போகிக் கொண்டாட்டத்தால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். அதாவது, மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை இது.
இந்த நாளில் பழையனவற்றைக் கழித்தல் என்ற வழக்கத்தின் அடையாளமாகக் கிழிந்த துணிகள், பழைய பாய்கள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாயக் கழிவுகளைத் தீயிட்டு எரிப்பது வழக்கம். தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று போகிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினார்கள்.
இதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே எழுந்த சிறுவர்கள், பெற்றோருடன் வீட்டில் இருந்த பழைய பொருள்களை வீதியில் போட்டு எரித்தனர். அப்போது, சிறுவர்கள் மேளம் அடித்தும் மகிழ்ந்தனர்.
இதனால், ஏற்பட்ட புகைமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பனிமூட்டத்துடன் புகை மூட்டமும் இணைந்ததால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. உள்நாட்டு விமானங்கள் சில ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. அதேபோல், வருகையும் தாமதமானது. இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
சென்னை - மும்பை மற்றும் சென்னை - பெங்களூரு இடையிலான ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், 15-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து புறப்படும் சர்வதேச விமானங்களும் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.