Published:Updated:

சோழர் காலத்து கோட்டை... அதிகம் அறிந்திடாத தமிழகத்தின் மீது ஒரு பருந்துப் பார்வை!

கோடை விடுமுறை வந்தாச்சு. கடுமையான வெயிலிலிருந்து தப்பிக்க, எந்த ஊருக்குப் போகலாம் என்று சுற்றிக்கொண்டிருக்கும் நேரமிது. விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஊர், பெயர் தெரியாத எத்தனையோ இடங்களை நாம் கூகுளில் வலைவீசித் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் அழகியலைப் படமெடுத்து பிரமிக்கவைத்துக்கொண்டிருக்கிறார், இந்த இயற்கைக் காதலன். திண்டிவனத்தின் அருகில் உள்ள மயிலம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்த கருணாகரன், ட்ரோன் கேமரா கருவியில் எடுத்த படங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் கதைகள் பேசுகிறது. முதல்முறையாக இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்ட கருணாவோடு சிறிய டிராவல்...

``படத்தொகுப்பாளரிலிருந்து பயணப் புகைப்படக் கலைஞரானது எப்படி?"

``இன்ஜினீயரிங் படிக்கும்போதே எனக்கு படத்தொகுப்பு மேல ஆர்வம் அதிகம். ஒருமுறை மகளிர் சுயஉதவிக் குழுக்காக, எங்க கல்லூரி சார்பா ஒரு பாடல் பண்ணணும்னு கேட்டுக்கிட்டப்போ, அதைப் படத்தொகுப்பு பண்றதுக்கான வாய்ப்பு எனக்கு வந்துச்சு. அது மாவட்ட அளவுல பெரிய வரவேற்பைப் பெற்றதால, இதான் நமக்கான துறைன்னு இன்ஜினீயரிங் முடிச்சதும் திரைப்படக் கல்லூரியில டிப்ளோமா இன் ஃபிலிம் எடிட்டிங் படிச்சேன். முடிச்சதும் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்த `கபாலி', `பைரவா', `மங்காத்தா', `ஆரண்யகாண்டம்' படங்களுக்காக தேசிய விருது வாங்கிய எடிட்டர் கே.எல்.பிரவீன் சார்கிட்ட வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது.

அவர்கிட்ட உதவி படத்தொகுப்பாளரா இருந்த காலகட்டத்துல நிறைய கத்துக்கிட்டேன். இந்தத் துறைக்கான நுணுக்கங்களை சார் அழகா சொல்லிக்கொடுத்தார். துறை சார்ந்த காதல் இருந்தாலும் அந்தப் பணியோட தன்மையே நாலு சுவத்துக்குள்ள அடங்கிய வாழ்க்கை. இது அயர்ச்சியைக் கொடுத்துச்சு. கொஞ்சம் மனரீதியாவும் உடல்ரீதியாவும் ஓய்வு தேவைப்பட்டுச்சு. ஆனா, வேலை மேல இருந்த காதல் குறையலை. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ அண்ணா, அப்பா, அம்மா  எல்லோரும் என்னை `தனியா ஒரு டிராவல் போயிட்டு வா. அப்புறம் யோசிக்கலாம்!'னு சொன்னாங்க. அப்படி ஆரம்பமானதுதான் இந்தப் பயணம்."

``புகைப்படங்களுக்கான இடங்களை எப்படித் தேர்வுசெய்கிறீர்கள்?"

``வரலாற்றுல மறக்கப்பட்ட, பெருசா வெளியுலத்துக்கு அறிமுகம் இல்லாத, காட்சிப்பதிவு செய்யப்படாத இடங்கள்தான் என்னுடைய முதன்மையான தேர்வு. ஒரு மாநிலத்தையே 15 நிமிடப் படத்துக்குள்ள அடக்கிட முடியுமான்னு கேட்டா, கண்டிப்பா முடியாது. அதனாலே மாவட்டவாரியா என்னோட பயணம் இருக்கணும்னு முடிவுபண்ணினேன். அதுவும் பரப்பளவுல அதிகமா இருக்கிற மாவட்டங்கள்தான் முதல் சாய்ஸ். ஒரு மாவட்டத்துல புறக்கணிக்கப்பட்டு ஆனா, புறக்கணிக்கப்படக் கூடாத இடங்கள்தான் என் படத்துக்கான ஆரம்பப்புள்ளி. அந்த வகையில நான் முதல்ல தேர்வு செஞ்ச இடம் விழுப்புரம். தேர்வு செஞ்ச இடத்தை முடிஞ்சளவுக்கு எல்லா கோணத்துலையும் பதிவுபண்ணினேன். அடிப்படையில நானே படத்தொகுப்பாளரா இருக்கிறதால காட்சிக்கான நேர அளவை படம் பண்ணும்போதே தீர்மானிச்சுடுவேன். ஒரு இடம் பதிவுபண்றோம்னா அது 30 நொடியாவது கண்டிப்பா இருக்கணும். அப்போதான் பார்க்கிற பார்வையாளர்களுக்கு அந்த இடத்துக்கே பயணப்பட்ட அனுபவம் கிடைக்கும்."

`` `ட்ரோன்' பயன்படுத்தி புகைப்படம் எடுக்கணும்னு ஏன் தோணுச்சு?" 

``ஆதிகாலத்துல நாம எல்லாருமே மண், மரம், காடு, மலை, கடல் என முழுவதும் இயற்கையைச் சார்ந்துதான் வாழ்ந்துட்டு இருந்தோம். ஆனா, இப்போ நகரமயமாக்கப்பட்ட கான்கிரீட் காட்டுக்குள்ள அடைப்பட்டு இருக்கோம். சுற்றுலாங்கிற பேர்ல பயணப்படணும்னு நினைக்கிற ஒவ்வொருத்தரும் மலை, கடல், காடுனு ஆதிகால வாழ்க்கைமுறையைத் தேடித்தான் போறோம்.

இயற்கையோடு பிணைந்து வாழுறது நம்ம ஒவ்வொருத்தரோட ஜீன்லயும் இருக்கிறதா நான் முழுசா நம்புறேன். சுற்றுலாத்தலங்கள்னு பொதுவாவே வரையறுக்கப்பட்டு வெச்சிருக்கிற இடங்கள் மட்டும்தான் அழகியல்கிற பார்வை மேல எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு இடமும் கொண்டாடப்படவேண்டிய இடம். அந்தந்த இடங்கள்ல இருக்கிற மக்கள் தினசரி பார்த்துட்டு இருக்கிற இடம்தானே, இதை எப்படி யாருமே பார்க்காத இடமா காட்ட முடியும்? நமக்கு ரொம்பப் பழக்கப்பட்ட இடத்தை யாரும் பார்க்காத கோணத்துல எடுத்து, அந்தப் பகுதி மக்களுக்கே அந்த இடத்தோட அழகியலைத் தெரியவைக்கணும்கிற முயற்சிதான் `ட்ரோன்'ங்கிற  ஆள் இல்லா பறக்கும் கேமராவுல, பறவையோட பார்வையில பதிவுபண்ணலாமேங்கிற யோசனை வரக்காரணம்."

``இந்த ஓராண்டு பயணத்துல உங்களுக்கு மறக்க முடியாத அனுபவம்?"

`` `பெருமுக்கல்'ங்கிற ஊர்ல சோழர் காலத்துல கட்டப்பட்ட கோட்டையோடுகூடிய சிவன் கோயில் இருக்கிறதா கேள்விப்பட்டு, அந்த இடத்தைப் பற்றித் தெரிஞ்சிக்க விக்கிபீடியாவுல பார்த்தேன். அப்போ ஒரு போட்டோ கிடைச்சது. அதை ஆதாரமா வெச்சு, நேர்ல போயி பார்க்கிறப்போ பெரிய அதிர்ச்சி. பாதி மலையை வெட்டி எடுத்துட்டாங்க! மலைக்கு மேல கோயில் இருக்கிற இடத்தைத் தவிர, சுற்றி ஒண்ணுமே இல்லை. 4000 வருடப் பொக்கிஷத்துக்கு நாம கொடுக்கிற பரிசு இதானானு ரொம்ப வருத்தமாபோச்சு. இதே மாதிரி ஒரு நிலைமைதான் பெரும்பாக்கத்துல இருக்கிற 1000 வருஷம் பழைமையான முருகர் கோயிலுக்கும். அது இப்ப கல் குவாரியா இருக்கு" என்று வேதனையுடன் பகிர்ந்துகொண்டார் கருணாகரன்.