Published:Updated:

முசோரி, நைனிடால், களிம்போங்... வட இந்தியா பயணத்தில் மிஸ் செய்யக்கூடாத இடங்கள்!

இதோ சம்மர் ஆரம்பித்துவிட்டது, குழந்தைகளுக்குக் கோடை விடுமுறைக்கான நேரமும் நெருங்கிவிட்டது. இந்த சம்மரை குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட...

முசோரி, நைனிடால், களிம்போங்... வட இந்தியா பயணத்தில் மிஸ் செய்யக்கூடாத இடங்கள்!
முசோரி, நைனிடால், களிம்போங்... வட இந்தியா பயணத்தில் மிஸ் செய்யக்கூடாத இடங்கள்!

ம்மருக்கு டிரிப் என்றாலே நம் நினைவுக்கு வரும் இடங்கள் ஊட்டி, கொடைக்கானல், கேரளா, காஷ்மீர், லே லடாக் போன்றவைதான். ஆனால், கோடைக்காலத்தை சந்தோஷமாகக் கொண்டாட, இந்தியாவின் பல இடங்களை இயற்கை நமக்காக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வழக்கமான சம்மர் சுற்றுலா இடங்கள் அல்லாமல், இதுமாதிரியான இடங்களுக்கு சம்மரில் விசிட் அடிப்பது சுவாரஸ்யமாகவும் ஆனந்தமாகவும் இருக்கும். இதோ சம்மர் ஆரம்பித்துவிட்டது, குழந்தைகளுக்குக் கோடை விடுமுறைக்கான நேரமும் நெருங்கிவிட்டது. இந்த சம்மரை, குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டாட ஏற்ற இடங்கள் இங்கே உங்களுக்காக...

கனவு தேசம் களிம்போங்!

களிம்போங்கில் கால் வைக்கும்போது, `தேயிலைத் தோட்டம் தேநீர் வாசம்’ என்று பாட்டு பாடத்தான் தோன்றும். அந்த அளவுக்கு களிம்போங் மலைகளைத் தேயிலைத் தோட்டங்கள் அலங்கரித்திருக்கின்றன. மேற்கு வங்காள மாவட்டங்களில் ஒன்றான களிம்போங்,  4,100 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. இது அருகில் இருக்கும் டார்ஜிலிங்கைவிட உயரம் குறைவு என்பதால், அதிக குளிர் இல்லாத பருவச்சூழல் அனுபவிக்க ஏற்றதாக இருக்கும். களிம்போங்கின் மற்றுமொரு சிறப்பு, கஞ்சன்ஜங்கா மற்றும் இமயமலையின் இதர மலைகளின் அழகுக் காட்சிகளை இங்கு இருந்து பார்ப்பதுதான். இதனாலேயே சுற்றுலாவாசிகள் அதிகமாக களிம்போங்குக்குப் பிரவேசிக்கிறார்கள். இந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் ஆண்டுகொண்டிருந்தபோது, கட்டப்பட்ட கட்டடங்களும் மலர்த் தோட்டங்களும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. இவற்றால் இப்போது இருக்கும் களிம்போங் இன்னும் அழகாகத் தெரிகிறது.

களிம்போங்கின் காடுகளும் தோட்ட அமைப்புகளும் அங்கு பயணிப்பவர்களின் மனதைக் கிறங்கடிக்கும். களிம்போங்குக்குப் பயணிப்பவர்கள், டியோலோ மலை, கலிங்கா, காக்டஸ் நர்ஸரி, டீஸ்டா ஆற்றுப்படுகை, மோர்கன் ஹவுஸ், நியோரா வேலி தேசியப் பூங்கா போன்ற இடங்களுக்கும் விசிட் அடிக்க மறந்துவிட வேண்டாம். களிம்போங்குக்குப் பயணிக்க மார்ச் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நாள்களைத் தேர்வுசெய்வது நல்லது.  

ஆன்லைன் பேக்கேஜ்: ஆறு நாள் மற்றும் ஐந்து இரவு களிம்போங்கில் சுற்றிப்பார்ப்பதற்கு ஆன்லைன் பேக்கேஜ்கள் ரூ.16,000-லிருந்து கிடைக்கின்றன. இந்த பேக்கேஜில் சைட் சீயிங், தங்குமிடம் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்றவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

எப்படிச் செல்வது?: விமானம் வழியாகப் பயணிக்க நினைப்பவர்கள் களிம்போங்குக்கு 43 கி.மீ. தொலைவில் இருக்கும் பாக்டோக்ரா விமானநிலையம் வரை பயணிக்கலாம். அங்கிருந்து கார் மூலமாக இரண்டு மணி நேரத்தில் களிம்போங்கை அடைய முடியும். கேங்க்டாக் மற்றும் சிலிகிரி போன்ற இடங்களிலிருந்து களிம்போங்குக்கு தொடர் பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், கொச்சின் மற்றும் சென்னை போன்ற நகரங்களிலிருந்து ரயில் வழியாக ஜல்பைகுரி வரை பயணிக்கலாம். இந்த ரயில்நிலையம் களிம்போங்கிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. 

மனம் குளிர மஹாபலேஸ்வர்!

பசுமை கொஞ்சி விளையாடும் இடங்களில் ஒன்றுதான் இந்த மஹாபலேஸ்வர். மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தைத் தக்கவைத்திருக்கிறது இந்த மஹாபலேஸ்வர். சம்மர் சமயங்களில் இங்கு பயணிப்பதை சுற்றுலாவாசிகள் பெரிதும் விரும்புகிறார்கள். இந்த இடம் வெயில் காலங்களில் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்த்துவதாக அவர்கள் சொல்கிறார்கள். இங்கு டிரெக் பாயின்ட்கள் ஏராளம் என்பதால், அட்வெஞ்சர் டிராவலர்களுக்கு இந்த இடம் மிகவும் பொருத்தமானது. லிங்மலா ஃபால்ஸ், தபோலா, தோபி, சின்னமான் ஃபால்ஸ் என இங்கு இருக்கும் அருவிகளின் எண்ணிக்கையும் அதிகம். இதில் சின்னமான் நீர்வீழ்ச்சியின் அழகு, தனித்துவம் வாய்ந்தது. அதேபோல யானைத்தலை வியூ பாயின்டிலிருந்து காணும் காட்சியானது, கண்களால் நம்ப முடியாத அளவுக்கு இருக்கும். இங்கு நிற்கும்போது பனிமேகங்கள் நம்மை உரசிச் செல்லும் உணர்வில் மனமும் உடலும் ஒருசேர உறைவதை உணரலாம்.

ஆன்லைன் பேக்கேஜ்: மஹாபலேஸ்வரில் ஐந்து பகல் மற்றும் நான்கு இரவுகள் சுற்றிப்பார்ப்பதற்கு 11,200 ரூபாயிலிருந்து பேக்கேஜ்கள் ஆரம்பிக்கின்றன. இந்த பேக்கேஜில் சைட் சீயிங், தங்குமிடம் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்றவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

எப்படிச் செல்வது?: விமானம் வழியாகப் பயணிக்க நினைப்பவர்கள் மஹாபலேஸ்வருக்கு 102 கி.மீ தொலைவில் இருக்கும் புதிய புனே சர்வதேச விமான நிலையம் வரை பயணிக்கலாம். இங்கிருந்து கார் மற்றும் பேருந்து வாயிலாக மஹாபலேஸ்வருக்குச் செல்ல முடியும். சாலை வழியாக மும்பையிலிருந்து ஆறு மணி நேரத்தில் மஹாபலேஸ்வருக்கு வந்தடைய முடியும். மஹாபலேஸ்வரில் ரயில்நிலையம் இருப்பதால், எளிதாக ரயில் போக்குவரத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கொண்டாட்டத்தின் முழுமைக்கு முசோரி!

தனிமையும் இயற்கையும் இரண்டறக் கலந்துள்ள பூமி என்றால், அது உத்தரகாண்டில் இருக்கும் முசோரிதான். டேராடூனிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் முசோரி, பசுமை போர்த்திய மலைவாழிடம். இங்கு உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் `இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’, `பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’ போன்ற பொன்மொழிகளுடன் வரவேற்கிறது. இந்தக் கிராமம் எந்த வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும் அழகாகவும் இருப்பதைப் பார்ப்பதற்காகவே முசோரிக்குச் சென்று வர வேண்டும்.

1825-ல் கேப்டன் யங் கட்டிய `முல்லிங்கர்’ வீடு, அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் ஏராளமாக முசோரியில் இருக்கின்றன. முசோரியின் உயரமான இடமான `லால்டிப்பா’ லேண்டரில் உள்ளது. இமயமலையின் கார்வால் மலைத்தொடரின் அழகை இங்கே இருந்து ரசிக்கலாம். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவை இங்கிருந்து பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதனால் சுற்றுலாப் பயணிகள் இந்த நேரங்களில் அதிகமாக லால்டிப்பாவுக்கு வந்துபோகிறார்கள்.

கெம்ப்டி மற்றும் ஜரிபானி நீர்வீழ்ச்சிகள் முசோரியின் சிறப்பு. 40 அடி உயரத்தில் இருந்து கொட்டும் கெம்ப்டி அருவியை அண்ணாந்து பார்க்கும்போது, ஆச்சர்யத்தில் கண்கள் விரியும். மகிழ்ச்சியும் சாகசமும் தரும் அற்புதமான இடங்களில் முசோரி முக்கியமானது. இங்கு பயணிக்க, செப்டம்பர் முதல் ஜூன் வரையிலான நாள்களே ஏற்றவை.

ஆன்லைன் பேக்கேஜ்: மூன்று பகல் இரண்டு இரவு முசோரியில் தங்கி சுற்றிப்பார்ப்பதற்கு ரூ.7,500-லிருந்து பேக்கேஜ்கள் கிடைக்கின்றன. இந்த பேக்கேஜில் சைட் சீயிங், தங்குமிடம் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்றவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

எப்படிச் செல்வது?: விமானம் வழியாகப் பயணிக்க நினைப்பவர்கள் முசோரிக்கு 30 கி.மீ தொலைவில் இருக்கும் டேராடூன் ஜாலி கிரேன்ட் விமானநிலையம் வரை பயணிக்கலாம். அங்கிருந்து கார் மூலமாக முசோரியை அடைய முடியும். முசோரிக்கு டேராடூன் மற்றும் புதுடெல்லியிலிருந்து தொடர் பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. 

நைனிடால்: இயற்கை காதலர்களின் சொர்க்கபூமி!

பனிமூட்டம் கொண்ட மலைச்சிகரங்களும் வானுயர்ந்த மரங்களும், பறவைகள் எழுப்பும் இனிய ஓசைகளும், சிலுசிலுவென சிலிர்த்து ஓடும் நீர்நிலைகளும், ஆங்காங்கே மலையிலிருந்து குதித்து விழும் நீர்வீழ்ச்சிகளும் என இயற்கையை அதிகம் நேசிப்பவர்களுக்கு ஏற்ற இடமாக அமைந்திருக்கிறது நைனிடால். இந்த நகரம் முழுவதும் நிலப்பரப்பு குறைவு. நீர்நிலைகள் அதிகம். அதனால் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும், நைனிடால் என்கிற ஏரியின் பெயரால்தான், இந்த நகரம் அழைக்கப்படுகிறது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பரவிக்கிடக்கும் இந்த ஏரியைச் சுற்றியுள்ள, இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே படகு சவாரிசெய்யும் சுகம் அலாதியானது. 

இங்கு இருக்கும் மலைச் சிகரங்களில் மிகவும் உயர்ந்தது நைனி பீக். இது நகரத்தின் மையத்தில் இருந்து 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. 2,610 மீட்டர் உயரமுள்ள இந்த மலைச் சிகரத்திலிருந்து பனி மூடிய இமயமலைச் சிகரங்கள் மற்றும் நகரின் எழிலைக் காணும் காட்சி, ஆயுள் முடியும் வரை அகக்கண்விட்டு நீங்காது.  

புகழ்பெற்ற கேங் கார்டன் அற்புதமானது. இங்கு ஆங்காங்கே சிறுசிறு குகைகள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்படி அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் விளையாடுவதற்கு இந்த கேங் கார்டன் ஏற்ற இடம். பனியால் மூடப்பட்ட இமயமலை சிகரங்களை இங்கு உள்ள `ஸ்னோ வியூவ்’ முனையில் இருந்து காணலாம். 2,270 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிகரத்திலிருந்து வடக்கு இமயமலை மலைச்சிகரங்களின் அழகை நம்மால் முழுமையாகக் கண்டு ரசிக்க முடியும்.

லேண்டு எண்டு என்கிற பகுதி, நகரத்தின் மையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,120 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, இந்தப் பகுதியிலிருந்து சுர்பாடால் என்ற ஏரியைக் காண்பது பேரானந்தம். தூரத்திலிருந்து பார்க்க, அந்த ஏரி ஒரு பசுவைப் போன்று காட்சியளிக்கும். நகரின் கடைசிப் பகுதியான இதில் நின்றுகொண்டு, நகரின் ஒட்டுமொத்தக் காட்சியையும் பார்த்து ரசிப்பது அற்புதமான அனுபவம். ஆனால், கொஞ்சம் ஆபத்தும் இருக்கிறது. இந்தப் பகுதியில் சில இடங்களைக் கவனமாகக் கடக்க வேண்டும் என்கின்றனர் சிலர். சம்மரில் மட்டும் இல்லாமல், வருடத்தின் எல்லா நாள்களிலும் மிதமான தட்பவெப்ப நிலையை நைனிடால் கொண்டிருப்பது சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்.

ஆன்லைன் பேக்கேஜ்: மூன்று பகல் இரண்டு இரவு முசோரியில் தங்கி சுற்றிப்பார்ப்பதற்கு ரூ.8,000-லிருந்து பேக்கேஜ்கள் கிடைக்கின்றன. இந்த பேக்கேஜில் சைட் சீயிங், தங்குமிடம் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்றவை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

எப்படிச் செல்வது?: நேரடியாக நைனிடாலுக்கு விமானப் போக்குவரத்து கிடையாது. டேராடூன் விமானநிலையம் சென்றுதான் அங்கிருந்து நைனிடால் வர வேண்டும். டேராடூன் விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ தொலைவில் நைனிடால் அமைந்திருக்கிறது. உத்தரகாண்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கத்கோடம் ரயில்நிலையத்துக்கு இந்தியாவின் பல நகரங்களிலிருந்து ரயில் போக்குவரத்து இருக்கிறது. இங்கு இருந்து நைனிடால் 35 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.