Published:Updated:

டூர் சுத்தப் போலாம்!

லிட்டில் ஜான், ஓவியங்கள்: அரஸ்

பிரீமியம் ஸ்டோரி
டூர் சுத்தப் போலாம்!

து சம்மர் சீஸன்... சம்மர் வந்துவிட்டால் எல்லோருமே வெறிகொண்ட வான்டர்லஸ்டுகளாக... அதாவது பயணவெறியர்களாக மாறி வேட்டைக்குக் கிளம்புவோம். ஃபேஸ்புக்கில் டிபி மாத்தவாச்சும் ஒரு தரமான சுற்றுலா சம்பவம் பண்ணியே ஆகணும் இல்லையா... ஆனால் எல்லா நேரங்களிலும் டூர்கள் டூர்களாகவே இருப்பதில்லை. இன்பச் சுற்றுலாக்களின் துன்பியல்கள் தனி ரகம்...

டூர் சுத்தப் போலாம்!

லவ்பெயிலியர்னா லடாக்தான்!

பாதயாத்திரை, கடாவெட்டு என ஆன்மிகச் சுற்றுலா பண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு பிக்னிக்கை அறிமுகப்படுத்தியதே தமிழ்சினிமாதான். பழைய படங்களில் கும்பலாக ஒரு கூடையில் பழங்கள் ரொட்டி ஜாம் எல்லாம் வைத்துக் கொண்டுபோய் ஒரு இடத்தில் பெட்ஷீட்டை விரித்து வைத்து, தின்றுகொண்டே பாட்டு பாடுவார்கள். நாமும் அதையே பின்பற்றி ஏதாவது பார்க்கில் போய் புளிச்சோறும் தயிர்சோறும் தின்னக் கிளம்புவோம்... போய்ப் பார்த்தால் 150 டீம்கள் கிரிக்கெட் ஆடும் கிரவுண்டு போல கய்யா முய்யாவென ஒரே கூச்சலும் குழப்பமுமாக... இரண்டாயிரம் குடும்பங்கள் பாயைப் போட்டிருக்கும். உக்காரக்கூட இடமில்லாமல் புல்லெல்லாம் சோத்துப்பருக்கைகளும் காகிதக் குப்பை களுமாக மண்டிக்கிடக்கும். அதையும் மீறி ஒரு இடத்தில் உட்கார்ந்தால் நாம் எந்தக் குடும்பத்தோடு உட்கார்ந்திருக்கிறோம் என்பதே தெரியாது. டிக்டாக் இல்லாத காலங்களில் குடும்பத்தலைவிகள் குத்தாட்டம் போடுகிற அரிய சந்தர்ப்பம் பிக்னிக்குகளில் நிகழ்ந்தன. தமிழ்சினிமா பேச்சுலர்களோ வேற மாதிரி.. எங்காவது கோவாப்பக்கம் மும்பைப்பக்கம் சுற்றுலா கிளம்புவார்கள். போகிற இடத்தில் அழகான பெண்கள் ‘ராத்திரிநேரத்து பூஜையில்’ என டூபீஸில் அவர்களைக் கட்டி அணைத்து டான்ஸெல்லாம் ஆடுவார்கள். லவ் பிக் அப் ஆகும். மாபியா கும்பல் துப்பாக்கியோடு துரத்தும். இதைப் பார்த்து நாமும் வெறியேறி கடற்கரைப் பக்கம் போய் பார்ட்டி பண்ணலாம் என ஆள் தேடுவோம்... யாரோ இருட்டில் கக்கா போய்க்கொண்டிருப்பார்கள்.

தமிழ்சினிமாவின் இன்னொரு நவயுக வைரஸ், புல்லட்டும் லெதர் ஜாக்கெட்டுமாக லடாக் நோக்கிக் கிளம்புகிற ப்ரேக் அப் தம்பிகள். லவ்ஃபெயிலியர்னா உடனே இமயமலைக்கு பைக்லயே கிளம்பிடணும் என எவனோ புரளி கிளப்பி விட தமிழ்சினிமா ஹீரோக்களில் முக்கால்வாசிபேர் லடாக்கில்தான் துக்பா சூப்போடு குத்தவைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்து லவ்ஃபெயிலியர் சோகத்தை மறக்க நாமும் லடாக் நோக்கிக் கிளம்பினால் மைனஸ் டிகிரி குளிரில் பைக் ஓட்டி மண்டை காய்ந்துவிடும், நடுநடுங்கியே செத்துடுவோம். ஆயிரம் கிலோமீட்டருக்கு ஒரு டீக்கடை. சோத்துக்கே வழியில்லாமல் திண்டாடுவோம்... பெட்ரோல் பங்க் கிடைக்காமல் சாகணும்!

டூர் சுத்தப் போலாம்!

குடும்பஸ்தன்னா அப்படித்தான்

 எ
ப்போதும் உர்ரென ஒரு கேரக்டர் வீட்டில் அல்லது அலுவலகத்தில் அல்லது கல்லூரியில் இருக்கும். அவருக்கு அப்பா, மாமா, தாத்தா, ஓனர், மேனேஜர், டீம்லீடர், ஹிட்லர், நரசிம்மராவ், நரேந்திரமோடி என வேறு வேறு பெயர்கள் வைத்திருப்போம். அது யாரிடமும் சிரிச்சுப் பேசாது. மற்றவர்கள் சிரித்தாலும் அதற்கு ஆகாது. எப்போதும் குறுகுறுவென டெர்மினேட்டராட்டம் நம்மை அனலைஸ் பண்ணி அளவெடுத்துக்கொண்டேயிருக்கும். ஆனால் சுற்றுலா என வந்துவிட்டால் சின்ராசை கையில் புடிக்க முடியாது. பஸ்ஸில் ஏறும்போது தொப்பி, கண்ணாடி, வாழ்க்கையிலேயே முதல்முறையாக டிஷர்ட், ஜீன்ஸ், கறுகறுவென மண்டை முழுக்க டை எல்லாம் போட்டுக்கொண்டு உற்சாகமாக ஏறிவிடுவார். உள்ளே உட்கார்ந்ததும் என்ன எல்லாரும் இப்படி உர்ர்னு வர்ரீங்க, ஹேப்பியா இருங்க கமான் சாங்ஸ் பாடுங்க, டான்ஸ் ஆடுங்க, உற்சாகமாக இருங்க. அதுக்காகத்தான் இந்த டூர் என்பார். வேண்டா வெறுப்பாக புள்ளையைப் பெத்து காண்டாமிருகம் எனப் பேர்வைத்த மாதிரி எல்லோரும் ‘‘ஓகே அங்கிள்” என ஆரம்பிப்பார்கள். இந்த ஆளை நம்பி வேன் டிரைவரும் ஏதாவது நல்ல புதிய சினிமாப் பாட்டாக வைப்பார். நாலு கேர்ள்ஸ் எழுந்து ஆடலாமா வேண்டாமா எனத் தயங்கித் தயங்கி ஆட ஆரம்பிப்பார்கள். அதை நாலுபேர் சூப்பர்டீலக்ஸ் தேனாக ஆகாவென ரசிப்பார்கள். மனுஷனுக்குக் கோபம் வந்துவிடும். “ஏன்ப்பா, உன்ட்ட காவியமா நெஞ்சில் ஓவியமா மாதிரி பாட்டெல்லாம் இல்லையா... இந்தா இதைப் போடு” என அவரே பென்டிரைவையும் நீட்டுவார். அதற்குப் பிறகு `வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’தான் ஒட்டுமொத்தச் சுற்றுலாவிலும். எங்கு போனாலும் ஒரு குட்டி நோட்டு வைத்து அதில் எல்லாச் செலவையும் மறக்காமல் நோட் பண்ணிக்கொண்டேயிருப்பார். கூடவே நம்மிடம் ‘`காசை வேஸ்ட் பண்ணாதடா, நல்லா என்ஜாய் பண்ணு’’ என்பார். இந்தச் சோத்துமூட்டை க்யூல நின்னு நான் என்னத்த என்ஜாய் பண்ண என்று நமக்கு மைண்ட்வாய்ஸ் ஓடும்!

டூர் சுத்தப் போலாம்!

குரூப்பேஸ்தானு!

ரம்பிங்கடா குரூப்பை... போடுங்கடா ப்ளானை... இப்படித்தான் இன்று சமூகத்தில் எல்லா சடங்குகளும் நடக்கின்றன. டூருக்கும் அப்படியே. வாட்ஸ் அப் குரூப் ரூல்ஸ்படி குடும்ப குரூப்பாக இருந்தால் தேமுதிக,மநீம போல யார் குரூப் ஆரம்பித்தாரோ அவர்தான் அட்மின். அவருக்கு வேண்டப்பட்டவருக்கு மட்டுமே அட்மின் பவர் கொடுப்பார். அதுவே நண்பர்கள் குழுவாக இருந்தால் இந்த அட்மின் பஞ்சாயத்தே வேண்டாம் என எல்லோரையும் அட்மின் ஆக்கி குழுவில் அட்மிட் பண்ணிவிடுவார்கள். இப்படியாகவே குலுமணாலி குளுகுழு, கோவா கொண்டாட்டன்ஸ், ஏற்காடு எரிமலைஸ் எனப் பேர் வைத்து மங்களகரமாகக் குழு ஆரம்பிக்கப்படும். தேதிகூடப் போட்டுவிடுவார்கள். குழு ஆரம்பித்ததும் பஸ் புக்கிங் என்னுது, ரூம் புக்கிங் அவனுது, கணக்கு வழக்கு என்னுது என ஆளாளுக்கு ஒரு வேலையைப் பிரித்து லாலாலா போடுவோம். என்னண்ணே, படத்துல ட்விஸ்ட்டே இல்லையே... என நமக்கே ஆச்சர்யமாக இருக்கும். அங்கதான் வில்லன் என்ட்ரி. முதல் ஆளாக ஒருவர் மை ஹம்பிள் ஒப்பீனியன், இந்த சீஸன்ஸ் ஏற்காடு போறது அவ்ளோ வொர்த் இல்ல, நாம ஏன் குன்னூர் போகக்கூடாது என குண்டைப்போட்டுக் குட்டை குழப்புவார்.  அந்தக் குண்டு விழும்வரைதான் குரூப் அமைதிப்பூங்காவாக இருக்கும்... அடுத்த சில நிமிடங்களில் ஆளாளுக்குத் தங்களுடைய ஐடியாக்களால் கொத்து குண்டுகள் போடுவார்கள்... குன்னூரைவிட குலுமணாலி பெஸ்ட் என்று ஆரம்பித்து, செம்மொழிப் பூங்காலகூட இப்போ சீஸனாம், போலாம் என்று இந்த ஐடியா வெடிகள் நாலாபக்கமும் சிதற... அம்மா இல்லாத அதிமுக போல குரூப்பில் விரிசல் உண்டாகும்... அட்மினுக்கு காண்டாகும். அவன் என்ன பெரிய இவன், முடிவுபண்றது. வாங்க நாம போய் தனி குரூப் ஆரம்பிப்போம், தனியா டூர் போவோம் என ஒருகுரூப் அடிபட்ட டிடிவி போல தனியாகக் கிளம்ப... இன்னும் சிலர் இப்படிக்கா கிளம்ப... கடைசி வரை குன்னூர் குரூப்ஸ் குன்னூருக்கே போகாது!

டூர் சுத்தப் போலாம்!

பேக்கேஜ்ன்னா சும்மா இல்லைடா!

பு
க்கிங் பஞ்சாயத்துகளில் பெரிய ஈடுபாடில்லாத சோம்பேறிகளின் புகலிடம்தான் பேக்கேஜ் திட்டம். தாய்லாந்து பேக்கேஜ் போடுவோம் எனத் திட்டமிட்டு ‘என்னது இம்புட்டு காசு கேக்குறான்’ என ஜெர்க்காகி கடைசியில் தாம்பரம் பேக்கேஜில் முடிப்போம். மொத்தமா நாலு பேருக்கு நாலாயிரத்தைக் கட்டிவிட்டால் அப்படியே நம்மைப் பஞ்சுமெத்தையில் படுக்கவைத்து மொதுக் மொதுக் என மசாஜ் பண்ணி ஏரோப்ளேனில் கூட்டிப்போய் அவர்களே ஷாப்பிங்கும் பண்ணி வேண்டியதை வாங்கிக்கொடுத்து ஏராளமான இடங்கள் சுற்றிக் காட்டுவார்கள் என நம்பிப் போவோம்... பேக்கேஜ் போட்டுவிட்ட பெருமையில் வீட்டில் வேறு வாயை விடுவோம் `பிளைட்ல ஏறுறோம் அப்படியே பறக்கறோம்...’ என பீலா விட, நம்மையும் நம்பி நாலுபேர் வருவார்கள். பேக்கேஜில் இரண்டு இரவு ஒரு பகல், மூன்று பகல் இரண்டு இரவு, வெஜ் உணவு மட்டுமே அதுவும் ஒருவேளை கஞ்சிதான், தங்குமிடத்தில் வானம் பார்த்த டாய்லட் தான் என்பது மாதிரி பொடி எழுத்தில் நிறைய கன்டிஷன்ஸ் அப்ளை போட்டு வைத்திருப்பார்கள். அதையெல்லாம் அப்போதே கவனிக்காமல் டூரில்தான் எல்லாவற்றிற்கும் அதிர்ச்சியாவோம். நம்மோட வந்தவர்கள் வேறு, சோறு சரியில்லை, குழம்புக்கு முடியலை, ஒரு இடத்தையும் நிம்மதியா பாக்க விடமாட்டேங்குறானுங்க கடங்காரனுக... காப்பாத்துங்க காப்பாத்துங்க என அபலைகளாக நம்மை அழைப் பார்கள். ‘`கன்ஸ்யூமர் கோர்ட்டில் கேஸ்போட்டு இந்தக் கம்பெனியையே காலி பண்ணிடறேன்’’ என வீறுகொண்டு சுற்றுலா முழுக்க அதற்கான ஆதாரங்கள் திரட்டிக் கொண்டிருப்போம். கடைசிவரை அந்த மசாஜ்... மசாலா எதுவுமே இருக்காது. எதையாவது பார்த்த மாதிரியும் இருக்காது. ஆனால், சுற்றுலா முடிந்துவிடும்!

டூர் சுத்தப் போலாம்!

தடியெடுத்துக்கோங்க பிரெண்ட்!

பு
துமையான சுற்றுலா போவோம் என சிந்தித்த யாரோ கண்டுபிடித்த சுற்றுலாதான் ட்ரெக்கிங். வனாந்தரம், நீடித்த அமைதி, மலைமேல ஏறி நின்னு சூரிய உதயத்தைப் பார்த்தீங்கன்னா உங்க ஜென்மம் சாபல்யம் அடைஞ்சிடும் என்று யாராவது சாம்பிராணி போட்டுவிடுவார்கள். அதை நம்பி கூகுளில் அடித்துப் பிடித்து, தேடி விதவிதமான ட்ரெக்கிங் கிளப்களில் நிறைய கேர்ள்ஸ் இருக்கிற கிளப்பாகப் பார்த்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் ஜாய்ன் பண்ணிக்கொள்வோம். அது எவ்வளவு பெரிய மலை, எவ்வளவு தூரம் ஏறணும், கால் வலிக்குமா, நெஞ்சு வலிக்குமா எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓகே பண்ணி விடுவோம். இதற்காக ஸ்பெஷலாக ஷூ, டென்ட்டு, பேக்பேக் என எல்லாமே வாங்கிவைத்துக்கொண்டு கேப்டன் பிரபாகரன் வேட்டைக்குக் கிளம்புவதுபோலக் கிளம்புவோம். ஆரம்பத்தில் பெரிய மலைமேலே வெறுங்கையோடு ஏற ஆரம்பிப்போம். நமக்கு இருக்கிற பி.பி சுகர் எல்லாம் முழித்துக்கொள்ளும். மூச்சு வாங்கும். நெஞ்சை அடைக்கும்... ஆனாலும் இந்த ட்ரெக்கிங் குழுக்களில் ஏராளமான அழகிய வாலிபிகள் இருப்பதால், வயசை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘ம்ம் ஏறுடா கைப்புள்ள’ என தம்கட்டி ஏற முயற்சி பண்ணுவோம். இந்தாங்க அங்கிள் குச்சி என யாராவது புள்ளைகள் கம்பு உடைத்துத் தந்தாலும்... நோநோ, ஐயாம் ஸ்டிராங் என ஏறு ஏறென ஏறுவோம்... ஆனாலும் ஒவ்வொரு அடிக்கும் ம்ம்... ம்ம்.. ம்ம்... என உள்ளுக்குள்ளிருந்து ஒரு அபாயக் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அதுதான் மன் கி பாத்... முடில விட்டுர்ரா ங்கொய்யா என்னும் நம் மனதின் குரல். ஆனாலும் இன்னும் கொஞ்ச தூரம்தான் என நம்பி ஏறிக்கொண்டே இருப்போம். நாம ஏற ஏற அது இன்னும் ஏறிக்கொண்டேதான் போகும்... டேய் எப்படா சன்ரைஸ் பாக்கறது... இன்னும் இரண்டு கிலோமீட்டர் என இழுத்துக்கொண்டு ஓடுவார்கள்... ஒருவழியாக மலையேறி நின்னதும் சன்ரைஸ் அதோ எனக் காட்டுவார்கள்... ஒரே மேகமாய் இருக்கும்... சாரி கைஸ், நெக்ஸ்ட் டைம் என கைடு வாயைப் பிதுக்க... நமக்கு வெறியேறும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு