Published:Updated:

படகு சவாரி... கடல் முழுக்கு... மணக்க மணக்க கடலுணவு... காரங்காடு சூழல் சுற்றுலா!

அலையாத்திக் காடுகளைக் காண பல நூறு கி.மீ தூரம் பயணித்து முட்டுகாட்டுக்கும் பிச்சாவரத்துக்கும் சென்று வந்த தென்மாவட்ட மக்களுக்கு அந்த அனுபவத்தை ராமநாதபுரத்திலேயே கிடைக்கும்படி செய்துள்ளது இந்தக் காரங்காடு சூழல் சுற்றுலா தலம்.

சூழல் சுற்றுலா மையமான காரங்காடு.
சூழல் சுற்றுலா மையமான காரங்காடு. ( படம்: உ.பாண்டி )

உப்பு நீரில் வளரும் தன்மை கொண்ட சதுப்பு நிலக்காடுகள் பலவகைப்பட்ட உயிரினங்களுக்கு உறைவிடமாகப் பயன்பட்டு வருகின்றன. அலையிடைக் காடுகள், கடலோர மரக்காடுகள், மழைக்காடுகள், அலையாத்திக் காடுகள், தில்லைவனம், சுரப்புன்னைக் காடுகள், கண்டன் காடுகள் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தச் சதுப்பு நிலக் காடுகள் புயல், வெள்ளம், மண் அரிப்பு, வெள்ளப்பெருக்கு போன்றவற்றிலிருந்து மனிதர்களைக் காக்கும் பணியைச் செய்துவருகின்றன. மனிதர்களுக்கு நேரும் இத்தகைய துயர்களைப் போக்கும் சதுப்பு நிலக் காடுகள் நிறைந்த, சூழல் சுற்றுலா பகுதிதான் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள காரங்காடு.

சூழல் சுற்றுலா மையமான காரங்காடு.
சூழல் சுற்றுலா மையமான காரங்காடு.
உ.பாண்டி

ராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில், மணக்குடி என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது காரங்காடு கிராம். இங்கு 75 ஹெக்டேர் பரப்பில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் கடல் நீருக்கு கரைகளாக வளர்ந்து நிற்கின்றன மாங்குரோஸ் எனப்படும் அலையாத்திகள். இதன் அழகை கண்டு ரசிக்க, 3 கி.மீ தூரம் இன்ஜின் பொருத்திய படகில் பயணம் செல்ல வேண்டும்.

தமிழக வனத்துறையினர் காரங்காடு கிராம மக்களுடன் இணைந்து இதற்கென `காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழு' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் `சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு படகு சவாரி, ஸ்நார்க்கிங் எனப்படும் தண்ணீருக்கு அடியில் உள்ள உயிரினங்களைக் காண்பது போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சதுப்பு நில காடுகளிடையே படகு சவாரி.
சதுப்பு நில காடுகளிடையே படகு சவாரி.
உ.பாண்டி

படகு சவாரி

காரங்காடு கிராமத்தின் கரையோரம் தொடங்கி பாக் நீரிணை கடலின் குறிப்பிட்ட தூரம் வரை சென்று, திரும்ப பாதுகாப்புடன் கூடிய படகு பயணம் இங்கு வாய்க்கிறது. இந்தப் பயணத்தின்போது அலையாத்திக் காடுகளுக்கு இடையே இரை தேடியபடி செல்லும் சதுப்புநிலக் காட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, குதிரைத் தலைக் கோட்டான், ஆலாக்கள், கடற்புறாக்கள், செந்நாரை, பவளக்காலி, கொக்குகள் ஆகியவை நம்மை பரவசப்படுத்துகின்றன.

காட்சி கோபுரத்துக்கு காடுகள் இடையே பயணம்.
காட்சி கோபுரத்துக்கு காடுகள் இடையே பயணம்.
உ.பாண்டி

இவற்றுடன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து விரிந்துள்ள அலையாத்திக் காடுகளின் அழகை `கடல் பசு தீவு' பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காட்சி கோபுரத்தின் மீது இருந்து டாப் ஆங்கிளில் கண்டு ரசிக்கும் வாய்ப்பும் இங்கு உள்ளது.

கடல் உயிரினங்களை கண்டு ரசிக்கும் பயணிகள்
கடல் உயிரினங்களை கண்டு ரசிக்கும் பயணிகள்
உ.பாண்டி

காட்சி கோபுர பார்வை முடிந்து, கரைக்குத் திரும்பும் வழியில் கடல் நீருக்கு அடியில் வளரும் புற்கள், நட்சத்திர மீன்களைக் கடலில் மூழ்கியபடி காணலாம். இதற்கென பிரத்யேகமான கண்ணாடி, மூச்சு விடும் கருவிகள் வழங்கப்படுகின்றன. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை இவற்றை அணிந்து கொண்டு கடல் தாவரங்களையும் அதன் ஊடாக வளரும் சிறு மீன் இனங்களையும் காண்பது அலாதியாக இருக்கிறது.

துடுப்பு படகு

அமைதியான ஏரி போன்று பரந்து விரிந்து காணப்படும் கடல் நீரின் மீது துடுப்பு படகுகளை நாமே இயக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. கயாக்கிங் எனப்படும் இந்தப் பயணத்துக்கென வண்ணமயமான படகுகள் சில உள்ளன. பாதுகாப்பு மிதவை உடையை அணிந்துகொண்டு கைகளில் துடுப்பை எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கலாம். கடலின் ஆழம் குறைவாக இருப்பதால் துடுப்பை இயக்கத் தெரிந்த சிறுவர்களும் இந்தப் பயணத்தில் ஈடுபடலாம்.

துடுப்புப் படகு பயணம்.
துடுப்புப் படகு பயணம்.
உ.பாண்டி

கடல் உணவுகள்

படகு பயணத்துக்கு முன் ஆர்டர் கொடுத்துவிட்டு சென்றால் கடல் உணவுகளைக் கரை திரும்பியவுடன் ஒரு கை பார்க்கலாம்.
ஜெரால்டு மேரி

படகு சவாரி, கயாக்கிங், நீரில் மூழ்கி கடற்புற்களைக் காணுதல் என எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு கரை திரும்புபவர்களின் பசியைப் போக்க அமைந்துள்ளது, ருசியான உணவுக் கூடம். இங்கு கடல் உணவுகளான மீன் குழம்பு, நண்டு கிரேவி, நண்டு சூப், இறால் கட்லெட், கணவாய் கட்லெட், மீன் வறுவல் மற்றும் தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் தாகம் தீர்க்கும் இயற்கை பானங்களான மோர், எழுமிச்சை சர்பத், இஞ்சி டீ என எல்லாமும் இருக்கின்றன.

காரங்காடு சுற்றுலா உணவகம்.
காரங்காடு சுற்றுலா உணவகம்.
உ.பாண்டி

``படகு பயணத்துக்கு முன் ஆர்டர் கொடுத்துவிட்டுச் சென்றால் கடல் உணவுகளை கரை திரும்பியவுடன் ஒரு கை பார்க்கலாம்'' என்கிறார் சூழல் மேம்பாட்டு குழுத் தலைவியான ஜெரால்டு மேரி.

அலையாத்திக் காடுகளைக் காண பல நூறு கி.மீ தூரம் பயணித்து முட்டுகாட்டுக்கும் பிச்சாவரத்துக்கும் சென்று வந்த தென்மாவட்ட மக்களுக்கு அந்த அனுபவத்தை ராமநாதபுரத்திலேயே கிடைக்கும்படி செய்துள்ளது இந்தக் காரங்காடு சூழல் சுற்றுலா தலம்.

கடல் உயிரினங்கள் குறித்து விளக்கும் வனவர் சதீஷ்.
கடல் உயிரினங்கள் குறித்து விளக்கும் வனவர் சதீஷ்.
உ.பாண்டி
Vikatan

பள்ளி செல்லும் மாணவ மாணவிகளின் பொழுதுபோக்குத் தளமாக மட்டுமன்றி கடல், அதில் வாழும் உயிரினங்கள், அலையாத்திக் காடுகள், அவற்றின் மூலம் பெருகி வரும் உயிரினங்கள் பற்றித் தெரிந்துகொள்ள உதவும் இடமாகவும் இது விளங்குகிறது" என்று பெருமிதமாகச் சொல்கிறார் வனச்சரகர் சதீஷ்.

சதுப்பு நிலக் காடுகள் நிறைந்த கடல் பகுதி
சதுப்பு நிலக் காடுகள் நிறைந்த கடல் பகுதி
உ.பாண்டி

எப்படிச் செல்வது?

ராமநாதபுரத்திலிருந்து தொண்டி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் 40 கி.மீ தூரத்தில் மணக்குடி எனும் சிற்றூர் உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ கிழக்கு நோக்கிச் சென்றால் காரங்காடு. இந்தக் கிராமத்தில் உள்ள தேவாலயத்தின் அருகில் அமைந்துள்ளது, வனத்துறையினரின் படகு குழாம்.

இனிய அனுபவங்களை தரும் சூழல் சுற்றுலா.
இனிய அனுபவங்களை தரும் சூழல் சுற்றுலா.
உ.பாண்டி

கட்டணம்:

படகு சவாரி

நபர் ஒருவருக்கு ரூ.100

சிறுவர்களுக்கு ரூ.50

துடுப்பு படகு ரூ. 200 (ஒரு நபர்), ரூ.300 (2 நபர்).

மீன் சாப்பாடு ரூ 180 (மீன் குழம்பு, வறுவல், நண்டு கிரேவி, கணவாய் கட்லெட்).