Published:Updated:

சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!
பிரீமியம் ஸ்டோரி
சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஃபியட் லீனியா (டீசல்)

சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - ஃபியட் லீனியா (டீசல்)

Published:Updated:
சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!
பிரீமியம் ஸ்டோரி
சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!
சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

ங்களிடம் லீனியா போன்று ஒரு பட்ஜெட் செடான் கார் இருக்கிறது. சென்னையில் இருந்து காலையில் கிளம்பி இரவு வீடு திரும்பும்படி ஒரே நாளில் ஓர் அற்புதமான டூர் அடிக்க வேண்டும் என்றால், அதற்கு ஒகேனக்கல் அற்புதமான சாய்ஸ். இங்கே லீனியாவைக் குறிப்பிட்டதற்குக் காரணம் இருக்கிறது. ஹைவேஸில் ஃபியட் கார்களைப்போன்றதொரு நிலைத்தன்மையும், ஃபன் டு டிரைவும் அநேகமாக வேறு எந்த கார்களிலும் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம். கிட்டத்தட்ட 160 கி.மீ வேகத்திலும் அத்தனை ஸ்டெபிலிட்டி.

ஃபியட் இன்ஜின் கொண்ட கார்களை ஓட்டுவதே உற்சாகம்தான். ஃபியட் காரையே ஓட்டினால்? அற்புதமான அனுபவம் கிடைத்தது. ஆனால், ஃபியட் லீனியாவின் உரிமையாளர் சுந்தரேசன், இந்த முறை லேசான வருத்தத்தில்தான் கிரேட் எஸ்கேப்பில் கலந்து கொண்டார். காரணம், சென்ற இதழில், ‘மிஸ் யூ கார்கள்’ லிஸ்ட்டில் லீனியாவும் சேர்ந்ததுதான். ‘‘அப்போ இனிமே லீனியாவும் புன்ட்டோவும் உற்பத்தி கிடையாதா?’’ என்று ஏக்கத்துடன் அடிக்கடி கேட்டுக்கொண்டே வந்தார் சுந்தரேசன்.

சுந்தரேசன், அவர் நண்பர் ராபின், புகைப்பட நிபுணர், நான் என்று மொத்தம் 4 பேருடன் ஒகேனக்கலுக்கு ஒரு மின்னல் வேகச் சுற்றுலா.

சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 சென்னையில் இருந்து ஒகேனக்கலுக்கு 345 கி.மீ. ஒரே நாளில் ரிட்டர்ன் ஆகிவிடலாம். அடிபுடி ட்ரிப் விரும்பாதவர்கள், ஒகேனக்கலில் தங்கிவிட்டும் வரலாம். நாங்கள் தமிழ்நாடு ஓட்டலில் புக் செய்துவிட்டுத்தான் கிளம்பினோம். வேலூர், ஆம்பூர், தர்மபுரிதான் ரூட் மேப்.

 வாலாஜா டோல்கேட்டுக்கு முன்பு, ஆளே இல்லாத ஹைவேஸில் 160 கி.மீ-ல் பறப்பது உற்சாகம்தான். ஆனால், சில இடத்தில் ‘தடால் புடால்’ பள்ளங்கள் டயரைப் பதம் பார்த்து, பர்ஸைப் பழுக்க வைத்துவிடும். ‘வேலை நடந்துக்கிட்டிருக்கு சார்’ என்றார்கள். (அதாவது, நடக்காமலே இருக்கு!) எனவே ஆம்பூர் தாண்டி கவனம்.

 கிருஷ்ணகிரியில் புகைப்பட நிபுணரை பிக்-அப் செய்துவிட்டு, தர்மபுரி நோக்கிப் பயணம். இங்கேயும் இருவழிச் சாலை போட்டுக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச ஆண்டுகளுக்கு முன் விகடன் கட்டுரையில் இங்கே இருவழிச் சாலை வேலை நடந்து கொண்டிருந்ததாகப் படித்தாக ஞாபகம். ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சந்தானம் கேட்பதுபோல், ‘அப்போ நடந்த அதே வேலையா?’ என்று கேட்க, ஆமாம் என்றார்கள்.

 ஒகேனக்கலுக்கு 2 பாதைகள் உண்டு. வேலூர், தர்மபுரி, பென்னாகரம் வழி ஒன்று. கிருஷ்ணகிரியில் இருந்து 12 கி.மீ-ல் காவேரிப்பட்டினத்தில் இருந்து வலதுபுறம் திரும்பினால் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் வழி - இன்னொன்று.

 ஒகேனக்கல் நுழைந்ததும் வழக்கம்போல், கக்கத்தில் பையுடன் காரை வழிமறித்தார்கள். ‘‘50 ரூபாய் சார்!’’ என்றார் இளைஞர் ஒருவர். 200 மீட்டர் தள்ளி உள்ள செக்போஸ்ட்டில் மேலும் 20 ரூபாய் வாங்கினார்கள். ‘‘50 ரூபாய் வாங்கினாங்களே... இது டீ செலவுக்கா?’’ என்றேன். ‘‘அது பஞ்சாயத்து... இது கவர்ன்மென்ட்’’ என்றார் செக்போஸ்ட் அதிகாரி. ‘‘ரெண்டும் வேற வேறயா சார்’’ என்றார் சுந்தரேசன்.

 ஹேர்பின் பெண்டுகளை ஷேர் செய்த மலைச்சாலை கொஞ்சம், ஏற்ற - இறக்கமான சாலை கொஞ்சம், சத்தியமங்கலம் காடுபோல் அடர்ந்த காட்டுச் சாலை கொஞ்சம், மண் சாலை கொஞ்சம் என்று பாதையே போதை ஏற்றியது.

சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!
சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

 ‘‘நைட் ஆயிடுச்சு... பார்த்துப் போங்க சார்; ஆனைங்க திரியுது’’ என்று எச்சரித்து அனுப்பியிருந்தார் செக்போஸ்ட் அதிகாரி. ஒகேனக்கல் வருபவர்களுக்கு நாங்கள் இரவு நேரத்தை சிபாரிசு செய்வோம். காரணம், யானை தரிசனம்.

  இருட்டுக்குள் எதைப் பார்த்தாலும் ‘யானை, யானை’ என்று கத்தினார்கள் சுந்தரேசனும் ராபினும். திடீரென கரிய உருவம் ஒன்று டாலடிக்க... அட... யானையேதான்! மூங்கில்களைக் கடித்தபடி விதவிதமான ஆங்கிள்களில் ரொம்ப நேரம் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார், ஆண் யானையார் ஒருவர். ‘‘செக்போஸ்ட்ல 700 ரூபாய்கூடக் கொடுக்கலாம்’’ என்று ஆசுவாசமடைந்தார் சுந்தரேசன்.

 ஒகேனக்கல் பார்டரில் நுழைந்ததுதான் தாமதம்... பாகிஸ்தான் பார்டரில் கால் வைத்ததுபோல் லீனியாவைச் சுற்றி வளைத்தனர் கைடுகள். ‘‘சார், செம சீப்பா முடிச்சுடலாம். 4 பேருக்கும் சேர்ந்தே 1,000 ரூபாய்க்குப் பண்ணிடலாம்’’ என்று மார்க்கெட்டிங் செய்தனர்.

 கூட்டத்தில் சிக்கிய வி.ஐ.பி மாதிரி விழி பிதுங்கித் தப்பித்து, தமிழ்நாடு ஹோட்டலில் தஞ்சம் அடைந்தோம். ஒகேனக்கலில் 500 ரூபாயில் இருந்து 2,500 ரூபாய் வரை ரூம்கள், காட்டேஜ்கள் உண்டு. தமிழ்நாடு ஹோட்டல் போக வனத்துறையினரின் கெஸ்ட்ஹவுஸும் மலிவான விலையில் கிடைக்கும். நல்ல சாப்பாட்டுக்குத்தான் அலைய வேண்டும்.

 காலை 7 மணிக்குப் பரிசல் பயணம் தொடங்கிவிடுகிறார்கள். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 500 பரிசல்கள் இயங்குகின்றனவாம். சனி, ஞாயிறு என்றால் 500 பரிசல்களையும் ஒகேனக்கல் காவிரி நீரில் மிதப்பதைப் பார்க்கலாம். சில நேரங்களில் நதியில் டிராஃபிக் ஜாமெல்லாம் ஆகும் என்றார்கள்.

 ஒரு படகுக்கு 750 ரூபாய். 4 பேர் பயணிக்கலாம். செல்வராஜ் என்றொரு போட்மேன் நமக்குச் சிக்கினார். கார் ஓட்டுவதுபோல் அவ்வளவு ஈஸியில்லை படகு ஓட்டுவது. பெரிய பாறைகள் மேவிய காட்டாற்றுக்கு நடுவில் படகில் செல்வது ஏதோ ஒரு ஜென்நிலை. ‘‘வைதேகி காத்திருந்தாள்’ படத்துல அந்தப் பொண்ணு வருமே... ‘அடிமைப் பெண்’ படத்தில் இதுதான் எம்ஜிஆர் டைவ் அடிச்ச இடம்... ‘ராவணன்’ படத்துல விக்ரம் சர்ருனு சருக்குவாரே... ‘ரோஜா’ படத்துல ‘ருக்குமணி’ பாட்டு பாடுவாங்களே.. இந்த இடம்தான்’’ என்று 'பெப்' ஏற்றிக்கொண்டே வந்தார் செல்வராஜ்.

 ‘தஸ்ஸு புஸ்’ என புகை கக்கும் அருவியோரம் படகைச் செலுத்தி, படகிலிருந்தபடியே நம்மை நனைய விட்டு அழகு பார்த்தார் படகோட்டி. போகும் வழியில் பாறை ஓரத்தில் மீன் பிடித்து, ஆன் தி ஸ்பாட்டிலேயே சுத்தம் செய்து வறுவல் தயார் செய்து கொண்டிருந்தார்கள். ‘பாப்பிரெட்டி மீனுங்க... முள்ளே இருக்காது..’ என்று 4 பீஸ் 100 ரூபாய் ரேட்டில் சில மீன்களை லவட்டினோம். காவிரி ஆற்றில் வறுவல் மீன் தின்றபடி பரிசலில் பயணிப்பதெல்லாம்... கவிஞர்களிடம் கடன் வாங்கித்தான் வர்ணிக்க வேண்டும்.

 மணல்மேடு என்றொரு இடம்தான் பரிசலின் கடைசி பாயின்ட். கொஞ்சம் தள்ளினால் கர்நாடகா பார்டர். கர்நாடகாவின் அந்தப் பக்கம் இருந்தும் படகுப் பயணம் நடந்து கொண்டிருந்தது. ஐபிஎல் அணியினர் மாதிரி லைஃப் ஜாக்கெட்டை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம். ‘மஞ்ச கலர் ஜாக்கெட்னா கர்நாடகா.. சிவப்பு கலர்னா தமிழ்நாடு’ என்று பொதுஅறிவுத் தகவல் சொன்னார் செல்வராஜ்.

 மணல்மேட்டில் ‘தையத் தக்கா’ ஆட்டம் போட்டுவிட்டுக் கிளம்பி, மறுபடியும் ஸ்டார்ட்டிங் பாயின்ட். இந்த நேரத்தில் ஒரு டிப்ஸ். ‘வடக்கால அருவிக்குப் போங்க’ என்று உங்கள் படகோட்டிகளிடம் வேண்டுகோள் வையுங்கள். தனியாய், தனித்துவமாய் விழும் அருவிகளில் வீக் எண்ட்களில்கூட தனியாய் ஜில்லென நீராடலாம். ஆயில் மசாஜ் செய்யப்பட்ட தொப்பைகளுடன் சிலர் அருவி நீரைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

 படகுப் பயணம் செய்பவர்களுக்கு மட்டும் ‘சினி ஃபால்ஸ்’ என்றொரு இடம் உண்டு. சும்மா ஒகேனக்கல் வருபவர்கள் குளிக்க, பொதுவான அருவியைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இங்கே பீக் அவர்ஸ் பேருந்துபோல் நெருக்கி அடித்துத்தான் நின்று குளிக்க முடியும் என்பதை நினைவில் கொள்க.

 ஒகேனக்கலில் ஓட்டல் சாப்பாடு தவிர வேறு ஓர் ஏற்பாடும் உண்டு. நாமே மீன் வாங்கிக் கொடுத்து சமைத்துக் கொடுக்கச் சொன்னால் சில பெண்கள் கொடுக்கிறார்கள். அதாவது, படகுப் பயணத்துக்கு முன்பே ஆர்டர் செய்துவிட்டால், குளித்து முடித்துவரும்போது மீன் குழம்பு/வறுவல்கள் ரெடியாக இருக்கும். ஆட்டுரலில் அரைத்த மசாலா தடவிய மீன்களை உள்ளே தள்ளினால் குடல் வரை குளிர்ந்தது.

 இனிப்பு போளி, கருவாட்டுப் பொரியல், குழிப்பணியாரம், மாங்காய்கள் என வெரைட்டியாக வயிறு நிரப்புகிறது ஏரியா. தொங்குபாலத்தில் நடந்து மொத்த ஒகேனக்கலையும் கேமராவுக்குள் அமுக்கிக் கொண்டிருந்தார் புகைப்பட நிபுணர்.

 எல்லாவற்றையும் முடித்துவிட்டு, முதலைகள் பண்ணைக்கு வண்டியை விடலாம். ‘முதலைகள் மறுவாழ்வு மையம்’ என்ற பெயரில் நூற்றுக்கணக்கான முதலைகளை அடைத்து வாழ்வு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 காட்டுப் பயணம், ஆயில் மசாஜ், மீன் வறுவல், பரிசல் பயணம், காவிரி அருவிக் குளியல் - அவ்வளவுதான் ஒகேனக்கல். ஆனால், வீட்டுக்கு வந்தபிறகும் மீன்வாசமும், அருவிச்சாரலும் மனதில் அடித்துக் கொண்டிருந்தது. அதுதான் ஒகேனக்கல்.

தமிழ், படங்கள்:  R.V. யஷ்வந்த்

சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

ஃபியட் லீனியா எப்படி?

லீ
னியா உரிமையாளர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. அநேகமாக இனி லீனியா தயாரிப்பு இருக்காது. ஃபியட் டீசல் இன்ஜின் என்றாலே மவுசுதான். ஃபியட் கார்களுக்கு என்றால் அதைவிட மவுசு! 95 bhp இன்ஜின், ஹைவேஸில் 160 கி.மீ வரை பறந்தது. நிலைத்தன்மைதான் ஃபியட்டின் ஆதாரம். எத்தனை வேகத்திலும் சிட்டுப் போல் பறக்கலாம். இத்தனைக்கும் கி.கிளியரன்ஸ் சியாஸ், சிட்டி, வெர்னா போன்ற செடான்களைவிட அதிகம். கிட்டத்தட்ட 185 மி.மீ. ஸ்பீடு பிரேக்கர் பயமே இல்லை. ஓட்டுதலுக்கு ஃபியட் எப்போதுமே முன்னுரிமை கொடுக்கும். பழைய லீனியாவிலேயே டெட் பெடல் இருந்தது. ஹைவேஸில் செம வசதி. டிக்கியைத் திறந்தால்... லாராவுக்கு இணையாக பிரம்மாண்டம். 500 லிட்டர் இடவசதி இருக்கும். மைலேஜும் 18 கிடைப்பதாகச் சொன்னார் சுந்தரேசன்.! சர்வீஸ் நெட்வொர்க்கைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், லீனியா ஒரு பக்கா ஃபேமிலி செடான்.

சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

என்ன பார்க்கலாம்?

வேலூரில் இருந்து...

 ஏலகிரி (94 கி.மீ)
ஏழைகளின் நீலகிரி இது. விலை குறைந்த ஒரு மலைவாசஸ்தல டூர் அடிக்க அற்புதமான இடம்.

 அமிர்தி வனவிலங்குப் பூங்கா (25 கி.மீ)
இங்கு மிருகக்காட்சி சாலை உண்டு. செவ்வாய் விடுமுறை. அமிர்தி ஆற்றுக்குள் இருப்பதால், ஒரே ஓர் அருவியும் உண்டு. மழைக்காலம்தான் இதன் சீஸன்.

 ஜலகம்பாறை அருவி (100 கி.மீ)
ஏலகிரி வழியாகவும் ஓர் அற்புதமான பாதை உண்டு. ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை நல்ல சீஸன்.

 கைகல் அருவி (80 கி.மீ)

சித்தூரில் உள்ள அருவி. 40 அடியில் இருந்து விழும் இந்த அருவிக்கு ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை சீஸன். துமுகுரல்லு அருவி என்று இன்னொரு பெயரும் இதற்குண்டு.

 கவுண்டின்யா வனச்சரகம் (99 கி.மீ)
வனவிலங்குகள் பார்க்க அருமையான இடம். சவாரியில் அதிகமாக யானைகள் பார்க்கலாம்.

 ஜவ்வாதுமலை (87 கி.மீ)

குள்ளர்கள் வாழ்ந்த குகை, 600 வயது மரம், பீமன் குளித்த அருவி என்று வரலாற்றுச் சிறப்புமிக்க டூரிஸ்ட் ஸ்பாட்.

சென்னை - ஒகேனக்கல் - உடல் குளிர காவிரி அருவி... குடல் குளிர மீன் வறுவல்!

இதைக் கவனிங்க!

செ
ன்னையில் இருந்து அதிகாலை கிளம்பி, பின்னிரவு வீட்டுக்கு வர அற்புதமான ஸ்பாட் ஒகேனக்கல். ஆனால், தங்கினால் அது வேற அனுபவம். இதற்கு இரண்டு வழிகள் உண்டு.  வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி ஒரு வழி. வேலூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, தர்மபுரி - இன்னொரு வழி. வார நாட்களில் ஒகேனக்கல் பார்டரைத் தொட்டதும், தங்க/உண்ண நம்மைச் சுற்றி வளைப்பார்கள் கைடுகள். வார இறுதி நாட்களில் நாம் அவர்களைச் சுற்றி வளைக்க வேண்டும். குறைந்த விலையில் வனத்துறை காட்டேஜும் உண்டு. இரவு நேரத்தில் ஒகேனக்கல் காட்டுக்குள் பயணித்தால் நிச்சயம் யானை தரிசனம் கிடைக்கும். மீன் வறுவலும், பரிசல் பயணமும்தான் ஒகேனக்கல் ஸ்பெஷல். முடிந்தவரை ஓட்டல் சாப்பாட்டைத் தவிர்த்து, சமையல் மகளிரை அணுகலாம்.

வாசகர்களே! நீங்களும் மோ.வி. டீமுடன் பயணிக்க விருப்பமா? உங்கள் பெயர், ஊர், கார் பற்றி 044-66802926 தொலைபேசி எண்ணில் உங்கள்  குரலில் பதிவு செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism