Published:Updated:

2020-ல் முதல் ஆறு மாதங்களில் எப்போதெல்லாம் லீவு... எங்கெல்லாம் ஊர் சுற்றலாம்? Part-1

2020 டூர் காலண்டர்  Part-1
2020 டூர் காலண்டர் Part-1

எந்த மாதம், எத்தனை லீவு, அந்த சீஸனுக்கு ஏற்ப எந்த இடத்துக்கு போகலாம் என உங்களுடைய 2020 டிராவல்களைத் திட்டமிட ஒரு காலண்டர்.

யூடியூப், இன்ஸ்டாகிராம் என சோஷியல் மீடியாவில் டிராவலர்களைத் தொடர்ந்துகொண்டும், டிராவல் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டும் கடந்த ஆண்டைக் கடந்திருப்போம். இனி வரப்போகும் வருடத்தில் நாமே கோதாவில் குதிக்க வேண்டியதுதான்.

2020-ல் நிறைய விடுமுறை நாள்கள் இருக்கின்றன. இனியும், ஹெட்செட் போட்டுக்கொண்டு கொலம்பஸிடம் புதுத் தீவு கேட்காமல் இந்தியாவில் இருக்கும் முக்கியமான சுற்றுலா இடங்களில் சுற்றித்திரிய உங்களுக்கான ஒரு டூர் காலண்டரை வடிவமைத்திருக்கிறோம். எந்த மாதம், எத்தனை லீவு, அந்த சீஸனுக்கு ஏற்ப எந்த இடத்துக்குப் போகலாம் என உங்களுடைய 2020 டிராவலை பிளான் செய்ய இந்தக் காலண்டர் உதவும்.

வாரம் ஐந்து நாள் வியர்வையில் உழைக்க,

வாரம் இரு நாள் இயற்கையை ரசிக்க,

வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி,

மனசுக்குள் வெள்ளையடி,

மீண்டும் பிள்ளையாவோம் அலையோடு ஆடி...

ஜனவரி

ஜனவரி மாதம் 15, 16, 17 ஆகிய நாள்கள் பொங்கல் விடுமுறை. இதோடு18, 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை. நம் நல்ல நேரம் இது 2-வது சனிக்கிழமை. பெரும்பாலான வங்கிகள், ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இரண்டாவது சனிக்கிழமை விடுமுறைதான். ஆக, மொத்தம் 5 நாள்கள் இருக்கின்றன. எனவே, நீங்கள் விசிட் செல்ல சரியான இடம் கோவா.

கோவா
கோவா
Image by shantanupataskar61 from Pixabay

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முடிந்து வெளிநாட்டினர் வருகை குறைந்திருக்கும். இதனால், மலிவான விலையில் தங்கும் இடங்கள் கிடைக்கும். ஜனவரி என்பது கோவாவில் வெயில் காலம். ஆனால், சுற்றியும் கடல் இருப்பதால் மார்கழி மாதம் போல ஜில்லென இருக்கும். 5 நாள்களுக்கு கோவாவில் என்ன இருக்கு என்று கேட்பதைவிட, என்ன இல்லை என்று கேட்க வேண்டும். பீச்சில் குளியல் போடும் அலையாடிகளுக்கு பாகா, அஞ்சுனா, காலாங்குடே, வேகடார், பாலோலம் என ஏகப்பட்ட அழகான கடற்கரைகள் உண்டு. குதூகலமாகக் குளிக்க பீச் மட்டுமல்ல, கோவாவில் தூத்சாகர் நீர்வீழ்ச்சியும் உண்டு.

Goa
Goa
Image by belyakovacat from Pixabay

கோட்டைகளையும் கட்டடக் கலையையும் ரசிப்பவர்களுக்கு அகுடா, சாபாரா கோட்டை, செ கதாட்ரல் முதல் பல பழைய போர்ச்சுகீஸ் கால கோட்டைகளும் சர்ச்சுகளும் ஏராளம் உண்டு. இதில் `பேசிலிகா ஆஃப் பாம் ஜீஸஸ்' ரொம்பவே பிரபலம். டூர் என்றால் ஷாப்பிங் இல்லாமல் எப்படி? அஞ்சுனா பிளை மார்க்கெட், அரபோரா இரவு சந்தை, பாகா பாகா கடற்கரையின் சந்தை மற்றும் சாலையோர கடைகள், மாக்கிஸ் இரவு சந்தை என ஷாப்பிங் இங்கே ரொம்பவே பிரபலம். எதுவுமே வாங்கும் மனநிலை இல்லை என்றாலும், இந்த ஷாப்பிங் ஸ்பாட்களைச் சும்மாவாவது சுற்றிப்பார்க்க வேண்டும். செம கலர்ஃபுல் புகைப்படங்களும் புத்துணர்ச்சியான அனுபவமும் கிடைக்கும்.

உணவுப் பிரியர்களுக்கு குறைந்த விலையில் வகைவகையான இத்தாலிய விருந்துகள் இங்கு உள்ளன. இங்கு வாழ்பவர்களைவிட சுற்றிப்பார்க்க வருபவர்களே அதிகம் என்பதால் எல்லோருமே எப்போதும் ஒரு ஹாலிடே மனநிலையிலேயே இருப்பார்கள். நகரச் சூழலிருந்து விடுபட்டு நான்கு நாள்கள் உற்சாகக் காற்றை சுவாசிக்க செம ஸ்பாட். ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 3,000 ரூபாய் செலவாகும்.

பிப்ரவரி

ஜனவரி மாதம் தேடாமலே கிடைத்த விடுமுறைகள் பிப்ரவரி மாதம் தேடினாலும் கிடைப்பது கஷ்டமாகவே இருக்கிறது. பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை வேலன்டைன்ஸ் டேவுக்கு லீவு எடுப்பவர்கள் ஒரு பக்கம், பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை அன்று மகாசிவராத்திரிக்கு சிலர் விடுமுறை எடுப்பார்கள். எப்படியும், அதற்கடுத்து வரும் சனிக்கிழமையையும், ஞாயிற்றுக்கிழமையையும் பயன்படுத்திக் கொண்டால் சேலம் அருகில் உள்ள ஏற்காட்டுக்குச் சென்று வரலாம்.

ஏற்காடு
ஏற்காடு
எம்.விஜயகுமார்

கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஏற்காடு பிப்ரவரி மாதத்தில் புற்கள் மீது தூக்கம் போட்ட பனிகள் எல்லாம் உருகி இதமான வெயிலோடு ஃபிரஷ்ஷாக இருக்கும். பைக்/காரில் பயணம் செய்தால் 32 கிலோமீட்டர் கொண்டை ஊசி வளைவுகளால் நிறைந்த சாலை செம எக்ஸ்பீரியன்ஸாக இருக்கும். ஏற்காட்டில் முக்கியமான இடங்களான கிளியூர் நீர்வீழ்ச்சி, பகோடா பாயின்ட், சேவராய் ஆலயம், கரடியூர் வியூ பாயின்ட், லேடிஸ் சீட் போன்றவற்றை செக்லிஸ்ட் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். போட் ஹவுஸில் நிச்சயம் தவறவிடக் கூடாது. ஏற்காட்டில் செலவுக்கு ஒரு நாளைக்கு ₹1,000 இருந்தால் போதும்.

View this post on Instagram

⛰️ பொதுவாக, மலைப் பிரதேசங்கள் என்றால், விலங்குகள் பயம் இருக்கும். ஆனால், ஏற்காட்டில் அந்த பயமே தேவையில்லை. #DAY-3, நான்கு தேநீர் கோப்பை போதும் பயணத்தின் அலுப்பைப் போக்க...ஏற்காடு மலையை ஏறி இறங்கியாச்சு. வழியில் குரங்குகளும், அதிசயமாக அப்பப்போ காட்டுப் பன்றிகளும் ஹாய் சொல்லிட்டு சென்றன. இன்னும் 100 கி.மீ தொலைவில் கோவை... 📸 படங்கள் - J T Thulasidharan @the_holybiker @24bikers @royalenfield @yamahamotorindia @skodaindia #SigaramThedi #HailTheHills #TheHolyBiker #24Bikers #royalenfiled #hillstation #offroad #roadsafetyweek2019 #roadsafetyweek

A post shared by Motor Vikatan (@motorvikatan) on

ஞாயிற்றுக்கிழமை இரவுகள்

குழந்தைகளை உறங்கவிடாமல் அலைக்கழிக்கின்றன.

இரண்டு நாள் விடுப்பும் பயணமும் காடுகளும்

விளையாட்டும் நினைவுச் சருகாகித்தலைக்குள்

சரசரக்கின்றன இரவு முழுக்க.

அவர்களது கனவில் `மண்டே’, தலைகுனிந்து குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.

`மண்டே’வை ஒருமனதாகச் சாடுகிறார்கள் குழந்தைகள்.

அந்த நாளே தங்களுக்கு வேண்டாமெனச்

சிறையிலடைக்கும்படி வாதிடுகிறார்கள்.

மார்ச்

மார்ச் என்பதும் மண்டே போல வறண்ட காலம். சனி ஞாயிறு தவிர்த்து ஒரு கூடுதல் விடுமுறையைக்கூட இங்கே எதிர்பார்க்க முடியாது. ஆனால், 2020 மார்ச் நமக்கு இறக்கம் காட்டியுள்ளது. 7 மற்றும் 8-ம் தேதிகள் சனி மற்று ஞாயிறு ஆகும். மார்ச் 9 பலருக்கு விடுமுறை இருக்காது. கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் ஹோலி என்று சொல்லி இரண்டு நாள்கள் விடுமுறை வாங்கி நான்கு நாள்களில் சிக்கிம்மில் உள்ள பெல்லிங்குக்குச் (pelling) சென்று வரலாம். பெல்லிங், முழுவதும் நீர்வீழ்ச்சிகளாலும் மரங்களாலும் சூழப்பட்ட மனதுக்கு இதம் தரும் ஒரு இடம்.

பெல்லிங்
பெல்லிங்

பெல்லிங்கின் ஏகாந்த பொழுதுகளில் சாங்காகோலிங்க் மடாலயத்தில் ஒரு மணிநேர தியானம் உங்களுக்கு வேறு ஓர் உலகத்தைக் காட்டும். தாராப் கிராமம், செவாரோ ராக் கார்டனும் அதைச் சுற்றிலும் ஆரஞ்சு தோட்டங்களும் இந்தியாவைத் தாண்டாமலேயே ஒரு குட்டி வெளிநாட்டு டூர் அடித்த நிம்மதியைத் தரும். சிங்க்சோர் பிரிட்ஜ், காலுக், சாங்கே நீர்வீழ்ச்சி, கஞ்சென்ஜூன்கா நீர்வீழ்ச்சியை செக்லிஸ்ட்டில் போட்டுவிடுங்கள். இதில் சிங்க்சோர் பாலம் சிக்கிமிலேயே மிக உயரமான ஒன்றாகும். சரியான திட்டமிடல் இருந்தால் மூன்று நாள்களிலேயே முக்கியமான இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.

தங்கைக்கும் எனக்கும் நம்ம வீடு.

அப்பாவின் நண்பர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி வீடு.

அம்மாவின் தோழிகளுக்கு இந்துமதி வீடு.

விடுமுறைக்கு வரும் வாண்டுகளுக்கு அத்தை - மாமா வீடு.

வழி சொல்லும் கடைக்காரருக்கு தெருமுனையில் இரண்டாவது வீடு.

இப்படியான நாளொன்றில்தான் வந்துசேர்ந்தது அந்த யாருக்கோவான கடிதம்.

தபால்காரர் கூற்றுப்படி இதே `மூன்றின் கீழ் நாற்பது’ வீட்டில் வசித்த முந்தைய குடித்தனக்காரருக்கானது அது.

புரிந்தவளாகத் திரும்பியபோதுதான் தெரிந்தது வீடு எங்கும் நிறைந்திருக்கும் வெவ்வேறு வீடுகள்.

ஏப்ரல்

இந்த உலகமே நமக்கு ஒரு வாடகை வீடு போலத்தான். அதில் கடவுளின் கெஸ்ட் ஹவுஸ் கேரளா. ஏப்ரல் மாதத்துக்கு `விடுமுறை மாதம்' என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. கல்லூரிகளுக்கு எல்லாம் விடுமுறை விடும் மாதம். பள்ளிகளுக்கும் ஸ்டடி ஹாலிடே என்ற பெயரில் பெரும்பாலும் விடுமுறையே இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு 10-ம் தேதி புனித வெள்ளி என்பதால் அடுத்து வரும் சனி, ஞாயிறு இரண்டு நாள்களோடு சேர்த்து மொத்தம் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கும். ஏப்ரல் 13 அன்று மட்டும் லீவு எடுத்துக்கொண்டால், ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை. ஆக, 5 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.

வாகமன்
வாகமன்

இந்த ஐந்து நாள்களை கேரளாவில் கொண்டாடலாம். ஆலப்புழா, கொச்சின், வயநாடு, குமரகோம், தேக்கடி, பெகால், கோவளம், மூணாறு, திருச்சூர், திருவனந்தபுரம், வர்காலா எனச் சுற்றிவருவதற்கு பல இடங்கள் கேரளாவில் உள்ளன. கும்பளங்கியும், அங்காமாலியும் கூட இப்போது பலவேரின் டூர் பட்டியலில் இணைந்துவிட்டன. ஏப்ரல் மாதம் கேரளா, தய்யம், பூரம் என திருவிழாக்களில் பிஸியாக இருக்கும். ஏப்ரல் 14-ம் தேதி நமக்கு தமிழ்ப் புத்தாண்டு போல கேரளாவிலும் விஷு எனும் பண்டிகை உண்டு. மற்ற எந்த மாதங்கள் சென்றாலும் கேரளாவை இப்படி ஒரு கொண்டாட்ட கோலத்தில் பார்க்க முடியாது. ஏப்ரல் மாதம் கடவுளின் தோட்டத்தில் திருவிழா விருந்துகளை முடித்துவிட்டு வருவோம்.

உலகம் எனும் இந்த நிலப்பரப்பால் தீர்க்க முடியாத பிரச்னை என்று, இந்த உலகில் எதுவுமே இல்லை.

மே

மே மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கும் கோடை விடுமுறை. வேலைக்குச் செல்பவர்கள் மட்டும் மே மாதத்தில் நான்கு ஐந்து நாள் விடுமுறை எடுத்துக்கொண்டால் இமாசலப் பிரதேசத்துக்குச் செல்லலாம். மே மாதம் கோடை வெயில் நமக்குதான் கடுப்புகளை ஏற்படுத்தும், இமாசலில் உள்ள மணாலி வாசிகளுக்கு இது செம சீஸன்.

மணாலி-லே நெடுஞ்சாலை
மணாலி-லே நெடுஞ்சாலை

மே மாத கோடை வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்ந்த மலைப் பகுதியான மணாலிக்கு ஓர் அருமையான புகலிடம். மணாலியில் சோலங்க் பள்ளத்தாக்கு, ரோஹ்டாங்க் பாஸ், பீஸ் குன்ட் டரக், ஹடிம்பா கோயில், மணிகரன், பழைய மனாலி மார்க்கெட், கோத்தி கிராமம் எனச் சுற்றுலா பிரியர்களை வரவேற்கும் இடங்கள் நிறைய உண்டு. சாகசங்களின் காதலர்கள் பாரா க்லைடிங்க், ஸ்கீயிங், கயாக்கிங், பலூன் ரைடு போன்ற விஷயங்களை இங்கே தவறவிட மாட்டார்கள். இது சுற்றுலா சீஸன் என்பதால் நம் ஊர் மக்கள் மட்டுமல்ல வெளிநாட்டினரும் இந்தக் காலத்தில் இங்கே அதிகம் வருவார்கள்.

குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி.

ஜூன்

ஜூன் மாதத்தில் பண்டிகை விடுமுறை எதுவுமில்லை. வார இறுதி நாள்களையொட்டி இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் கர்நாடகாவில் உள்ள குடகு மலைக்கு (Coorg) செல்லலாம். குடகுமலையின் முக்கிய இடங்களான மடிக்கேரி, மண்டல்பட்டி, அபே நீர்வீழ்ச்சி, மல்லாலி நீர்வீழ்ச்சி, நாம்ட்ராலிங்க் மோனாஸ்ட்ரி, ராஜா சீட் மண்டபா, இருப்பு நீர்வீழ்ச்சி, பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம், நாகர்ஹோல் தேசிய பூங்கா, சோமகுன்ட் ட்ரக், காகாபே ட்ரக், நிஷானி பேட்டா மலைகள் எனக் காடுகளோடு காடோடியாகி 4 நாள்கள் பசுமையாக வாழலாம்.

கூர்க்... இந்தியாவின் ஸ்காட்லாந்து
கூர்க்... இந்தியாவின் ஸ்காட்லாந்து
வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் செலக்ட் செய்யும் இடம் இதுதான்! #VikatanInfographics

இங்கு காபி சந்தை, வெள்ளிக்கிழமை சந்தை, குடகுமலையின் ஃப்ளி (flea) மார்க்கெட் எனப் பல சந்தைகள் உள்ளன. குடகுமலையிலிருந்து திரும்பி வரும்போது சின்ன திபெத்தையே பொருள்கள் வடிவில் உங்களுடன் கொண்டு வரலாம். இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் மற்ற கர்நாடகப் பகுதிகளைவிட குடகுமலை கொஞ்சம் காஸ்ட்லி. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ₹2,000 தேவைப்படும்.

அடுத்த கட்டுரைக்கு