Published:Updated:

சென்னை முதல் பர்மா வரை... யமஹா RX135 பைக்கில் 12,000 கி.மீ பயணம்!

சென்னை முதல் பர்மா வரை... யமஹா RX135 பைக்கில் 12,000 கி.மீ பயணம்!
சென்னை முதல் பர்மா வரை... யமஹா RX135 பைக்கில் 12,000 கி.மீ பயணம்!

எல்லா பழைய பைக்குகளும் கிளாசிக் அந்தஸ்தைப் பெறுவதில்லை. குறிப்பிட்ட சில பைக்குகளுக்கு மட்டுமே அது கிடைக்கும். 1980-களில் இளைஞர்களாக இருந்தவர்களில் தொடங்கி இப்போது இளைஞர்களாக இருப்பவர்கள் வரை யமஹா RX சீரிஸ் பைக்குகளின் புராணத்தைப் பாடாமல் இருப்பதில்லை. 2 ஸ்டிரோக் பைக்குகளிலேயே RX பைக்குகளுக்கு தனி கேரக்டர் உண்டு. யமஹாவின் RX பைக்கில் தமிழ்நாட்டைச் சுற்றினாலே குதூகலமாக இருக்கும்... இந்தியாவைச் சுற்றி வந்தால், எப்படி இருக்கும்? 

சென்னையைச் சேர்ந்த ஶ்ரீராம், ஒரு RX135 பைக், கையில் கொஞ்சம் பணம், மனதில் தைரியத்துடன் 13 மாநிலங்கள், 3 சர்வதேச எல்லைகளைக் கடந்து பர்மா வரை பைக்கிலேயே பயணம் செய்து வந்திருக்கிறார். சாஃப்ட்வேர் இன்ஜினீயரான ஶ்ரீராம், ஏற்கெனவே கன்னியாகுமரி முதல் டெல்லி வரை RX135 பைக்கில் பயணம் செய்ததால், இந்த முறை அதிக பரிச்சயம் இல்லாத இடத்துக்குப் பயணிக்க வேண்டும் என்ற முடிவில், வடகிழக்கு இந்தியாவைச் சுற்றிவரக் கிளம்பினாராம். 

``சென்னையில் இருந்து புறப்பட்டு நேப்பாளம், பூட்டானை 30 நாள்ல சுற்றிவர்றதுதான் என் பிளான். ஆனா, வடகிழக்கு இந்தியாவின் அழகும், அங்க நான் பார்த்த மனுஷங்களும் என்னை பர்மா வரைக்கும் பயணம் செய்யவெச்சுட்டாங்க'' என்று சந்தோஷமாக தன் பயணக் கதையைச் சொல்லத் தொடங்கினார். 

``நான் RX135-ல போக ஒரே காரணம், என்கிட்ட அதைத் தவிர வேறு எந்த பைக்கும் இல்லை. கையில காசு இருக்கும்போது, `பைக் வாங்கலாமா இல்லை எங்கேயாவது பயணம் போகலாமா?'னு யோசிச்சு, கடைசியா பயணத்துக்குக் கிளம்பிடுவேன். இந்தப் பயணமே மூணு வாரத்துல முடிவெடுத்துக் கிளம்பியதுதான்" என்று சிலாகித்தார் ஶ்ரீராம். 

``நேபாள் ரொம்பவே ஜாலியான இடம். இந்தியன்னு ஐடி கார்டு வெச்சிருந்தா போதும் பைக்குக்கு பெர்மிட் வாங்கிட்டு நீங்க எவ்ளோ நாள் தேவையோ தங்கலாம். ஆனா, பூட்டான் அப்படியில்லை. சுற்றுலாவைக் குறைக்க நினைக்கிற நாடு அது. பைக்குக்கும் உங்களுக்கும் சேர்த்து பெர்மிட் வாங்கணும். எல்லையில் பெர்மிட் ரெண்டு இடத்துக்குத்தான்  தருவாங்க. மத்த இடம் எல்லாமே தடைசெய்யப்பட்ட பகுதி. அதுக்கு தனியா திம்பு போய், எங்க எவ்ளோ நாள் இருக்கப்போறீங்க, எந்த இடத்துல தங்கப்போறீங்க எல்லாத்துக்கு ஆதாரம் காட்டினாதான் பெர்மிட் கிடைக்கும். பைக்கில் வர்றவங்க பூட்டான்ல இருக்கும் RTO அலுவலகத்துல ஒரு நாளைக்கு 100 ரூபாய் கட்டணும்.

பர்மாவைப் பொறுத்தவரை அங்க இருக்க முதல் நகரம் வரைக்கும்தான் உங்களுக்கு விசா. அதுவும் சாயங்காலம் 4 மணி வரைக்கும்தான். பார்டர்ல உங்களுடைய ஐடி கார்ட்டைக் கொடுத்துட்டு, சாயங்காலம் வந்து ஐடி கார்டை வாங்கிக்கணும். மற்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க நீங்க இங்கேயே விசா எடுத்தாதான் உண்டு" என்று தான் சென்ற இடங்களில் இருந்த கட்டுப்பாடுகளைச் சொன்னார்.

``இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மற்ற பகுதிகளைவிட வித்தியாசமானதா?''

``இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் நிறைய ஒற்றுமை இருக்கு. ஆனா, பூட்டான் ரொம்பவே வித்தியாசமான இடம். அவ்வளவு பெரிய நாட்டுல வெறும் 7 லட்சம் பேர்தான் இருக்காங்க. சாலையெல்லாமே வெறிச்சோடி இருக்கும். ஆனா, செமயா இருக்கும். பூட்டான் உணவு, ரொம்பவே காரமானது. அவங்க ஊர்ல மிளகாய் இல்லாத சாப்பாடே கிடையாது. நம்ம காய்கறி சாப்பிடுறது மாதிரி அவங்க மிளகாயை சைடு டிஷ்ஷா சாப்பிடுறாங்க. பூட்டான்ல இன்னொரு வித்தியாசமான விஷயம், அங்க எந்தக் கடைக்கும் விளம்பரப் பலகையே கிடையாது. ஒவ்வொரு கடைக்கும் ஒரு கலர் குறியீடு இருக்கு. சாப்பாட்டுக் கடைனா நீல போர்டு, துணிக் கடைனா பச்சை போர்டு. லோகோவெல்லாம் வெச்சு விளம்பரம்படுத்தக் கூடாதுனு சட்டமே இருக்காம். 

நேபாள், பூட்டான் போயிட்டா நம்மளோட பெரும்பாலான கிரெடிட், டெபிட் கார்டு வேலை செய்யாது. கையில் பணம்கொண்டு போனாதான் உண்டு. மிசோரம், மணிப்பூர் பகுதியில துப்பாக்கிப் புழக்கம் அதிகம். மிருகங்களை வேட்டையாடக் கூடாதுனு சட்டம் இருந்தும் வேட்டை நடக்குது. நிறையபேர்கிட்ட ரொம்பச் சுலபமா துப்பாக்கியைப் பார்க்கலாம்" என்று வடகிழக்கும் பகுதிகளைப் பற்றிச் சொல்லி முடித்தார்.

பீகாரில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கதையைச் சொல்லத் தொடங்கினார், ``அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருள்களுக்காக பைக்கில் ஒரு பெட்டி பொருத்தியிருந்தேன். அந்தப் பெட்டியின் எடையும், அது இருந்த பொசிஷனும் சரியில்லாம, பைக் ஃபிரேம் உடைஞ்சுப்போச்சு. ஒரே ஒரு இடத்துல கொஞ்சம் ஒட்டிட்டு இருந்ததால், நான் பொழச்சேன். அடுத்த நாள் கோரக்பூர்ல தங்கி வெல்டு அடிச்சிட்டு அந்த டப்பாவை அங்கேயே தூக்கிப்போட்டுட்டுக் கிளம்பிட்டேன்..." என்று நிம்மதி பெருமூச்சு விட்டவர், தனக்குக் கிடைத்த சிறப்பான அனுபவத்தையும் சொல்லாமலில்லை.

``நேபாள்ல 380 மீட்டர் சஸ்பென்ஷன் பாலத்துல பைக் ஓட்டினது வேற லெவல் எக்ஸ்பீரின்ஸ். பாலம் ஆடிட்டே, ரொம்ப வழுக்குற மாதிரி இருக்கும். அது செம த்ரில். திம்பூர்ல இருந்து புனாகாவுக்கு போரப்போ மைனஸ் டிகிரி குளிரில் பைக் ஓட்டினேன். அசாமில் மாயோங்னு ஒரு கிராமத்தைப் பார்த்தேன். கிராமமே பிளாக் மேஜிக்குக்குப் பிரபலமான இடம். பிளாக் மேஜிக் மியூசியம் இங்க இருக்கு. நிறையபேர் என்ன அவங்க வீட்டில் தங்கவெச்சுக்கிட்டாங்க. இம்பால்ல தங்கியிருந்தப்போ, ஒருத்தர் அவர் வீட்டுக் கல்யாணத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போனார். கெளஹாத்தியில் ஒரு மெக்கானிக், எனக்கு உடம்பு முடியாதப்போ அவர் வீட்டிலேயே என்னை தங்கவெச்சி பார்த்துக்கிட்டார். நேபாள்ல எங்க பார்த்தாலும் என்னை நிறுத்தி பைக்கைப் பத்திப் பேசிட்டே இருந்தாங்க. 

மேற்கு வங்காளத்துல ஒருத்தரைச் சந்திச்சேன். சைக்கிள்லேயே இந்தியா முழுக்கச் சுத்திட்டு இருக்கார். 270 நாள்ல 30,000 கி.மீ சைக்கிள் பயணம் பண்ணியிருக்கிறார். ஒரு நாட்டுக்குள்ள அதிக கி.மீ தூரம் பயணம் செஞ்சத்துக்காக கின்னஸ் ரெக்கார்டு வெச்சிருக்கிறார். பர்மா எல்லை பக்கத்துல தங்கியிருந்தப்போ, லண்டனில் இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் சைக்கிள் பயணம் பண்ணிட்டு இருந்த 18 வயசுப் பையன் தங்கியிருந்தான். மணிப்பூர்ல டூரிஸ்ட் வழக்கமா போகிற சாலையில போகாம, மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்குள்ள போயிட்டேன். சின்னச் சின்னச் கிராமங்கள் தவிர, அங்க வேற எதுவுமே இல்லை. அவங்க மொழியும் நமக்குப் புரியலை. நான் எடுத்த ரூட் கிளர்ச்சியாளர்கள் வசிக்கிற இடம்னு பிறகுதான் தெரிஞ்சது. 

முவால்நுவாம்னு ஒரு கிராமம். அங்க சர்ச் வாசலில் இருந்த என்னை ஒருத்தர் அவர் வீட்டுல தங்கவெச்சுக்கிட்டார். அடுத்த நாள் காலையில டீ குடிக்கக் கூட்டிட்டுப் போய், அங்க ஒருத்தர்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினார். `யார் இவர்?'னு கேட்டேன். `அவர்தான் நம்ம ஊர் ஆபரேட்டர்'னு சொன்னார். `என்ன ஆபரேட்டர்?'னு கேட்டேன். `டிஷ்ஷூம் டிஷ்ஷூம்'னு செய்கை செய்தார். ஒரு நிமிஷம் பதறிடுச்சு" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

``டார்ஜிலிங்ல இருக்கும் என்ஃபீல்டு ரைடிங் க்ளப், பர்மா பார்டர்கிட்ட இருக்கும் தமிழ்ச் சங்கம், கானின் தாஸ் பையானு தேடி வந்து உதவ எவ்வளவோ பேர் கிடைச்சாங்க. உதவி செஞ்ச எல்லாருக்கும் காசு கொடுக்கப்பாத்தேன். ஆனா, யாருமே ஒரு பைசாகூட வாங்கலை. என் பைக்கை சரிசெய்து கொடுத்ததுக்குக்கூட யாரும் காசு வாங்கலை. 30 நாள் முடிஞ்ச பிறகு, ஒரு டீக்கடையில் உட்கார்ந்திருக்கிறப்போ இன்னும் நிறைய இடங்களுக்குப் போகலாம்னு தோணுச்சு. வீட்டுக்கு போன் போட்டு வர கொஞ்ச நாள் ஆகும்னு சொல்லிட்டு, பர்மா பக்கம் பயணத்தைத் தொடங்கிட்டேன். கடைசியா 73 நாள் கழிச்சு சென்னைக்குத் திரும்புறப்போ அவ்வளவு மக்கள், அவ்வளவு கலாசாரம் கலந்த மனுஷனா திரும்பி வந்தேன். என்னுடைய எல்லைகள் ரொம்பவே பெருசாயிடுச்சு" என்று சொன்னவரிடம் அடுத்த பயணம் எப்போது என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு விடைபெற்றேன்.

பயணம், நினைவுகளை விட்டுச்செல்லும்போது தொடங்குகிறது; நினைவுகளை எடுத்துச்செல்லும்போது முடிகிறது.