Published:Updated:

`` `96' படம் பார்த்தவுடனே டிக்கெட் போட்டேன்” - முசோரி... டோராடூன் டைரிக்குறிப்பு! #Travelogue

பயணம்
பயணம்

`96' திரைப்படம் வெளியாகிய தருணம் அது. ``வாழா... என் வாழ்வை வாழவே" என்று ஹைபிட்சில் வந்த அந்த இசைதான் என்னை ரயில் டிக்கெட் புக் செய்ய வைத்தது.

சமூக இடைவெளி எத்தனை கொடூரமானது என்பது இந்த க்வாரன்டைன் நேரத்தில்தான் தெரிகிறது. தனித்திருப்பதும், விழித்திருப்பதும், வாசித்திருப்பதும் எப்போதுமே என் பிரியமான அனுபவங்களில் ஒன்று. மூன்றில் ஏதாவது ஒன்று அதிகரித்தாலோ, குறைந்தாலோ வாழ்க்கையை மீண்டும் சமநிலைப்படுத்த ஒரு பயணம் கிளம்பிவிடுவேன். என்னை நிலைப்படுத்திய அப்படி ஒரு பயணத்தின் அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

`96' திரைப்படம் வெளியாகிய தருணம் அது. ``வாழா... என் வாழ்வை வாழவே" என்று ஹைபிட்சில் வந்த அந்த இசைதான் என்னை ரயில் டிக்கெட் புக் செய்ய வைத்தது. என் முதல் சோலோ ட்ரிப் டேராடூன் மற்றும் முசோரி. டெல்லி வந்த மூன்று மாதத்தில் கற்று வைத்திருந்த நான்கைந்து இந்தி வார்த்தைகளோடு பேரார்வத்தில் பாஷை தெரியாத ஊருக்கு...

ரயில்
ரயில்
கொழும்பு தொடங்கி திருகோணமலை வரை... 3 நாள்கள், 730 கி.மீ... குட்டி மொப்படில், பெரிய பயணம்! #Travel

நாள்-1

நானும் என் ராசுகுட்டி கேமராவும் ரயிலில் ஏறினோம். `96' பட விஜய் சேதுபதிதான் இன்ஸ்பிரேஷன் என்பதால் ரயில் ஏறியதும் முதல் வேலையாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற அந்நிய உலகினை அன்இன்ஸ்டால் செய்துவிட்டேன். பயண அனுபவங்களையும் குறிப்புகளையும் எழுத ஒரு டைரி வாங்கிச் சென்றிருந்தேன்.

டேராடூன் ஆட்டோ பயணம்
டேராடூன் ஆட்டோ பயணம்

ரயிலில் ஏறிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு டைரியை எடுத்து தமிழில் எழுத ஆரம்பித்தேன், ரிசர்வ்டு கம்பார்ட்மென்டில் சீட் கிடைக்காமல், என் பின்னால் நின்றிருந்த சிலர் தமிழைக் கண்டவுடன் வேற்றுகிரகவாசியைப் போல் அதிசயமாகப் பார்த்தனர். அவர்கள் பெயர்களைத் தமிழில் எழுதிக் காண்பிக்குமாறு கேட்டார்கள், கோரிக்கைகளுக்கேற்ப நானும் ``அனில் ஷர்மா, ஆகாஷ் குப்தா" என்று பேப்பரில் தமிழில் எழுதி கையில் கொடுத்தேன். இன்று, அந்த பேப்பர் வீட்டில் ஃப்ரேம் போடப்பட்டிருக்கலாம், இல்லை அழிந்தும் இருக்கலாம். எங்கிருந்தாலும் வாழ்க தமிழ்.

ஜன்னலின் ஓரம் காற்று வாங்க நின்றுகொண்டிருந்தபோது மெக்கானிக்கல் இன்ஜீனியர் ஒருவர் தனது வாழ்க்கை குறித்து என்னிடம் புலம்பினார். அநேகமாக அவர் புலம்பிய 727வது ஆளாக இருந்தேன் என்று அவர் முகத்தில் இருந்த சோகத்தை வைத்து யூகிக்க முடிந்தது. அவர், ஹரித்வார் செல்வதாகவும் அங்கு வந்தால் `என்னை அழையுங்கள் உங்களுக்கு ஊர் சுற்றி காண்பிக்கிறேன்' என்றும் தனது எண்ணைக் கொடுத்து அவர் சீட்டிற்குத் திரும்பினார். இப்படியான மனிதர்களும் இப்படிப்பட்ட உரையாடல்களும் நிரம்பிய ரயில் பயணம் சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருந்தது.

பறக்கும் பல்லி... கருந்தேள்... ராஜநாகங்கள்... அகும்பே - மினி அமேசான்! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் 13
முசோரி
முசோரி

வழக்கமான ரயில் சத்தங்களோடு, ஊருக்குத் திரும்பும் தாத்தாக்கள் சைனா போனில் பார்க்கும் பழைய அமிதாப் பச்சன் படங்களும் தனியாக வந்த அந்நியர்களின் `நீங்க எந்த ஊரு' எனத் தொடங்கும் உரையாடல்களும் நிறைந்து வழிந்தன. 7 மணி நேரம் கடந்த பின், டேராடூன் வந்தடைந்தேன். மலையின் அடிவாரமான அந்த ஊர் என் மேல் குளிர் போர்வை போற்றியது. ரயில் நிலையத்தின் அருகிலேயே ரூம். இரவு உணவு நம் ஊர் போல கிடையாது. சப்பாத்தி ஒன்று 5 ரூபாய், குழம்பு ஒன்று 150 ரூபாய். இந்த விலை கட்டுப்படியாகவில்லை என்பதால் 15 ரூபாய்க்கு மூன்று சப்பாத்தி வாங்கிக்கொண்டு தொட்டுக்க இலவசமாக ஊறுகாய் வாங்கிக்கொண்டு பசியாறினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுநாள், முசோரி மலையிலிருந்து எழும் சூரியனைக் காண காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து ரசிக்கக் காத்திருந்தேன். சூரியனை ரசித்தபடி இரண்டு மூன்று படங்களை எடுத்துவிட்டு நானும் என் ராசுகுட்டி கேமராவும் ஊரின் மார்க்கெட்டைத் தேடிப் புறப்பட்டோம். அடுத்த இரண்டு நாள்களில் தசரா என்பதால் துர்கை அம்மனுக்காகக் காத்திருந்த சிவப்பு நிற ஆடைகளும், வழி நெடுக பெய்யக் காத்திருக்கும் மலர்களும் என அந்த இடமே திருவிழா உணர்வைத் தந்தது.

பூக்கடை
பூக்கடை

ஒரு பூக்கடையில் நின்று படமெடுக்கும்போது கடைக்காரர் ஹிந்தியில் ஏதோ கேட்க, `எனக்குப் புரியவில்லை' என, என் ஹிந்தியில் நான் சொன்னேன். உடனே பத்தாவது படிக்கும் அவரின் மகளை அழைத்து அதே கேள்வியை ஆங்கிலத்தில் கேட்கச் சொன்னார். அவளோ அதை ஆங்கிலத்தில் என்னிடம் கேட்க, அந்த அப்பன் முகத்தில் இருந்த புன்னகையும் பெருமையும் கடையில் வாடிய மலர்களையெல்லாம் உயிர்ப்பித்ததுபோல இருந்தது.

காய்கறிச் சந்தை
காய்கறிச் சந்தை

காய்கறிச் சந்தையினுள் நுழைந்து இன்னும் சில படங்களை எடுத்துவிட்டு வெளியேறினேன். வியர்வை வரவில்லை என்றாலும், வெயில் தலைக்கு மேல் நாட்டியமாடியது. ஏதாவது ஒரு படம் பார்ப்போம் என்று தோன்ற மொபைலைக் கையில் எடுத்து தமிழ்ப் படங்கள் ஏதும் ஓடுகிறதா என்று தேடினேன். என் அதிர்ஷ்டம் அன்று `வட சென்னை' படம் ரிலீஸாகி இருந்தது அதுவும் டேராடூனில். ஆட்டோ பிடித்து தியேட்டருக்குச் சென்றால், டேராடூனில் வடசென்னைக்கு அவ்வளவு ரசிகர்கள். டேராடூனில் இவ்வளவு தமிழர்களா...

டேராடூனில் பலதரப்பட்ட தமிழக மாணவர்கள் ஃபாரஸ்ட்ரி, விவசாயம், மிலிட்டரி ட்ரெய்னிங் போன்றவற்றில் இருக்கிறார்கள் என்ற செய்தியைப் படம் முடிவதற்குள் தெரிந்துகொண்டேன். திரையரங்கில் இருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து டேராடூனின் வனவிலங்கு சரணாலயம் வந்துசேர்ந்தேன். உள்ளே சென்றால் பெரிய வித்தியாசம் இல்லை அது நம் ஊர் வ.உ.சி பூங்காதான்.

முசோரி திரையரங்கில்
முசோரி திரையரங்கில்

டேராடூனிலிருந்து முசோரி கிளம்பும் கடைசி பஸ் 7 மணிக்கு. 6 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் சென்றதால் டிக்கெட் கவுன்டரில் கூட்டம் அலைமோதியது. பஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. டூ-வீலர் இரண்டு நாளைக்கு வாடகைக்கு எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கும் தடை போட்டுவிட்டார்கள். முசோரி சாலையில் 7 மணிக்குமேல் எந்த வாகனமும் அனுமதி இல்லையாம். இறுதியில் 300 ரூபாய்க்கு ஷேர்  டாக்சியில் ஒன்றில் ஏறினேன். என்னுடன் முசோரி வருவதற்கு அதே டாக்சியில் அமர்ந்திருந்த மூன்று பேரும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள். நானும் டெல்லி பல்கலைக்கழகம்தான் என்றபின் பேக்ரவுண்டில் விக்ரமன் இசை ஓட நாங்கள் உறவுகளாயினோம்.

உறையவைக்கும் பனி, மிரளவைக்கும் சாலை.. சண்டிகர் முதல் மணாலி வரை 1,200 கி.மீ த்ரில் பயணம்! #Vikatan360

ரஜினியின் அரசியல் முதல் டெல்லியின் சிறந்த மோமோஸ் வரை பல கதைகள் பேசி நேரம் விரைய, முசோரி வந்தடைந்தோம். டேராடூனிலிருந்து முசோரி வெறும் 33 கிலோமீட்டர் தொலைவுதான். ஆனால், ஏதோ பல மைல்கள் கடந்து வந்து குளிர்ப்பிரதேசத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வு. அன்று 9 டிகிரி செல்சியஸ் வெப்பம். தமிழ்நாட்டிலிருந்து வாங்கிச்சென்ற ஜெர்கினுக்கு அன்றுதான் மரியாதை கிடைத்தது.

சோளக் கடை
சோளக் கடை

முசோரியின் குளிர் என்னைப் பதம்பார்க்க, ஹோட்டலில் வேலை செய்யும் ஸ்வட்டர் அணியாத இளைஞரிடம், `என்ன இப்புடி குளுருது?' எனக் கேட்டுவிட்டேன். `இது ரொம்ப கம்மிங்க, டிசம்பர் மாசம் வந்து பாருங்க பனி கொட்டும்’ என்று கடந்து சென்றார். இரவு உணவுக்காக ஹோட்டலை விட்டு இறங்கியபோது மோமோஸ் கடைகள், சுட்ட சோளக் கருது, வேகவைத்த கடலைக்காய் எனச் சுவையின் சுங்கச்சாவடியாக இருந்தது முசோரியின் அந்தத் தெரு. முசோரியின் இயற்கை, என்னை டெல்லியின் புகை மண்டலத்திலிருந்து விடுவித்து உன்னதமான காற்றை சுவாசிக்க வைத்தது.

இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் அடுத்த பகுதியில்...

அடுத்த கட்டுரைக்கு