நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் தற்போது உலக மக்கள் தொகையானது 771 கோடியைத் தாண்டியுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலும் அதிகளவில் உள்ளது.
உலக மக்கள் தொகையில் 17.74 சதவிகிதம் பேர் வாழும் இந்தியாவில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மும்பை மற்றும் டெல்லியில்தான். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகம் செல்வோர், தொழிலாளர்கள் எனக் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த 5 வருடங்களில் வாகனங்களின் எண்ணிக்கையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெருகிவிட்டது.

சமீபத்தில் டாம்டாம் வெளியிட்டுள்ள போக்குவரத்து அட்டவணை (Traffic Index) அறிக்கையின்படி, உலகிலேயே மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நகரங்களின் பட்டியலில் முதல் ஐந்து இடத்தில் இரண்டு இடங்களில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. முதலிடத்தில் இருப்பது இந்தியாவின் மும்பைதான். இங்கு 65 சதவிகிதம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 1 சதவிகிதம் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.
போக்குவரத்து தொடர்பாக டாம்டாம் (TomTom) கடந்த 8 வருடங்களாகத் தகவல்களை வெளியிட்டு வருகிறது. இதில், 6 கண்டங்கள் மற்றும் 56 நாடுகளில் உள்ள 403 நகரங்களில் எடுக்கப்பட்ட தகவலின்படி, முதலிடத்தில் மும்பை 65 சதவிகிதம் போக்குவரத்து நெரிசலுடனும், இரண்டாவது இடத்தில் கொலம்பியாவின் பொகோட்டாவும் (63%), மூன்றாவது இடத்தில் பெரு நாட்டின் லிமாவும் (58%) உள்ளது. அதேபோல் நான்காவது இடத்தில் டெல்லி (58%) உள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கடுமையான சட்ட திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதே பல்வேறு அமைப்பினரின் கோரிக்கையாக உள்ளது.