அரசியல்
அலசல்
Published:Updated:

பயணிகளின் உயிரோடு விளையாடும் ரயில்வே! - மொழிப் பிரச்னை காரணமா?

பயணிகளின் உயிரோடு விளையாடும் ரயில்வே! - மொழிப் பிரச்னை காரணமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பயணிகளின் உயிரோடு விளையாடும் ரயில்வே! - மொழிப் பிரச்னை காரணமா?

பயணிகளின் உயிரோடு விளையாடும் ரயில்வே! - மொழிப் பிரச்னை காரணமா?

மே 26-ம் தேதி தூத்துக்குடியிலிருந்து கிளம்பிய முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயில், மதுரை அருகே திருமங்கலத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. திடீரென பெரும் சத்தம். ரயில் ஏதோ ஒன்றின்மீது பயங்கரமாக மோதி, என்ஜின் பெட்டி குலுங்கியது. பயணிகள் பதைபதைத்துப் போனார்கள். இருந்தாலும் லோகோ பைலட், திறம்பட சமாளித்து ரயிலை பாதுகாப்பாக இயக்கியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

அதிகாரிகளும் ரயில்வே காவல் துறையினரும் சம்பவ இடமான சிவரக்கோட்டைப் பகுதி தண்டவாளத்தில் சோதனை செய்ததில், மூன்றடி நீளமுள்ள சிமென்ட் கல் நொறுங்கிக்கிடந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இதுமட்டுமல்ல... மதுரை சுற்றுவட்டாரத்தில் சமீபகாலமாக நடந்துவரும் சம்பவங்கள் ரயில் பயணிகளை அச்சம்கொள்ளச் செய்துள்ளது.

பயணிகளின் உயிரோடு விளையாடும் ரயில்வே! - மொழிப் பிரச்னை காரணமா?

மே 10-ம் தேதி மாலை மதுரையிலிருந்து செங்கோட்டைக்குக் கிளம்பிய பயணிகள் ரயில், அன்று மாலை 5.45 மணிக்குத் திருமங்கலம் வந்தது. அங்கு சிக்னல் பிரச்னை. இதனால், ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் கிளம்பியது. அதேநேரத்தில் செங்கோட்டை யிலிருந்து மதுரைக்கு வரும் ரயில் கள்ளிக்குடியிலிருந்து கிளம்பி திருமங்கலத்துக்கு வந்துகொண் டிருந்தது. ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே இரண்டு ரயில்கள். இரண்டுக்கும் இடைவெளி 28 கிலோ மீட்டர் மட்டுமே... அப்போதுதான் இந்த விபரீதத்தையே சிக்னல் டிராக் மூலம் உணர்ந்த சிக்னல் கன்ட்ரோலர், பதறி அடித்துக்கொண்டு திருமங்கலம் நிலைய மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார். ஆனால், செங்கோட்டையிலிருந்து வந்துகொண்டிருந்த ரயில் கள்ளிக்குடி தாண்டி சுமார் 70 கி.மீட்டர் வேகத்தில் வந்துகொண்டிருந்தது. ஒருவழியாக அந்த ரயிலின் கோ பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசர அவசரமாக வேறு டிராக்கில் அந்த வண்டி திருப்பிவிடப்பட்டது. இதனால், மிகப் பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, ஒருவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரி, இதுபோன்ற குளறுபடிகளுக்கு எல்லாம் காரணம் என்ன?

மொழிப் பிரச்னைதான் பிரதான காரணம் என்கிறார்கள். குறிப்பாக, நிலைய மேலாளர் தொடங்கி டிராக் கன்ட்ரோலர் வரை வட மாநிலத்தினரே பெரும்பாலும் நியமிக்கப்பட்டிருப்பதால், தமிழ் மற்றும் பிறமொழி பேசும் அலுவலர்களுடன் தகவல் பரிமாறிக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது அவர்களின் கூற்று. இதுகுறித்து நம்மிடம் பேசிய ரயில்வே அதிகாரிகள் சிலர், “ரயில்கள் நேருக்கு நேர் வந்த சம்பவத்துக்குக் காரணம் மொழிப் பிரச்னைதான். மதுரை ரயில்வே கோட்டத்தில், வடமாநிலத்தவர்களே அதிக எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு இந்தி மட்டும்தான் தெரிகிறது. பெரும்பாலும் ஆங்கிலம் தெரியவில்லை. தமிழோ ஒரு வார்த்தைகூடப் புரிவதில்லை. மக்களுடன் அதிக தொடர்பில் இருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் விநியோகிப்பாளர், டிக்கெட் பரிசோதகர், டெக்னிகல் ஆகிய பிரிவுகளில் வடமாநிலத்தவர்களைப் பணி அமர்த்தக் கூடாது.

பயணிகளின் உயிரோடு விளையாடும் ரயில்வே! - மொழிப் பிரச்னை காரணமா?

திருமங்கலம் - விருதுநகர் மார்க்கத்தில் அடிக்கடி சிக்னல் பிரச்னை ஏற்படுகிறது. இதை நிர்வாகம் சரி செய்வதில்லை. இதனால்தான் அன்றைய தினமும் செங்கோட்டை ரயில் கிளம்பாமல் நின்றது. உடனே, பயணிகள் ஸ்டேஷன் மாஸ்டரை முற்றுகையிட்டனர். அந்த டென்ஷனில் இருக்கும்போதுதான், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர், ‘மதுரை ரயிலை அனுப்பவா?’ என்று இந்தியில் கேட்டிருக்கிறார், இவரோ இந்த ரயிலை அனுப்பச் சொல்கிறார் என்று தவறாகப் புரிந்துகொண்டு சிக்னல் கீயைப் போட்டுவிட்டார்” என்றார்கள்.

இந்த விவகாரத்தை முன் வைத்து, ‘ரயில்வே பணிகளில் தமிழ் தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் கணபதி சுப்ரமணியன், மணவாளன் ஆகியோர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில், ரயில்வே துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது நீதிமன்றம். இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் மணவாளன், “ரயில்வே தேர்வுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதனால்தான், இந்தி தெரிந்தவர்கள் அதிகம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். எனவே, தேர்வை அந்தந்த மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும். லோகோ பைலட், கார்டுகள், பாயின்ட் மேன், டிராக் மேன் ஆகிய பணிகள் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, இந்தப் பணிகளில் தமிழ் தெரிந்தவர்களை நியமித்தால்தான் தகவல் பரிமாற்றத்தில் குழப்பங்கள் வராது” என்றார்.

இந்த விவகாரம் குறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் லெனினிடம் கேட்டோம். “அன்று திருமங்கலம் ரயில் நிலையத்தில், சிக்னல் பிரச்னையால் ரயில் கிளம்ப தாமதம் ஆனது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிலைய மேலாளர் தகவலை சரியாகப் புரிந்துகொள்ளாததால், தவறு நடந்துள்ளது. மற்றபடி மொழிப் பிரச்னை என்று சொல்ல முடியாது. தவிர, கட்டுப்பாட்டு அறையிலிருந்து ரயில் இயக்கத்தை, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதை மீறி விபத்து ஏற்படாது’’ என்றார்.

மொழிபுரியாதவர்களைப் பணியில் அமர்த்திவிட்டு மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது, ரயில்வே துறை!

 - செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்