Published:Updated:

கோவா முதல் கோகர்னா வரை... பெஸ்ட் புத்தாண்டு கொண்டாட்ட இடங்கள்!

கோவா முதல் கோகர்னா வரை... பெஸ்ட் புத்தாண்டு கொண்டாட்ட இடங்கள்!
கோவா முதல் கோகர்னா வரை... பெஸ்ட் புத்தாண்டு கொண்டாட்ட இடங்கள்!

தம், மாநிலம், நாடு என எந்தவித பாகுபாடுமின்றி, அனைவரும் இணைந்து கொண்டாடப்படும் ஒரே நிகழ்வு, புத்தாண்டுதான். முன்பைவிட, தற்போது கொண்டாட்டங்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டன. சைக்கிளில் நாட்டைச் சுற்றுவது, பைக்கில் மலையைச் சுற்றுவது என இளைஞர்களின் ஆசைகள் அனைத்தும் தற்போது நினைத்ததும் நிறைவேறக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டை வரவேற்க இந்தியாவிலுள்ள சில சுவாரஸ்ய டெஸ்டினேஷன்களின் பட்டியல் இதோ..

ராஜஸ்தான்:

'என்னது! அந்தப் பாலைவனத்துல போய் புத்தாண்டை கொண்டாடுறதா!' என்ற ஷாக் வேண்டாம். டிசம்பர் மாதம்தான் ராஜஸ்தானைச் சுற்றி பார்க்கச் சரியான நேரம். ராஜபுத்திரர்களின் கம்பீரமான வாழ்வியலைப் பல நூறு ஆண்டுகள் கடந்து இன்றும் பின்பற்றி வரும் குடும்பங்கள், யானை அல்லது ஒட்டக சவாரி, வீட்டை அலங்கரிக்கும் அழகிய கைவினைப் பொருள்கள் போன்றவற்றைப் பார்க்க, ரசிக்க, மண்மணம் மாறாத நினைவுகளில் பயணிக்க ராஜஸ்தான் சிறந்த இடம்.

அதுமட்டுமல்ல, தரமான பாரம்பரிய மற்றும் வித்தியாச மாடர்ன் உடைகள், நகைகள், லெதர் ஷூக்கள் ஆகியவற்றைக் குறைந்த விலையில் மனநிறைவோடு வாங்குவதற்கு ராஜஸ்தான் பெஸ்ட். உதய்பூரில், 'இரவு நேரத்தின் படகு சவாரி' ரொம்ப ஃபேமஸ். Ranthambore தேசிய பூங்காவுக்குச் செல்ல உங்கள் கேமராக்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

கசோல்:

அமைதியான மலைப்பகுதி. மிதமாகக் கொட்டும் பனி. நிலவொளி வெளிச்சம். கொட்டிக்கிடக்கும் நட்சத்திரங்கள். அங்கு ஒரு சிறிய கூடாரம். 'கிட்டார்' இசை காதுகளைக் கிள்ள உங்கள் நண்பர்களோடு ஆடிப்பாடிக் கொண்டாட விருப்பமா? அப்படினா ஹிமாச்சல் பிரதேசத்திலுள்ள கசோல் குக்கிராமத்தைத் தவிர வேறு சிறந்த இடம் இருக்க வாய்ப்பேயில்லை. 'லேட் நைட் மியூசிக் பார்ட்டி' பிரியர்களுக்கு இந்த இடம் நிச்சயம் பிடிக்கும். குடும்பத்தினருடன் சென்று கொண்டாடக் கூடிய அழகிய இடம் இந்த கசோல்.

கோகர்னா:

பார்ட்டி, பாரம்பரிய தளங்கள், கோயில்கள், வனவிலங்குகள் சரணாலயம் என எல்லா விதமான பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லாமல் நிரம்பி வழியும் மாநிலம் கர்நாடகா. இதுத் தொழில்நுட்ப வளர்ச்சிபெற்ற கலர்ஃபுல் மாநிலம் மட்டுமில்லை பாரம்பரிய பொக்கிஷங்கள் பலவற்றை உள்ளடிக்கிய உயிரோட்டமுள்ள மையமும்கூட. உங்கள் புத்தாண்டை இறை வழிபாட்டுடன் தொடங்க எண்ணினால், கோகர்னா சரியான தேர்வு. இது இந்தியாவின் ஏழு முக்கிய புனித யாத்திரை ஸ்தலங்களில் ஒன்று. கோயில்கள் ஒரு பக்கம் என்றால், அமைதியான பீச் மறுபக்கம். ஆம், இந்த இடத்தை 'சத்தமில்லாத கோவா' என்றும் கூறுவதுண்டு. ஆரவாரம் ஏதுமின்றி, லேசான கடல் காற்றோடு உங்கள் புத்தாண்டு இரவைக் கழிக்க கோகர்னா, கோ கண்ணா!

கோவா:

'பீச்' விரும்பிகளின் நம்பர் ஒன் சாய்ஸ், கோவா. எந்தப் பக்கம் திரும்பினாலும், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை 'தண்ணீர்' மட்டுமே தென்படும் 'இந்தியாவின் லாஸ் வேகஸ்' இந்த கோவா. பார்ட்டி, நைட் லைஃப், கேசினோ விரும்பிகளுக்கு நூறு சதவிகிதம் இந்த இடம் கைகொடுக்கும். குடும்பத்தோடு போவதுதான் கொஞ்சம் ஆபத்து. ஆனால், நண்பர்களுடன் அளவில்லா நேரத்தைச் செலவிட சிறந்த டெஸ்டினேஷன் இது. இங்கு எண்ணிலடங்கா ரெசார்ட்டுகள் குவிந்துள்ளன. உலகின் மிகவும் பழைமையான தேவாலயம் இங்குள்ளது. தம்பதியர்கள், தங்களின் நாள்களைத் தனிமையில் கழிக்க விரும்பினால், அவர்களுக்கென ஏராளமான 'பிரைவேட் கடல் உலா' கப்பல்கள் இருக்கின்றன. அர்ஜுனா பீச், கமாக்கி கிரீக் ஸ்டைல் பார், டிட்டோ க்ளப் போன்ற இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க.

கேரளா:

அமைதியான வித்தியாச புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தென்னிந்தியாவில் மிகவும் சிறந்த இடம் கேரளா. கடவுளின் சொந்த நாடான கேரளாவின் இயற்கை அழகோடு, ஆண்டின் முதல் நாளை வரவேற்க ஆலப்புழா சிறந்த தேர்வு. ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல், அழகான படகு வீட்டில் குடும்பத்தோடு அமைதியாகக் கொண்டாட இதைவிட பெஸ்ட் ஸ்பாட் எதுவுமில்லை. மெல்லிய இசையோடு நண்பர்களுடன் கொண்டாட, பழைய கொச்சியிலுள்ள Fort Kochi-யின் 'கொச்சின் கார்னிவல்' இருக்கிறது. இந்தத் திருவிழா டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் தொடங்கி, ஜனவரி முதல் நாள் வரை கொண்டாடப்படும். அதுமட்டுமில்லை, இங்கு பிரத்யேக ஆயுர்வேத ஸ்பா ரெசார்ட்டுகளும் இருக்கின்றன. இயற்கை, ஆரோக்கியம் மற்றும் கொண்டாட்டம் என அத்தனையும் சங்கமிக்கும் கேரளாவிலுள்ள Windsor Castle-லில் நடைபெறும் பார்ட்டிக்கும் மறக்காம விசிட் பண்ணிடுங்க.

உங்கள் புத்தாண்டு கொண்டாட்டக் களம் எது பாஸ்?

அடுத்த கட்டுரைக்கு