Published:Updated:

செல்லப் பிராணியுடன்  ஒரு ஜாலி சுற்றுலா..! பெட் டிராவல் டிப்ஸ்

குடும்பச் சுற்றுலா என்றால், அதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாத திட்டமிடலாவது இருக்கும். அதே போலத்தான், செல்லப் பிராணிகளுடன் சுற்றுலாவுக்கு பிளான் செய்வதும்.

செல்லப் பிராணியுடன்  ஒரு ஜாலி சுற்றுலா..! பெட் டிராவல் டிப்ஸ்
செல்லப் பிராணியுடன்  ஒரு ஜாலி சுற்றுலா..! பெட் டிராவல் டிப்ஸ்

சொகுசாக காரில் சுற்றுலா செல்லும்போதுகூட, செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல தயங்குகிறோம். இதற்குக் காரணம், பயணத்தின்போது செல்லப்பிராணிகளைப் பராமரிப்பது எப்படி என்பது தெரியாததுதான். இனி அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அதற்கான ஐடியாக்களை அள்ளி வழங்கியிருக்கிறோம். ஜாலியாக செல்லப்பிராணிகளையும், இனி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

தயார்படுத்துங்கள்!

நம் ஒவ்வொருவரின் சுற்றுலாப் பயணமும் செளகர்யமாக அமையவேண்டியது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு நம்முடைய செல்லப்பிராணிகளின் பயணமும் செளகர்யமாக அமைய வேண்டும். அதனால், சுற்றுலாவுக்கு முன்பாக அடிக்கடி கடைவீதி, ரெஸ்டாரன்ட் என காரில் அழைத்துச் சென்று, செல்லப்பிராணிகளுக்கு பயணிப்பதைப் பழக்க வேண்டும். வெளி ஆள்களைப் பார்த்தால் குரைப்பதோ, கடிக்கப் பாய்வதோ மாதிரியான நடவடிக்கைகள் பயணப் பயிற்சியின் மூலம் குறையும். நமது ஓட்டப்பயிற்சிக்கான தூரத்தை நாளாக நாளாக நாம் அதிகரிப்பதுபோல, செல்லப்பிராணிகளின் பயண தூரத்தையும் படிப்படியாக அதிகப்படுத்துவது நல்லது. இது செல்லப்பிராணிகளின் பயணத் தொந்தரவுகளை நமக்கு முன்கூடியே அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

ஒழுக்கமுறைகள்!

நீங்கள் செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்லலாம் என முடிவெடுத்த பிறகு, செல்லப்பிராணிகளுக்கு உணவு விஷயத்திலும், மலம் கழிக்கும் விஷயத்திலும் சில ஒழுக்கமுறைகளைக் கற்பிப்பதில் அக்கறைகாட்டுவது மிகவும் அவசியம். காரின் ஜன்னல் வழியே தலையை நீட்டியபடி நாய்கள் பயணிக்கும் அழகை, நம்மில் பெரும்பாலானோர் பார்த்து  ரசித்திருப்போம். ஆனால், நாய்களை அப்படிப் பயணிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை அவற்றுக்குக் கொடுத்துப் பழக்க வேண்டும். இப்படி, முன்று மாதங்களுக்கு முன்பிருந்தே செல்லப்பிராணிகளைத் தயார்படுத்தி, சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, அவற்றால் எந்த தொந்தரவும் நமக்கு வராது. செல்லப்பிராணிகளும் சந்தோஷமாக, சுற்றுலாவைக் கொண்டாடும்.

திட்டமிடுங்கள்!

குடும்பச் சுற்றுலா என்றால், அதற்குக் குறைந்தபட்சம் மூன்று மாதத் திட்டமிடலாவது இருக்கும். அதேபோல்தான், செல்லப்பிராணிகளுடன் சுற்றுலாவுக்கு பிளான் செய்வதும். சொந்த வீட்டில் என்றால் அதற்காகத் தனியே ஒரு குட்டி வீடே இருக்கும் அல்லது நாம் பயன்படுத்தும் அனைத்தையும் நமது செல்லப்பிராணிகளும் பயன்படுத்தும். ஆனால் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும்போது, இது மாதிரியான அனுமதியை ஹோட்டல் நிர்வாகத்திடம் பெற முடியுமா? ஆனால், இந்தக் காலத்தில் எல்லாமே சாத்தியம் என்பதால், பிராணிகள் தங்குமிடத்தைச் சார்ந்தவர்களிடம் தகவலை முன்கூட்டியே தெரியப்படுத்தி, அனுமதி கிடைக்கும் இடங்களில் செல்லப்பிராணிகளைத் தங்கவைக்க ஏற்பாடுகளைச் செய்யலாம் அல்லது அனைத்து மெட்ரோ நகரங்களிலும் `ஹோம் ஸ்டே’ தங்குமிடங்கள் இருக்கின்றன. அதுமாதிரியான இடங்களைத் தங்குவதற்காகத் தேர்வுசெய்யும்போது, செல்லப்பிராணிகளுக்குப் பிரச்னைகள் ஏதும் இருக்காது.

கேரியர் வசதிகள்!

கார்களில் பயணிக்கும்போது, குழந்தைகளுக்கு பிரத்யேகமாக பேபி கார் சீட் இருப்பதுபோன்று, நாய், பூனை மாதிரியான செல்லப்பிராணிகளுக்கும் செளகர்யமான கேரியர்கள் விற்கப்படுகின்றன. அதை வாங்கி, அதன் வழியாகச் செல்லப்பிராணிகளைப் பயணிக்கவைப்பது அதற்கு செளகர்யத்தை கொடுக்கும். அப்போதுதான் பயணிக்கும்போது நிற்க, படுக்க, உட்கார என எந்தத் தொந்தரவும் இல்லாமல் பயணிக்கும். செல்லப்பிராணிகளுக்காகத் தேர்வுசெய்யும் கேரியர்கள் இடவசதியுடனும் காற்றோட்டத்துடனும் இருக்கவேண்டியது அவசியம். அப்போது அவை சோர்வில்லாமல் பயணிக்க முடியும்.

பெட் ஃப்ரெண்ட்லி டிராவல் கிட்!

செல்லப்பிராணிகளுக்குப் பொம்மைகள், பெட், தலையணை வாங்கிப் போடுவது என, இப்போதெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் செல்லப்பிராணிகளை, குழந்தைகள்போலத்தான் பார்த்துக்கொள்கிறோம். சுற்றுலா செல்லும்போது இந்தப் பொருள்களும் அதனுடைய லக்கேஜில் இருப்பது அவசியம். அதேபோன்று பவுல், பிளாஸ்டிக் பேக், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துப் பொருள்கள், பிராணிகளுக்கான முதலுதவிப் பெட்டி ஆகியவை டிராவல் கிட்டில் இருப்பது முக்கியம்.

அடையாள அட்டை!

நமக்கு அடையாள அட்டைகள் இருப்பதுபோல, ஒவ்வொரு செல்லப்பிராணிக்கும் அடையாள அட்டை இருக்கிறது. அப்படி இல்லாதவர்கள் மருத்துவர்களிடமோ அல்லது விற்பனையாளர்களிடமோ புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை வாங்கிக்கொள்வது அவசியம். சுற்றுலா செல்லும் இடத்தில் செல்லப்பிராணிகள் தொலைந்துபோனால், இந்த அடையாள அட்டையை வைத்துக் கண்டுபிடிக்கவும், புகார்களைப் பதிவுசெய்யவும் ஏதுவாக இருக்கும்.

உணவும் நீரும்!

பயணத்தின்போது நாம் உட்கொள்ளும் உணவிலும் நீரிலும் மட்டுமல்ல, செல்லப்பிராணிகளுக்குக் கொடுக்கும் உணவிலும் நீரிலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். சீக்கிரம் செரிக்கக்கூடிய உணவு வகைகளைச் செல்லப்பிராணிகளுக்கு வழங்க வேண்டும். அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. சுற்றுலா செல்லும்போது சில நேரம் நமக்கே உணவு கிடைக்காமல் போகலாம் அல்லது நமக்குப் பிடிக்காத உணவுகளைக்கூடச் சாப்பிடும் சூழ்நிலை உருவாகலாம். அதைச் செல்லப்பிராணிகளுக்குச் சாப்பிடக் கொடுக்காமல், அதற்கென பிரத்யேக உணவுகளைக் கொடுப்பதுதான் நல்லது. 

ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கப்படாத குடும்ப உறுப்பினர்கள் என்றால், அது நம் வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள்தான். அதற்குப் பேசும் திறன்தான் கிடையாது. ஆனால், நம்மைப்போல அதற்கும் அன்பு, பாசம், காதல், கோபம், அக்கறை போன்ற உணர்ச்சிகள் இருக்கின்றன. குறிப்பாக நாய்கள், சிலசமயம் அதன் உரிமையாளர் மீது காட்டும் பாசத்தைப் பார்க்கும்போது, மனிதர்கள்கூட இந்தக் காலத்தில் இப்படி இல்லை என்கிற மனோபாவம் எல்லோருக்கும் வரும். அப்படிப்பட்ட செல்லங்களை இனி நம்முடன் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று, அது காணும் சந்தோஷத்தில் நாமும் மகிழ்ச்சி காண்போம்.