தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நம் பாதுகாப்பு நம் கையில்! - ஹேமா சௌத்ரி

நம் பாதுகாப்பு நம் கையில்! - ஹேமா சௌத்ரி
பிரீமியம் ஸ்டோரி
News
நம் பாதுகாப்பு நம் கையில்! - ஹேமா சௌத்ரி

தனியே... தன்னந்தனியே...மனஸ்வினி

`பறக்கும் ராசாளி’யே எனப் பாடத் தோன்றுகிறது ஹேமா செளத்ரியைப் பார்த்தால். படபட பைக்கில் உலகை வலம்வருவதே ஜோத்பூர் பெண்ணின் பெருங்காதல். ராயல் என்ஃபீல்டில் வேலைபார்க்கிற ஹேமா, அடுத்தடுத்து இரண்டு பைக் ரைடுகளை வெற்றிகரமாக வழிநடத்திய பெருமையுடன், சோலோ ட்ரிப்புக்குத் தயாராகிவருகிறார்.

``இந்த வருஷம் ஜூலை மாசம் `தி ஹிமாலயன் ஒடிசி’யில் லே-லடாக் ரூட்டுல 12 பெண்கள் கலந்துக்கிட்ட ரைடை, நான் வழிநடத்தினேன். ஆர்வமுள்ளவங்க ராயல் என்ஃபீல்டு வெப்சைட்டுல பதிவு பண்ணணும். டெல்லியிலேருந்து ரைடு கிளம்பும். முதல் ரெண்டு நாள்கள், பயிற்சி நடக்கும். மூணாவது நாள் இந்தியா கேட்லயிருந்து ரைடு தொடங்கும்.

15 நாள்கள் ட்ரிப்பான அதுல லே-லடாக் போயிட்டு, சண்டிகருக்கு வருவோம். `விமன் ஒன்லி ட்ரிப்' செம ஜாலியா இருக்கும்.

அடுத்து ஆகஸ்ட்டுல நடந்த `மோட்டோ ஹிமாலயா’வையும் நான்தான் வழிநடத்தினேன். இதுவும் ராயல் என்ஃபீல்டு நடத்தினதுதான்.

நம் பாதுகாப்பு நம் கையில்! - ஹேமா சௌத்ரி

10 நாடுகள்லேருந்து 25 பைக் ஆர்வலர்கள் கலந்துக்கிட்டாங்க. ரெண்டு பெண்களும் இருந்தாங்க. இதுவும் செம ஃபன்னா இருந்தது’’ - சிலிர்க்கிற ஹேமாவுக்கு, வேலையும் பொழுதுபோக்கும் பைக் ரைடிங்தான்.

``அப்பா ஆர்மியில் இருந்தவர். பிசிக்ஸ் கிராஜுவேட்டான நான், நேஷனல் லெவல் பேஸ்கெட்பால் பிளேயரும்கூட.  எங்க வீட்டுல அப்பா, அக்கா, அண்ணன் எல்லாருமே பைக் ஓட்டுவாங்க. அண்ணன்தான் எனக்கு பைக் ஓட்டக் கத்துக்கொடுத்தான். டெல்லியில ஓர் இன்ஜினீயரிங் கன்சல்ட்டன்சியில் வேலைபார்த்திட்டிருந்தேன். வேலை விஷயமா எல்லா இடங்களுக்கும் பைக்லதான் போவேன். 2015-ல் ராயல் என்ஃபீல்டு பைக் வாங்கினதும் `சிட்டி ராலி'யில கலந்துக்கிட்டேன்.

சிம்லா முதல் குலு, மணாலி வரை  போன முதல் லாங் ட்ரிப் மறக்க முடியாதது. என் ஃப்ரெண்டு கார் ஓட்ட, நான் பைக்ல கூடவே போனேன். குர்கான்லயிருந்து கோவா வரைக்கும் போனதுதான் முதல் சோலோ ட்ரிப். அந்த டைம்ல நான் பார்த்திட்டிருந்த வேலையிலேயே என் பெரும்பான்மை நேரம் போனது. அதுலேருந்து சின்ன பிரேக் எடுத்துக்கிட்டு எனக்கே எனக்கான நேரத்தை என்ஜாய் பண்ணணும்னு நினைச்சதுதான் அந்த சோலோ ட்ரிப்புக்கான காரணம்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நடத்திய `ரைடர் மேனியா’ நிகழ்வில் கலந்துகிறதுக்காகப் போனேன்.  முதல்ல மூணு பேர் சேர்ந்து போகிறதா ப்ளான். கடைசி நிமிஷத்துல ரெண்டு பேர் `வரலை'னு சொல்லிட்டாங்க.  அதனால நான் தனியா கிளம்பிட்டேன். இந்தியா மட்டுமில்லாம, உலகளவுல ராயல் என்ஃபீல்டு பைக் வெச்சிருக்கிறவங்க ஒன்றுகூடும் பிரமாண்ட நிகழ்வு அது’’ - பயண ஆரம்பமும் ஆர்வமும் பகிர்கிறார் ஹேமா.

நம் பாதுகாப்பு நம் கையில்! - ஹேமா சௌத்ரி

``என்னுடைய முதல் சோலோ ட்ரிப்பின் ரெண்டாவது நாள், ஜெய்ப்பூர்லயிருந்து உதய்ப்பூருக்குப் போயிட்டிருந்தேன்.  டயர் பஞ்சர் ஆகிடுச்சு. இந்த மாதிரி சம்பவங்கள் நடக்கலாம்னு எப்போதும் என்கிட்ட டூல்கிட் இருக்கும். அடிப்படையான ரிப்பேர் எல்லாம் செய்யவும் பழகியிருந்தேன்.  ஆனா, அன்னிக்கு என்கிட்ட காற்று அடிக்கிற பம்ப் இல்லை. எங்கேயாவது கிடைக்குமானு தேடிக்கிட்டிருந்தேன். இருட்டத் தொடங்கியிருந்தது. அந்த ஏரியாவில் இருந்த ஆண்கள் என்னையே வேடிக்கை பார்த்திட்டிருந்தாங்க. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஒரு பெண்ணைக்கூடப் பார்க்க முடியலை. அந்த ஆண்கள்கிட்டதான் உதவி கேட்டாகணும். அதேநேரம் என்னைப் பலவீனமானவளாகவும் காட்டிக்கக் கூடாது. அவங்களால மட்டும்தான் எனக்கு ஹெல்ப் பண்ண முடியும்னும் காட்டிக்கக் கூடாது. அது அவங்களை பவர்ஃபுல் ஆள்களா நினைக்கவெச்சுடும். பயங்கர தைரியமான பெண்ணா காட்டிக்கிட்டுப் பேசினேன்.

சோலோ ரைடு போகும்போது இப்படி ஏதாவது எதிர்பாராத பிரச்னைகள் வந்தா சமாளிக்க, என்கிட்ட ஒரு டெக்னிக் இருக்கு. `நான் இந்தியன் ஆர்மியில வேலை பார்க்கிறேன்’னு சொல்லிடுவேன். அப்பா ஆர்மியில இருக்கிறதால அந்த டிபார்ட்மென்ட் பத்தின அத்தனை விஷயங்களும் எனக்கு அத்துப்படி. அப்படிச் சொன்னதும் அவங்க என்னைப் பார்க்கிறவிதமே  மாறிடும். மனசுல வேற எண்ணம் இருந்திருந்தாகூட அந்த நிமிஷத்துலயிருந்து பயங்கர மரியாதையோடு பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதையெல்லாம் தாண்டி என்கிட்ட எப்போதும் என் பாதுகாப்புக்கான பெப்பர் ஸ்பிரே மாதிரியான பொருள்களும் இருக்கும். நம்ம பாதுகாப்பு நம்ம கையிலதான் இருக்கு. தனியா போனா ஏதாவது ஆகிடுமோனு பயந்து வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறதும், பாதுகாப்புக்கான விஷயங்களை ஏற்பாடு செய்யாம தனியா டிராவல் பண்ணிட்டு, அப்புறம் அசம்பாவிதம் நடந்துபோச்சேனு அழறதும் முட்டாள்தனம். இன்னும் சொல்லப்போனா, பாதுகாப்புக் கான விஷயங்கள்தான் சோலோ ட்ரிப்பின் முதல் ப்ளானா இருக்கணும்’’ - பயணப் பாதுகாப்பின் அடிப்படை சொல்கிறது ஹேமாவின் அனுபவம்.

நம் பாதுகாப்பு நம் கையில்! - ஹேமா சௌத்ரி

``பெண்களுக்குப் பயணம் ஏன் முக்கியம்?'' என்றால், ``அது பெண்களுக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்குமே அவசியம்'' என்கிறார்.

``வீட்டுக்குள்ளே நான்கு சுவர்களுக்குள்ளேயே இருந்தீங்கன்னா, உங்க தெருவிலோ, காலனியிலோ என்ன நடக்குதுனு தெரியாம வாழ்வீங்க. தெருவைத் தாண்டிப் போகாம இருந்தீங்கன்னா, தெருவுக்குள்ள இருக்கும் உலகம் மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அதனால உங்க எல்லையை விரிவாக்குங்க. நிறைய இடங்களுக்குப் பயணம் பண்ணுங்க. மனிதர்களை மீட் பண்ணுங்க. அப்பதான் அவங்க உணர்வுகளும் வாழ்க்கையும் உங்களுக்குப் புரியும். `எனக்கு எதுவுமே நல்லது நடக்காது. எனக்கு எப்போதும் பிரச்னைகள்தான். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்?’னு சுய இரக்கத்துல வாழறதுலேருந்து வெளியே வருவீங்க. வாழ்க்கை உங்களுக்கு என்னவெல்லாம் கொடுத்திருக்குனு புரியும். உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்னு பயணம்தான் கற்றுக்கொடுக்கும்.

நம் பாதுகாப்பு நம் கையில்! - ஹேமா சௌத்ரி

சோலா டிராவல் இன்னும் ஸ்பெஷல். அது உங்க தயக்கங்களைத் தகர்க்கும்; கூச்சங்களை உடைக்கும். உதவிகள் கேட்கவும், உதவிகள் செய்யவும் உங்களைத் தயார்படுத்தும். குரூப் ஸ்டடி பண்றதுக்கும் தனியா படிக்கிறதுக்குமான வித்தியாசத்தைப் போன்றது தான் இதுவும். சேர்ந்து படிக்கிறபோது  உங்களுடைய சந்தேகங்களுக்கு அடுத்தவங்க பதில் சொல்லணும்னு எதிர்பார்ப்பீங்க. அதுவே தனியா படிக்கும்போது உங்களுடைய சந்தேகங்களுக்கு நீங்களே விடைகளைத் தேடிக் கண்டுபிடிப்பீங்க’’ - அழகிய உதாரணம் சொல்கிற ஹேமா,  உலகையே வலம்வந்தாலும் பைக்கைத் தவிர வேறு வழிகளை இதுவரை முயற்சி செய்ததில்லையாம்.

``சமீபகாலமா ஆஃப் ரோடு டிராவல்தான் எனக்குப் பிடிக்குது. மலைப்பாதைகளிலும் ஊருக்கு வெளியேவும் டிராவல் பண்றதைவிடவும் சிட்டி டிராவல்தான் ஆபத்தானது. வீட்டுவாசலில் நிற்கும்போது யாராவது ஒருத்தர் நம்ம மேல இடிச்சுட்டு, வண்டியைத் தள்ளி விட்டுட்டுப் போயிடுவாங்க. இந்த மாதிரி சம்பவங்கள் சிட்டிக்கு வெளியே டிராவல் பண்ணும்போது நடக்கறதில்லை. ஆஃப் ரோடு டிராவலில் உள்ள சவால்கள் சுவாரஸ்யமானவையும்கூட’’ என்கிறார்.

ட்ரூ... ட்ரூ... ட்ரூ!