Published:Updated:

தாயின் ஆசையை நிறைவேற்ற 48,100 கி.மீ ஸ்கூட்டர் பயணம்...! - பரிசாக வந்த மஹிந்திரா KUV 100 NXT

யாத்திரைக்காக 70 வயதுத் தாயை ஸ்கூட்டரிலேயே 48,100 கிலோ மீட்டர் தூரம் அழைத்துச் சென்ற மகன்.

தாயுடன் மகன் கிருஷ்ணகுமார்
தாயுடன் மகன் கிருஷ்ணகுமார் ( NewsKarnataka.com )

ஹம்பிக்குச் செல்ல விரும்புவதாகத் தன்னுடைய மகனிடம் கூறிய தாயின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவரை ஸ்கூட்டரிலேயே 48,100 கிலோமீட்டர் தூரம் யாத்திரைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மைசூரைச் சேர்ந்த 39 வயது கிருஷ்ணகுமார்.

தாயுடன் மகன் கிருஷ்ணகுமார்
தாயுடன் மகன் கிருஷ்ணகுமார்
The Arunachal Times

மைசூர் கர்நாடகாவில் வசிக்கும் 70 வயது சூடாரத்னா ஹம்பி செல்ல வேண்டும் என மகனிடம் தெரிவித்துள்ளார். கணவரை இழந்து தனியாக வாழ்ந்துவரும் தாயின் ஆசையை நிறைவேற்ற ஆசைப்பட்ட கிருஷ்ணகுமார், இதற்காக நல்ல சம்பளத்தில் இருந்த தன்னுடைய வேலையை விட்டுவிட்டார்.

வசிக்கும் ஊரைவிட்டு வெளியே சென்றிராத தன்னுடைய தாய்க்கு வெளி உலகத்தைச் சுற்றிக் காட்ட ஆசைப்பட்ட மகன், 20 வருடங்கள் பழைமையான அவரின் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டரிலேயே தாயை யாத்திரைக்குக் கூட்டிச்செல்ல முடிவெடுத்துள்ளார்.

குடும்பத்தினருக்கு சேவை செய்வது, சமைப்பது எனக் காலம் முழுவதும் ஓயாமல் உழைத்துவரும் தாயைப் பார்த்துக்கொள்வது மட்டுமே மகனின் கடமை கிடையாது. அவருக்கான வாழ்க்கையை அவர் அனுபவிக்கத் துணை நிற்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அவர் விரும்பிய ஹம்பி மட்டுமல்லாமல் முடிந்தவரை அனைத்து இடங்களுக்கும் யாத்திரை அழைத்துச் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

தன்னுடைய தாயைக் கிட்டத்தட்ட 7 மாதகாலமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, கோவா, ஒடிசா, ஜார்கண்ட், பீகார், அஸ்ஸாம், நாகாலந்து, நேபாள் உட்படப் பல ஊர்களுக்கு ஸ்கூட்டரிலேயே அழைத்துச்சென்றுள்ளார். இந்தப் பயண வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார் நந்தி ஃபவுண்டேஷனின் சி.இ.ஓ மனோஜ்.

அதைப் பார்த்த மஹிந்திரா கம்பெனியின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``மிக அழகான கதை. தாயின் மீதான அன்பு மட்டுமல்ல தேசத்தின் மீதான அன்பும்கூட. நன்றி மனோஜ். உங்களால் அவரை எனக்கு அறிமுகப்படுத்த நேர்ந்தால் நான் அவருக்கு மஹிந்திரா KUV 100 NXT காரை பரிசளிக்க விரும்புகிறேன். இதன்மூலம் அவருடைய அடுத்த பயணத்தின்போது தன்னுடைய தாயை காரிலேயே அழைத்துச்செல்ல முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.