Published:Updated:

மஜ்ஜுலி கிராமங்களை நோக்கி சைக்கிளில் ஒரு பயணம்! - Back பேக் 16

Back பேக்

50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தின் வழியே மஜ்ஜுலியின் கிராமங்களையும், மக்களையும் பார்க்க வேண்டும். அதோடு சமகுரி சத்ராவில் முகமூடிகள் தயாரிக்கப்படுவதை வீடியோ பதிவாக எடுக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தேன்.

மஜ்ஜுலி கிராமங்களை நோக்கி சைக்கிளில் ஒரு பயணம்! - Back பேக் 16

50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தின் வழியே மஜ்ஜுலியின் கிராமங்களையும், மக்களையும் பார்க்க வேண்டும். அதோடு சமகுரி சத்ராவில் முகமூடிகள் தயாரிக்கப்படுவதை வீடியோ பதிவாக எடுக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தேன்.

Published:Updated:
Back பேக்

ஒரு மணி நேர ஃபெர்ரி பயணத்தில் நிமாத்தி காட்-ல் இருந்து கமலாபரி காட்-க்கு வந்து சேர்ந்தேன். கமலாபரிதான் ஜோகர்டிலிருந்து மஜ்ஜுலிக்குச் செல்வதற்கான நுழைவாயில். பிரம்மபுத்திரா நதிக்கரை மண்ணில் புழுதியைப் பரப்பியபடி ஷேர் ஆட்டோக்கள் வந்து நின்றன. "கராமர்... கராமர்" என அவற்றின் ஓட்டுநர்கள் பயணிகளைக் கூவி அழைத்துக் கொண்டிருந்தனர். மஜ்ஜுலிதான் உலகின் மிகப்பெரிய நதியால் சூழப்பட்டிருக்கும் தீவு என்பதோடு மாவட்ட அங்கீகாரம் பெற்ற தீவும் கூட. 2016-ம் ஆண்டு மஜ்ஜுலி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மஜ்ஜுலியின் தலைநகரம்தான் கராமர். நான் ஷேர் ஆட்டோவில் கராமருக்கு ஏறினேன். கராமரில் குறைவான வாடகையில் விடுதியைப் பரிந்துரைக்கும்படி ஷேர் ஆட்டோ டிரைவரிடம் கேட்டேன். கராமரில் பயணிகளை இறக்கி விட்டு என்னை விடுதிக்குக் கூட்டிச்செல்ல கூடுதலாக 50 ரூபாய் வாங்கிக் கொண்டு அழைத்துச் சென்றார்.

பயணம் (சித்திரிப்பு படம்)
பயணம் (சித்திரிப்பு படம்)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த விடுதி அமைந்திருந்த சாலை நெடுகிலும் மரங்கள் எழுந்திருந்தன. அவற்றின் சலசலப்பொலி மட்டும்தான் கேட்டது. தரையில் இருந்து மூங்கிலால் உயர்த்தி மூங்கில் கழிகளால் அடித்தளம் அமைக்கப்பட்டு 5 அறைகளை எழுப்பியிருந்தனர். அறை வாசலை ஒட்டி மூங்கில் மேசை, மூங்கில் நாற்காலி போட்டிருந்தனர். படிகள் ஏறிச்செல்ல வேண்டிய விடுதியின் முகப்பில் அழகிய வேலைப்பாடுகளுடனான பூத்தொட்டிகளும், முகமூடிகளும் பொருத்தப்பட்டிருந்தன. பார்த்ததுமே அங்கு தங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். விடுதி பயணிகள் மட்டுமல்ல, நிர்வாகிகள் கூட இல்லாமல் அனாதையாகக் கிடந்தது. விடுதி நிர்வாகியிடம் பேச வேண்டும் என நான் ஆங்கிலத்தில் சொன்னது ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்குப் புரியவில்லை. அப்போது அவ்வழியாகச் சென்ற ஒரு நபரை நிறுத்தி அவரிடம் இந்தியில் ஏதோ சொன்னார். அந்த நபர் என்னிடம் ஆங்கிலத்தில் உரையாடினார். என்னை அவரிடம் ஒப்படைத்து விட்டு ஷேர் ஆட்டோ ஓட்டுநர் கிளம்பிச் சென்று விட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த நபரின் பெயர் ஆயுஷ். விடுதி உரிமையாளருக்கு ஆயுஷ் போனில் அழைத்துப் பேசினார். வாடகை 500 ரூபாய் என உரிமையாளர் சொல்ல, நான் 400 ரூபாய்க்குத் தரும்படி கேட்கச் சொன்னேன். விடுதி உரிமையாளர் அதற்கு ஒப்புக்கொண்டு, கொஞ்ச நேரத்தில் விடுதி நிர்வாகி வந்து விடுவார் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். ஆயுஷ், டெல்லியைச் சேர்ந்த ஐடி ஊழியர். ஒரு மாத காலமாக மஜ்ஜுலியில் தங்கியிருப்பதாகச் சொன்ன அவர், இந்த விடுதியில் தான் முன்பு தங்கியதாகவும், இதன் வாடகை கட்டுப்படியாகாததால் வேறு 300 ரூபாய் வாடகைக்கு மாறிச் சென்று விட்டதாகவும் கூறினார். ஓர் ஐடி ஊழியர் அலுவல் நிமித்தமாக மஜ்ஜுலிக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனை அவரிடமே கேட்டேன். தானும் பயண விரும்பி என்றவர், வொர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணியாற்றி விட்டு மீதமுள்ள நேரங்களில் மஜ்ஜுலியைச் சுற்றுவதாகக் கூறினார். இரண்டு மாத காலம் இங்கு தங்கும் திட்டத்தோடு வந்ததாகக் கூறியவர், ஒரு நிலப்பரப்பை பற்றியும் அம்மக்களின் வாழ்வியலையும் புரிந்துகொள்ள அங்கு குறைந்தபட்சம் 2 மாதங்களாவது தங்க வேண்டும் என்று சொன்னார். தன் பயணங்கள் யாவும் இத்தகையவையே என்று சொன்னார்.

பயணம் (சித்திரிப்பு படம்)
பயணம் (சித்திரிப்பு படம்)

ஆயுஷ் சொன்னதன் பின் உள்ள ஆழமான அர்த்தத்தை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்குமே கூட இப்படியான திட்டங்கள் இருக்கின்றன. தென்காசி, நாகர்கோயில், பொள்ளாச்சி, கும்பகோணம் என நான் விரும்பும் ஊர்களுக்குச் சென்று ஒரு மாத காலம் தங்க வேண்டும் என்கிற திட்டம் இருந்ததுண்டு. 3 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு நாள் கணக்கில்லாமல், எவ்விதத் திட்டமிடலும் இல்லாமல் அப்பணம் தீருகிற வரையிலும் இந்தியா முழுவதும் சுற்றித்திரிய வேண்டும் என நினைத்திருக்கிறேன். இவற்றுக்கான நடைமுறை சாத்தியங்கள் இல்லை என்பதால் அது வெறும் திட்டமாக மட்டுமே நிலைபெற்றிருக்கிறது. சலித்துப்போகும் அளவுக்குப் பயணம் செய்ய வேண்டும். நம்மை ஆட்கொண்டிருக்கும் ஈடுபாடு மற்றும் தன்னம்பிக்கையினால் அவ்வளவு எளிதில் பயணம் சலித்துப் போகாது. நான் எனது பயண நோக்கத்தைப் பற்றி ஆயுஷிடம் பகிர்ந்து கொண்டேன். அன்றைய இரவு உள்ளூர் திருவிழாவில் மேடைக்கச்சேரி இருப்பதாகவும், விரும்பினால் நாம் இருவரும் இணைந்தே செல்லலாம் என்றும் ஆயுஷ் சொன்னார். நான் அவரது எண்ணைப் பதிவு செய்து கொண்டேன். ஆயுஷ் விடைபெற்று கொஞ்ச நேரத்தில் விடுதி நிர்வாகி வந்தார். இடப்புறத்தின் கடைசி அறையைக் காண்பித்தார். உட்புறச்சுவர் செம்மண்ணால் பூசப்பட்டிருப்பதைப் போல இருந்தது. மஜ்ஜுலியின் பாரம்பர்ய வீட்டுக்குண்டான தோற்றத்தைப்போலவே அந்த விடுதி வடிவமைக்கப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரவு ஆயுஷுடன் சேர்ந்து கராமரில் நடந்த உள்ளூர் திருவிழா பாடல் நிகழ்ச்சிக்குச் சென்றேன். 50 வயது மதிக்கத்தக்க பாடகர் ஒருவர் உற்சாகமான மனநிலையில் பாடிக்கொண்டிருந்தார். கீழே அவரின் பாடல்களைக் கேட்டு இளைஞர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர். அவர் இந்தியில் பாடுகிறாரா, அசாமியில் பாடுகிறாரா என்கிற குழப்பத்துடனேயே நான் அப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாடலை விடவும் பார்வையாளர்களின் ஆர்ப்பரிக்கும் ஓசை அதிக டெசிபலில் கேட்டது. ஒரு கொண்டாட்டத்தில் மக்கள் திரளோடு இணைகையில் நாமும் பெரும் உவகைக்குள் செல்வது இயல்பானது. நானும் அம்மகிழ்ச்சிக்குள் என்னை இருத்திக் கொண்டிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் எனக்கு அந்த ஆரவாரம் ஓர் இரைச்சலாய்ப்பட்டது. அமைதியை மட்டுமே விரும்பும் மனநிலைக்கு ஆட்பட்டிருந்தேன். ஆயுஷும் கிளம்பத் தயாராக இருந்ததால் இருவரும் அவரவர் விடுதிக்குச் சென்று சேர்ந்தோம்.

முகமூடி தயாரிப்பு
முகமூடி தயாரிப்பு

அடுத்த நாள், விடுதி உரிமையாளரின் ஏற்பாட்டின் பேரில் 150 ரூபாய் வாடகைக்கு சைக்கிள் கிடைத்தது. மஜ்ஜுலியில் உள்ள கிராமங்களையும் அவற்றின் மக்களையும் பார்க்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. மஜ்ஜுலி என்றதுமே சௌரவ் தொடங்கி ஆயுஷ் வரை அனைவரும் முகமூடிகள் தயாரிக்கும் இடத்தைப் பற்றி சொல்லியிருந்தார்கள். சமகுரி சத்ரா என்கிற பகுதியில் உள்ள சங்கீத் கலா கேந்திராவில் தயாரிக்கப்படும் முகமூடிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை என்று சொன்னார்கள். கராமரிலிருந்து சமகுரி சத்ரா 25 கிலோ மீட்டர் தொலைவு. சென்று வர மொத்தம் 50 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தின் வழியே மஜ்ஜுலியின் கிராமங்களையும், மக்களையும் பார்க்க வேண்டும். அத்தோடு சமகுரி சத்ராவில் முகமூடிகள் தயாரிக்கப்படுவதை வீடியோ பதிவாக எடுக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தேன்.

திரிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism