Published:Updated:

ஆம்னி பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பது யார்..?

விகடன் டீம்
ஆம்னி பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பது யார்..?
ஆம்னி பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பது யார்..?
ஆம்னி பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பது யார்..?

தமிழகத்தில்  தனியார் பேருந்துகளுக்கென தனியாகக் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. அரசு நிர்ணயிப்பது பொதுவான கட்டணம்தான். ஆனால், ஆம்னி பஸ்கள் அந்தக் கட்டணத்தைப் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து வரும் புகார்கள்மீது பெரிய அளவில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. காரணம், தனியார் பேருந்துகளுக்குக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாகத் தமிழக மோட்டார் வாகனச் சட்டத்தில் எந்தத் தெளிவுமில்லை. 

2016-ல், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 'ஆம்னி பஸ்களின் கட்டணத்தை அரசு ஏன் நிர்ணயிக்கவில்லை' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். 'தமிழகத்தில் ஆம்னி பஸ்களுக்குக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக அரசாணையோ, சட்டமோ இல்லை' என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தார்கள். ஆம்னி பஸ் கட்டணம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம், ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கை என்னானது என்று தெரியவில்லை. இதே போன்றதொரு வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், 'தனியார் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை மாநில அரசே நிர்ணயிக்கலாம்' என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் தற்போதுவரை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம்தான் கட்டணங்களை நிர்ணயிக்கிறது. பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் விமானக் கட்டணத்துக்கு இணையாக விருப்பம்போல கட்டணத்தை ஏற்றிக்கொள்கிறார்கள். 

'பண்டிகைக்காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது' என்று அரசு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். யதார்த்தம் என்னவென்றால், அதிகக் கட்டணம் வாங்குவது நிரூபிக்கப்பட்டாலும் அந்தப் பேருந்து நிறுவனம் மீது அதற்காக நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை. அதனால், 'டிரைவர் சீருடை அணியவில்லை', 'அதிக வேகம்' என்று வேறு காரணங்களை வைத்தே அபராதம் விதிக்கப்படுகிறது. 

கூடுதல் கட்டணம் போன்ற புகார்களுக்கு 1800-425-6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆனால், இதுவரை எந்தப் புகாரின்மீதும் ஆக்கபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்தி புதிய ஷரத்தை சேர்த்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்!