
ஏதோ ஒரு விஷயத்தின் மீதான ஈர்ப்பும் காதலுமே எல்லோரின் வாழ்க்கையையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் பத்திரிகையாளர் மோனிஷா ராஜேஷுக்குப் பயணங்களின் மீது காதல், அதிலும் ரயில் பயணங்களின் மீது.
நடுத்தரவர்க்க மக்கள்கூட சொகுசு கார் அல்லது பட்ஜெட் ப்ளைட் பயணங்களையே விரும்புகிற இன்றையச் சூழலில், ரயில் பயணங்கள் மெள்ள மெள்ள மோகமிழந்து வருகின்றன. இந்நிலையில் ரயில் பயண ஆர்வத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மோனிஷா.
பயணம் இவரது முதல் சாய்ஸ் என்றால், ரயில் பயணங்கள்தாம் ஒரே சாய்ஸ். தன் ரயில் பயண அனுபவங்களின் தொகுப்பாக ‘அரவுண்டு இந்தியா இன் 80 டிரெயின்ஸ்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டவர், அடுத்து, ‘அரவுண்டு தி வேர்ல்டு இன் 80 டிரெயின்ஸ்’ என்கிற புத்தகத்தையும் வெளியிட்டிருக்கிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘`மூணு வயசுலேருந்து டிராவல் பண்றேன், அதுவும் டிரெயின்ல... அம்மா அப்பாவோட வேலை காரணமா மூணு வருஷங்களுக்கொரு முறை வேற வேற ஊர்களுக்கு மாற்றலாகும். யூரோப்பிலும், சவுத் ஈஸ்ட் ஏஷியாவிலும் சந்தோஷமா டிராவல் பண்ணின நாள்கள் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கு’’ - மழலை நினைவுகளில் மலர்ந்து மீள்கிறார் மோனிஷா.
‘`மக்களைப் பத்தித் தெரிஞ்சுக்க பயணங்கள் மட்டும்தான் உதவும். அது உங்க அறிவுக் கண்களைத் திறக்கும். உணவு முதல் ஆரோக்கியம் வரை, அரசியல் முதல் கலாசாரம் வரை எல்லாவற்றையும் பற்றி வேறொரு பார்வையை நமக்குத் தரும். அந்த அனுபவத்தை வேறு எதுவுமே கொடுக்காது’’ என்கிறவர், அந்த அனுபவங்களின் சுவாரஸ்யம் இம்மியளவும் குறையாமல் தன் புத்தகங்களில் தொகுத்திருக்கிறார்.
‘`2010-ம் வருஷம் இந்தியா முழுக்க சோலோ டிராவல் பண்ணினேன். அதுதான் என் முதல் தனிமைப் பயணம். 2012-ம் வருஷம் வெளிவந்த ‘அரவுண்டு இந்தியா இன் 80 டிரெயின்ஸ்’ என்ற என் முதல் புத்தகத்துக்கும் அந்த அனுபவம்தான் அடிப்படை. அப்புறம் நியூஸ் மேகஸின்ல வேலை பார்த்திட்டிருந்தேன். ரொம்பப் பிடிச்ச வேலைதான். ஆனாலும், கொஞ்ச நாள்களிலேயே மனசு ஒரு மாற்றத்தைத் தேடுச்சு. டிரெயின்ல சாகசப் பயணம் பண்ணணும்னு ஒரு யோசனை வந்தது. எங்கே போகலாம்னு உலக வரைபடத்தைத் தேடினபோது என்னால குறிப்பிட்ட ஒரு நாட்டைத் தேர்ந்தெடுக்க முடியலை. ரஷ்யா, மங்கோலியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, கனடா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்களுக்கு ரயில் பயணங்கள் எவ்வளவு முக்கியம்னு தெரிஞ்சுக்க உலகத்தையே டிரெயின்ல சுத்தி வர முடிவு செய்தேன்.
ரயில் பயணங்கள் என்னுடைய இரண்டு விருப்ப விஷயங்களைச் செய்ய அனுமதிக்கின்றன. படுத்துக்கிட்டே டிராவல் பண்றதைத்தான் சொல்றேன். வசதியான பெர்த்துல படுத்துத் தூங்கிட்டே பயணம் பண்றது... அடுத்த நாள் காலை புதிய ஊரில் விடியறது, ரயில் ஜன்னல்களின் வழியே பரபரப்பான அந்த கிராமத்து வாழ்க்கையை ரசிக்கிறது, கனடா நாட்டின் பாறைப் பிரதேசத்தின் இடையில் ஓடும் பச்சை ஏரியைக் கண் குளிரப் பார்க்கிறது, திபெத்தியப் பீடபூமியில் ஒளிவீசற மஞ்சள் நிற மணலின் அழகில் மயங்கிப் போவது... இப்படிப்பட்ட அற்புத அனுபவங்கள் எல்லாம் ரயில் பயணங் களில்தானே கிடைக்கும்? மக்கள் வசிக்கிற வீடுகள் இரவில் எப்படியிருக்கும்னு ரசிக்க ரயில் பயணங்கள்தான் பெஸ்ட். அவங்க துணி துவைக்கிற சத்தத்தையும், கொல்லைப்புறத்துல சமைக்கிற வாசனையையும்கூட ரயில் பயணங்களில் அனுபவிக்கலாம். சுத்தியிருக்கிற கூட்டமும், அந்தக் கூட்டத்தினரின் சத்தமும் ரயில் பயணங்களில் நினைச்ச நேரத்துக்கு நம்மைத் தூங்கவிடாதுங்கிறது உண்மைதான். ஆனா, அதைத் தாண்டி அந்தப் பயணத்தில் ரசனைக்குரிய விஷயங்கள் எக்கச்சக்கமா இருக்குங்கிறதை அனுபவிச்சாதான் உணர முடியும்’’ - மோனிஷாவின் விவரிப்பு மறந்து போன ரயில் பயண ஆவலைத் தூண்டிவிடும் யாருக்கும்!

‘`பிடிச்ச இடத்தைத் தேர்வு செய்யலாம். நினைச்சபோது கிளம்பலாம். ஸான்ஸிபாரில் ஸ்னார்கெல் (ஸ்கூபா டைவிங் போன்ற அண்டர் வாட்டர் ஸ்போர்ட்ஸ்) விளையாடலாம், கொலோபஸ் குரங்குகளை ரசிக்கலாம். இல்லைன்னா, லாஸ் ஏஞ்சல்ஸ்லேருந்து லாஸ் வேகாஸ் வரை ரோடு ட்ரிப்பும் போகலாம். தனியே டிராவல் பண்றதில் உள்ள அட்வான்ட்டேஜஸ் இவையெல்லாம்'' என்கிற மோனிஷா, இரண்டாவது குழந்தையை வரவேற்கக் காத்திருக்கிறார்.
‘`அரவுண்டு தி வேர்ல்டு இன் 80 டிரெயின்ஸ் புத்தகம் வெளியாகறதுக்குச் சில மாசங்களுக்கு முன்னர்தான் எனக்கு முதல் குழந்தை பிறந்திருந்தாள். அவ பிறக்கறதுக்கு முன்னாடி என் புத்தகத்தின் சவாலான பகுதிகளை முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். வடகொரியா மற்றும் திபெத்தைப் பத்தின அந்தப் பகுதிகளுக்காக நான் நிறைய ரிசர்ச் பண்ண வேண்டியிருந்தது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கிட்டே, அவளைத் தூங்கவெச்சுட்டு, ராத்திரியெல்லாம் கண்விழிச்சு எழுதி முடிச்சது மறக்க முடியாதது’’ என்கிறவருக்கு, திட்டமிடப்படாத பயணங்களே சுவாரஸ்யமானவையாம்.
‘`சில நாடுகளுக்குப் போகும்போது, அங்கே உள்ள புத்தகக் கடைகளிலும், பழைய கட்டடங்களிலும், ரெஸ்டாரன்ட்டுகளிலும் நேரம் காலம் மறந்து நின்னுருக்கேன். என்னுடைய அடுத்த டிரெயினை மிஸ் பண்ணியிருக்கேன். என் பயணப் புத்தகத்துக்கு சுவாரஸ்யம் சேர்த்ததில் அந்த எக்ஸ்ட்ரா நேரத்தில் நான் சந்திக்கிற மனிதர்களுக்கும் அவங்களுடைய கதைகளுக்கும் பங்குண்டு. ஓவர் பிளானிங்கும் டைம் டேபிள் போட்ட பயணமும் பல நேரங்களில் போரடிச்சிடும். திடீர்னு பையைத் தூக்கிட்டு, கிடைக்கிற ஊருக்கு டிக்கெட் வாங்கிட்டுப் போற த்ரில் வேற லெவல்’’ - காரணம் சொல்கிறவருக்கு ரயில் பயணமே அழகானது, சுவாரஸ்யமானது என்பதற்கும் ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன.

‘`பிடிச்சதை சாப்பிட்டுக்கிட்டு, கேம் ஆஃப் த்ரோன்ஸ் விளையாடிக்கிட்டு விடிய விடிய அரட்டை அடிச்சபடி பயணம் செய்யலாம். மாசக் கணக்குல சேர்த்துவெச்ச புத்தகங்களை ஒரே மூச்சில் படிச்சு முடிக்கவும் ரயில் பயணங்கள் நல்ல சாய்ஸ். சக பயணிகளின் உரையாடல்களைக் கேட்கறது எனக்குப் பிடிச்ச விஷயம். தவிர, தண்டவாளச் சத்தமும், ரயிலின் தடதடக்கும் சத்தமும், ஸ்டேஷனில் டீயும், சமோசாவும் விற்கிறவங்களின் இரைச்சலும்தான் என்னைப் பயணத்தில் இருக்கவைக்கிற விஷயங்கள்’’ - ஒருமுறை கூடப் பயணம் செய்யாதவரையும் உடனே அதற்குத் தயார்படுத்திவிடும் இவரின் அனுபவங்கள்.
‘`ஆணோ, பெண்ணோ எல்லார் வாழ்க்கையிலும் பயணங்கள் அவசியம். ஆனா, துரதிர்ஷ்டவசமா பெண்கள் பயணம் பண்ணும்போது பாதுகாப்புங்கிற விஷயம் முன்னே நிற்குது. பெண்கள் தனியா பயணம் செய்யறது தப்பேயில்லை. அது அவங்களுக்கு ஆபத்தானதுனு நினைக்க வேண்டாம். இன்னும் சொல்லப்போனா, தனிமைப் பயணங்கள் அவங்களை இன்னும் பக்குவமாக்கும், தைரியப்படுத்தும், விழிப்புடன் இருக்கவைக்கும். தன்னம்பிக்கையை வளர்க்கும். வாழ்க்கையில தனியா செய்யமுடியாத காரியம்னு எதுவுமே இல்லைனு உணரவைக்கும்’’ என்பவர் கடைசியாகச் சொல்கிற மெசேஜ், அனைவருக்குமானது.
‘`வாழ்க்கையில் ஏதோ ஒரு விஷயத்துலேருந்து தப்பிக்க பயணத்தை ஆயுதமா பயன்படுத்திக்கிறவங்களை நான் பார்த்திருக்கேன். துன்பங்களிலிருந்து விடுபட இன்ஸ்டன்ட் தீர்வு பயணங்களே. நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க...’’
பார்த்துடுவோம்!
-சாஹா