Published:Updated:

அல்பேனியா முதல் டர்க்மெனிஸ்தான் வரை - டாப் 5 சர்வதேச அட்வெஞ்சர் ஸ்பாட்ஸ்!

பெரும்பாலானோரின் `லிஸ்ட்டில்' இல்லாத சூப்பர் டூப்பர் சர்வதேச அட்வெஞ்சர் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்கலாமா?

அல்பேனியா முதல் டர்க்மெனிஸ்தான் வரை - டாப் 5 சர்வதேச அட்வெஞ்சர் ஸ்பாட்ஸ்!
அல்பேனியா முதல் டர்க்மெனிஸ்தான் வரை - டாப் 5 சர்வதேச அட்வெஞ்சர் ஸ்பாட்ஸ்!

`பயணம்’ யாருக்குத்தான் பிடிக்காது. சிலருக்கு, தினமும் அவரவர் ஊரில் உள்ள பொக்கிஷ இடங்களுக்கு விசிட் அடிக்காமல் தூக்கம் வராது. பலருக்கு, தான் இறப்பதற்குள் உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் என்பது பெரும்கனவு. உலகில் உள்ள ஒவ்வோர் இடமும் அதனதன் தன்மையில் அழகு. பாலைவனச் சூரிய ஒளி, இமயமலையின் பனிப்பாறை, பவளத் தீவுகள் என அதிசயங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்ததே இயற்கையின் படைப்பு.

ஒரே இடத்தில் அதிகமான மக்கள் கூட்டம் நிறைவதால், அந்த இடம்தான் அழகின் உச்சம் எனச் சொல்லிவிட முடியாது. நாம் பயணிக்கும் ஒவ்வொரு பாதையிலும் அழகு நிறைந்துள்ளது. அந்த வகையில் பெரும்பாலானோரின் `லிஸ்ட்டில்' இல்லாத சூப்பர் டூப்பர் சர்வதேச அட்வெஞ்சர் சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்கலாமா?

அல்பேனியா:

கிரீஸ், இத்தாலி, குரோஷியா போன்ற ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்க்க ஆசைப்படும் நாடோடி ப்ரியர்கள், மந்தமான, மாசு நிறைந்த பூமி என்றுதான் அல்பேனியாவை ஒதுக்கிவிடுவர். ஆனால், எங்கு தொடங்கி எங்கு முடிகிறது என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு பல அடுக்குகளால் ஆன வீடுகள் நிறைந்த ஆயிரம் ஜன்னல் நகரம்... நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தெள்ளத்தெளிவான நீரை ஏந்தியிருக்கும் அழகியக் கடற்கரை, இடைக்காலக் கிராமங்களை இன்றும் பழைமை மாறாமல் பராமரித்துக்கொண்டிருக்கும் `டிரானா (Tirana)' நகரம், மரம், செடிகொடிகள், தெளிவான ஓடை ஏந்தியிருக்கும் `தி ப்ளூ ஐ (The Blue Eye)’ நீரூற்று உள்ளிட்ட பல அதிசயங்களைக்கொண்டிருக்கிறது அல்பேனியா. படகுப் பயண ப்ரியர்களுக்கு Osum பள்ளத்தாக்குகளும், ட்ரெக்கிங் ப்ரியர்களுக்கு அல்பேனியன் ஆல்ப்ஸ் (Prokletije) மலைகளும் இங்கு இருக்கின்றன. மிகவும் சிறிய நாடு. ஆனால், சுற்றிப் பார்த்து மகிழ ஏராளமான இடங்கள் உள்ளன. இனி இத்தாலிக்கு பிளான் போட்டால் அல்பேனியாவை மிஸ் பண்ணிடாதீங்க!

பனாமா:

பழைமையும் புதுமையும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடம் `பனாமா.’ மாடர்ன் Skyscrapers, கேசினோ, நைட் க்ளப்ஸ் என கலர்ஃபுல் இளைஞர்களின் டெஸ்டினேஷன் ஒருபுறம் என்றால், பனாமா கால்வாய் போன்ற நாஸ்டால்ஜிக் டெஸ்டினேஷன் மற்றொருபுறம் பிரமிக்கவைக்கும். பனாமா, நிச்சயம் கடற்கரை விரும்பிகளுக்கு மிகவும் பிடிக்கும். வெள்ளை மணல், தென்னைமரங்கள், கடற்கரை நிறைய நட்சத்திர மீன்கள் சூழ உங்கள் மனதுக்குப் பிடித்தவரோடு தனிமையில் நேரத்தைச் செலவிட இங்கு பிரைவேட் கடற்கரைகள் ஏராளம். ஆனால், விலைதான் காஸ்ட்லி!

ஸ்லொவீனியா:

கோடை விடுமுறை முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டால், ஸ்லொவீனியா நிச்சயம் கைகொடுக்கும். இத்தாலி, குரோஷியா போன்ற நாடுகளுக்குச் செல்லும் டிராவல்லர்ஸ், ஸ்லொவீனியாவை ஏனோ கண்டுகொள்வதேயில்லை. மிகவும் சிறிய நாடுதான். ஆனால், எழில்மிகு காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கண்களுக்கு விருந்தளிக்கும் Soca ஆறு, பச்சைப்பசேலென மலைகள் சூழ்ந்திருக்க நடுவில் ஓடும் Bled ஏரி, இயற்கை அழகு ததும்பும் Koper நகரம் எனப் பல ஆச்சர்யங்கள் நிறைந்த ஸ்லொவீனியா, அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலாத்தலம்.

ஜார்ஜியா:

`வைன் (Wine)’ பானத்தின் பிறப்பிடம் எனக் கருதப்படும் ஜார்ஜியாவில் பழைமைதான் புதுசு. பழங்காலக் கோட்டைகள், தேவாலயங்கள், பாறைகளில் வடிவமைக்கப்பட்ட குடியிருப்புகள் எனப் பல ஆச்சர்யங்கள் நிறைந்த நாடு ஜார்ஜியா. உலகின் கலர்ஃபுல் இரவைக் கொண்டாடித் தீர்க்கும் நாடும் இதுதான். கண்முன்னே தடாலென மாறும் வானிலையைக் காண்பதற்கே இங்கு செல்லலாம். பாலைவனம் மற்றும் பள்ளத்தாக்குப் பகுதிகளிலிருந்து 200 மைல் தொலைவில் காடுகள், மலைகள் எனப் பசுமையான நிலங்களைக் கடந்து இறுதியாக பனை மற்றும் வாழைமரங்கள்சூழ் கடற்கரை வரை நீள்கிறது ஜார்ஜியா. இது இயற்கையின் மேஜிக்!

டர்க்மெனிஸ்தான்:

`என்னடா இதுவரை கேள்விப்படாத பேரா இருக்கே!’ எனப் பலருக்கும் தோன்றும். இந்த நாட்டுக்குச் செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. கண்ணாடி மற்றும் மார்பிள் கலவைகளால் ஆன ஃபேன்சி Geometrical வடிவக் கட்டடங்கள், பேருந்துநிலையங்களில் லேட்டஸ்ட் மின்னணு இயந்திரங்களின் அடுக்குக் கடைகள், நாள் முழுவதும் திருவிழாவைப் போன்று கொண்டாடும் கடைவீதிகள் என `மாடர்ன் சிட்டி’ கண்களுக்கு விருந்தளிக்கும். தொல்பொருள் ஆய்வாளர்களே தொடாமல் வைத்திருக்கும் கிராமப் பகுதிகளும் இங்கு உண்டு. இங்கு இருக்கும் சேதமடைந்த செராமிக் பொருள்கள் மற்றும் எலும்புக்கூடுகள் ஒட்டியிருக்கும் நிலப்பரப்பு, அட்வெஞ்சர் விரும்பிகளுக்கு சரியான சாய்ஸ்.

வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாத முற்றிலும் வித்தியாசமான அனுபவம் வேண்டுமென நினைத்தால், யோசிக்காமல் இந்த இடங்களைத் தேர்வுசெய்யலாம்.