தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அன்பையும் அற்புதங்களையும் சந்திக்கிறேன்! - நிஷா மாரிமுத்து

அன்பையும் அற்புதங்களையும் சந்திக்கிறேன்! - நிஷா மாரிமுத்து
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பையும் அற்புதங்களையும் சந்திக்கிறேன்! - நிஷா மாரிமுத்து

தனியே... தன்னந்தனியே..

சென்னையின் மோஸ்ட் வான்ட்டட் `எம்.சி' நிஷா மாரிமுத்து. உள்ளூரிலும் வெளியூரிலும்  நடக்கும் அநேக லான்ச்சுகளை ஹோஸ்ட் செய்பவர். ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்துவது, மாடலிங் என, மேடம் செம பிஸி.  இத்தனை வேலைகளுக்கிடையில் இவருக்கு எனர்ஜி ஏற்றும் விஷயம், பயணம்... அதுவும் தனிப்பயணம். சம்பாதிப்பதில் பெரும்பங்கைப் பயணத்துக்குச் செலவிடும் அளவுக்கு நிஷா பயணப் பிரியை!

அன்பையும் அற்புதங்களையும் சந்திக்கிறேன்! - நிஷா மாரிமுத்து

`` `க்வீன்’ படத்துல நிச்சயதார்த்தம் நின்னுபோன பிறகு கங்கணா ரணாவத்  டிராவல் பண்ணுவாங்களே... கிட்டத்தட்ட என் அனுபவமும் அப்படித்தான். என் ரிலேஷன்ஷிப் பிரேக்அப் ஆனபோதுதான் முதல் சோலோ ட்ரிப்பா யூரோப் போனேன். அங்கே போனதும் மனசு ரொம்ப தெளிவா லேசான மாதிரி இருந்தது. சரியான முடிவுகளை எடுக்கக் கத்துக்கிட்டேன்’’ - பயணத்தால் பக்குவப்பட்டிருப்பவர், வேலை தொடர்பாகவும் எப்போதும் ஊர் ஊராகச் சுற்றுபவர்.

``சின்ன வயசுல எனக்கு நிறைய டிராவல் பண்ணணும்னு ஆசை. ஆனா, சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகுதான் அந்த ஆசை நிறைவேறியது. பயணச் செலவுகளுக்காக நான் யாரையும் எதிர்பார்க்க வேண்டியதில்லைங்கிற நிலைமை வந்ததும் முழு வீச்சில் டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். முதல்ல ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து டிராவல் பண்ணலாம்னு நினைச்சு, நிறைய பேர்கிட்ட பேசினேன். ஆனா, எல்லாருக்கும் நேரம் பொருந்திவரலை. எந்த இடத்துக்குப் போகணும்கிறதுல யும் ஆளுக்கொரு விருப்பம் இருந்தது. பாய் ஃப்ரெண்ட்கூட டிராவல் பண்றதுலகூட பிரச்னை இருக்கும். நாம எப்படி டிரஸ் பண்ணணும்கிறது வரைக்கும் அவங்கதான் முடிவு பண்ணுவாங்க. இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தவிர்க்க, எனக்கு சோலோ ட்ரிப்தான் சரியான சாய்ஸா தெரிஞ்சது’’ - நியாயமான காரணங்கள் சொல்பவரின் ஆல்டைம் ஃபேவரைட் இடம், ஐரோப்பா.

``முதன்முறை சோலோ ட்ரிப் போனதும் அங்கேதான். 20 நாள்கள் பயணம். அதன் பிறகு பலமுறை போயிட்டு வந்திருக்கேன். எத்தனை முறை போனாலும் அலுக்காத இடம் அது. மறுபடி அடுத்த மாசம் கிளம்பறேன்’’ - முதன்முறை போகும் குதூகலம் அவர் வார்த்தைகளில்.

``சின்ன வயசுல `முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட பேசக் கூடாது. அது ஆபத்தானது’னு சொல்லி வளர்ப்பாங்க.  ஆனா, அதைப் பொய்யாக்கினது டிராவல்தான்.  இந்த உலகத்துல நம்மைச் சுற்றிலும் அருமையான மனிதர்கள் நிறைஞ்சு இருக்காங்கனு எனக்குப் புரிய வெச்சது. இந்த உலகம் நல்லதும் கெட்டதும் நிறைஞ்சது. ஆனா, கெட்டதை மட்டுமே நாம யோசிச்சிட்டிருந்தோம்னா, நல்லதை மிஸ்பண்ணிடுவோம்னு டிராவல்தான் எனக்குக் கத்துக்கொடுத்தது. 

அன்பையும் அற்புதங்களையும் சந்திக்கிறேன்! - நிஷா மாரிமுத்து

இத்தாலி போயிருந்தபோது, நான் தனியா உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தேன். எனக்குப் பின்னாடி இருந்த டேபிளில் ஒரு குடும்பம் சாப்பிட்டுக்கிட்டிருந்தது. எனக்கு வரவேண்டிய அயிட்டம் அவங் களுக்கும் அவங்க ஆர்டர் பண்ணினது எனக்கும் மாறி வந்திருச்சு. அது தெரிஞ்சு திரும்பியபோது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க என்கிட்ட `நீங்க ஆர்டர் பண்ணினதை நாங்க சாப்பிட ஆரம்பிச்சுட்டோம்’னு ஸாரி கேட்டாங்க. நான் தனியா வந்திருக்கேன்னு தெரிஞ்சு என்னையும் அவங்களோடு கூப்பிட்டு உட்காரவெச்சு, எனக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணி பில் கட்டினாங்க.  இந்தியாவுல இதெல்லாம் நடக்குமானு தெரியலை!

பாகிஸ்தான் போயிருந்தபோது ஒருமுறை என் போன் வேலை செய்யலை. பஸ் இருக்கிற இடத்துக்கு வழி தெரியலை. பக்கத்துல இருந்தவர்கிட்ட உதவி கேட்டேன். அவர் தன் போன்ல வழி கண்டுபிடிச்சு, என்னை அந்த இடத்துக்கு அழைச்சுட்டுவந்து விட்டுட்டு, பஸ்ஸுக்கு டிக்கெட்டும் எடுத்துத் தந்தார். `நான் பாகிஸ்தானி, நீங்க இந்தியன். நாட்டுக்குள்ள பிரிவினைகள் இருக்கலாம். நமக்குள்ள அதெல்லாம் வேண்டாம்’னு கை குலுக்கிட்டுப் போனதையெல்லாம் என்னால நம்பவே முடியலை. டிராவல் பண்ணும்போதுதான் இப்படி நிறைய அன்பையும் அற்புதங்களையும் சந்திக்கிறேன்.

இந்தியாவில் பெண்கள்னா சிவப்பா இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. ஃபேர்னெஸ் விளம்பரங்களைப் பிரபலப்படுத்துறாங்க. இந்தியாவுக்குள்ளே டிராவல் பண்ணினபோது என்னைப் பார்த்துட்டு நிறைய பேர், `அழகா இருக்கே... ஆனா, கலரா பொறந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்’னு சொல்வாங்க. வெளிநாடுகளுக்கு டிராவல் பண்ணினபோதுதான் என் அருமை எனக்கே தெரிஞ்சது. அத்தனை பேரும் என்னைத் திரும்பிப் பார்ப்பாங்க. `ரொம்ப அழகா இருக்கீங்க... இந்தியனா? இந்தியன்ஸ் எல்லாரும் இப்படித்தான் அழகா இருப்பாங்களா?’னு கேட்பாங்க. அங்கெல்லாம் மாநிறத்தைக் கொண்டாடுறாங்க. அது எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது...’’ - மாய்ந்து போகிறார்.

அன்பையும் அற்புதங்களையும் சந்திக்கிறேன்! - நிஷா மாரிமுத்து``பல கண்டங்களுக்குத் தனியே பயணம் செய்துவிட்ட பிறகும், ஒவ்வொருமுறையும் வீட்டாரைச் சமாதானப்படுத்துவதிலும் சம்மதிக்க வைப்பதிலும் சவால்களை எதிர்கொள்வது தொடர்கிறது’’ என்கிறார் நிஷா.

`` `தனியா டிராவல் பண்றேன்’னு எந்தப் பெண்ணாவது சொன்னா, அதை அனுமதிக்கிற வீடுகள் ரொம்பக் கம்மி. `ஏதாவது ஆகிட்டா...  நாலு பேர் கேள்வி கேட்பாங்களே...  புருஷனை விட்டுட்டுத் தனியா போனா உலகம் என்ன நினைக்கும்? இப்படி எல்லா கேள்விகளும் பெண்களை நோக்கிப் பாயும். அதுவே ஓர் ஆண் தனியே டிராவல் பண்ணும்போது இப்படி யாரும் கேட்கிறதில்லை. டிராவல் பண்ற சுதந்திரம் பெண்களுக்குத் தேவை. என் வீட்டிலும் இந்தக் கேள்விகள் எழும்.  `இது என் வாழ்க்கை, 365 நாளில் 30 நாள்களை எனக்காக வாழ்கிற சுதந்திரம் வேணும்'னு வாதாடிப் புரியவெச்சேன். இன்னிக்கும் நான் தனியா கிளம்பும்போது வீட்டுல பெரிய  டிராமாவே நடக்கும். ஆனா, அங்கே போய் வீடியோ காலில் பேசும்போது சமாதானமாகிடுவாங்க.

`டிராவலுக்காகச் செலவு பண்ற பணத் துல கார் வாங்கலாம், வீடு வாங்கலாம்’னு திட்டுவாங்க. அதையெல்லாம் எப்போ வேணா வாங்கலாம். ஆனா, நாம் சம்பாதிக்கிற நினைவுகளுக்கு எதுவுமே ஈடாகாதுங்கிறது என் எண்ணம். அதை டிராவல் மட்டும்தான் கொடுக்க முடியும்.

டிராவலை மிஸ்பண்றவங்க வாழ்க்கையின் அழகான அத்தியாயங்களையும் சேர்த்தே மிஸ்பண்றாங்கனு சொல்வேன். டிராவல் பண்ணாத வரைக்கும் அது அவங்களுக்குப் புரியாது. இந்த உலகம் நமக்கானது. அதைச் சுற்றிப்பார்க்கிற உரிமை எல்லோருக்கும் உண்டு. தனியா பயணம் பண்ணும்போது சுயநலமா யோசிக்கிறதை மறந்துடுவோம். அந்த இடத்தின் அழகைத் தேட ஆரம்பிச்சிடுவோம். நெகட்டிவ் விஷயங்களை மறந்துடுவோம். மேம்பட்ட மனுஷங்களா மாறிடுவோம். நீங்களும் மிஸ்பண்ணிடாதீங்க’’ - மேஜிக் சொல்கிறார் மாநிற அழகி!

சாஹா