Published:Updated:

மாசிலா அருவி… ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி… கொல்லிமலைக்கு ஒரு விசிட்!

மேலே அமைந்திருக்கும் அறப்பளீஸ்வரர் ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கிருந்து நாமக்கல்லில் உள்ள சிவன் கோயிலுக்குச் சுரங்கப்பாதை அமைந்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

மாசிலா அருவி… ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி… கொல்லிமலைக்கு ஒரு விசிட்!
மாசிலா அருவி… ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி… கொல்லிமலைக்கு ஒரு விசிட்!

ம்மர் வெக்கேஷனுக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்களில் கொல்லிமலையும் ஒன்று. கொல்லிமலை என்றாலே  சித்தர்களுக்கும், மாந்திரீகத்துக்கும் பேர்போன இடம் என்றுதான் கருதப்படுகிறது. கொல்லிமலை, சிறியவர் முதல் பெரியவர் வரை மகிழக்கூடிய சிறப்பான சுற்றுலா தலம். நாமக்கல்லில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் சேந்தமங்கலத்தைக் கடந்து கொல்லிமலை  அடிவாரமான காரவல்லியை அடையலாம். அதன் பிறகு, வழியில் கிட்டத்தட்ட 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்ததும் செம்மேடு என்ற ஊர் வருகிறது. இதுதான் கொல்லிமலையின் சென்டர் பாயின்ட். இங்கிருந்து வழிநெடுகிலும் லாட்ஜ், ஹோட்டல், ரிசார்டுகள் காணப்படுகின்றன. இதன் ஒரு நாள் கட்டணம் 500 முதல் 2,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. செம்மேட்டில் சீக்குப்பாறை, சேலூர், கோயிலூர் வியூ என 3 வியூ பாயின்ட்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த மூன்றும் கொல்லிமலையின் அழகை ரசிக்க உதவுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை. கொல்லிமலையிலேயே செம்மேட்டில் மட்டும்தான் `பெட்ரோல் பங்க்' உள்ளது. மேலே உள்ள அறப்பளீஸ்வரர் கோயிலிலும் பெட்ரோல் மற்றும் டீசல் வசதி கிடையாது. மீண்டும் கீழே சென்றால்தான் கிடைக்கும். செம்மேட்டில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் `அறப்பளீஸ்வரர் கோயில்' அமைந்திருக்கிறது. `கீழ இருந்து மேல வர்றதுக்குள்ள எப்பப்பா!' என்று சொல்பவர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் `மூலிகை சூப்' இங்கு கிடைக்கிறது. இந்த சூப்பைக் குடித்துவிட்டு ஃபிரெஷ்ஷாகலாம்.

அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு முன்பு `ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி' அமைந்திருக்கிறது. இதற்கான நுழைவுக் கட்டணம், 10 ரூபாய். சுமார் 1,200 படிகள் செங்குத்தாக இறங்க வேண்டும். கிட்டத்தட்ட 140 அடி உயரம்கொண்டது இந்த அருவி. சில நாள் நீர் அதிகமாகவும், சில நாள் நீர்  குறைவாகவும் வரும் இதில் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி கிடைக்கும். மேலே அமைந்திருக்கும் அறப்பளீஸ்வரர் ஆலயம் 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இங்கிருந்து நாமக்கல்லில் உள்ள சிவன் கோயிலுக்குச் சுரங்கப்பாதை அமைந்திருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது `மாசிலா அருவி'. பெயருக்கேற்ப மாசு இல்லாத அருவி இது. கொல்லிமலையில் உள்ள மூலிகைகளை உரசிக்கொண்டு வருவதால் இந்தப் பெயர்பெற்றது. தற்போது நீர்வரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. வரும் வழியில் 2 கிலோமீட்டர் தூரம் வரை சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெறுவதால், ரோடு முழுவதும் குண்டும்குழியுமாகக் காணப்படுகிறது. மாசிலா அருவியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது `மாசி பெரியசாமி கோயில்'. இது, மிகவும் பிரசித்திபெற்ற கோயில். அருகிலேயே எட்டுக்கை அம்மன் கோயிலும் அமைந்துள்ளது. செய்வினை, பில்லி, சூனியம் முதலியவற்றை அகற்றும் முக்கிய இடங்களாக இவை கருதப்படுகின்றன.

மலையில் இருந்து கீழே செல்லும் வழியில் வாசலூர்பட்டி அமைந்திருக்கிறது. இங்குப் படகு சவாரி செய்யலாம். பாதுகாப்பான படகு சவாரியை மேற்கொள்ளச் சிறந்தது இந்த இடம். இதற்கான கட்டணம் 50 ரூபாய். ஆழமும் மிகக் குறைவு. அருகிலேயே தாவரவியல் பூங்காவும் அமைந்துள்ளது. இந்த இடம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

மலையைவிட்டு கீழ் இறங்கும்போது, செம்மேட்டில் உள்ள கடைகளில், சுற்றுலாவுக்குத் தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கின்றன. பலா, அன்னாசி , வாழை, ஏலக்காய், மிளகு, சுத்தமான தேன் எனக் கொல்லிமலையில் விளையும் பொருள்கள் அங்கு விற்கப்படுகின்றன. தரமான பொருளாக மட்டுமில்லாமல், விலையும் குறைவாக இருப்பதால் தாராளமாக வாங்கலாம். மீண்டும் 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, அடிவாரமான காரவல்லிக்கு வரும்போது ஒருவித மனநிறைவு கிடைக்கும்!