Published:Updated:

உடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்... ஏன்?!

உடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்... ஏன்?!
உடன்பிறப்புகளுடன் ஒரு ட்ரிப் அடிப்பது அவசியம்... ஏன்?!

கடல் அலைக்கும், கடற்கரைக்கும் இருக்கும் பிணைப்பை உடன்பிறப்புகளுக்கு உதாரணமாக சொல்லலாம். காதலர்கள் மட்டுமா கடல் அலைகளில் கால் நனைக்க தகுதியானவர்கள்? உடன் பிறப்புகளுடன் கடற்கரைக்கு...

குழந்தைப் பருவத்தில் உடன் பிறந்தவர்களுடன் பயணிக்கும்போது சண்டைகளும் சச்சரவுகளுமே அதிகம் நிறைந்திருக்கும். ஆனால், இளமைப்பருவத்தில் மேற்கொள்ளும் பயணத்தின்போது உடன்பிறப்புகளுக்குள் பகிர்ந்துகொள்ள ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும். `மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல என்பது’போல,  `சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும், அவர்களைவிடச் சிறந்த நட்பு இந்த உலகில் வேறில்லை’ என்பதும். நண்பர்களுடன் பயணிப்பது ஆனந்தம்தான். ஆனால் அண்ணனுடனோ, தங்கையுடனோ, தம்பியுடனோ பயணிக்கும்போது பாசமும், அக்கறையும், அன்பும், நட்பும் ஒருசேர வெளிப்படுவதை நம்மால் உணர முடியும். 

ஒன்றாய் மலை ஏறுங்கள்!

ஒருதாய் பிள்ளைகளுக்குள் இருக்கும் ஒற்றுமையை, வேறெந்த உறவுகளிலும் நம்மால் பார்க்க முடியாது. ஆனால், இன்றைய காலச் சூழ்நிலை அதைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டிருக்கிறது. டிரெக்கிங் என்று சொல்லப்படும் மலை ஏற்றம், மகத்தான ஃபிட்னஸ் விளையாட்டுகளில் ஒன்று. பாறைகளின் வலிமையை நம்முள் கடத்துகிற சக்தி மலையேற்றத்துக்கு மட்டுமே இருக்கிறது. உடன் பிறந்தவர்களுடன் ஒன்றாய் மலை ஏறும்போது ஒற்றுமையையும், ஒருவர் மீது ஒருவர்கொண்டிருக்கும் அக்கறையையும் சொல்லாமலேயே புரிந்துகொள்ள முடியும். ஒன்றாய் ஓர் அறையில் தூங்குபவர்களாக இருந்தாலும், அமைதியான மலைச்சூழல், மனம்விட்டு பேசுவதற்கான சந்தர்ப்பங்களை அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்கும். அண்ணன் தம்பிகளாய் இணைந்து ஒருமுறை மலையேறி, மனம்விட்டுப் பேசிவிட்டால் அந்த உறவின் பலம் என்றென்றைக்கும் அப்படியே இருக்கும். இந்தியாவில் மலை ஏற்றத்துக்கென்றே ஏராளமான மலைகள் பிரபலம். தென் இந்திய மலைகளைவிட, வட இந்தியாவில் இருக்கும் சிங்கலிலா, ஜன்சாகர், ரூப்குன்ட் போன்ற பெரும்பாலான மலைகள் சுவாரஸ்யம் நிறைந்தவையாக இருக்கும். உங்களின் உடன்பிறப்புடன் மலையேற, சிறந்த மலையை இப்போதே தேர்வுசெய்யுங்கள்.

பரவசம் தரும் ரோடு டிரிப்!

சாலை வழியாக இலக்கு இல்லாத பயணத்தை, உடன்பிறப்புகளுடன் மேற்கொள்ளும்போது அழகாக இருக்கும். வீட்டில் அனுமதி கிடைத்துவிட்டால் அது ஓர் அனுபவமாகவும், அனுமதி கிடைக்காமல் ரோடு டிரிப் அடித்தால் திரில்லிங்காகவும் இருப்பது இப்படியான பயணங்கள்தான். உடன் அண்ணனோ, தம்பியோ, அக்காவோ இருக்கிறார்கள் என்கிற தைரியம் இருக்கும்போது பயணங்களின் வழியே உலகையே சுற்றிப்பார்க்கலாம் என்கிற எண்ணம் வரும். இந்தியாவில் சாலைவழி பயணக்களுக்கென்றே, ஏராளமான சாலைகள் பிரசித்திபெற்றிருக்கின்றன. அதில் மிக முக்கியமானது `கோவா டு மும்பை’ சாலைதான். இந்தச் சாலை வழியாகப் பயணிக்கும்போது இடையிடையே வருகிற கிராமங்களில் இளைப்பாறுதல் மிக அழகு. இப்படிப் பயணிக்கும்போது யாருமே கால் பதிக்காத இடங்களுக்குச் சென்றுவருவது மனதுக்கும் உடலுக்கும் ஒருவகையான இன்பத்தைக் கொடுக்கும். இப்போதே காரை ஸ்டார்ட் செய்யுங்கள்; கால் வலிக்கும் வரை பயணித்துத் திரும்புங்கள்.

ஜாலி வாலி தீம்பார்க்குகள்!

சிறு வயதை அசைபோட்டு மகிழ்வதற்கான ஒரே இடம் தீம்பார்க்தான். குழந்தையாய் இருந்தபோது, அடிக்கடி போன தீம்பார்க்குக்கு இப்போது கிளம்புங்கள். அந்த அனுபவங்கள் இன்றும் அங்கே அப்படியேதான் இருக்கும். அதை இருவருமாகச் சேர்ந்து அசைபோடுங்கள். அது தரும் ஆனந்தமும் ஜாலியும் உங்களைச் சந்தோஷத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும். எப்போதும் இறுக்கமான மனநிலையில் இருக்கும் அண்ணனோ, தம்பியோ, தங்கையோ அல்லது அக்காவோ யாராக இருந்தாலும், அவர்களை சந்தோஷக் கடலில் நீந்தவைக்கும் சக்தி, தீம் பார்க்குக்கு உண்டு. நீங்களும் சரி, உங்களுடன் பிறந்தவர்களும் சரி தங்களையும் மறந்து குழந்தைகளாவதை உணர்வீர்கள். அந்தத் தருணம் என்றென்றைக்கும் நீங்காத நினைவுகளாகும். 

கண்டிப்பாக ஷாப்பிங் செய்யுங்கள்!

நண்பர்களுடன் ஷாப்பிங் செய்வதைவிட, உடன் பிறந்தவர்களுடன் ஷாப்பிங் செய்யும் சுகம் அலாதியானது. உடன் பிறந்தவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதைத் தெரிந்துகொள்ள ஷாப்பிங் செய்யும் தருணங்களைவிட, வேறெந்த தருணமும் சிறந்ததாக இருக்காது. ஷாப்பிங் செய்யும் நேரத்தில், வழக்கமானதைவிட அதிகமாகப் பேசும் வாய்ப்புகள் வாய்க்கின்றன. இது உறவு பலப்படுவதற்கான காரணமாக அமையும். அதுமட்டுமல்லாமல், நமக்காகத் தேர்வுசெய்து கொடுப்பதிலும், நம்மை ஸ்டைல் ஐகானாக்குவதிலும் அதிக அக்கறைகொண்டிருப்பவர்கள் உடன் பிறப்புகளாகத்தான் இருக்க முடியும். உள்நாட்டில் ஷாப்பிங் செய்யும் அனுபவத்தைக் காட்டிலும், வெளிநாடுகளுக்குச் சென்று ஷாப்பிங் செய்யும்போது உடன்பிறப்புகளுக்கு மத்தியில் நடக்கும் உரையாடல்கள் சுவாரஸ்யமானதாகவும், நினைத்துப்பார்த்து மகிழ நகைச்சுவை நிறைந்ததாகவும் இருக்கும். அதனால், இப்போதே கிளம்புங்கள் ஷாப்பிங் டெஸ்டினேஷனுக்கு. 

கடல் அலைகளுடன் உறவாடுங்கள்!

சலிப்பை ஏற்படுத்தாத ஓர் இடம் இந்த உலகில் இருக்கிறது என்றால், அது கடற்கரைதான். கடல் அலைக்கும் கடற்கரைக்கும் இருக்கும் பிணைப்பை உடன்பிறப்புகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். காதலர்கள் மட்டுமா கடல் அலைகளில் கால் நனைக்கத் தகுதியானவர்கள்? உடன் பிறப்புகளுடன் கடற்கரைக்குச் சென்று ஆடிப் பாடி மகிழ்ந்து, ஆசை தீர கால் நனைத்து அளவளாவும் சுகம் வேறெந்த உறவிலும் கிடைக்காதது. கோவா மாதிரியான கடற்கரைகள் உடன்பிறப்புகளுடன் பயணிக்க ஏதுவானவை. இந்தியத் தீவுகளான அந்தமான், நிக்கோபார் கடற்கரைகளும், அங்கு வீசும் சுத்தமான காற்றும் உறவுகளின் புனிதத்தை அதிகப்படுத்தும் என்பதே உண்மை. இப்போதே தயாராகுங்கள், கடலும் கடல் காற்றும் உங்களின் சகோதரத்துவத்தை மகத்துவமாக்கட்டும்.

அடுத்த கட்டுரைக்கு