Published:Updated:

தேன்நிலவு முதல் காசிரங்கா வரை... பிரம்மபுத்திராவில் பிரமிக்கவைக்கும் உல்லாசக்கப்பல்!

பிரம்மபுத்திரா நதியில் ஓடத் தொடங்கியுள்ள உல்லாசக்கப்பல் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

தேன்நிலவு முதல் காசிரங்கா வரை... பிரம்மபுத்திராவில் பிரமிக்கவைக்கும் உல்லாசக்கப்பல்!
தேன்நிலவு முதல் காசிரங்கா வரை... பிரம்மபுத்திராவில் பிரமிக்கவைக்கும் உல்லாசக்கப்பல்!

வட இந்திய ஆறுகள், மிகப் பெரியவை; ஆழம் நிறைந்தவை. பிரமாண்டக் கப்பல்களைக்கூட இந்த நதிகளில் இயக்கலாம். கடந்த நவம்பர் மாதம் முதல் கங்கை நதியில் சரக்குக் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டுவிட்டது.  கொல்கத்தா நகரிலிருந்து வாரணாசி வரை சரக்குக் கப்பல் போக்குவரத்து இப்போது பிஸியாக நடைபெறுகிறது. அதேபோல், பிரமாண்டமான சொகுசுக் கப்பல்களும் கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கடல் பயணம் என்பது, எல்லாருக்கும் வாய்த்துவிடாது. கடலில் ஓடும் பிரமாண்டமான சொகுசுக் கப்பல்களில் பயணிக்க வேண்டுமென்றால், பல லட்சங்கள் தேவைப்படும். நடுத்தரவர்க்கத்தினருக்கு இது சாத்தியமில்லை. கப்பல் பயணத்தை விரும்பும் மக்களின் ஏக்கத்தை வட இந்திய ஆறுகளில் ஓடும் இந்த பிரமாண்ட சொகுசுக் கப்பல்கள் தீர்த்துவைக்கின்றன. இந்தியாவில் ஓடும் ஆறுகளில் பிரம்மபுத்திரா நதி மிக நீளமானது. திபெத்தில் இமயமலையின் `ஸாங்போ' என்ற இடத்தில் உருவாகும் பிரம்மபுத்திரா, அருணாசலப்பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைகிறது.

அசாம் மாநில எல்லையை அடையும்போது சுமார் 10 கிலோமீட்டர் அகலம்கொண்ட பேராறாக உருவெடுக்கிறது. திப்ரூட் அருகே பிரம்மபுத்திரா இரு கிளைகளாகப் பிரிகிறது. இதன் மத்தியில் அழகிய தீவும் உள்ளது. இந்தத் தீவின் பெயர்தான், மஜூலி. உலகிலேயே நதியால் உருவாக்கப்பட்ட தீவுகளில் மஜூலிதான் மிகப்பெரியது. இயற்கை எழில் கொஞ்சும் மஜூலித் தீவைப் பார்க்க, கோடி கண்கள் வேண்டும். பிரம்மபுத்திரா நதியையொட்டிதான் அசாமின் புகழ்பெற்ற காசிரங்கா வனச்சரணலாயம் உள்ளது. காண்டாமிருகங்களுக்கு காசிரங்கா பெயர்போனது. சிப்ஸாகர், கிப்பன் குரங்கு சரணாலயம் என பிரம்மபுத்திரா ஓடும் பகுதி எங்கும் சுற்றுலாத் தலங்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

பிரம்மபுத்திராவின் பயணம், இந்தியாவுடன் முடியவில்லை;  வங்கதேசத்துக்குள் நுழைந்து டாக்கா அருகே வங்கக்கடலில் கலக்கும் பிரம்மபுத்திரா, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது;  விவசாயம், குடிநீர் ஆதாரத்தைத் தாண்டி சுற்றுலா வழியாகவும் ஏராளமான மக்களின் பசியைப் போக்குகிறது. தற்போது, அசாம் - பெங்கால் நேவிகேஷன் நிறுவனம் கெளஹாத்தியில் இருந்து ஜோர்கட் வரை 312 கிலோமீட்டர் தொலைவுக்கு உல்லாசக் கப்பல் விடப்பட்டுள்ளது. மஜூலித் தீவு அருகே, பிரமாண்டமான அழகிய கப்பல் ஒன்றை மிதக்கும் ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது.  இந்தக் கப்பலின் பெயர், Charaidew. இதில் 18 சொகுசு அறைகள் உள்ளன. அவற்றில் 12, குளிர்சாதன வசதிகொண்டவை. தற்போது ஜோஹர்ட் வரை இயக்கப்பட்டாலும் மே மாதத்திலிருந்து டாக்கா வரை பயணம் நீட்டிக்கப்படவுள்ளது. 

மூன்று தளங்கள்கொண்ட இந்தக் கப்பல், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையான வசதிகளைக்கொண்டது.  அனைத்துமே சொகுசு அறைகள். கப்பலின் மேல்தளத்தில் நீச்சல்குளம் உள்ளது. வித்தியாசமான முறையில் தேன்நிலவு கொண்டாட விரும்பும் தம்பதிக்கு, இந்தக் கப்பல் பயணம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். கப்பல் பயணத்தின்போது ஆங்காங்கே தீவுகளில் இரவு நேரத்தில் கேம்ப் ஃபயருக்கும் ஏற்பாடு செய்கிறார்கள். காசிரங்காவில் காண்டாமிருங்களைத் தேடி யானைகள் மீது பயணிப்பது திகில் கலந்த சுவாரஸ்ய அனுபவமாகவே இருக்கும்.  சைவ, அசைவம் உணவுகள் விதவிதமாகப்  பரிமாறப்படுவதோடு, மதுவுக்கும் தடையில்லை. பிரம்மபுத்திரா, கங்கை நதிகளில் ஓடும் சொகுசுக் கப்பல் பயணம் பற்றிய விவரங்களுக்கு https://www.assambengalnavigation.com இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.