Published:Updated:

ஜூலை டு டிசம்பர்... எந்த லீவுக்கு எங்கு போகலாம்? 2020 டூர் காலண்டர் Part-2

எந்த மாதம், எத்தனை லீவு... அந்த சீசனுக்கு ஏற்ப எந்த இடத்துக்குப் போகலாம் என உங்களுடைய 2020 டிராவல்களைத் திட்டமிட ஒரு காலண்டர்.

ஏற்கெனவே, ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வரும் விடுமுறை நாள்களுக்கு, எங்கெங்கு செல்லலாம் என்பதைப் பார்த்துவிட்டோம். டூர் கேலண்டரின் இந்த முதல் பாக கட்டுரையைப் படிக்காதவர்கள், மறக்காமல் படித்துவிடுங்கள். இப்போது, அடுத்த 6 மாதங்களின் விடுமுறையில் எங்கெல்லாம் டூர் அடிக்கலாம் எனத் திட்டமிடுவோம்.

2020-ல் முதல் ஆறு மாதங்களில் எப்போதெல்லாம் லீவு... எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்?  Part-1
ஜூலை - டிசம்பருக்கு இடைப்பட்ட 6 மாதங்களின் விடுமுறையில் எங்கே டூர் அடிக்கலாம் எனத் திட்டமிடுவோம்.
2
போபால் அருங்காட்சியகம்

ஜூலை : போபால்

ஜூலை மாதத்தில், நீண்ட விடுமுறை தினங்கள் எதுவுமில்லை. இதனால் வார இறுதி நாள்களைத் தொடர்ந்து வரும் இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு, மொத்தம் நான்கு நாள்கள் மத்தியப்பிரேதசத்திலிருக்கும் போபாலுக்கு சுற்றுலா செல்லலாம். கோர நிகழ்வால் நம் மனத்தில் நின்ற போபால், வரலாற்று சிறப்புமிக்க அழகான இடம். போபாலுக்கு, ஏரிகளின் நகரம் என்று இன்னொரு பெயர் இருக்கிறது. இங்கிருக்கும் அப்பர் (upper lake) மற்றும் லோயர் லேக்கில் (lower lake) பிக்னிக் போட்டுத் தங்கலாம்.

அப்பர் லேக் பகுதியில் இருக்கும் கோஹர் மாளிகை (Gohar mahal) முகலாய-இந்து நெருக்கத்தின் ஆதாரம். இந்தக் கோட்டையில், இரண்டு விதமான கலாசாரங்களையும் பார்க்கலாம். தாஜ்-உல் மஸ்ஜித் முஸ்லிம்களின் முக்கியமான மசூதி மட்டுமல்ல, போபாலின் பிரபலமான சுற்றுலாத் தளமும்கூட. ஒரே நேரத்தில் 1,75,000 பேர் வந்துபோகும் அளவுக்கு பெரிய மசூதி இது. இதன் நுழைவு வாயிலில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிரியா மசூதிகளில் காணப்படும் கலை வடிவங்கள் இருக்கின்றன என்பது இதற்கு இன்னும் சிறப்பை சேர்க்கிறது.

கோஹர் மஹால், போபால்

விஹார் தேசியப் பூங்கா, மானாவ் சாங்க்ரஹாலாயா, பாரத் பவன், கோலார் அணை, இஸ்லாம் நகர், சாத்பூரா தேசியப் பூங்கா ஆகியவை செக்லிஸ்ட்டில் போடவேண்டிய இடங்கள். போபாலில் ஜூலை மாதம் மழைக்காலம் என்பதால், ரெயின் கோட்டை மறக்காமல் எடுத்துச்செல்லுங்கள். போபால் சென்றால் நாளொன்றுக்கு, நபருக்கு ₹2000 செலவாகும்.

3
மலைகளின் ராணி முசோரி

ஆகஸ்ட் : முசோரி

ஆகஸ்ட் மாதம், சுதந்திர தினம் மட்டும்தான் ஒரே விடுமுறை தினம். அதுவும் சனிக்கிழமை என்பதால், வெள்ளிக்கிழமை அல்லது திங்கள்கிழமை சேர்த்து விடுமுறை எடுத்தாக வேண்டும். இந்த மூன்று நாள் விடுமுறையில், உத்தரகாண்ட்டில் உள்ள முசோரிக்குச் செல்லலாம். `மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் முசோரிக்குச் சென்றால், அருகில் இருக்கும் டேராடூன்தான் நீங்கள் முதலில் சுற்றிப்பார்க்கவேண்டிய இடம்.

விட்டாச்சு லீவு... குழந்தைகள் குதூகலிக்க வித்தியாசமான 5 விளையாட்டுகள்! #HappyHolidays

புனிதத் தளங்கள், அழகான நதிக்கரைகள், கால்வாய் படகு சவாரி என மனத்தை கொள்ளையடிக்கப் பல இடங்கள் இருக்கின்றன. பாஹ்ட்டா நீர்வீழ்ச்சி, மால் ரோடு, கன் மலை, ஹாத்தி பாவுன், கெம்படி நீர்வீழ்ச்சி, கால்சாங்க் ஃப்ரெண்ட்ஸ் கார்னர், கேமெல்ஸ் பேக் ரோடு ஆகிய இடங்களும் மிக முக்கியமானவை. ஆகஸ்ட் மாதத்தில் பருவமழை தொடங்கியிருக்கும் என்பதால், மிதமான மழையுடன் முசோரியின் சிகரங்களுக்கு டிரெக்கிங் செல்லலாம். 80 அடி உயரத்தில், 300 அடி நீளத்தில், ஸ்கை ப்ரிட்ஜ் எனும் நீளமான பாலம் இருக்கிறது. திக்திக் அனுபவத்தை எதிர்பார்ப்பவர்கள், இந்தப் பாலத்தில் நடந்துவந்தால் போதும்.

முசோரி

முசோரியில், ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1,000 முதல் 2,000 ரூபாய் போதுமானது. உங்களை நகரச் சூழலிலிருந்து அப்படியே வெளியே கொண்டுவந்துவிடும், முசோரியின் மலைகள்.

4
அருணாசலப் பிரதேசம்

செப்டம்பர் : அருணாசலப்பிரதேசம்

முந்தைய இரண்டு மாதங்களைப் போல செப்டம்பரிலும் விடுமுறை இல்லை. ஏதாவது ஒரு வார இறுதிநாள்களைத் தேர்ந்தெடுத்து, அதோடு சேர்த்து இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால், 4 நாள்களில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப்பிரதேசத்திற்குச் செல்லலாம். சுற்றுலாப் பயணிகள் குறைவாகவே வந்துபோகும் அருணாசலப் பிரதேசம், பல சுவாரஸ்யங்கள் நிறைந்த இடம்.

இங்கு வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை, தனி கலாசாரமும் நாகரிகமும் கொண்டது. கொண்டாட்டங்கள் நிறைந்தது. செப்டம்பர் மாதம், சீரோ பள்ளத்தாக்கில் (Ziro Valley) இசைத் திருவிழா நடக்கும். அதில் கலந்துகொண்டு, இசை மற்றும் இயற்கையாலான புதிய உலகத்திற்குள் செல்லலாம். பழங்குடியின இசை இந்தப் பள்ளத்தாக்கில் ஒலிக்கும்போது, இயற்கையை அதன் சாரத்தோடு ரசிக்கும் ஓர் இன்பம் கிடைக்கும்.

சிரோ இசை திருவிழா

மேலும் செல்லா பாஸ், டாவாங்க் கோம்பா, டாவாங்க், டாலே பள்ளத்தாக்குப் பாதை, நம்தாபா தேசியப் பூங்கா, டிபாங்க் பள்ளத்தாக்கு, லோஹித் பள்ளத்தாக்கு, ஈகள் நெஸ்ட் பறவைகள் சரணாலயம் ஆகியவை மிக முக்கியமாகப் பார்க்கவேண்டிய இடங்கள். புத்த மதத்தின் கலாசாரம் தழைத்தோங்கியிருக்கும் அருணாசலம், எப்போதும் அமைதியான சூழலுடன் இருக்கும் ஓர் இடம். அருணாசலத்தில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருப்பதால், குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ₹2,500 இருந்தால் சிறப்பு.

5
விக்டோரியா மாளிகை, கொல்கத்தா

அக்டோபர் : கொல்கத்தா

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை) விடுமுறை. இதையடுத்து, முறையே சனி மற்றும் ஞாயிறும் விடுமுறை நாள்களே. இந்த நாள்களில், கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாடப்படுவதால், கொல்கத்தா முழுவதுமே விழாக்கோலத்தில் இருக்கும். இந்தச் சமயத்தில், கொல்கத்தாவில் சந்தோஷ் மித்ரா சதுரம், பாக் பஜார், காலேஜ் சதுரம், பதம்டாலா அசார் சங்கா, ஜோத்பூர் பூங்கா, மொஹம்மத் அலி பூங்கா ஆகிய இடங்கள் செம கொண்டாட்டமாக இருக்கும். வங்கத்தினரின் கலாசாரத்தைத் தெரிந்துகொள்ள, இந்த நேரத்தில் அங்கு செல்வது மிகவும் பொருத்தமான ஒன்று. மேலும், கொல்கத்தாவில் கைவினைப் பொருள்களும் பெருமளவில் கிடைக்கின்றன. இங்கு, செலவிட, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தது ₹2,000 தேவைப்படும்.

Vikatan

கன்னூர்

கன்னூர், கேரளா

அக்டோபரில் 24, 25 சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை தினங்கள். இதற்குப் பின் திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்தால், கேரளாவில் உள்ள கன்னூருக்குச் சென்று வரலாம். கேரளாவில் பருவமழை தீவிரமாக இருக்கும் இந்த நேரத்தில், கன்னூர் சுற்றிப்பார்க்க ஏற்றது. கேரளாவின் வடகிழக்கு மலபார் பகுதியில் இருக்கும் கன்னூரைச் சுற்றிலும் கடற்கரைகளே. இவற்றில் முக்கியமானவையாக பாயம்பலம் கடற்கரை, பேபி கடற்கரை, முழப்பிலாங்காட் கடற்கரை, தோட்டாடா கடற்கரைகள் உள்ளன. இதில், தர்மாடம் பீச்சில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தீவு ஒன்று உள்ளது. அங்கே, டென்ட் அடித்துத் தங்கலாம்.

6
ஜெய்சல்மர்

நவம்பர் : ஜெய்சல்மர்

நவம்பர் மாதத்தில் 13, 14, 15 தீபாவளிப் பண்டிகையையொட்டி விடுமுறை வருகிறது. இந்த நேரத்தில் குளிர்காலம் தொடங்கி விடுவதால், ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மருக்குச் செல்வது சிறந்தது. மணல் நிறைந்த தார் பாலைவனம், இந்தச் சமயத்தில் ரசிக்கக்கூடிய ஒன்றாகும். காலையில் வெயில் அடித்துநொறுக்கினாலும், இரவில் பனி உறையவைக்கும். ஜெய்சல்மர் கோட்டை, ஜெயின் கோயில்கள், கடிசார் ஏரி, பாடா பாக், சலிம் சிங் கே ஹவெலி, பட்வொன் கி ஹவேலி, குல்தாரா கிராமம், காபா கோட்டை, நாத்மால் ஜி கி ஹவேலயா ஆகியவை ஜெய்சல்மரில் முக்கியமாக சுற்றிப்பார்க்கவேண்டிய இடங்கள்.

அச்சன்கோவில், மிலா மான், சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு... மணலார் அருவிக்கு ஒரு ஜாலி பயணம்!

ஜெய்சல்மரிலிருந்து ஒரு கார் அல்லது பைக்கை வாடகைக்கு எடுத்துக்கொண்டு லாங்கிவாலா சென்று, இந்தியா-பாகிஸ்தான் பார்டரை பார்த்துவிட்டு, அங்கிருக்கும் ராணுவ வீரர்களுடன் உரையாடிவிட்டு வரலாம். அப்படியே அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்றால், மண் வீட்டில் தங்கலாம். கிராமத்துக் குழந்தைகளுடன் குதூகலமாக ஒரு குத்தாட்டம் போடலாம்.

ஜெய்சல்மர், ராஜஸ்தான்

இந்த ஜெய்சல்மர் ட்ரிப்புக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தது ₹1,500 இருந்தால் போதும். பல மணிநேரங்களை பாலைவனத்திலியே கழிக்க நேரிடும் காரணத்தால், அதற்குத் தகுந்த உடைகளை எடுத்துச்செல்ல வேண்டும். நேரமிருந்தால் அருகில் இருக்கும் நகரங்களான ஜோத்பூர், பிகானிர் ஆகிய இடங்களுக்கும் சென்றுவரலாம்.

7
அந்தமான் தீவு

டிசம்பர் - அந்தமான்

டிசம்பர் மாதத்தில், கிறிஸ்துமஸ் வெள்ளிக்கிழமையில் வருகிறது. அதைத் தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை லீவு. கூடவே இன்னும் 3 நாள் லீவு கிடைத்தால், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 2020-ம் ஆண்டை சந்தோஷமாகக் கொண்டாடலாம். அந்தமானில் போர்ட் பிளேர், ஸ்வராஜ் தீவு, ஹேவ்லாக் தீவு, நெய்ல் தீவு ஆகியவை முக்கியமான தீவுகளாகும். அந்தமான் மற்றும் நிக்கோபரைச் சுற்றி தீவுகளே இருப்பதால், அங்கு நிலவும் பருவநிலை ஊகிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இதனால் திடீரென மழை பெய்ய வாய்ப்புள்ளது. உடைகள் கொஞ்சம் அதிகமாக வைத்துக்கொள்வது நல்லது. டிசம்பர் மாதத்தின் மார்கழி குளிர், இந்தத் தீவின் கடல் காற்றோடு இணைந்து அடிக்கும்போது, அந்த ஆண்டு நீங்கள் அனுபவித்த மொத்த பிரஷரும் காணாமல் போய்விடும். இரவில், பீச்சில் கேம்ப் ஃபையர் அமைத்து குடும்பத்தோடு அல்லது நெருங்கியவர்களோடு உங்கள் புத்தாண்டை வரவேற்கலாம்.

போர்ட் பிளேர்

கடலில் வாழும் உயிரினங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்கு போர்ட் பிளேர் அக்வேரியம் இருக்கிறது. உயிரினங்களைக் கடலிலேயே பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு, ஸ்கூபா டைவிங் இருக்கிறது. அந்தமானின் அலையாத்திக் காடுகளில் போட்டிங் போகலாம். அந்தமானின் கர்மட்டாங் பீச்சில் சிறியவர்களுக்கு ஸ்நார்க்லிங்கும், பெரியவர்களுக்கு ஆழ்கடல் டைவிங்கும் உண்டு. அதுமட்டுமில்லை, அந்தமானில் செம ட்ரெக்கிங் ஸ்பாட் ஏகப்பட்டவை இருக்கின்றன.

பயணத்துக்குத் தேவையான டென்ட், பைகள், ரைடிங் கியர்ஸ் போன்றவற்றை வாங்குவதற்கு உங்கள் வங்கியில் இருக்கும் RD வசதியைப் பயன்படுத்தி, சிறிது சிறிதாக சேமிக்கலாம்.

ஷாப்பிங் விரும்பிகளுக்கு இங்கே, கைவினைப் பொருள்கள், பூச்செடிகள், வளையல்கள், நகைகள், தோடுகள் ஆகியவை பெருமளவில் கிடைக்கும். லோக்கல் கடைகள் முதல் அந்தமானின் அரசாங்க எம்போரியம், அபெர்தீன் பஜார், ஷாப்பிங்க் சிங்கப்பூர் முதலிய இடங்களில் பல வெரைட்டியான பொருள்களை வாங்கலாம். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பெரும்பாலும், சுற்றுலாப் பயணிகளால் சூழ்ந்திருக்கும் என்பதால், இங்கு எல்லாமே விலை அதிகம். ஒரு நபருக்கு நான்கு நாள்களுக்கு 10,000 ரூபாய் வரை நிச்சயம் தேவைப்படும்.

ஸ்கூபா டைவிங்

இந்தப் பாகத்திலும், முந்தைய பாகத்திலும் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பயண நாள்களுமே அந்த இடத்தில் கழிக்கும் தினங்களே ஆகும். சென்னையிலிருந்து செல்பவர்கள், முந்தைய நாள் இரவு அல்லது காலையே கிளம்புவது நல்லது. ஒவ்வொரு மாதமும் அடுத்த மாதத்துக்கான பயணச்செலவுக்கு தனி நிதி ஒதுக்கி, பஸ், ரயில், விமான டிக்கெட்டுகளை முன்பே முன்பதிவு செய்துவிடுங்கள்.

கொழும்பு - திருகோணமலை; இராவண தேசத்தில் ஒரு ஹெவி டியூட்டி பயணம்!

முன்கூட்டியே பயணத்தை தெளிவாகத் திட்டமிட்டுக்கொண்டால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம். நம்மை நாமே மறந்து சில நாள்கள் வேறு எந்த விஷயத்தையும் சிந்திக்காமல் நிம்மதியாக இருக்க, பயணம் ஆகச்சிறந்த வழி. பயணம்செய்து கொண்டே இருங்கள், உங்கள் எல்லைகள் விரிவடையும் வரை!

அடுத்த கட்டுரைக்கு