Published:Updated:

பெண்களுக்கான சோலோ டிராவல்... செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்!

மலையில் வாழுதல் இனிது என்றால், அங்குள்ள மக்களுடன் பழகுதல் பேரினிது. அவர்களிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என நினைக்காதீர்கள். அவர்களிடம்தான் எல்லாமே இருக்கிறது.

பெண்களுக்கான சோலோ டிராவல்... செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்!
பெண்களுக்கான சோலோ டிராவல்... செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்!

ட்டெனப் பறந்து வானத்தில் மிதந்துவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லாப் பெண்களுக்கும் இருக்கும். ஆனால், அது அவ்வளவு எளிதில் அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை. ஆனாலும் ஒருசில பெண்கள் துணிந்து வெளியே வருகிறார்கள். தனியே வாழ முனைகிறார்கள். தனியாகப் பயணிக்கிறார்கள். அந்தப் பயணத்தின் வழியே வாழ்க்கையை அழகாக, ஆழமாகக் கற்றுக்கொள்கிறார்கள். பெண்கள் சோலோ டிராவல் செய்யும்போது, எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?

சோலோ டிராவல்!

சோலோ டிராவல் என்பது, எந்தவித இடையூறும் இல்லாமல், நாம் பிறந்து வளர்ந்த இந்த உலகைத் தனியே அனுபவிக்கக் கிளம்பிச் செல்வதுதான். உலகம் முழுக்க தனியாகப் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாகச் சொல்கிறது ஆய்வு. ஆனால், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் குறைந்த அளவிலேயே பயணம் செய்கிறார்களாம். இதற்குச் சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பாதுகாப்பு எனப் பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. குழுவாகப் பயணிப்பதில் இருக்கும் சுகத்தையும் தாண்டி, சோலோவாகப் பயணிப்பதில் அலாதி சுகம் கிடைப்பதாக பெரும்பாலான பெண் பயணிகள் உணர்கிறார்கள். சோலோ டிராவல் செய்ய நினைக்கும் பெண்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படி ஃபிட்டாக வைத்துக்கொள்ளாமல் தயவுசெய்து சோலோவாகப் பயணம் செய்யாதீர்கள் என்பதே அவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

பயணம் மலைகளுக்காக அமையட்டும்!

மனிதர்களைப்போலவே இயற்கையிடமிருந்தும் நம்மால் ஆயிரமாயிரம் விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் சோலோவாகப் பயணிக்கும் பெண்கள் இயற்கை எழில்மிகு இடங்களான மலைசார்ந்த இடங்களைத் தேர்வுசெய்வது நல்லது. மலையில் வாழுதல் இனிது என்றால், அங்கு உள்ள மக்களுடன் பழகுதல் பேரினிது. அவர்களிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என நினைக்காதீர்கள். அவர்களிடம்தான் எல்லாமே இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் மலைகள் இந்த உலகின் பிரமிப்பை நமக்குள் செலுத்தும் சக்திகொண்டவை. நம்மை ஆசுவாசப்படுத்த மலைகளே மகத்தான இடம்.

மலைகளில் பயணம் மேற்கொள்ளும்போது, அங்கே டிரெக்கிங் செய்வதை வாடிக்கையாக்குங்கள். அப்போது மனமும் உடலும் ஆரோக்கியமாக மட்டுமல்லாமல், எப்போதும் பலமாக இருப்பதாய் உணர்வீர்கள். மலைகளில் இருக்கும் பசுமையான மரங்களைவிடவும், அதனின் வலிமையான பாறைகளுடன் ஏறிக் குதித்து விளையாடுங்கள். அப்போதுதான் அந்தப் பாறைகள் உங்களுக்குள் இருக்கும் வலிமையை அதிகப்படுத்தும். இயற்கை வளங்களை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதை வார்த்தைகளின்றி கற்றுத்தர மலைகளால்தான் முடியும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் அது ஓர் உயிரியல் பல்கலைக்கழகம். 

செலவுகளைக் கண்டு பயமெதற்கு!

முன்பெல்லாம் பயணம் செய்வது, காசு செலவு வைக்கும் வேலையாக இருந்தது. ஆனால், இப்போது, பயணம் செய்யும் முறை முற்றிலும் வேறு ஒரு கோணத்துக்கு வந்துவிட்டதால், மிகக் குறைந்த செலவிலேயே பல ஊர்களைச் சுற்றிப்பார்க்க முடிகிறது. அதற்குத் திட்டமிடல் ரொம்பவே முக்கியம். அதாவது, நீங்கள் போக விரும்பும் இடத்தை எவ்வாறு குறைந்த கட்டணத்தில் அடைய முடியும், தங்கும் வசதி என அனைத்தையும் திட்டமிட வேண்டும். நீங்கள் சைக்ளிஸ்ட்டாக இருந்தால் சைக்கிளையும் உடன் எடுத்துச் செல்லுங்கள். சைக்கிளில் ஊர் சுற்றிப் பார்க்கும் சுகமே அலாதியானதுதான்.

பெண்களைப் பொறுத்தவரை குறைந்த விலை ஹோட்டல்கள் என்பதைவிட, பாதுகாப்பான ஹோட்டலா என்றுதான் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால் பணம் என்ற மதிப்புள்ள காகிதத்தை நம்பாமல், பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு பயணத்தை அனுபவியுங்கள்.

யூத் ஹாஸ்டல்களைப் பயன்படுத்துங்கள்!

இன்று நிறைய இடங்களில் யூத் ஹாஸ்டல்கள் இருக்கின்றன. அதாவது, பயணிக்கும் இளைஞர்களுக்காக ஒவ்வொரு மாநில அரசாங்கமும் ஏற்படுத்தி வைத்திருக்கும் வசதி யூத் ஹாஸ்டல்கள். இந்த ஹாஸ்டல்களில் கட்டணமும் மிகக் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது. முன்பாகவே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது மட்டும் கட்டாயம். மலிவான கட்டணம் என்பதைத் தாண்டி, பாதுகாப்புக்கு இது மாதிரியான இடங்கள் உத்தரவாதம் தருகின்றன. பயணத்துக்கு முன்பாகவே, நீங்கள் போகும் இடங்களில் இருக்கும் யூத் ஹாஸ்டல்கள் பற்றிய விவரங்களைக் கூகுள்களில் தேடிச் சேகரித்துக்கொள்ளுங்கள். அப்படி யூத் ஹாஸ்டல்கள் இல்லாத இடங்களில், சாதாரண ஹோட்டல்களைத் தேர்வுசெய்யலாம். ஹோட்டல்களைவிடவும், ஹோம் ஸ்டே அல்லது பீ.ஜி., வசதிகள் இருந்தால், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது இன்னும் சிறப்பு. 

நண்பர்களை உருவாக்குங்கள்!

தனியாகப் பயணிக்கும்போது, நீங்கள் பயணம் செய்யும் ரயிலிலோ, பேருந்திலோ உங்கள் அருகில் இருக்கும் பெண்களுடனோ, குடும்பத்துடனோ பேசி நட்புவைத்துக்கொள்ளுங்கள். அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முயலுங்கள். அது ஒருவித பாதுகாப்பு உணர்வையும் உங்களுக்குள் ஏற்படுத்தும். `பயணத்துக்காகத் திட்டமிடும்போதே, ஆபத்து என்று அழைத்தால் உடனே வரும் நட்பையும் தேர்வுசெய்து, அவர்களிடம் பயண விவரங்களைத் தெரியப்படுத்திவிட்டு, அதன் பிறகு பயணிப்பது நல்லது. இது புலிகளின் காடல்ல, அன்பான இதயங்களும் அன்றாடம் பயணிக்கும் நாடு' என்பதை மனதில் நிறுத்துங்கள். அப்போதுதான் உங்களுக்குள் இருக்கும் தைரியம் தானாக ஊற்றெடுக்கும்.

செல்லும் இடங்களிலும் நல்ல நல்ல மனிதர்கள் நம் கண்களுக்கு அகப்படுவார்கள். அவர்களின் உதவியையும் கேட்டுப் பெறுவதில் தவறில்லை. சுற்றுலா செல்லும் இடத்தில் இருக்கும் நண்பர்களின் நண்பர்களையும் தொடர்புகொள்ளும் வகையில் திட்டமிட்டு வைத்திருங்கள். அவசர காலத்தில் அது பயனுள்ளதாக இருக்கும். 

பாதுகாப்பு விஷயங்கள்!

யாரிடம் எது கேட்பதாக இருந்தாலும் தயக்கமின்றி தைரியமாகக் கேளுங்கள். யாரும் உங்களை எளிதில் அணுக முடியாதபடி கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருங்கள் தப்பில்லை. பயணத்தில் பார்க்கும் மனிதர்களை முழுமையாக நம்பவேண்டும் என்கிற அவசியமில்லை. அவர்களின் மீது சந்தேகம் இருந்தால்தான், உங்கள் பாதுகாப்பின் மீது உங்களுக்குக் கவனம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பெப்பர் ஸ்ப்ரே, விசில், பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச்செல்வது நல்லது. இவை தவிர எங்குச் செல்கிறீர்களோ அந்த இடத்தின் வரைபடத்தை (மேப்) வைத்துக்கொள்வது, இடம் தெரியாமல் திண்டாடுவது உள்ளிட்ட பிரச்னைகள் வராமல் தடுக்கும். 

சியர்ஃபுல் கேர்ள்ஸ்... சோலோ டிரிப்புக்கு இப்போதே தயாராகுங்கள். உங்கள் வருகைக்காக நாடு மட்டுமல்ல, இந்த உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.