Published:Updated:

வாடகை சைக்கிள்... C/O அரசாங்கம்..! வாடகை எவ்வளவு?

வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் செயல்படும் `ஸ்மார்ட் பைக்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வாடகை சைக்கிள் திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

வாடகை சைக்கிள்... C/O அரசாங்கம்..! வாடகை எவ்வளவு?
வாடகை சைக்கிள்... C/O அரசாங்கம்..! வாடகை எவ்வளவு?

`சாலையில் சைக்கிள் பயணம் செய்பவர்களை எல்லாம் அதிசயமாகப் பார்க்கும் காலம் வரும்' என நிச்சயமாக நாம் யாரும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், அப்படியொரு காலகட்டத்தில்தான் நாம் தற்போது இருக்கிறோம். சென்னையில் மட்டுமன்றி பிற நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் அனைவருமே சைக்கிள் பயணம் செய்யும் நிலை விரைவில் உருவாகும்.

கடந்த பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் சைக்கிளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது. சைக்கிள் ஓட்டுதல் என்பது அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களின் தினசரி வாழ்வில் அங்கமாக இருந்த காலம் போய் தற்போது வசதியானவர்கள் காலை நேரத்தில் உடற்பயிற்சிக்காக மட்டுமே செய்யும் சடங்காக மாறிவிட்டது. போதாக்குறைக்குப் பணக்காரர்கள், தங்களின் கார்களின் பின் பகுதியில் சைக்கிளை வைத்துக் கொண்டு செல்லும் நிலை ஃபேஷனாகவே மாறிவிட்டது.

பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் வாகன நெரிசலும் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சைக்கிள் பயணங்களை பல்வேறு வெளிநாடுகள் ஊக்குவித்து வருகின்றன. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயச் சூழலிலிருந்து மீளும் நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, குறைந்துவிட்ட சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கவும், பொதுமக்களிடையே சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கவும், வாடகைக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் செயல்படும் `ஸ்மார்ட் பைக்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வாடகை சைக்கிள் திட்டத்தைச் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக 250 சைக்கிள்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த எண்ணிக்கையை 5,000 வரை அதிகரிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவெடுத்து இருக்கிறார்கள். `ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் வாடகை' எனச் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த வாடகை சைக்கிள் திட்டமானது, இப்போதைக்கு சென்னை எழும்பூர், பெசன்ட்நகர், அடையாறு, மெரினா, மயிலாப்பூர், சென்ட்ரல், கிண்டி ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்படும். நாளடைவில் சென்னைப் பெருநகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிறுத்தங்களும் அமைக்கப்பட உள்ளன. ஒருவர் மட்டுமே ஓட்டிச் செல்லக்கூடிய வகையில் இது கட்டமைக்கப்பட்டிருந்தாலும் சைக்கிளின் முன்னும் பின்னும் தானியங்கி எல்.இ.டி விளக்குகள், ஓட்டும் வேகத்திற்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள மூன்று கியர்கள், அத்துடன் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு, வாடகைக்கு எடுப்பவர் சைக்கிளை எங்கு ஓட்டிச்சென்றாலும் அவரைக் கண்காணிக்கக்கூடிய வகையில் இருக்கும். அதே சமயம் பயனீட்டாளர்களின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்காத அளவுக்கு இந்த ஜி.பி.எஸ் கருவி இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

இன்றைய காலத்துக்கு ஏற்ப, நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சைக்கிளின் எடையும் குறைவு என்பதால் எல்லா வயதினரும் இதைப் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இத்திட்டத்தில் இன்னொரு முக்கிய அம்சம், சைக்கிளை வாடகைக்கு எடுத்த இடத்தில்தான் விடவேண்டுமென்கிற கட்டுப்பாடு கிடையாது. அரசு அறிவித்து, நியமித்துள்ள எந்த சைக்கிள் நிறுத்தத்தில் வேண்டுமென்றாலும் வாடகைக்கு எடுப்போர் சைக்கிளை நிறுத்தலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த `ஸ்மார்ட் பைக்' என்ற செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். வாடகை சைக்கிள் திட்டத்துக்கான ஒட்டுமொத்த கட்டுப்பாட்டு அறை சென்னைப் பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட இருக்கிறது. இது வெற்றிகரமாகச் செயல்படும் பட்சத்தில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்றத் திட்டத்தைக் கொண்டுவர இருக்கிறார்கள். 

சைக்கிள் பயன்பாட்டைக் கொண்டுவருவது மிக ஆரோக்கியமான சூழல் என்றாலும் பரபரப்பு மிகுந்த நேரங்களிலும், சென்னைப் போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெருநகரச் சாலைகளிலும் சைக்கிள் ஓட்டுவதற்கான சூழலையும் ஏற்படுத்தித் தர வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டுவருவது போல சைக்கிள் திட்டமும் வெற்றிகரமாக மாறும் பட்சத்தில் இயற்கை நம்மை மேலும் ஆசீர்வதிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.