Published:Updated:

இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்

"ஹிமாலயன் தொடர்ச்சி மலைகள்ல இந்தப் பகுதியை கடக்கிறது ரொம்ப கஷ்டம் கிடையாது. ரொம்ப ரொம்ப கஷ்டம். அப்படி ஒரு பயங்கரமான பருவநிலை இருக்கும் இந்த இடத்துல. இந்த பகுதியின் பெயரோட அர்த்தம் என்ன தெரியுமா, "பிணங்களின் சமவெளி"

இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்
இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்

யணங்களுக்கும் எங்களுக்கும் ஓர் சென்டிமென்ட் உண்டு. பயணத்தின் இலக்கை நாங்கள் முடிவுசெய்தாலும் அந்த இலக்குதான் நாங்கள் வரவேண்டுமா, வேண்டாமா என முடிவுசெய்யும். அது எங்களை வரவேற்க நினைத்தால், எல்லாம் தானாக நடக்கும். நானும் என் நண்பர் பிரசன்னாவும் லே (Leh) செல்ல முடிவெடுத்தோம். பயணத்தின் நொடிப்பொழுதையும் அணுஅணுவாய் அனுபவிக்க இரண்டு விஷயங்கள் அவசியம். முதலாவது, சீரான உடல்நிலை. இரண்டாவது, உறுதியான மனநிலை. இவற்றின் அளவுதான் அப்பயணத்தின் இன்ப, துன்பங்களை அளவிட பெரும்பங்காற்றும்.

இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்

'லே',  இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள பல்லாயிர பைக்கர்களின் சொர்க்க பூமி. கொஞ்சம் சொதப்பினால் நிஜ சொர்கத்தையும் காண நேரிடலாம். "சோற்றுக்கு லாட்டரி, செல்லுக்கு பேட்டரி" என வாழ்ந்துக்கொண்டிருக்கும் நமக்கு, `ரிஸ்க் எடுக்குறதெல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி’ வசனமெல்லாம் சரிபட்டுவராது என முடிவு செய்துவிட்டு, பேருந்தில் செல்லலாம் என முடிவெடுத்தோம்.  டில்லியில் இருந்து மணாலி. மணாலியில் இருந்து ஹிமாச்சல் பிரதேசம். சுற்றுலா துறையின் லேவிற்கான பயண சேவையில் முன்பதிவு செய்திருந்த பேருந்தில் செல்வதென திட்டம்.  பயணம் இரண்டு பகல் மற்றும் ஒரு இரவு வரை நீளும். இரவு உணவு, இரண்டாவது நாள் காலை உணவு, இரவு ஓய்வெடுக்க டென்ட் வசதியும் பயண சேவையில் உண்டு.

பீஸ் நதி கரையோரம் வளர்ந்து நிற்கும் வசீகரமான ஆப்பிள் மரங்களை ரசித்தபடியே மணாலி வந்தாகிவிட்டது.  அங்கே ஒரு விடுதியில் ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் காலை லே பயணிக்கத் தொடங்கினோம். காலை ஏழு மணிக்கே பேருந்து பயணத்துக்கு ஆயத்தமாக வேண்டும். அதனால், முடிந்தவரை உடலை ஓய்வுக்கு உட்படுத்திக்கொண்டோம். 

இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்

இதுவரை பயணித்த ஆப்பிள் மரங்கள், வளர்ந்து நிற்கும் வசீகரமான பாதைகள் இனி இருக்காது. இனி பயணிக்கப்போகும் பாதைகளே வேறு. சுமுகம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. உறைபனி காலத்தில் ஜம்மு-ஶ்ரீநகர் சென்றபோது அது கற்றுத்தந்த பாடம் இங்கு உதவியது. சகலத்தையும் தயார்படுத்திக்கொண்டு திட்டமிட்டபடி பேருந்து படியேறினோம். இருபது இருக்கைகளைக் கொண்ட அந்த மினி பேருந்து, ஒருவாறு வித்தியாசமான சூழலைக் கொண்டிருந்தது. உள்ளிருந்த 16 பயணிகளில் பாதி பேர் இந்தியர்கள். மற்றவர்கள் வெளிநாட்டவர்கள். ஒவ்வொரிடமும் அறிமுகமாகிக் கொண்டிருக்கும்போது வண்டி கிளம்பியது.  

மணாலியில் இருந்து ஸ்னோ பாயின்ட் தாண்டி 50 கிலோமீட்டரில் முதல் உச்சம், மாக ரோதான் பாஸ் ( Rohtang Pass). கடல் மட்டத்திலிருந்து 13,050 அடி உயரம் கொண்டது. ரோஹ்தங் வருவது எங்களுக்கு இரண்டாவது முறை. ஆனாலும், எங்களை அது மயக்கத் தவறவில்லை. அதன் அழகில் கிறங்கிப்போனோம். செல்லும் வழியெல்லாம் மஞ்சு உரசும் மலை. மலை அதன் குளிருக்காக போர்த்திருக்கும் புல்வெளி என நம் இமைகளை உறைந்துப்போகும் பேரழகான காட்சிகள். ரோஹ்தங் பாஸை அடையும் போது மணி 12:00. காலையில் கொஞ்சமே கொஞ்சம்தான் உணவு எடுத்துக்கொண்டதால், பசி வயிற்றைக் கிள்ளியது. அப்போது எங்கள் நாசியைத் துளைத்ததே ஒரு நூடுல்ஸின் வாசம். அப்பப்பா!

இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்

கொட்டும் குளிரில் நம் கைகளுக்குள் தஞ்சமடைந்த சூடான நூடுல்ஸ் கின்னம் தந்த இதம், இன்னும் உள்ளங்கையில் பதிந்திருக்கிறது. இங்கே பருவநிலை மிக விசித்திரமானது. திடீரென வானம் தெளிந்திருக்கும், திடீரென இருளும், இருண்டு கிடக்கும். வானம் மீண்டும் வெளிரும். கண் இமைக்கும் நேரத்தில் மூடுபனி சூழத் தொடங்கும். இரண்டு அடிக்கு அருகாமையில் இருப்பது கூட கண்களுக்கு தெளிவாய்த் தெரியாது.  மே முதல் நவம்பர் வரை மட்டுமே இந்தப் பாதை திறந்திருக்கும். மற்றநாட்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும், பனிச் சரிவும் நிகழும். அந்த நேரங்களில் குளிர் ஒரு ராட்சசன்!

அடுத்த இடம் எண்டார். சகபயணி ஒருவர் அவராகவே பேச்சுக் கொடுத்தார், "தம்பி ஹிமாலயன் தொடர்ச்சி மலைகள்ல இந்தப் பகுதியைக் கடக்கிறது ரொம்ப கஷ்டம் கிடையாது. ரொம்ப ரொம்ப கஷ்டம்.  இந்தப் பகுதியை கடக்கும்போது கடுமையான பனியையும், அசுர வேகத்தில் அறையும் குளிர்காற்றையும் தாக்குப்பிடிக்க முடியாமல் பல பேர் செத்திருக்காங்க. இந்த இடத்துல அப்படி ஒரு பயங்கரமான பருவநிலை இருக்கும். இந்தப் பகுதியின் பெயரோட அர்த்தம் என்ன தெரியுமா, "பிணங்களின் சமவெளி." இதை அவர் சொல்லி முடிக்கும்முன் மூடுபனி எங்களைச் சூழ்ந்து கொண்டது. கிலியில் கிறுகிறுத்துப்போய் பேருந்துக்குள் அடைக்கலமானோம்.

இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்

குளிர் எனும் அழகிய அசுரனை ரசித்தபடி எங்களது பயணம் தொடர்ந்தது.  சரியாக ஒரு மணி நேரம், சாலைச் சீரமைப்பதன் பொருட்டு பல வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பேருந்தில் இருந்து இறங்கி, என்ன நடக்கிறதென்று கூட பார்க்கமுடியாது. கீழே முழங்கால் சகதி. மலையின் நுனியில் நின்றுகொண்டு மலைச்சரிவை சீர்ப்படுத்தி கொண்டிருந்தது ஒரு கனரக வாகனம். அந்த ஓட்டுநரை நினைத்துப்பார்க்கும்போது மனம் பதைபதைத்து, உள்ளங்கால்கள் கூசியது. சாலைகள் இங்கே முடியத் தொடங்குகிறது இல்லையா, அப்படியென்றால் `லே'வை நெருங்கத் தொடங்கிவிட்டோம் என்று அர்த்தம்.

Where the roads end, the Leh starts! 

இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்

லே, மணாலி நெடுஞ்சாலை, ராணுவம் மற்றும் கனரகசரக்கு வாகனங்களுக்கு முக்கியமான சாலை. கார்கில் போர் சமயத்தில் இந்தப் பாதை பெரிதளவு ராணுவத்துக்கு உதவியிருக்கிறது. இது கோடைக் காலங்களில் நெரிசலாகவும் காணப்படும் என்றார்கள்.  Bara lacha la(16,040 ft) பசுமை ராஜ்ஜியத்தின் எல்லை முடிந்து, பழுப்பு ராஜ்ஜியம் தொடங்கும் இடம். வண்ணம் மாறினாலும், வசீகரம் மாறவில்லை. தெளிந்திருந்த வானமும் இதமான வெட்பமும் எங்களை ஆசுவாசப்படுத்தியது.

அடுத்ததாக, Lachulung La (16,600 ft). இதமான தட்பவெட்பம். இப்போது கொஞ்சம்கொஞ்சமாய் வேலையைக் காட்ட தொடங்கும். கடல் மட்டத்தில் இருந்து 15,000 அடி உயரத்திலேயே ஆக்ஸிஜன் அளவு குறைந்திருக்கும். தலைசுற்றல், வாந்தி, தூக்கமின்மை போன்ற கோளாறுகள் நோகடிக்கும். Altitude sickness ஏற்படும். பேருந்தில் டென்ட் டீ கடை ஒன்றில் நிறுத்தினார்கள். சுற்றி மலை, மலையைத் தவிர வேறொன்றுமில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு ஆட்களின் நடமாட்டமே இல்லை. உள்ளே சென்று ஒரு பிளாக் டீ கேட்டேன், இன்முகத்துடன் போட்டுக்கொடுத்தார் அந்த லடாக்கி. அவருக்கு ஆங்கிலம் கொஞ்சம் தெரிந்திருந்ததால், நான் உரையாடலைத் தொடங்கினேன். "இவ்வளவு தூரம் வந்து கடை போட்டிருக்கீங்களே" என கேட்டதற்கு, "நான் இன்னும் கொஞ்ச தூரம் தள்ளித்தான் கடை போட்டிருந்தேன். பனிதான் சரிஞ்சு என்னை கடையோட இங்கே வந்து போட்டிருச்சு" என அசால்டாக சொல்லிவிட்டுச் சிரித்தார். 

இந்தப் பெயருக்கு அர்த்தம் `பிணங்களின் சமவெளி'! - ஹிமாலயன் 'லே' பயணக் குறிப்புகள்

இதைக் கடந்தபின் மீண்டும் நிலப்பரப்பு முற்றிலுமாக மாறும்.  நிறைய குகைகள் கொண்டமலைகளைப் பார்க்கலாம்.  நாம் பயணிக்கும் பாதை இன்னும் திகிலூட்ட தொடங்கும். இபெக்ஸ் ஆடுகள், மணல் வளைவுகளென அற்புதமான பயணம் இது. நிச்சயமாக, நாம் இந்தியாவில்தான் இருக்கிறோம் என்ற உணர்வு வரவே வராது. இது கொஞ்சம் கொஞ்சமாய் திகட்ட தொடங்கும்போது பேங் வந்து சேர்ந்திருந்தோம். Pang-ல் எல்லா உணவுகளும் கிடைக்கும். நமக்குத்தான் சாப்பிட முடியாது.

உலகில், கடல்மட்டத்திலிருந்து 15,600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ராணுவ தடவாளம் (ஏர் பேஸ்) இங்குதான் அமைந்திருக்கிறது. இதுதான் உலகின் உயரமான ராணுவ தடவாளம். ராணுவத்துக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் மீட்புப் பணிகள் போன்றவற்றை விமானம் மூலம் ராணுவம் இங்கிருந்துதான் கொடுக்கிறது. பைக்கர்கள் பெரும்பாலும் தங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் இதுதான். புழுதி, மணல், மலை மேடுகளுக்கு மத்தியில் ரானுவதடவாளம் கம்பீரமாய் காட்சியளிக்கும். Tanglang La (17,582 அடி) உலகின் இரண்டாவது உயரமான சாலை இதுதான். இந்த இடத்தை அடையும்போது,  உடம்பில் ஒருசொட்டு சக்தி இல்லை. ஆனால், பனி மழைத்தூவி எங்களை உற்சாகப்படுத்தியது. பனிமழையில் சில நிமிடங்கள் நனைந்துவிட்டு, தவழ்ந்தவாறே வந்து வண்டியில் ஏறியபோதுதான் உணரமுடிந்தது. பனி பல அடுக்கு போர்வைகளாக எங்களைப் போர்த்தியிருந்தது.

கண்களை மட்டும்தான் அசைக்கமுடிந்தது. அப்படியே, லே வந்தடைத்தோம். ஒருநாள் அங்கு ஓய்வு. அதன் அழகை ரசிக்க இந்தக்கால அளவு போதுமானதாய் இல்லை.  அடுத்தகட்ட பயணமாக pangong lake செல்லும் வழியிலுள்ள Chang La Pass சென்றோம். சுமார் 17,688 அடி  உயரத்தில் இருக்கும் இடம். அங்கு ஏழு வர்ணங்களில் மலையைப் பார்க்கலாம். அது உங்களிடம் கலைடாஸ்கோப்பின் வண்ண விளையாட்டுகளைக் காட்டும். அங்கிருந்து,  khardung la ((17,582 ) உலகின் அதி உயரமான மோட்டரபுள் ரோடு இது. பைக்கர்களின்  உட்சபட்ச  லட்சியமே இங்கு வருவதுதான். அங்கிருந்து ஹெமீஸ் மோனஸ்ட்ரி. அந்த கிராமத்தில் நிச்சயம் புதினா டி மற்றும் மோமோஸ் சுவைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த ஒட்டுமொத்த பயணமும் முழுமையடையும். முக்கியமாக, இறுதியாகத்தான் நமக்கு ஒன்று புரியும். அப்போது, கடும் பனிகளுக்கிடையே, தன் உயிரைப் பணையம் வைத்து பணிபுரியும் உழைப்பாளிகளும், சாலைகளை பராமரிக்கும் ராணுவமும் நம் இதயங்களை சில்லிட வைத்திருப்பார்கள்.