Published:Updated:

ஆலப்புழா செல்ல தகுந்த நேரம் வந்தாச்சு... படகு வீடு அனுபவத்துக்குத் தயாரா? 

ஆலப்புழா செல்ல தகுந்த  நேரம் வந்தாச்சு... படகு வீடு அனுபவத்துக்குத் தயாரா? 
ஆலப்புழா செல்ல தகுந்த நேரம் வந்தாச்சு... படகு வீடு அனுபவத்துக்குத் தயாரா? 

ஆலப்புழா செல்ல தகுந்த நேரம் வந்தாச்சு... படகு வீடு அனுபவத்துக்குத் தயாரா? 

பிரதமர் நேரு, ஒருமுறை கோட்டயத்துக்கு வந்திருந்தார். கோட்டயத்திலிருந்து  50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலப்புழா வரை அவரை  படகிலேயே அழைத்துச் சென்றனர். காயலின் இரு புறங்களிலும் தென்னைமரங்கள் நெடிந்து வளர்ந்திருக்க, சுற்றிலும் பச்சைப் பசேலென வயல்வெளிகள் சூழ அழகிய கிராமங்கள் வழியான நீர்வழிப் பயணம், நேருவுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. நேருவை மகிழ்விப்பதற்காக `வல்லங்கழி' எனப்படும் படகுப் போட்டியை நடத்தினர். 100 அடி நீளத்தில் இருக்கும் அந்தப்  படகுகளை வலிக்கும் அழகு, நேருவை மிகவும் கவர்ந்தது. டெல்லி திரும்பிய நேருவுக்கு, ஆலப்புழாவின்  இயற்கை அழகும் படகுப் போட்டியும் மனதுக்குள்ளேயே நின்றன. 

உடனே தங்க டிராஃபி ஒன்றை ஆர்டர் செய்து, ஆலப்புழாவுக்கு அனுப்பிவைத்தார். கூடவே ஒரு குறிப்பும். அதில், `ஆண்டுக்கு ஒருமுறை படகுப் போட்டி நடத்துங்கள்... எனது சிறிய அன்பளிப்பு இது' என எழுதப்பட்டிருந்தது. ஆலப்புழாவாசிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நாட்டின் பிரதமரே தங்க டிராஃபி வழங்கினார் என்றால் சும்மா! 1952-ம் ஆண்டு முதன்முதலாக ஆலப்புழாவில் நேரு டிராஃபி பாம்புப் படகுப் போட்டி  தொடங்கியது. அப்போது முதல், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் ஆலப்புழாவில் பாம்புப் படகுப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வாரம் சனிக்கிழமை (12 ஆகஸ்ட்) நடைபெற உள்ளது.

ஆலப்புழாவின் மிகப்பெரிய டூரிஸ்ட் அட்ராக்‌ஷன் இந்தப் படகுப்போட்டிதான்.  படகு வலிப்பதில் டைமிங் மிக முக்கியம். படகில் உள்ள 100 பேரும் ஒரே நேரத்தில் துடுப்பை வலித்தால்தான் வெற்றி சாத்தியம். ஒருவர் டைமிங் மிஸ்ஸானாலும் தோல்விதான். தீவிர பயிற்சிக்குப் பிறகே அணிகள் களம் இறங்கும். கிரிக்கெட், கால்பந்து அணிகள்போல ஆலப்புழாவில் படகு அணிகளும் உள்ளன. வீரர்கள் வஞ்சிப்பாட்டுடன் படகு வலிப்பதைப் பார்த்தால், `துடுப்பு வலிப்பதுகூட ஒரு கலை' என்பதை உணர்வோம். கேரளத்தவர்கள் எதையும் ஒரு ஃபேஷனோடு செய்வார்கள். அதைப் படகுப் போட்டியிலும் நாம் காண முடியும். 

கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை கொட்டித் தீர்த்து, ஆகஸ்ட் மாதத்தில் ஓரளவுக்கு ஓய்ந்திருக்கும். கேரளாவுக்குச் சுற்றுலா செல்ல தக்கசமயம் இதுதான். ஆலப்புழா மட்டுமல்ல, கேரளத்தில் எங்கு நோக்கினாலும் பசுமை போத்தியிருக்கும் காலம் இது. விழாக் காலத்தின் தொடக்கமும்கூட. ஆலப்புழாவில் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியிருப்பார்கள். ஆலப்புழாவின் அடுத்த அழகு, படகு வீடுகள். படகு வீட்டில் பயணிப்பது, தங்குவது, உறங்குவது  ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவிக்கவேண்டிய விஷயம்.  கேரளா, மீன் உணவுக்குத்தானே ஸ்பெஷல். அரபிக்கடல் மீன் டேஸ்ட் சற்று தூக்கலாகவே இருக்கும்.  மீனை ஃப்ரெஷ்ஷாகப் பிடித்து நாம் கேட்டபடி பொறித்துக் கொடுக்கிறார்கள்.

மலைகள் நிறைந்த கேரளத்தில் ஆலப்புழா ஒரு தண்ணீர் தேசம். எங்கு நோக்கினும் தண்ணீர்தான். ஆஹா... `உண்மையிலேயே கடவுளின் தேசம்தான்' என மனம் நிச்சயம் ஒப்புக்கொள்ளும். கடவுளே இங்கே வந்தாலும் இந்த இடத்தைவிட்டு நகர மாட்டார். அந்த அளவுக்கு ரம்மியமான பிரதேசம். ஆலப்புழா மாவட்டம் முழுவதும் காயல்களாலும் ஏரிகளாலும் நிறைந்தது. தரைப் போக்குவரத்துபோல நீர்வழிப் போக்குவரத்தும் இங்கு முக்கியம்.

இத்தாலியின் வெனிஸ் நகரத்தை `மிதக்கும் நகரம்' என்பார்கள். அங்கு, வீட்டுக்கு வீடு படகு வைத்திருப்பார்கள். ஆலப்புழாவிலும் கால் டாக்ஸிபோல படகுகள்  சுற்றிக்கொண்டிருக்கின்றன.  சிறிய நாட்டுப்படகுகள், பயணிகள் மோட்டார் படகுகள், ஆடம்பரப் படகுகள் என செம டிராஃபிக்தான். இந்த அழகைக் காண்பதற்கே கோடி கண்கள் வேண்டும்.  பெரும்பாலான கிராமங்களுக்கு, படகுதான் ஒரே போக்குவரத்து ஆதாரம். காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் கடைகள், வங்கி, தபால் சேவைகள், ஏ.டி.எம் சேவை தரும் படகுகள்கூட உள்ளன. அதனால்தான் ஆலப்புழாவை `கீழை நாடுகளின்  வெனிஸ்' என அழைக்கிறார்கள். 

அழகுமிகுந்த ஆலப்புழாவுக்கும் புத்தருக்கும்கூட நெருங்கிய தொடர்பு உண்டு. பண்டைய காலத்திலிருந்தே கடல்வழி வர்த்தகம் இங்கே செழித்திருக்கிறது. புத்த அறிஞர்கள், கிறிஸ்துவ போதகர்கள் இந்த நகருக்கு விரும்பி வருகை தந்திருக்கின்றனர். பழமைவாய்ந்த புத்தசிலை ஒன்றும் ஆலப்புழாவில் உள்ளது. சுமார் மூன்று அடி உயரத்தில் பாதி உடைந்த நிலையில் காணப்படும் இந்தச் சிலையின் பெயர் `கருமாடிக்குட்டன்'. 1965-ம் ஆண்டு ஆலப்புழாவுக்கு வந்த தலாய்லாமா, கருமாடிக்குட்டனைத் தரிசித்துச் சென்றிருக்கிறார். பழைமைவாய்ந்த கிறிஸ்துவக் கோயில்களும் உள்ளன. கடப்ரா - ஹரிபாடு பகுதியில் அமைந்துள்ள பாண்டி பறவைகள் சரணாலயம் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று. 

ஆலப்புழாவிலிருந்து பூலோக சொர்க்கமான குமாரகம் ஏரிக்கு, படகு வீடுகள் இயக்கப்படுகின்றன.  ஆலப்புழாவையும் - குமாரகம் ஏரியும்தான் காயலின் இரு முனைகள். ஆலப்புழாவிலிருந்து குட்ட நாடு, பம்பா நதி, சம்பக்குளம், வேம்ப நாடு ஏரி வழியாக குமாரகம் அடையலாம். மதியம் 12 மணிக்கு ஆலப்புழாவில் படகில் ஏறினால், அடுத்த நாள் காலை  9 மணிக்கு மீண்டும் ஆலப்புழா  திரும்பிவிடலாம்.  இரண்டு நாள் பயணம்கொண்ட அட்டவணையும் இருக்கிறது. இப்போதெல்லாம் சிறிய அளவிலான அலுவலக மீட்டிங்குகள், பார்ட்டிகள்கூட படகு வீடுகளில் நடத்துகிறார்கள்.

பாதுகாப்பு குறித்து அஞ்சத் தேவையில்லை. டூரிஸ்ட்களுக்கு உதவுவதற்காக  போலீஸ் ஹை அலெர்ட்டாகவே இருக்கிறது. படகு வீட்டுப் பணியாளர்களும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் உறுதியாக இருக்கிறார்கள். கேரளத்துக்கு முக்கிய வருவாய் அளிப்பது சுற்றுலாத் துறை என்பதால், இந்த விஷயத்தில்  கேரள அரசும்  அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறது.

பல இடங்களுக்குச் சுற்றுலா சென்றிருந்தாலும், ஒருநாள் படகு வீட்டில் வாழ்ந்துபாருங்கள்... உங்களால் வாழ்க்கைக்கும் மறக்க முடியாது!

அடுத்த கட்டுரைக்கு