Published:Updated:

டால்பின் நோஸ், பெருமேடு, தடா... ஓரிரு நாளில் டிரெக்கிங் முடிக்க ஏற்ற இடங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டால்பின் நோஸ், பெருமேடு, தடா... ஓரிரு நாளில் டிரெக்கிங் முடிக்க ஏற்ற இடங்கள்!
டால்பின் நோஸ், பெருமேடு, தடா... ஓரிரு நாளில் டிரெக்கிங் முடிக்க ஏற்ற இடங்கள்!

உடலிலுள்ள மினரல்கள் மலையேற்றத்தின் போது குறையும் என்பதால், அதை மறுசீர் செய்வதற்காக எலெக்ட்ரால் பவுடர் வைத்துக் கொள்வது நல்லது. அதே போல சாப்பிடுவதற்கு சாக்லேட்கள் ஏற்றது.

லைக்காடுகளில் பயணிக்கும் சுகத்தை, வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அனுபவிக்கும்போதுதான் அதிலிருக்கும் ஆனந்தம் புரியும். நிழல் படர்ந்த காடுகள், சலசலவென ஓடும் நீரோடைகள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள், கீச்... கீச்... என்று கத்தும் பறவைகள் என, மலையேற்றம் தரும் அனுபவம் நம் ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்கவைக்கும். மலையேற்றம், சாகச ப்ரியர்களுக்கு மட்டுமல்ல... வித்தியாச விரும்பிகளுக்கும் ஏற்ற புதுமாதிரியான ஒரு விஷயம். ஓரிரு நாளில் டிரெக்கிங் முடித்துவிட்டு வீடு திரும்ப நினைப்பவர்கள், கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் இடங்களைப் பரிசீலிக்கலாம். 

தடையில்லாமல் கொட்டும் தடா!

டால்பின் நோஸ், பெருமேடு, தடா... ஓரிரு நாளில் டிரெக்கிங் முடிக்க ஏற்ற இடங்கள்!

சென்னையிலிருந்து சித்தூர் நோக்கி 80 கி.மீ பயணித்தால் வந்துவிடுகிறது தடா. இங்கு இருக்கும் கிராமங்களைக் கடந்து, மேலும் 20 கி.மீ பயணித்தால், தடா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கும் காட்டுப் பகுதியை அடையலாம். அடர்ந்த காடுகளின் ஆரம்பத்திலேயே அகன்ற நீரோடை அழகாய் வரவேற்கிறது. சென்னையில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு தடா நீர்வீழ்ச்சி தெரிந்த இடங்களுள் ஒன்றுதான். இதைப் பெரும்பாலானவர்களின் ஃபேவரைட் என்றும் சொல்லலாம்.  

பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் நிறைந்த இடம் என்பதால், பெரும்பாலான டிரெக்கிங் ப்ரியர்கள் இந்த இடத்தைத் தேர்வுசெய்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சென்னையிலிருந்து இந்த இடத்துக்கு  சாலைப் போக்குவரத்து வசதிகள் வெகுவாக இருப்பதும் ஒரு காரணம். இங்கு உள்ள டிரெக்கிங் மேற்கொள்ளும் இடத்தின் நீளம் 10 கி.மீ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எல்லா காலங்களிலும் அருவியின் அழகை ரசிக்க முடியும் என்றாலும், ஜூன் முதல்  நவம்பர் வரையிலான நாளில் பயணிப்பவர்கள், மலையெங்கிலும் உருவாகியிருக்கும் அருவியை கண்ணாரக் கண்டுகளிக்கலாம். இங்கு மலையேறுவதில் இருக்கும் ரிஸ்க் அளவு குறைவு என்பதால், குடும்பத்துடனும் பயணிக்க முடியும். 

ஐந்தருவி அதிசயம் நாகாலாபுரம்!

டால்பின் நோஸ், பெருமேடு, தடா... ஓரிரு நாளில் டிரெக்கிங் முடிக்க ஏற்ற இடங்கள்!

சென்னைவாசிகளுக்குக்கூட அதிகம் பரிச்சயம் இல்லாத டிரெக்கிங் ஸ்பாட் என்றால், அது நாகலாபுரம் நீழ்வீழ்ச்சிதான். ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, சென்னையிலிருந்து 73 கி.மீ பயணிக்க வேண்டும். இங்கு உள்ள மலைப்பகுதிகளில் டிரெக்கிங் புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். இங்கு உள்ள மலைப்பாதைகள் சற்றே அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அட்வெஞ்சர் பயணிகளுக்கு ஏற்ற இடம் இது. சிறிய மலை ஓடைகள் அதிகம் இருப்பதால், நடக்கும் பாதைகள் அனைத்தும் சில்லென்ற உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இங்கு டிரெக்கிங் மேற்கொள்ளும் மலையின் உயரம் 13 கி.மீ எனக் கணக்கிடப்பட்டுள்ளது. டிரெக்கிங்குக்கு ஜனவரி முதல் ஜூன் வரையிலான நாள்கள் ஏற்றவை. இங்கு டிரெக்கிங் மேற்கொள்வதில் இருக்கும் ரிஸ்க் அளவு சராசரி என்பது கவனிக்கவேண்டிய விஷயம். 

பரவசம் தரும் பெருமேடு!

டால்பின் நோஸ், பெருமேடு, தடா... ஓரிரு நாளில் டிரெக்கிங் முடிக்க ஏற்ற இடங்கள்!

சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏலகிரியில் உள்ள பெருமேடு, நீர்வீழ்ச்சியாக மட்டுமல்லாமல் டிரெக்கிங் செய்வதற்கும்  ஏற்ற இடமாக அமைந்திருக்கிறது. சென்னையிலிருந்து 220 கி.மீ தொலைவு பயணம் செய்தால், இந்த இடத்தை அடையலாம். அழகான பள்ளத்தாக்குகள், வனவிலங்கு சரணாலயங்கள், நீர்வீழ்ச்சியின் சாரல் என 1,050 மீட்டர் உயரம்கொண்ட மலை முழுவதும் இயற்கை பரவிக் கிடைப்பதால், மலை ஏறுவதற்கான நோக்கம் இங்கு முழுமைபெறும். மலைப்பாங்கான காட்டில் புத்தூரிலிருந்து பெருமேடு வரை 3 கி.மீ தொலைவு வரை பாதை அமைந்துள்ளது. ரிஸ்க் சராசரி என்பதால், பெருமேடுவுக்கு ஜாலியாக ஒரு விசிட் அடிக்கலாம். 

டிப்ஸ்
*டிரெக்கிங்கை தொடங்குவதற்கு முன்பாக, அந்த இடத்தை ஆராய்ந்து இடையூறுகள் எதுவும் இல்லாதபட்சத்தில்தான் டிரெக்கிங்கைத் தொடங்க வேண்டும்.

* டிரெக்கிங்கில் கலந்துகொள்பவர்களின் உடல்நலம் சீராக இருப்பது அவசியம். காய்ச்சல், மூட்டுவலி இருப்பவர்கள் டிரெக்கிங் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நலம்.

* குழுவாகச் செல்லும்போது, ஒரு குழுவில் 25-க்கும் மேற்பட்டவர்கள் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

* டிரெக்கிங் மேற்கொள்பவர்கள் ஒவ்வொருவரும் முதலுதவிக்குத் தேவையான மருந்துகளை உடன் வைத்துக்கொள்வது அவசியம். அதேபோல, திசை காட்டும் கருவியும் எல்லோரிடமும் இருக்க வேண்டும். 

* உடலிலுள்ள மினரல்கள் மலையேற்றத்தின்போது குறையும் என்பதால், அதை மறுசீர் செய்வதற்காக எலெக்ட்ரால் பவுடர் வைத்துக்கொள்வது நல்லது. அதேபோல சாப்பிடுவதற்கு சாக்லேட்கள் ஏற்றது. 

* மலைப்பாதைகளில் நடக்கவேண்டியிருக்கும் என்பதால், உடலை முழுவதும் மறைக்கும்படியான ஆடைகளை அணிவது நல்லது. 

டால்பின் நோஸ்!

டால்பின் நோஸ், பெருமேடு, தடா... ஓரிரு நாளில் டிரெக்கிங் முடிக்க ஏற்ற இடங்கள்!

டிரெக்கிங்கிலேயே வித்தியாசத்தை விரும்புபவர்களுக்கு இந்த இடம் ஏற்றது. இது கொடைக்கானலிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த இடத்திலிருந்து கொடைக்கானலில் உள்ள அனைத்து மலைகளையும், அழகான பள்ளத்தாக்குகளையும் ரசிக்கலாம். இங்கே இருக்கும் மற்றொரு புது அனுபவம், டால்பின் மூக்குபோல் இருக்கும் பாறையின் மீது அமர்ந்து, அதன் கீழ் இருக்கும் ஆழமான பள்ளத்தாக்குகளைக் காண முடியும். அதேசமயம் இந்த இடம் ஆபத்தானது என்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இங்கு டிரெக்கிங் செய்வது சுலபம்தான் என்றாலும் தனியாகச் செல்வதைத் தவிர்த்து, நல்ல டிரெக்கிங் வழிகாட்டியுடன் சென்றால் இன்னும் அதிகப்படியாக மகிழலாம். 

கொல்லிமலை!

டால்பின் நோஸ், பெருமேடு, தடா... ஓரிரு நாளில் டிரெக்கிங் முடிக்க ஏற்ற இடங்கள்!

சவால்கள் நிறைந்த டிரெக்கிங்கை விரும்புபவர்களுக்கு ஏற்றது, இந்தக் கொல்லிமலை. சித்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதாலும், மூலிகைச் செடிகள்  அதிகம் இருக்கும் மலை என்பதாலும் உடலுக்கும் மனதுக்கும் பலம் சேர்க்கும். மலையேற்றத்தை மேற்கொள்வதற்காக ஏராளமானவர்கள் இந்த இடத்தைத் தேர்வுசெய்கிறார்கள். சென்னையிலிருந்து 357 கி.மீ தொலைவில் நாமக்கல் மாவட்டத்துக்கு மிக அருகில் இந்த மலை அமைந்துள்ளது. வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு டிரெக்கிங் பாதையில் நீளம் இங்கு 18 கி.மீ தூரம் அமைந்துள்ளது. புளியஞ்சோலை கிராமத்தில் ஆரம்பித்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் டிரெக்கிங் பாதை முடிவடைகிறது. டிரெக்கிங்குக்கு பிப்ரவரி முதல் டிசம்பர் வரையிலான நாள்கள் ஏற்றவை.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு