தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

தனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்! - கீதா இளங்கோவன்

தனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்! - கீதா இளங்கோவன்
பிரீமியம் ஸ்டோரி
News
தனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்! - கீதா இளங்கோவன்

தனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்! - கீதா இளங்கோவன்

அரசுத்துறை அதிகாரியும், ஆவணப்பட இயக்குநருமான கீதா இளங்கோவனின் வாழ்க்கை, பயணங்களால் ஆனது. தனியே பயணம் செய்வது, தன்னைப் போன்ற பயண ஆர்வலர்களுடன் குழுவாகச் செல்வது, இணையருடன் செல்வது என இவரின் பயணங்கள் சுவாரஸ்யமானவை.

பால்யத்தில் பயணங்களே வாய்த்த தில்லையாம் கீதாவுக்கு. அந்த ஆதங்கத்தின் நீட்சி யாகவே இன்று திகட்டத் திகட்ட பயணம் செய்வதாகச் சொல்கிறார்.

‘`சிறு வயதில் திருப்பூரில் டவுன் பஸ்ஸில் போய்வருவதுதான் எனக்கான பயணமாக இருந்தது. அப்போதும் அம்மா, அப்பா, தம்பி என யாராவது கூடவே இருப்பார்கள். தனியே பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்த தில்லை. வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளிக் கூடம். நடந்தே போய் வருவேன். அந்த வயதில் சைக்கிள்கூட ஓட்டியதில்லை. பள்ளிக்கூடத்துக்குப் போய்வரும்போது தெருவோரங்களில் ஆண்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டும், டீ குடித்துக்கொண்டும் நிற்கிற காட்சிகளும், அவற்றிலிருந்த அந்தச் சுதந்திரமும் வியப்பைத் தந்தன. ஆங்கிலப் பட நடிகைகள் ஜீப் ஓட்டுவதையும், மலையேறுவதையும், சாகச வேலைகளில் ஈடுபடுவதையும் பார்த்து சிறு வயதிலேயே பிரமித்திருக்கிறேன். இந்தியாவில் பெண்கள் ஏன் அப்படியெல்லாம் இருப்பதில்லை என்கிற கேள்வியும் அந்த வயதிலேயே எனக்குள் இருந்தது’’ - தேடலின் தொடக்கம் சொல்பவருக்கு, பதின்பருவத்தில் பயணத்துக் கான சிறகுகள் விரியத் தொடங்கியிருக்கின்றன.

தனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்! - கீதா இளங்கோவன்

‘`கல்லூரிப் படிப்புக்காக கோவை போனேன். அங்கே பாட்டி வீட்டில் தங்கிப்படித்தேன். அம்மா அப்பாவைப் பார்க்கத் திருப்பூர் போகும்போது, ஒவ்வொருமுறையும் பாட்டியால் என்னுடன் வர முடியாது என்பது கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே தெரிந்தது. நான் தனியே பயணம் செய்யப் போகிறேன் என்கிற அந்த உணர்வே அலாதியாக இருந்தது. கோயம்புத்தூரில் பஸ்ஸில் ஏறி நானே டிக்கெட் வாங்கி,  ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, பாட்டு கேட்டபடி திருப்பூர் போய் வந்ததுதான் என் முதல் தனிமைப் பயணம். என் பயணக் காதலைப் பல மடங்கு அதிகரிக்கவைத்ததும் அந்த முதல் அனுபவம்தான்.

வாழ்க்கையில் செட்டிலான பிறகு என் இணையருடன் நிறைய பயணம் செய்ய ஆரம்பித்தேன். கோவா என்கிற இடம் ஃபேன்டஸி உலகமாக என் மனதில் பதிந்திருந்தது. அலுவலகத்தில் ஒரு பயிற்சிக்காக ஒரு வாரம் கோவா போகச் சொன்னபோது தனியே பயணம் செய்யப் போகிற மகிழ்ச்சி ஒருபுறமும், என் விருப்ப இடமான கோவாவுக்குப் போகிறேன் என்ற ஆர்வம் இன்னொருபுறமுமாக உற்சாகத்தில் இருந்தேன். கோவா போன்றதோர் இடத்துக்குத் தனியே பயணம் செய்வது எப்படியிருக்கும் என்று கற்பனைகளில் மிதந்து, பார்த்துப் பார்த்துத் திட்டமிட்டு ஒவ்வொன்றையும் செய்தேன்.  வாஸ்கோடகாமாவில் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, நான் தங்கவேண்டிய ஹோட்டலுக்குப் போனேன். ஒருமணி நேரப் பயணம் அது. அந்த இடத்துக்கு பஸ் போகாது என்பதால் டாக்ஸியில் போனேன். `கோவா பாதுகாப்பான இடமில்லை' என்று கேள்விப்பட்டிருந்ததால், ரயில்வே அதிகாரிகளிடம் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு உதவி கேட்டேன். டாக்ஸி டிரைவரின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு, அவர்களுடைய நம்பரையும் எனக்குக் கொடுத்து, உதவி தேவைப்பட்டால் அழைக்கச் சொன்னார்கள். ஆங்கிலம்  தெரியாத நிலையிலும் டிரைவர் தனக்குத் தெரிந்த மொழியில் அந்த ஊரைப் பற்றிப் பெருமை பேசிக்கொண்டே ஓட்டியது பிடித்திருந்தது. கோவாவின் உண்மையான கிராம அழகை அந்தப் பயணத்தில் பார்க்க முடிந்தது. பயிற்சி முடிந்ததும் ஒவ்வொரு நாளும் கோவாவைச் சுற்றிப் பார்க்கப் போனேன். அங்கிருந்து பெங்களூரு போனபோது கமலாதாஸின் ‘என் கதை’யை வாசித்தேன். தனியே தங்கியிருந்த நேரங்களில் என்னைப் பற்றி யோசிக்க நிறைய நேரம் கிடைத்தது. `செல்ஃப் லவ்' என்கிற சுய அன்பை உணர்ந்ததும் அந்தப் பயணத்தில்தான். நான் விரும்பிய இடத்துக்குப் போக, விரும்பியதைச் சாப்பிட, நினைத்தபோது மற்றவர்களுடன் பேச... இப்படி எனக்கே எனக்கான தருணங்களைத் தந்த அந்தப் பயணம் என் வாழ்வில் மறக்க முடியாதது’’ - தனிமையில் செய்த பயணங்கள் தன்னைச் செதுக்கியதாகச் சொல்கிறவர், அனைத்துப் பெண்களுக்கும் அந்த அனுபவம் அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார்.

தனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்! - கீதா இளங்கோவன்

‘`ஒவ்வொரு பெண்ணும் தனிமையில் பயணம் செய்கிற அனுபவத்தை உணர வேண்டும். அந்தப் பயணத்தில்தான் வேறு எதைப் பற்றிய கவலையுமின்றி, `செல்ஃப் லவ்' என்கிற சுய அன்பை முழுமையாக உணர முடியும். யாரையும் திருப்திப்படுத்த வேண்டாம். யாரையும் சந்தோஷப்படுத்த வேண்டாம். யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டாம். எல்லா முடிவுகளையும் தனக்காக மட்டுமே எடுக்கலாம்’’ - காரணமும் சொல்கிறார்.

‘`ட்ரெக்கிங்கில் எனக்கு ஆர்வம் அதிகம். முதல்முறை ட்ரெக்கிங் போவதென முடிவெடுத்தபோது நண்பர்களுக்கு என்னுடன் வர இயலாதநிலை. தனியே போவதென முடிவெடுத்தேன். நண்பரின் அறிவுரையின் பேரில் யூத் ஹாஸ்டல் மூலம் போனேன். திருப்பதி அருகில் சேஷாச்சலம் என்கிற இடத்தில் ஐந்து நாள்கள் ட்ரெக்கிங் புரொகிராம் நடந்தது. அங்கே எல்லோரும் புதுமுகங்கள். தெலுங்கும் ஹிந்தியும் பேசும் மக்கள். மற்றவர்கள் குழுவாக இருந்தார்கள். நான் மட்டும் தனி. திருப்பதிதான் பேஸ் கேம்ப். ராப்ளிங் என்றொரு பயிற்சி கொடுத்தார்கள். பாறைகளின் மேலிருந்து இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு கீழே இறங்கும் பயிற்சி அது. இரண்டு மாடிக் கட்டடத்தில் மொட்டை மாடியிலிருந்து எங்களை இறக்கிவிட்டார்கள் அந்தப் பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த எம்.எல்.ஏ முன்னிலையில் என்னை அந்த ராப்ளிங் பயிற்சியைச் செய்துகாட்டச் சொன்னார்கள். அத்தனை பேரும் என்னை வியந்து பாராட்டினார்கள். 

பெண்களை எப்போதும் வீட்டுக்குள் முடக்கிவைத்துப் பழகிய சமூகம் இது. எந்த இடத்துக்கும் போகலாம் என ஆண்களுக்குப் பரந்ததொரு வெளி இருப்பதைப் போல பெண்களுக்கு இருப்பதில்லை. `இத்தனை மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், இரவில் வெளியே போகக் கூடாது' என்றெல்லாம் சொல்லிச்சொல்லி வைத்ததன் விளைவாகவே, பயணத்தின்மீதான ஆர்வம் அவர்களுக்குள் அதிகரிப்பதாக நான் பார்க்கிறேன்.

தனியே... தன்னந்தனியே... மனிதர்களின் மீது அன்பு கூடும்! - கீதா இளங்கோவன்

பயணத்தில் ஆர்வமிருந்தாலும் பெண்களால் சட்டெனக் கிளம்பிவிட முடியாது. பாதுகாப்பு கருதி வீட்டில் அவர்களைத் தனியே பயணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். சில பெண்களுக்கு, தெரிந்தவர்கள் யாருடனாவது சேர்ந்து போக அனுமதி கிடைக்கிறது. பலருக்கு குழுவுடன் செல்லவும் அனுமதி கிடைப்பதில்லை. அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்கிற கேள்விகள் வரும். குரங்கணி விபத்துக்குப் பிறகு நாங்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் இன்னும் அதிகமாயின. ‘பெண்கள் கூத்தடிக்கத்தான் இப்படியெல்லாம் போறாங்க. குழந்தைங்களைக் கூட்டிட்டுப் போகணுமா’ என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தன. நாங்கள் குழுவாகப் பயணம் செய்கிறபோது பயணத்தை எப்படித் திட்டமிடுகிறோம் என்பதை அவரவர் வீட்டில் பகிர்ந்துகொள்வோம். எந்தெந்த நாள்களில் எந்தெந்த இடங்களில் இருப்போம், அங்கே சிக்னல் கிடைக்குமா, பேச முடியுமா என்கிற தகவல்களைக்கூட முன்கூட்டியே சொல்லிவிடுவோம். இவ்வளவு தகவல்களையும் சொல்லித்தான் அவர்களைச் சம்மதிக்கவைக்க முடிகிறது’’ - பெண்களின் பயணங்களில் உள்ள சவால்களைச் சொல்லும் கீதாவுக்கும் அப்படியொரு சவாலான  அனுபவம் இருக்கிறது.

‘`ஒருமுறை கொச்சியிலிருந்து கோயம்புத்தூர் போய்க்கொண்டிருந்தேன். நான் வருவதாக வீட்டில் சொல்லவில்லை. கோயம்புத்தூரில் பெரிய மழை. வழியில் பஸ் பிரேக் டவுண் ஆனதால் தாமதமாகி, வேறு பஸ் பிடித்துக் கோயம்புத்தூர் வந்து இறங்கியபோது இரவு 11.30 மணி. தெருவெங்கும் தண்ணீர். மொபைல் வசதியில்லாத காலம். பக்கத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் நின்றுகொண் டிருந்தார்.  டிரைவருடன் இன்னொரு நபரும் இருந்தார். அந்தச் சவாரியில் எனக்குப் பல்வேறு சிந்தனைகள்... ஊர் முழுக்க மின்சாரமில்லை. இந்த ஆட்டோ எங்கே போனாலும் போய்த்தானே ஆக வேண்டும் என்றெல்லாம் குழப்பம். ஆனால், நல்லவேளையாக அந்த டிரைவர் என்னைப் பாதுகாப்பாக வீட்டில் இறக்கிவிட்டார். வீட்டுக்குப் போய்ச்சேரும்வரை நான் அனுபவித்த மன உளைச்சல் சொல்லி மாளாதது. அந்தப் பயணம் எனக்கொரு பாடமாக இருந்தது. மனிதர்களின்மேல் எனக்கு நிறைய நம்பிக்கையையும் கொடுத்தது என்றே சொல்லலாம். ஒருவேளை அந்தப் பயணம் எனக்குக் கசப்பான அனுபவத்தைத் தந்திருந்தால் நான் அன்றே பயணத்தை நிறுத்தியிருப்பேன்.

பயணம் என்பது சுயம் அறிதல், சுய அன்பு, சுதந்திரம். ஒருமுறை பயணம் செய்துவிட்டு வந்தால், வாழ்க்கையைப் புதிதாக வாழ்வதுபோல உணரலாம். சக மனிதர்களைப் பற்றிய நம் பார்வை மாறும், அவர்களின்மீதான அன்பு கூடும்’’ - மெசேஜ் சொல்லி முடிக்கிறார்.

ஆதலால், பயணம் செய்வோம்!

-சாஹா

தனியே பயணம் செய்யும் பெண்கள் கவனத்துக்கு....

• எந்த இடத்துக்குப் போனாலும் முறையற்ற நேரத்தைத் தவிருங்கள். காலையில் அல்லது பகல் நேரத்தில் போய்ச் சேர்வது பாதுகாப்பானது. உதவி கேட்க மக்கள் இருப்பார்கள்.

• வேறு வழியே இல்லை.... இரவில்தான் போய்ச் சேர முடியும் என்கிற நிலையில் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பாகத் தங்கிவிடுவது நல்லது. அங்கேயே ஓர் அறை எடுத்துத் தங்கிவிட்டு, காலையில் கிளம்பலாம். பாதுகாப்பான பயணம்தான் சுவாரஸ்ய மாகவும் இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

• எந்த இடத்துக்குச் செல்வதற்கு முன்பும் அந்த இடத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

• மலைசார்ந்த இடங்கள், காடு சார்ந்த இடங்கள் என ஒவ்வொருவருக் கும் பிடித்த இடங்கள் இருக்கும்.  அந்த இடங்களுக்குச் சுலபமாகப் போக முடியுமா எனப் பார்க்க வேண்டும். அங்கே எங்கே தங்கப் போகிறோம், தங்குமிடம்வரை போக்குவரத்து வசதிகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

• எந்தப் பயணத்தையும் குறைந் தது ஆறு மாதங்களுக்கு முன்பே திட்டமிடுவது சிறந்தது. கடைசி நேர டென்ஷனைத் தவிர்க்கலாம். பட்ஜெட்டும் குறையும்.