Published:Updated:

அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்!

அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்!
பிரீமியம் ஸ்டோரி
News
அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்!

தனியே... தன்னந்தனியே...ஐஸ்வர்யா

யணங்களை சுவாரஸ்யமாக்குவதில் இடங் களைவிடவும் உடன் பயணிப்பவர்களுக்கு அதிக பங்குண்டு. ஐஸ்வர்யாவுக்கும் அப்படி யொரு சுவாரஸ்ய அனுபவத்தைத் தந்திருக்கிறது அவரது சமீபத்திய வெளிநாட்டுப் பயணம்.

அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்!

பயணம் செய்த இடங்களிலும் சுவாரஸ்யங் களுக்குப் பஞ்சமில்லை. ஐஸ்வர்யாவுக்கு அதைவிடவும் அதிக மகிழ்ச்சியைத் தந்தது அவரது கம்பெனி, அதாவது சக பயணி. யெஸ்... ஐஸ்வர்யாவின் ஹாங்காங் ட்ரிப்பை அசத்தலாக்கியவர் அவரின் ஐந்து வயது மகள் சாய் மிருதுளா. அம்மாவுக்கும் மகளுக்குமான ஐந்து வருடப் பயணத்தில், அந்த ஏழு நாள்கள் மறக்க முடியாதவை என்கிறார் ஐஸ்வர்யா!

‘`ரொம்ப தொலைவோ, நிறைய நாள்களோ டிராவல் செய்து பல காலமாச்சு. வேலை தொடர்பான ட்ரிப்பா இருந்தாலும் காலையில போயிட்டு, நைட்டுக்குள்ள திரும்பற மாதிரி பிளான் பண்ணிப்பேன். குழந்தையை விட்டுட்டுப் போகணுமேனு ரொம்ப யோசிப்பேன். கிட்டத்தட்ட ஏழு வருஷங்களுக்குப் பிறகு ஹாங்காங் ட்ரிப் நிகழ்ந்திருக்கு...’’ என்கிற ஐஸ்வர்யா, இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘பிளாக் டிக்கெட்’ என்கிற புரொடக்‌ஷன் கம்பெனியில் சி.இ.ஓ-வாக  பணிபுரிகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்!

‘`என் குழந்தைதான் இதை ஆரம்பிச்சுவெச்சா. போன வருஷத்துலேருந்து டிஸ்னிலேண்ட் போகணும்னு கேட்டுக்கிட்டே இருந்தா. ஹாங்காங் டிஸ்னி லேண்ட்தான் நமக்குப் பக்கம்னு தெரிஞ்சது. அங்கேயே போகலாம்னு முடிவு பண்ணினோம். ஹஸ்பண்ட் அவருடைய வேலையில கொஞ்சம் பிசியா இருந்ததால நானும் குழந்தையும் மட்டும் போகலாம்னு யோசிச்சோம். கிளம்பற நேரத்துல என் குழந்தை ‘நான் அங்கே என்ன சாப்பிடுவேன்’னு ஆரம்பிச்சா. அவளுக்கு வீட்டுச் சாப்பாடு மட்டும்தான் கொடுத்துப் பழக்கியிருந்தேன். ‘நீதானே பாப்பா டிஸ்னி லேண்ட் பார்க் கணும்னு ஆசைப்பட்டே... அங்கே பான் கேக், சாலட்ஸ், சாண்ட்விச்செல்லாம் கிடைக்கும். சாப்பிடலாம்’னு சொன்னதும் சமாதானமானாள்...’’ - இங்கே தொடங்கிய சவால், பயணம் நெடுகிலும் தொடர்ந்திருக்கிறது. ஆனாலும், அவைதாம் அந்தப் பயணத்தை அழகாக்கினவாம்!

‘`நான்ஸ்டாப்பா ஹாங்காங் போகிற `கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ்'ல டிக்கெட் கிடைக்காததால `தாய் ஏர்வேஸ்'ல பாங்காக் போய், அங்கிருந்து ஹாங்காங் போக வேண்டி யிருந்தது.­ பிளைட் ஏறும்வரை செம ஜாலியா இருந்தவள், ஏறினதும் தூங்கிட்டா. நம்மூர்ல பெண்கள் தனியா டிராவல் பண்றதுல நிறைய சிக்கல்கள் இருக்கு. நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரத்துக்குக் கிளம்பிட முடியாது. ஆனா, வெளிநாடுகளில் பெரும்பாலான இடங்கள் மெட்ரோவால் இணைக்கப்பட்டிருக்கு. குழந்தையோடு தனியா டிராவல் பண்ற பெண்களுக்கு ஏர்போர்ட்டிலும் எல்லா இடங்களிலும் ஹெல்ப் பண்றாங்க. செக்இன் பண்ற டெஸ்க்கில் எனக்கு கமாண்ட் அசிஸ்டென்ஸ் வேணும்னு சொல்லியிருந்தேன். அதனால எங்களை செக்இன் முடிச்சிட்டு, லாபியில விடறதுவரைக்கும் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க. அங்கேயிருந்து நாங்க அடுத்த பிளைட்டுல ஏறினோம். அதுவரைக்கும் தூங்கிட்டிருந்த என் குழந்தை, திடீர்னு எழுந்து, ‘நாம ஏன் இங்கே இருக்கோம்? வா... திரும்பப் போகலாம்’னு அழ ஆரம்பிச்சிட்டா. அதையும் ஒருவழியா சமாளிச்சு, ஹாங்காங் போய் சேர்ந்தோம்.

அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்!

ஹோட்டல் உள்ளே நுழைஞ்சதுமே, ‘இங்கே பேன் இல்லையே... நான் எப்படித் தூங்குவேன்’னு கேட்டா. ‘இந்த டெம்ப்ரேச்சருக்கு பேன் தேவையில்லை’னு சமாதானப்படுத்தித் தூங்கவெச்சேன்.  அடுத்த நாள் காலையில எழுந்து ரெடியாகி, பிரேக்பாஸ்ட் சாப்பிடப் போனோம். அங்கே வெச்சிருந்த எல்லா உணவுகளையும் ஒரு ரவுண்டு பார்த்துட்டு, அங்கே இல்லாத இட்லி சாம்பார் வேணும்னு கேட்டா. இப்படி ஏதாவது நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் இந்தியாவிலேருந்து கிளம்பும்போதே ரெடி மேடு சாம்பார் சாதம்  மிக்ஸ் எடுத்துட்டுப் போயிருந்தேன். சாதம் கொடுத்த பிறகும் குழந்தை சமாதானமாகலை. ‘எனக்கு டிஸ்னிலேண்ட் பார்க்க வேணாம். இந்தியாவுக்குத் திரும்பிப் போயிடலாம்’னு சொன்னா. முதல் நாள் முழுக்க ரெஸ்ட். ரெண்டாவது நாள் டிஸ்னிலேண்ட். மூணாவது நாள் ஓஷன் பார்க். நாலாவது நாள் லான்ட்டாவ், கேபிள் காரில் போய் உயரத்தில் உள்ள புத்தாவைப் பார்க்கிறது. அஞ்சாவது நாள் ரிட்டர்ன். இப்படி பிளான் பண்ணிவெச்சிருந்தேன். முதல் நாளே இப்படிச் சொல்றாளேனு கொஞ்சம் டென்ஷனாதான் இருந்தது. ஏதாவது உதவிகள் தேவைன்னா கேட்கறதுக்காகக் கிளம்பறதுக்கு முன்னாடியே வெங்கட் பிரபு தனக்குத் தெரிஞ்சவங்களுடைய நம்பரைக் கொடுத்திருந்தார். அவங்களுக்கு போன் பண்ணினேன். குழந்தைக்காக அவங்க இட்லி, சாம்பார் கொண்டுவந்தாங்க. அடுத்த நாளும் இதே பிரச்னை வந்துடக்கூடாதுனு பக்கத்துல இருந்த மாலுக்குப் போய் ஸ்டீமர் வாங்கினேன். அதுலயே அரிசி, பருப்பைப் போட்டு, சாம்பார் சாதம் செய்து சாப்பாட்டுப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வெச்சேன்.

அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்!

விக்டோரியா பீக்னு ஒரு டவருக்குப் போய், ஒட்டுமொத்த ஹாங்காங் அழகை ரசிச்சபோது குழந்தை ரொம்ப குஷியாகிட்டா. அங்கேயே அவளுக்குக் கொஞ்சம் பொம்மைகள் வாங்கித் தந்தேன். ஃபெரி ரைடு கூட்டிட்டுப் போனேன். மேடம் டுஸாட் மியூசியம் போனோம். அதைப் பார்த்ததும் இன்னும் எக்சைட் ஆயிட்டா. அடுத்த நாள் டிஸ்னி லேண்ட். உள்ளே போனதும் அவளுடைய மூடே மாறிடுச்சு. ஃபேரி லேண்ட், டுமாரோ லேண்ட், அட்வென்ச்சர் லேண்ட், டாய் ஸ்டோரி லேண்ட்... இப்படி அங்கே ஏகப்பட்ட இடங்களும் ரைடுகளும் இருக்கு. சாதாரண ரைடுக்கே பயப்படற நான், என் குழந்தைக்காக பயங்கரமான ரைடுல எல்லாம் ஏறி, என்ஜாய் பண்ணினேன். டார்சானின் ட்ரீ ஹவுஸ் பார்த்தோம். லயன்கிங் லைவ் ஷோ பார்த்தோம்.  அடுத்த நாள் ஓஸன் பார்க். இட்லி, சாம்பாரை மசிச்சு எடுத்துக்கிட்டுக் கிளம்பிட்டோம். கேபிள் காரில் 10 நிமிஷ ரைடு. பெங்குயின், போலார் கரடிகள், வால்ரஸ், கோல்டன் பிஷ்னு எல்லாம் பார்க்கலாம். அதுவரை  டிஸ்கவரி சேனலில் மட்டுமே பார்த்த உயிரினங்களை நேரடியா பார்த்தபோது ரொம்ப உற்சாகமாகிட்டா.

பகல் முழுக்க ஜாலியா என்ஜாய் பண்ணினவ, நைட் ரூமுக்கு வந்ததும், ‘எப்போ வீட்டுக்குப் போறோம்’னு ஆரம்பிப்பா. ‘எனக்கு நைனா காவாலா’ம்பா. நைட் அவங்கப்பாகிட்ட பேசிட்டுதான் தூங்குவா. அஞ்சு நாளும் இப்படித்தான் போனது’’ - ஐஸ்வர்யாவின் விவரிப்பில் நமக்கும் ஹாங்காங் பயணித்த அனுபவம் கிடைக்கிறது.

அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்!

‘`ஏர்போர்ட்டுல ஆரம்பிச்சு எல்லா இடங்களிலும் நான் எதிர்கொண்ட கேள்வி... ‘தனியா வந்தீங்களா? அதுவும் குழந்தையை வெச்சுக்கிட்டா?' என்பதுதான். அஞ்சு வயசுக் குழந்தையை இப்படியொரு ட்ரிப்புக்குக் கூட்டிட்டுப் போகிறபோது நிறைய பிளானிங் தேவைப்படுது. குழந்தையைத் தயார்படுத்தறது மாதிரி நாமளும் தயாராகணும். கொஞ்சம் பிளானிங் இருந்தா குழந்தைகளோடு  டிராவல் பண்றது ஈஸி. அவங்களுக்கு அறிமுகமில்லாத உணவுகளைச் சாப்பிடவைக்க முன்கூட்டியே பழக்கியிருக் கணும் அல்லது அவங்களுக்குப் பிடிச்சதை போற இடத்துல எப்படித் தயார் பண்ணித் தரலாம்னு யோசிக்கணும்’’ - அம்மாக்களுக்கு டிப்ஸ் தருபவர், பயணத்தின் க்ளைமாக்ஸுக்கு வருகிறார்.

‘`ஒருவழியா ட்ரிப் முடிஞ்சு நாங்க இந்தியா கிளம்பற நாள் வந்தது. அன்னிக்குதான் அவளுக்கு அதுவரைக்கும் இல்லாத ஹாங்காங் பாசம் வந்தது.  கிளம்பவே மனசில்லை. ‘மறுபடி எப்போ வருவோம்’னு கேட்டுக்கிட்டே இருந்தா... ‘அம்மா நீ ரொம்ப ஸ்வீட். நான் உன்னை இங்கே ரொம்பப் படுத்தினேன். உன்னை இரிட்டேட் பண்ற மாதிரி பேசினேன். ஆனாலும், நீ என்னைத் திட்டவே இல்லை. எப்பவும் நீ இதே மாதிரி இருக்கணும்’னு சொன்னா. வேலைக்குப் போகிற அம்மாக்கள், குழந்தைகளோடு செலவு பண்ற நேரம் ரொம்பக் குறைவு. இந்த மாதிரியான ட்ரிப் அவங்களுடைய நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கும்னு அனுபவத்துல புரிஞ்சுக்கிட்டேன். என்னைப் பத்தி அவளுக்கு நிறைய தெரிஞ்சது. அவளைப் பத்தி நான் இன்னும் நிறைய விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன். அவளுக்கு என்ன பிடிக்குது, அடுத்த முறை டிராவல் பண்ணும்போது அவளை எந்த மாதிரியான இடத்துக்குக் கூட்டிட்டுப் போகணும்னு  ஐடியா கிடைச்சது. அடிக்கடி அவளோடு டிராவல் பண்ணணும்கிற ஆசையும் அதிகமாகியிருக்கு. குழந்தைகளைக் காரணம் காட்டி பயணங்களைத் தவிர்க்கிற அம்மாக்கள், குழந்தைகளோடு ஒருமுறை டிராவல் பண்ணிப் பாருங்க... அது லைஃப்டைம் எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்’’ - ஆவலைத் தூண்டுகிறார். அனுபவத்துக்கு அம்மாக்கள் தயாரா?

-சாஹா