Published:Updated:

பிரம்மபுத்திரா நதியில் ஏகாந்தமான ஃபெர்ரி பயணம்! Back பேக் - 15

Back பேக்

2015-ம் ஆண்டில் காசியில் கங்கை நதியில் படகு சவாரி செய்தேன். அதற்கடுத்து பிரம்மபுத்திரா நதி மீது பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில் சிலிர்த்தது.

பிரம்மபுத்திரா நதியில் ஏகாந்தமான ஃபெர்ரி பயணம்! Back பேக் - 15

2015-ம் ஆண்டில் காசியில் கங்கை நதியில் படகு சவாரி செய்தேன். அதற்கடுத்து பிரம்மபுத்திரா நதி மீது பயணப்பட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில் சிலிர்த்தது.

Published:Updated:
Back பேக்

திமாபூரிலிருந்து ரயிலில் கிளம்பி அதிகாலை 5 மணிக்கெல்லாம் கவுஹாத்தியை வந்தடைந்தேன். 300 கிலோமீட்டருக்கு உட்பட்ட தொலைவுள்ள பகுதிகளுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்கையில் ஏற்படும் சிரமம் என்னவென்றால் 5 மணி நேரம்கூட முழுமையாகத் தூங்க முடியாது. முந்தைய நாள் இரவு 11.40 வரையிலும் திமாபூர் ரயில் நிலையத்தை வட்டமடித்தபடியே நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். ரயில் ஏறியதும் ஸூகு பள்ளத்தாக்கு சென்று இறங்கிய களைப்பு ஆழ்ந்த உறக்கத்துக்குக் கொண்டு சென்றிருந்தது. இருந்தாலும், 5 மணிக்கு எழுந்தே ஆக வேண்டிய கட்டாயம் என்னை விழிப்பு நிலையிலேயே வைத்திருந்தது. எந்த அலாரமும் வைக்காமல் கவுஹாத்தி ரயில் நிலையம் வந்ததும் நானாகவே எழுந்தேன். முற்றிலும் அகலாமல் தூக்கம் கண்களில் ததும்பி நின்றது. சென்னையிலிருந்து திமாபூர் வந்ததைப்போல மூன்று மணி நேரம் ரயில் தாமதமாக வந்திருக்கக் கூடாதா என்று நினைத்தேன்.

காண்டாமிருகம்
காண்டாமிருகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தண்ணீரால் நான்கைந்து முறை அறைந்து முகம் கழுவியதற்குப் பிறகுதான் உறக்கத்திலிருந்து வெளிவந்தேன். ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் முதலில் மேகாலயாவுக்குச் செல்வதா? இல்லை கஜுரங்கா சென்று மஜ்ஜுலிக்குச் செல்வதா என்கிற குழப்பத்துக்கு ஆட்பட்டேன். அஸ்ஸாம் மாநிலத்தின் அடையாளமாகத் திகழும் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களை கஜுரங்கா உயிரியல் பூங்காவில் சஃபாரி சென்று பார்க்கலாம். அங்கிருந்து ஜோகர்ட் வழியாக மஜ்ஜுலிக்குச் சென்று அத்தீவில் உலாவலாம் என்று சௌரவ் சொல்லியிருந்தான். பயணத்திட்டம் மாறுதலுக்கு உட் பட்டதுதான் என்பதால் நான் மேகாலயா திட்டத்தை ஒத்தி வைத்தேன். கவுஹாத்தி ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கு 100 ரூபாய்க்கு ஆட்டோக்காரர் கொண்டு வந்து இறக்கி விட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜோகர்ட் செல்லும் பேருந்து கஜுரங்கா வழியாகத்தான் செல்லும் என்று சொன்னார்கள். ஜோகர்ட் பேருந்து கிளம்பத் தயாராக நின்றுகொண்டிருந்தது. கனத்த எனது பேக் பேக்கை சுமந்தபடி பேருந்தில் ஏறும்போதுதான் கால் வலியை நன்கு உணர்ந்தேன். தொடைப்பகுதி மற்றும் கெண்டைக்கால் தசைகளில் வலி இருந்தது. எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதால் அதைப் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்ளவில்லை. அந்த அதிநவீன வால்வோ பேருந்தில் வலப்புற ஜன்னல் இருக்கை ஒன்றில் உட்கார்ந்து கொண்டேன்.

வடகிழக்கில்தான் பொதுப்போக்குவரத்துத் துறையில் இத்தகைய சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படுவதைப் பார்க்கிறேன். சாலை வசதிகளும் சிறப்பாக இருந்ததால் எந்த இடரும் இல்லாமல் 3.30 மணி நேரத்தில் கஜுரங்காவுக்கு வந்தேன். பேருந்தில் இருந்து இறங்குகையில் காலை மடக்க முடியாமல் பெரும் அவதிக்கு ஆளாகி வலியைப் பொறுத்தபடி இறங்கினேன். நிற்க முடியாமல் நான்கைந்து அடிகள் வேகமாக எடுத்து வைத்து முன்னோக்கி நகர்ந்த பிறகுதான் வலி இறங்கியது.

எனது பேக் பேக்கை எங்காவது விட்டெறிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சஃபாரி சென்று ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தைக் காணும் மன நிலையில் நான் இருக்கவில்லை. எங்காவது விடுதி எடுத்துக் களைப்பு தீர தூங்கினாலே போதும் என்றிருந்தது. பேருந்து நிறுத்தத்தையொட்டியே இருந்த விடுதியில் கழிவறையுடன் கூடிய சுத்தமான அறையை 400 ரூபாய் வாடகைக்குப் பேசி முடித்தேன்.

மாலை வரையிலும் நல்ல தூக்கம். தொடர் பயணத்தில் அப்படியொரு தூக்கம் அளிக்கும் ஆறுதல் அளப்பரியது. பகல் தூக்கத்தைப் பொறுத்தவரை தூங்கி எழுந்ததும் உலகமே புதியதாக, அதிசயமானதாகத் தெரியும். அப்படியொரு மனநிலையில்தான் விடுதியை விட்டு வெளியே வந்தேன். விடுதியின் பின்புறத்தில் மூங்கிலால் அடித்தளம் எழுப்பப்பட்டு பத்துக்கும் மேற்பட்ட டென்டுகள் அமைத்திருந்தார்கள். பல வண்ண விளக்குகள் மிளிர்ந்துகொண்டிருந்தன. சீஸன் நாள்களில் குழுவாக வருகிறவர்கள் இந்த டென்டுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்கின்றனர்.

பிரம்மபுத்திரா நதியில் படகு சவாரி
பிரம்மபுத்திரா நதியில் படகு சவாரி

கஜுரங்கா சமதளப் பரப்பு என்பதால் கடுங்குளிர் இல்லை. ஆனால், வடகிழக்கு மாநிலங்களின் நில அமைப்புக்கே உரித்தான குளிர் இருந்தது. தமிழகத்தின் சமதளப் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலையைவிட மிகவும் குறைவு. தங்கும் விடுதியையொட்டியிருந்த உணவகத்தில் விடுதியின் உரிமையாளர் இருந்தார். கஜுரங்காவைப் பற்றியும் மஜ்ஜுலியைப் பற்றியும் தெரிந்துகொள்ளும் பொருட்டு இயல்பாக அவரிடம் விசாரித்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். காலை 6 மணிக்கெல்லாம் சஃபாரிக்குக் கிளம்புவது ஏதுவாக இருக்கும். இது சீஸன் அல்லாத நாள் என்பதால் ஆட்கள் குறைவு. ஆகவே, சஃபாரி செல்வதற்கு 2,000 ரூபாய் வசூலிக்கிறார்கள் என்கிற தகவலை அவர் சொன்னார். சஃபாரிக்கு 2,000 என்பது என் பட்ஜெட்டுக்கு உவப்பானதாக இல்லை என்பதால் சஃபாரி செல்லும் திட்டத்தைக் கைவிட்டேன். விடிந்ததும் மஜ்ஜுலிக்குக் கிளம்ப வேண்டும் என்கிற உந்துதல் மட்டுமே இருந்தது.

ஃபெர்ரி பயணம்
ஃபெர்ரி பயணம்

கஜுரங்காவில் இருந்து மஜ்ஜுலி எப்படிச் செல்வது என்று அவர் சொன்னதை ஒரு தாளில் குறித்துக்கொண்டேன். அவர் தமிழக சுற்றுலாத் தளங்கள் குறித்துக் கேட்டார். சோழப்பேரரசால் எழுப்பப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயில், தாராசுரம் ஐராதீசுவரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் என ஆரம்பித்து எனது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டேன்.

அவர் அதை மிகுந்த ஈடுபாட்டோடு கேட்டதும் அது குறித்த அவரின் சந்தேகங்களை எழுப்பியதும், எங்களுக்குள் சரளமான உரையாடல் நிகழ ஏதுவாக இருந்தது. அவர் நான் சொன்ன ஊர்கள் மற்றும் கோயில்களின் பெயரைக் குறித்துக் கொண்டார். எங்களது உரையாடல் ஒரு மணி நேரத்தைத் தாண்டியும் நீண்டது. இரண்டாவது முறையாக அவர் மனைவி வந்து அழைத்ததும் "குடும்பம் அழைக்கிறது" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.

போக்குவரத்து வசதியைப் பொறுத்தவரை அஸ்ஸாம் நிறைவான மாநிலமாகவே எனக்குப் பட்டது. காலை எழுந்து பேருந்து நிறுத்தத்தில் நின்ற கொஞ்ச நேரத்திலேயே வந்த பேருந்தில் ஏறி ஜோகர்ட் சென்றேன். பேருந்து நிலையத்திலிருந்து நிமாத்தி காட் செல்லும் வேன்கள் நிற்குமிடத்துக்கு 20 ரூபாய் வாங்கிக்கொண்டு சைக்கிள் ரிக்‌ஷாக்காரர் அழைத்துச் சென்றார். நிமாத்தி காட் என்பது பிரம்மபுத்திரா நதிக்கரையில் அமைந்திருக்கும் படகுத்துறை. அங்கிருந்துதான் மஜ்ஜுலிக்கு ஃபெர்ரி கிளம்புகின்றன.

ஃபெர்ரி என்பது பயணிகளையும் வாகனங்களையும் ஏற்றிச் செல்லும் பெரிய படகு. வேனில் நிமாத்தி காட் செல்ல 30 ரூபாய் வாங்கினார்கள். அரைமணி நேர பயணத்துக்குப் பிறகு, மண் சாலையில் புழுதியைக் கிளப்பியபடி வேன் நிமாத்தி காட் வந்து சேர்ந்தது. கப்பலின் சுருக்கப்பட்ட வடிவமாய் ஃபெர்ரி நின்று கொண்டிந்தது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஒரு புறம் ஃபெர்ரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். 15 ரூபாய் பயணச்சீட்டு வாங்கி நான் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொண்டேன்.

ஃபெர்ரி பயணம்
ஃபெர்ரி பயணம்

ஆலப்புழாவில் பயணிகள் போக்குவரத்துப் படகில் பயணித்திருக்கிறேன் அதைவிட பிரமாண்டமாக இருந்தது. படகு புறப்படத் தொடங்கியது. பார்வை முட்டும் தொலைவு வரைக்கும் நதி விரிந்து பரவியிருந்தது. இருக்கையில் இருந்து எழுந்து ஃபெர்ரியின் முகப்புக்கு வந்து நின்று நதியைப் பார்த்தேன். 2015-ம் ஆண்டில் காசியில் கங்கை நதியில் படகு சவாரி செய்தேன். அதற்கடுத்து பிரம்மபுத்திரா நதி மீது பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில் சிலிர்த்தது.

- திரிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism