Published:Updated:

132 நாள்கள், 94 நகரங்கள், 18,000 கி.மீ தூரம்... லட்சியத்துடன் பைக்கில் பயணிக்கும் 68 வயது விவசாயி!

பிரமோத் மகாஜன்
பிரமோத் மகாஜன்

68 வயது பிரமோத் மகாஜன் எனும் புனே விவசாயி இந்தியா முழுவதும் பயணித்து உடல் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுசெல்கிறார்.

சங்கிலி (Sangli) புனேவில் கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்திருக்கும் இயற்கை எழில்கொஞ்சும் குக்கிராமம். மஞ்சள், திராட்சை கரும்பு என விவசாயத்திற்குப் பெயர் பெற்ற சங்கிலி கிராமம்தான் இந்தியாவின் அதிக சர்க்கரை ஆலைகள் கொண்ட ஊராகும். விவசாய பூமியான சங்கிலியில் திராட்சை சாகுபடி செய்யும் எழுதப்படிக்கத் தெரியாத எளிய விவசாயி பிரமோத் மகாஜன். 68 வயதாகும் இவர், இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பயணித்து உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்து, இந்தியாவின் இன்ஸ்பிரேசன் ஐகானாக மாறியிருக்கிறார்.

விவசாயி பிரமோத் மகாஜன்
விவசாயி பிரமோத் மகாஜன்

கடந்த 20 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இவர், ஆரம்பத்தில் தன் கிராமத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு, பெண் குழந்தைகளின் கல்வியின் அவசியம் குறித்தும், கிராமப்புறங்களில் மக்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தனிமனிதராகக் குரல் கொடுத்தவர். தன் கிராமத்தை முன்னேற்ற முயன்ற மகாஜனின் முயற்சிகள் கைகொடுக்க நாம் முயன்றால் நம் கிராமத்தை மட்டுமல்ல இந்தியாவையே மாற்றலாம் என எண்ணி இப்போது இந்தியாவைச் சுற்றிப் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு 10,000 கிலோமீட்டர்களை 100 நாள்களில் தனியாளாக இருசக்கர வாகனத்தில் பயணித்து மக்களிடம் உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்துரைத்திருக்கிறார் மகாஜன். இந்த முயற்சி வெற்றியைக் கொடுக்க, இப்போது தன் அடுத்த பயணத்தைத் தொடங்கிவிட்டார். 132 நாள்கள், 18,000 கிலோமீட்டர், 94 நகரங்கள் எனப் பெரிய இலக்குடன் வாகனத்தைச் சாலைகளில் செலுத்திவரும் மகாஜன் கடந்த 17 ஆம் தேதி சென்னை வந்தார். அவரிடம் பேசினோம்.

68 வயது பைக் ரைடர்
68 வயது பைக் ரைடர்

``எனக்கு எழுத படிக்க தெரியாது, எனக்குத் தெரிஞ்சதெல்லாம் விவசாயம் மட்டும்தான், என்னோட தோட்டத்துல ரெண்டு வகை திராட்சை சாகுபடி செய்யறேன். விவசாயம்தான் என் குடும்பத்தோட பிரதான தொழில். எனக்கு மொத்தம் 4 பசங்க இருக்காங்க. அவங்க எல்லாரையும் படிக்க வெச்சிட்டேன். நான் விவசாயம் செய்யற நேரம்போக மிச்ச நேரம் ஊர் மக்கள் கிட்ட போய் பெண் உரிமை, பெண் கல்வி, ரத்த தானம், எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பேசுவேன்.

68 வயது பைக் ரைடர்
68 வயது பைக் ரைடர்

2000 ஆம் வருஷத்துல, எங்க ஊர்ல மிலிட்டரி வீரர் ஒருத்தரு சிறுநீரகப் பாதிப்பால ரெண்டு சிறுநீரகங்களையும் இழந்து உயிருக்குப் போராடிட்டு இருந்தாரு. அவருக்கு ஒரு கிட்னி கொடுத்து உதவும்படி டாக்டர்கள் ஊர்ல எல்லார்கிட்டயும் கேட்டாங்க. ஆனா, மக்கள் எல்லோருமே பயந்துட்டு யாருமே கிட்னி கொடுக்க முன் வரல. அந்த மிலிட்டரிகாரரோட குடும்பத்துல யாருக்குமே அவரோட ரத்த வகை இல்லாததால அவங்களாலயும் கொடுக்க முடியல. என்னோட ரத்த வகையும் அவரோட ரத்த வகையும் ஒண்ணுதான்னு தெரிஞ்சதும் என்கிட்டகேட்டாங்க. யோசிக்காம என்னோட ஒரு கிட்னிய கொடுத்து அவர் உயிரைக் காப்பாத்திட்டேன்.

அவருக்கு ஒரு கிட்னிய கொடுத்து சரியா 20 வருசமாச்சு எனக்கு உடல் அளவுல எந்தப் பாதிப்பும் இது வரைக்கும் ஏற்படல. நா ஆரோக்கியமா இருக்கேன். என் கிட்னியால இன்னிக்கு ஒரு குடும்பம் வாழுது. அதைவிட நல்லது என் வாழ்க்கைல நான் செஞ்சதில்ல. அந்த நிகழ்வுக்கு அப்புறம்தான் நமக்காக வாழறது மட்டும் வாழ்க்கை இல்லனு புரிஞ்சுது.

விவசாயி பிரமோத் மகாஜன்
விவசாயி பிரமோத் மகாஜன்

உடல் உறுப்பு தானம் யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால், யாரும் அதுக்கு முன் வருவதில்ல,

இந்தியாவுல மட்டும் ஒரு ஆண்டுக்கு சராசரியா மூளைச் சாவு அடையறவங்க எண்ணிக்கை 1,00, 000 பேர். ஆனா அதுல உடல் உறுப்பு தானம் செய்றவங்க 800 பேர் மட்டும்தான். மற்றவர்களின் உடல் உறுப்புகளும் மக்கித்தான் போகுது.

இறந்தவங்க மட்டும்தான் தானம் செய்யமுடியும்னு இல்லை. ஒரு மனுஷன் உயிரோட இருக்கும் போதே தன்னுடைய சிறுநீரகம் (kidney), தோல் (skin), எலும்பு ஜவ்வு (bone marrow) போன்றவற்றை விஷயங்களைத் தானம் செய்யலாம்.

பைக் ரைடிங் கிளப் உடன் பிரமோத் மகாஜன்
பைக் ரைடிங் கிளப் உடன் பிரமோத் மகாஜன்

இதைப் பத்தின புரிதல் மக்கள்கிட்ட போதிய அளவுக்கு இல்லை. அந்தப் புரிதலை மக்கள்கிட்ட கொண்டுசேர்க்கும் முயற்சிதான் இந்த BHARAT ORGAN YATRA - 2.O. இதுக்கு முன்னாடி இதே மாதிரி இந்தியா முழுவதும் இருசக்கர வாகனத்திலேயே பயணிச்சு பல லட்ச மக்கள் கிட்ட இந்த உடல் உறுப்பு தானம் குறித்து பேசியிருக்கேன். அதுக்காக 100 நாள்கள், 10,000 கிலோமீட்டர் பயணிச்சு பல மாநிலங்களைக் கடந்து பல மொழி மக்களைச் சந்தித்தேன். என்னோட அந்த முயற்சிக்கு நல்ல பலன் கொடுத்தது. என் விழிப்புணர்வு நிகழ்ச்சியில கலந்துகிட்ட போபால் காவல்துறையினர் 250 பேர் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வந்து பதிவு செஞ்சுருக்காங்க. அதே மாதிரி ஒரு மருத்துவக் கல்லூரியில சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் உறுப்பு தானத்துக்கு முன் வந்துருக்காங்க. இதைத் தவிர இன்னும் நிறைய அனுபவங்கள் இருக்கு.

போன முறை நல்ல ரீச் கெடச்சதால இந்த முறை இன்னும் பெருசா செய்ய திட்டமிட்டேன். 100 நாள்கள் என்பதை 132 நாள்களாக அதிகரிச்சிருக்கேன். சுமார் 18,000 கிலோமீட்டர் பயணிக்கப் போறேன். ஏறக்குறைய 94 நகரங்கள் பயணிச்சு பல மொழி மக்களைச் சந்திக்க இருக்கிறேன்" என்கிறார் பிரமோத் மகாஜன்.

பிரமோத் மகாஜன்
பிரமோத் மகாஜன்

இந்த வாகன விழிப்புணர்வு பயணத்துக்கு ரீ-பர்த் எனும் தொண்டு நிறுவனம் நிதி உதவி செய்கிறதாம். `மைலேஜ் மஞ்சுர்ஸ்' பைக் ரைடிங் கிளப் பயணத்தைத் திட்டமிட்டு, மகாஜனுக்குத் தேவையான தங்கும் வசதி போன்றவற்றைச் செய்துகொடுக்கிறார்களாம்.

பிரமோத் மகாஜன்
பிரமோத் மகாஜன்

``நகரத்துல மக்கள எல்லாருமே சுயநல போக்கோட வாழ்ந்துட்டு வராங்க. கிராமத்துல ஒருத்தர் இறந்துட்டா, அவரோட உடல் உறுப்பை மத்தவங்களுக்குக் கொடுத்து அவங்க உருவத்துல நம்ம சொந்தம் வாழட்டும்னு நெனைப்பாங்க. ஆனா அந்த சென்டிமென்ட் நகரத்து மக்கள்கிட்ட இல்ல. இந்தப் பயணத்துல நான் சந்திக்கும் 10 லட்சம் பேர்ல ஒரு லட்சம் பேர் உடல் உறுப்பு தானம் செஞ்சா அது என் பயணத்தோட பெரிய வெற்றி" என்றவர், அருகில் இருந்த தன் பையை எடுத்தபடி, "எனக்கு சாயங்காலம் ஒரு ஸ்கூல்'ல ப்ரோக்ராம் இருக்கு அதை முடிச்சிட்டு நான் நெல்லூர் கெளம்பணும்" என, தன் வெள்ளை அவெஞ்சர் பைக்கைக் கிளப்பினார் அந்த 68 வயது துடிப்புமிக்க இளைஞர்.

பிரமோத் மகாஜன்
பிரமோத் மகாஜன்

ஆயிரம் விதைகள் விதைக்கும்போது அதில் ஒரு நூறு விதைகள் முளைவிட்டால்கூட போதும். இன்னொரு 1000 விதைகளைப் புதைக்கலாம் என்ற மன நிலைதான் இந்த வயதிலும் பிரமோத் மகாஜனுக்கு நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருக்கிறது.

ப.சிதம்பரம் ஓவர்... அடுத்தது அகமது படேல்... அமித் ஷாவின் சபத அரசியல்!
அடுத்த கட்டுரைக்கு