவைப் பார்த்துக் கொண்டோம். சில நாள்களில் ராஜு மீண்டு வந்தார். மனிதர் மாறியிருந்தாரே தவிர வேலை செய்ய வேண்டும் என்கிற மனசு மாறாமல் இருந்தார். ராஜுவுக்கு நிலம் கொடுத்தோம். வேலை செய்ய வேண்டும் என ஏங்கிய ராஜு மனம் போல விவசாயம் செய்ய ஆரம்பித்தார். அதன்மூலம் வரும் பணத்தை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைத்தோம். இப்போது இந்தப் பள்ளியில் வேலை செய்து சம்பாதிக்கிற 30 குழந்தைகளில் ராஜுவும் ஒருவர்.”

பேசிக்கொண்டிருக்கும்பொழுதே குழந்தையுடன் ஒரு பெண் உள்ளே வந்தார். “இவர் என் மனைவி லட்சுமி, உங்களைப் போல என்னைப் பேட்டி எடுக்க வந்தவர்தான். இங்க வந்து வேலை செய்ய ஆரம்பித்தார்கள். இருவருக்கும் பிடித்திருந்தது. திருமணம் செய்து கொண்டோம். இவன் எங்கள் குழந்தை கீர்த்தி விசாகன்” என அறிமுகம் செய்துவைத்தார். பள்ளியில் இருக்கிற ஒவ்வொரு மனிதருக்கும்  ஒவ்வொரு பொருளுக்கும்  ஒரு கதை இருக்கிறது. வீட்டில் 24 மணி நேரமும் தொலைக்காட்சி பார்க்கும் ஒரு 24 வயது சிறப்பு மாணவரை சிருஷ்டி கிராமத்திற்கு  அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்த மாணவரோடு சேர்த்து தொலைக்காட்சியையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இப்போது தொலைக்காட்சி பழுதாகிக் கிடக்கிறது. மாணவர் விவசாயம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.  

கட்டுரை, படங்கள்: ஜார்ஜ் அந்தோணி